என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Practical Exam"

    • செய்முறை பொதுத்தேர்வு மார்ச் 1-ந் தேதி துவங்கி, 9-ந் தேதி வரை நடக்கிறது.
    • புதிதாக மையம் கோரி விண்ணப்பித்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.

    திருப்பூர் :

    தமிழகம் முழுக்க 10-ம்வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை பொதுத்தேர்வு, மார்ச் 1-ந் தேதி துவங்கி, 9-ந் தேதி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வு நடத்த ஆய்வக வசதி கொண்ட பள்ளிகள், புதிதாக மையம் கோரி விண்ணப்பித்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

    கடந்த ஆண்டுகளில் எழுத்துத்தேர்வுக்கு இரு வாரங்களுக்கு முன்பே, செய்முறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது மூன்று பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளுக்கும் ஒரே சமயத்தில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, படிக்க போதிய கால அவகாசமும் வழங்கப்படவில்லை. இதன்மூலம் செய்முறை தேர்வுக்குப் பின் மாணவர்கள் பள்ளிக்கு முழுக்கு போட முடியாது என்பது தலைமையாசிரியர்களின் கருத்தாக உள்ளது.

    மேலும் அடுத்த வாரத்திற்குள் செய்முறை தேர்வு நடக்கவுள்ள பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும். அப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய பிரத்யேக குழு சார்பில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களில், பிழை நேர்ந்தால் உரிய பள்ளி தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கும், எழுத்துத்தேர்வு நடத்தப்படும். செய்முறை பொதுத்தேர்வு 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே நடத்தப்படும். மீதமுள்ள 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு தேர்வுக்காக அந்தந்த பாட ஆசிரியர்களே வழங்குவர்.

    பொதுவாக இம்மதிப்பெண்கள் ஒருமுறை பதிவேற்றினால் மாற்ற முடியாது. பள்ளி எமிஸ் இணையதள பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. இடைநிற்றல் மாணவர்களின் பட்டியலும் இதில் இருப்பதால் வகுப்பு செயல்பாடுகளுக்கான அகமதிப்பீட்டு தேர்வு மதிப்பெண்களை முறையாக பதிவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இப்பட்டியலை இணையதளத்தில் பதிவேற்ற இம்மாத இறுதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தவறு ஏற்படும் பட்சத்தில் உரிய தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என அரசு தேர்வுகள் துறை எச்சரித்துள்ளது. திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவேற்ற துவங்குமாறு ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
    • கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

    பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை முதலில் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை நீட்டித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு 31-ந் தேதி (நாளை) வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. எனவே செய்முறை தேர்வுக்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலநீட்டிப்பு செய்ததற்கான அவசியம் ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, செய்முறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே பிளஸ்-2 மொழிப்பாடங்கள் தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆன சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    செய்முறை தேர்வில் இவ்வளவு பேர் பங்கேற்கவில்லை என்றால், அடுத்ததாக பொதுத்தேர்வு தொடங்கும்போது மொழிப்பாடங்களிலும் மாணவர்கள் 'ஆப்சென்ட்' விவகாரம் கண்டிப்பாக இருக்கும்.

    கால நீட்டிப்பு செய்யப்பட்ட நாட்களில் பங்கேற்காத மாணவர்களை எவ்வாறு செய்முறை தேர்வில் கல்வித்துறை பங்கேற்க வைப்பார்கள்? அதேபோல், பொதுத்தேர்விலும் அவர்களை எப்படி கலந்து கொள்ள செய்வார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    • 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
    • 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

    2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

    அதன்படி, அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது.

    இதைதொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    அதன்படி, 10ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்புக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

    இந்நிலையில், 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றரிக்கை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருவேளை பள்ளிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி இருந்தால் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்படும்.
    • சான்றிதழ் வைக்கும் அறை, தலைமை ஆசிரியர் அறை தரைதளத்தில் இருந்தால் உடனடியாக முதல் தளத்திற்கு மாற்றவும் கூறியுள்ளோம்.

    சென்னை:

    தமிழக அரசு 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதிய பதவி உயர்வு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம் சார்பில் நன்றி மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தங்கம் தென்னரசு, சென்னை மாவட்ட நூலக ஆணை குழு தலைவர் மனுஷ்ய புத்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2-ந் தேதியில் இருந்து செய்முறை தேர்வுகள் நடைபெற வேண்டிய காலம். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் மாவட்டங்களில் அரையாண்டு செய்முறை தேர்வு நடத்த முடியாத சூழல் இருந்தால் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க கூறியுள்ளோம். டிசம்பர் 9-ந்தேதிக்குள் பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டால் அரையாண்டு தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும்.

    ஒருவேளை பள்ளிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி இருந்தால் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது என்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பட்டியலை கேட்டுள்ளோம். வேறு பிரச்சனைகள் பள்ளிகளில் இருக்கிறதா, உள்ளே நுழைவதற்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பது குறித்தும் கணக்கெடுத்து வருகிறோம்.

    வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் அறிவுரையோடு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை தவிர மீதி உள்ள பள்ளிகளில் வரும் டிசம்பர் 9 -ந் தேதியிலிருந்து அரையாண்டு தேர்வு மாற்றம் இன்றி நடைபெறும்.

    தலைமை ஆசிரியர் பணி இடங்கள் காலியாக இருப்பதற்கான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வழக்கு முடிந்து விட்டால் உடனடியாக 2500 பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியரை வழங்க தயாராக இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் அரசின் திட்டங்கள் பள்ளிகளுக்கு எவ்வாறு சென்று உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

    எந்தெந்த பள்ளிகளில் புத்தகங்களோடு மாணவர்களின் சான்றிதழ்கள் நனைந்துள்ளதோ அந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களும் புத்தகங்களும் உடனடியாக வழங்கப்படும். சான்றிதழ் வைக்கும் அறை, தலைமை ஆசிரியர் அறை தரைதளத்தில் இருந்தால் உடனடியாக முதல் தளத்திற்கு மாற்றவும் கூறியுள்ளோம்.

    மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்த அறிக்கையை 2 நாளில் இணை இயக்குனர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    ×