என் மலர்
நீங்கள் தேடியது "Priyanka Gandhi"
- உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் போட்டியிட்டார்.
- அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு கடந்த மாதம் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் பிரதிநிதிகள் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் கலந்து கொண்டார். அப்போது பிரியங்கா காந்தியை சந்திக்க அர்ச்சனா கவுதம் அவரது உதவியாளரான சந்தீப் சிங்கிடம் பேசி உள்ளார்.

பிரியங்கா காந்தியுடன் அர்ச்சனா கவுதம்
ஆனால் அர்ச்சனாவை, பிரியங்கா காந்திக்கு அறிமுகப்படுத்த சந்தீப் சிங் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அர்ச்சனாவை, சந்தீப் சிங் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அநாகரீக வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அர்ச்சனா புகார் கூறினார். இது தொடர்பாக அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர்.
- உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது.
ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- நரேந்திர மோடி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி) 'மீர் ஜாபர்' என்று அழைக்கிறார்கள். உங்கள் முதல்வர்களில் ஒருவர் ராகுல்காந்தியின் தந்தை யார்? என்று கேட்கிறார்.
உங்களுக்கு எந்த நீதிபதியும் 2 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கவில்லை. தகுதிநீக்கம் செய்யவில்லை. ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர். அதானியின் கொள்ளை பற்றியும், நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பற்றியும் கேள்வி எழுப்பினார். உங்கள் நண்பர் அதானி, பாராளுமன்றத்தை விட பெரியவரா? அவரது கொள்ளையை பற்றி கேள்வி எழுப்பினால், ஏன் அதிர்ச்சி அடைகிறீர்கள்?
எங்கள் குடும்பத்தை வாரிசு அரசியல் செய்வதாக கூறுகிறீர்கள். ஆனால், இந்த குடும்பம்தான் ரத்தத்தை கொடுத்து ஜனநாயகத்தை வளர்த்தது. இந்திய மக்களுக்காக குரல் எழுப்பியது. உண்மைக்காக போராடியது. எங்கள் ரத்த நாளங்களில் ஓடும் ரத்தத்துக்கு விசேஷ குணம் உள்ளது. உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது. நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.
- பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர்களும் எனது தாயை பல தருணங்களில் அவமானப்படுத்தி உள்ளனர்.
- ஜனநாயகம் என்றால் என்ன என்பதை எனது குடும்பம் அதன் ரத்தத்தில் கற்றுக்கொண்டது. நாங்கள் பயப்பட மாட்டோம்.
புதுடெல்லி:
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள ராஜ்காட் அருகே காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-
ராகுல்காந்தியின் குரலை பிரதமர் மோடி நசுக்க பார்க்கிறார். பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர்களும் எனது தாயை பல தருணங்களில் அவமானப்படுத்தி உள்ளனர். எங்கள் குடும்பத்தை அவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். தியாகியின் மகனான எனது சகோதரனை துரோகி என்று சொல்கிறீர்கள்.
ஆனால் பாராளுமன்றத்தில் மோடியிடம் சென்று ராகுல்காந்தி கட்டி பிடித்தார். எனது சகோதரர் அவரிடம் சென்று எந்த வெறுப்பும் இல்லை என்றார். சித்தாந்தங்கள் வேறுபடலாம். ஆனால் வெறுப்பு இல்லை என்றார். ஒருவரை தொடர்ந்து இழிவுபடுத்துவதுதான் நாட்டு மரபா?
ஜனநாயகம் என்றால் என்ன என்பதை எனது குடும்பம் அதன் ரத்தத்தில் கற்றுக்கொண்டது. நாங்கள் பயப்பட மாட்டோம்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போராட்டத்தில் பேசியதாவது:-
இந்த சத்தியாகிரகம் இன்று மட்டும் தான். ஆனால் நாடு முழுவதும் இதுபோன்ற சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தப்படும். ராகுல் காந்தி சாதாரண மக்களுக்காக போராடுகிறார். பொதுமக்களின் உரிமைக்காகவும் போராடுகிறார்.
மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல்காந்தி கர்நாடகாவில் பேசினார். ஆனால் வழக்கு குஜராத்துக்கு மாற்றப்பட்டது. கர்நாடகாவில் அவதூறு வழக்கு தொடர பா.ஜனதாவுக்கு அதிகாரம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பணம் சிக்கியது.
- கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு வழங்கவில்லை.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. எந்த வெட்கமும் இல்லாமல் இந்த கமிஷன் அரசு உங்களிடம் (மக்களிடம்) கொள்ளையடிக்கிறது. 40 சதவீத கமிஷன் தர முடியாமல் ஒரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏனெனில் இதில் தவறு செய்தவர்கள் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பணம் சிக்கியது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக அந்த எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் நடத்தினார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ரூ.1½ லட்சம் கோடி கொள்ளையடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தால் ஏராளமான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்க முடியும். இதனால் மக்கள் பயன் அடைந்திருப்பார்கள்.
கர்நாடகத்தில் தற்போது நடைபெறும் பா.ஜனதா அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. பா.ஜனதா வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது. துரோகத்தின் பேரில் ஆட்சி அமைத்தனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த பா.ஜனதா அரசு எந்த பணிகளையும் செய்யவில்லை. கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு வழங்கவில்லை.
பா.ஜனதா தலைவர் ஒருவர், நீங்கள் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடாவிட்டால் மோடியின் ஆசி உங்களுக்கு கிடைக்காது என்று மிரட்டல் விடுக்கிறார். மோடியின் ஆசி வேண்டும் என்று கூறியது கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். பிரதமர் மோடியின் நண்பர் அதானி, அம்பானி ஆகியோர் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.
நிலத்தில் வியர்வை சிந்தும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,100 ஆக உயர்த்திவிட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. உங்களின் பணத்தை கொள்ளையடித்து தொழில் அதிபர்களுக்கு வழங்குகிறார்கள்.
'பிரதமர் மோடி கர்நாடகம் வந்து, காங்கிரசார் தனக்கு கல்லறை கட்டுவதாக சொல்கிறார். இது எத்தகைய பேச்சு. நமது நாட்டில் வேறு யாரும் இவ்வாறு யோசிக்க மாட்டார்கள். நமது பிரதமரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கல்லறை விஷயத்தை முன்வைத்து தேர்தல் நேரத்தில் மோடி பேசுகிறார். இது தான் தேர்தல் விஷயமா?.
இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
இதற்கிடையே மைசூரு கிருஷ்ணராஜநகரில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரியாங்கா காந்தி பிரசார பேரணி நடத்தினார். அப்போது, தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து கையசைத்தார். இதில் ஆயிரகணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
- கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி ஓட்டலில் தோசை சுட்டார்.
- அப்போது பிரியங்கா காந்தி, அதன் செய்முறையை கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் கலந்து கொள்ள கர்நாடகாவுக்கு வந்துள்ளார்.
அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், சுற்றுப்பயணத்தின்போது மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரியங்கா காந்தி காலை உணவு சாப்பிட்டார். அப்போது இட்லி மற்றும் தோசை ஆர்டர் செய்து வாங்கினார். அது நன்றாக இருந்தது எனக்கூறிய அவர், தோசை சுடுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன் என்றும் வெளியே காத்திருந்த நிருபர்களிடம் கூறியுள்ளார்.
ஓட்டலின் சமையலறை பகுதிக்குச் சென்ற பிரியங்கா காந்தி, அவரே விரும்பி தோசையை கல்லில் வார்த்து, தோசை சுடும் முறையை கற்றுக்கொண்டார்.
- எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறுகிறது.
- நாங்கள் உண்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுகிறோம்.
பெங்களூரு :
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:-
சிக்கமகளூரு மாவட்டம் எனது பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த இடமாகும். ரம்பாபுரி மற்றும் சாரதம்மன் கோவில்களுக்கு எனது தந்தை ராஜீவ்காந்தி வந்து சென்றுள்ளார். எனது சகோதரர் ராகுல்காந்தியும் இங்கு வந்து சென்றிருக்கிறார். எனது பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த இந்த மண்ணில் என்னுடைய அண்ணன் ராகுல்காந்திக்கும் நல்லது நடக்க வேண்டும். இந்த வேண்டுதலை நான் கடவுளிடம் கேட்டிருக்கிறேன்.
கர்நாடகாவில் பா.ஜனதா அரசு இதுவரை பொதுமக்களுக்கு ஒரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை. அதுபோல் மத்திய அரசு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறி எந்தவொரு வேலைவாய்ப்பையும் வழங்கவில்லை.
ஒரு காலத்தில் எனது பாட்டி இந்திரா காந்தியையும் மத்திய அரசு இதுபோல் பாராளுமன்றத்தை விட்டு துரத்தியது. அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்தது. எனது அண்ணனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் ஒரே மாதிரியான பொய் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. தற்போது எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறுகிறது. எங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்கள்(மக்கள்) குடும்பமும் தான். இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டும் எனது அண்ணனும், நீங்களும்(மக்கள்) வெற்றி காண வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது. நாங்கள் கடவுள் ஆசியுடன் உண்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுகிறோம்.
1978-ம் ஆண்டு எனது பாட்டி இந்திரா காந்தியும், எங்கள் குடும்பமும் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறியது. அப்போது அவருடன் சிக்கமகளூரு மக்கள் துணை நின்றனர். அவசர சட்ட காலத்துக்கு பிறகு நடந்த தேர்தலில் எனது பாட்டி இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார். அதையடுத்து தான் அவர் சிக்கமகளூரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 77 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். அதற்காக இந்த தருணத்தில் எங்கள் குடும்பத்தின் 3 தலைமுறையினர் சார்பில் முழுமனதுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பொய் வழக்கை முறியடித்து எனது பாட்டி இந்திரா காந்தி மீண்டும் பாராளுமன்றத்துக்கு சென்றதுபோல் எனது அண்ணன் ராகுல் காந்திக்கும் நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். ராகுல் காந்தியும், எங்களது மொத்த குடும்பமும் இந்நாட்டு மக்கள் எங்கள் பின்னால் நிற்பார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். கர்நாடக தேர்தல் உண்மைக்காக நடைபெறும் போர் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரியங்கா காந்தி சிவமொக்கா மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று பிரியங்கா காந்தி சிக்கமகளூரு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று(வியாழக்கிழமை) அவர் சிவமொக்கா மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அப்போது ராகுல்காந்தியும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சிவமொக்காவுக்கு வந்து பிரியங்கா காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக ராகுல்காந்தி இன்று மதியம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சிவமொக்காவுக்கு வருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தொண்டர்கள் உள்பட யாரும் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
- கர்நாடக சட்டசபைக்கு 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
- கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வாக்களியுங்கள்.
உப்பள்ளி :
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், உப்பள்ளி-தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவதி சிவள்ளிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நேற்று பிரியங்கா காந்தி வந்திருந்தார். இதற்காக ஹெலிகாப்டரில் குந்துகோலுக்கு பிரியங்கா காந்தி வருகை தந்தார்.
ஹெலிபேட் பகுதியில் சுற்றி நின்ற மக்களை சந்தித்து, அவர்களுடன் கைகுலுக்கி பிரியங்கா காந்தி பேசினார். பின்னர் குந்துகோல் அருகே உப்பள்ளி-லட்சுமேஷ்வரா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஜி.எஸ்.எஸ். வித்யா பீட்டா வரை பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று குசுமாவதி சிவள்ளிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து பிரியங்கா காந்திக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அந்த ஊர்வலத்தின் போது பிரியங்கா காந்தி பேசியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவதியை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்துள்ளேன். மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 4 ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. எந்த பணிகளையும் பா.ஜனதாவினர் செய்யவில்லை. ஊழலில் ஈடுபடுவதை மட்டும் பா.ஜனதாவினர் குறிக்கோளாக வைத்திருந்தனர்.
தற்போது சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா தலைவர்கள் உங்களை பார்க்க வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் கர்நாடகம் வளர்ச்சி அடையவில்லை என்பது உங்களுக்கும் தெரியும். விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்காக தான் காங்கிரஸ் கட்சி உத்தரவாத அட்டையை வீடு, வீடாக வழங்கி வருகிறது.
பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை, 10 கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தனர். மாநிலத்தில் 2½ லட்சம் வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் கர்நாடக மக்கள் மற்றும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடப்பதாகும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
பின்னர் அவர், நவலகுந்துவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், "நான் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்பட பல பிரதமர்களை பார்த்துள்ளேன். அவர்கள் மக்களின் துயரங்களை கேட்பார்கள். ஆனால் மக்களின் துயரங்களை கேட்பதற்கு பதிலாக தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர், மோடி தான். பா.ஜனதா அரசு மக்களையோ, அவர்களின் வாக்குகளையோ, ஆளும் மாநிலத்தையோ மதிப்பதில்லை. ஊழல் செய்தவர்களுக்கு தேர்தலில் பா.ஜனதாவில் டிக்கெட் கொடுத்துள்ளனர். ஆனால் நேர்மையானவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரையும், லிங்காயத் சமுதாயத்தையும் அக்கட்சி மதிக்கவில்லை.
மக்களை மதிக்காத கட்சி நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நல்லது இல்லை. அரசியல்வாதிகள் தங்களை தலைவர்களாக்குவது மக்கள்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். கர்நாடகத்தில் ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், பள்ளி நிர்வாகம், ஒப்பந்ததாரர்கள் சங்கங்கள் ஊழல் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியும் எதுவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.
- பிரதமர் மோடி மட்டுமே மக்கள் முன்பு தன்னை பற்றி கூறி அழுகிறார்
- எனது சகோதரர் ராகுல் காந்தி சத்தியத்தின் வழியில் செல்வார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரசாரம் ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார்.
இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று முன்தினம் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தன்னை பற்றி இதுவரை 91 முறை அவதூறாக பேசி உள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தன்னை பற்றி 91 முறை அவதூறாக பேசியதாக கூறி உள்ளார். அந்த அவதூறு புகார்கள் ஒரே பக்கத்தில் அடங்கிவிடும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் குறித்து கூறப்பட்ட அவதூறுகளை பட்டியலிட்டால் புத்தகங்களாக தயாரித்து அவற்றை பதிப்பித்துவிடலாம்.
பொதுமக்களை சந்திக்கும் பிரதமர்கள், மக்களின் பிரச்சினைகளை குறித்து கேட்காமல், தனது வேதனைகளை மட்டுமே கூறுகிறார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டுக்காக குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாட்டிற்காக கடினமாக உழைத்தனர்.
ஆனால் பிரதமர் மோடி மட்டுமே மக்கள் முன்பு தன்னை பற்றி கூறி அழுகிறார். தைரியம் இருக்கிறதா. எனது சகோதரர் ராகுல் காந்தியிடம் கற்று கொள்ளுங்கள். நீங்கள் வேதனையாக பேசினாலும், துப்பாக்கியால் சுட்டாலும், கத்தியால் குத்தினாலும் எனது சகோதரர் ராகுல் காந்தி சத்தியத்தின் வழியில் செல்வார். ராகுல் காந்தி, நாட்டுக்காக துப்பாக்கி குண்டு வாங்கி உயிரை விடவும் தயாராக உள்ளார்' என்றார்.
- பிரியங்கா காந்தி முன்னிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சிறிய அரசியல் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
- பொதுக்கூட்டத்திற்கு பலத்த போலீஸ் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 8-ந்தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். தெலுங்கானாவில் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் குறித்து பேசுகிறார்.
வேலையின்மைக்கு எதிராக நடைபயணமாக மைதானத்திற்கு வரும் பிரியங்கா காந்தி முன்னதாக எல்.பி. நகரில் உள்ள ஸ்ரீ காந்தா சாரி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
பிரியங்கா காந்தி முன்னிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சிறிய அரசியல் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுக்கூட்டத்திற்கு பலத்த போலீஸ் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
பிரியங்கா காந்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவது எதிரணியினருக்கு அதிர்ச்சி தரும் மாநில கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
- கர்நாடகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது.
- இளைஞர்கள் கல்விக்காக அதிகளவில் செலவு செய்கிறார்கள்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கொப்பல் மாவட்டம் கனககிரியில் நேற்று நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர், அரிசி, பருப்புகள், மாவுகள் போன்றவற்றின் விலை உயர்ந்துவிட்டது. பா.ஜனதா ஊழல் அரசின் ஊழல் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது. 40 சதவீத கமிஷன் பா.ஜனதா அரசு என்று நாம் சொல்லவில்லை. இந்த பெயரை ஒப்பந்ததாரர்கள் சங்கமே வழங்கியுள்ளது.
அரசுக்கு பெரிய அளவில் கமிஷன் கொடுக்க முடியாத ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இங்குள்ள இளைஞர்கள் கல்விக்காக அதிகளவில் செலவு செய்கிறார்கள். கல்வி பயின்று போட்டி தேர்வுக்கு செலவு செய்து படிக்கிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் அந்த பணிக்காக லஞ்சம் வாங்கியுள்ளனர். இதனால் தேர்வான பட்டியலையே இந்த அரசு ரத்து செய்துவிட்டது. பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் வீட்டில் ரூ.8 கோடி சிக்கியது.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
முன்னதாக பிரியங்கா காந்தி, கனககிரி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கனகாசலபதி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.
- இருவரையும் இமாச்சல பிரதேச மாநில முதல்வா் சுக்விந்தா் சிங் வரவேற்றாா்.
- இருவருக்கும் நினைவுப் பரிசாக பாரம்பரிய இசைக்கருவிகளை வழங்கினாா்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அவரது மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோா், இமாசல பிரதேசத்துக்கு நேற்று தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டனர்.
சிம்லாவின் சாப்ரா பகுதிக்கு ஹெலிகாப்டா் மூலம் வந்திறங்கிய அவா்களை இமாச்சல பிரதேச மாநில முதல்வா் சுக்விந்தா் சிங் வரவேற்றாா். இருவருக்கும் நினைவுப் பரிசாக பாரம்பரிய இசைக்கருவிகளை அவா் வழங்கினாா்.
பின்னா், சாப்ரா பகுதியில் உள்ள வத்ராவின் இல்லத்துக்கு இருவரும் சென்றனா். ஜனாதிபதியின் கோடைகால பயண மாளிகைக்கு அருகே இந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லம் ஆங்கில மற்றும் மலைப்பகுதி கட்டுமான கலைகளின் கலவையாக அமைந்துள்ளது. அடா்ந்த ஊசியிலை காடுகளுக்கு இடையே அமைதியான சூழலில் இது அமைந்துள்ளது.