search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property taxes"

    ஆலந்தூரில் மிக அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்ககோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. #DMK #ChennaiHighCourt
    சென்னை:

    சென்னையில் சொத்து வரி போயஸ்கார்டன், தி.நகர், கோபாலபுரம் பகுதியில் மிக குறைவாகவும், அம்பத்தூர், ஆலந்தூர், முகப்பேர், மாதவரம் பகுதிகளில் 3 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே சீரான வரி விதிக்க வேண்டும் என்று புறநகர் பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    கடந்தவாரம் முகப்பேர் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் பி.வி. தமிழ்ச் செல்வன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இப்போது ஆலந்தூர் பகுதியில் 3 மடங்கு வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அங்குள்ள மக்கள் ஆவேசத்துடன் மாநகராட்சிக்கு மனு அனுப்பி வருகின்றனர்.

    ஆலந்தூரில் மிக அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்ககோரி தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆலந்தூர் நகராட்சி தலைவராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது ஏராளமான நலத்திட்டங்களை அமல் படுத்தினேன். ஆலந்தூர்பல்லாவரம் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம், பாதாள சாக்காடை திட்டம் என்று பல திட்டங்களை அமல்படுத்தினேன்.

    இந்த நிலையில், ஆலந்தூர் நகராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசு இணைத்தது. இந்த பகுதி, சென்னை மாநகராட்சியின் 160 முதல் 167வது வார்டுகளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூலை 19ந்தேதி சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    இதன்படி, சென்னை மாநகராட்சியும் சொத்து வரியை உயர்த்தியுள்ளது. அதாவது ஆலந்தூர் நகராட்சியாக முன்பு இருந்த வார்டு 160 முதல் 167 வரையிலான பகுதியில், முக்கிய சாலைக்கு அருகேயுள்ள சொத்துக்களுக்கு, ஒரு சதுர அடிக்கு ரூ.3.75 என்றும் தெருக்களில் அமைந்துள்ள சொத்துக்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.2.50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லஸ் சர்ச் சாலை, ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை, தி.நகர் வெங்கட் நாராயணா சாலை ஆகிய முக்கிய சாலையோரம் உள்ள சொத்துக்களுக்கு சதுர அடிக்கு ரூ.1.50 என்று குறைந்த தொகையை சொத்துவரியாக நிர்ணயம் செய்துள்ளனர்.

    எனவே, ஆலந்தூர் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியை திரும்ப பெறவேண்டும் சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்யவேண்டும் என்று கடந்த 1ந்தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, ஆலந்தூர் பகுதியில் சொத்து வரியை மறுநிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். மாநகராட்சி சார்பில் வக்கீல் டி.சி.கோபாலகிருஷ்ணன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டனர்.

    அப்போது நீதிபதிகள், ‘மனுதாரர் வீடு ஆலந்தூரில் இருக்கும்போது, சொத்து வரி குறித்து பொதுநல வழக்கு எப்படி தொடர முடியும்? வரியை உயர்த்துவதற்கு முன்பு, பழைய சொத்து வரியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வணி ரீதியான கட்டிடம் எத்தனை ? என்பது உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் மனுதாரரிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த புள்ளி விவரங்களை சேகரித்து தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற டிசம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #DMK #ChennaiHighCourt
    சொத்து வரி உயர்வை தொடர்ந்து குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் சொத்து வரியை 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வு வருகிற அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. சென்னை மாநகராட்சியில் குடியிருப்புகளுக்கான சொத்து வரி பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சொத்து வரி உயர்வை தொடர்ந்து குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.300 கட்டணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் ரூ.180 கூடுதலாக சேர்த்து ரூ.480 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ஆனால் குடிநீர் கட்டணம் பல மடங்கு கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    தற்போது கட்டண விவரங்கள் பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த அரையாண்டு கட்டணத்திலும் இப்போது பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த எஸ்.எம்.எஸ்.சை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் குடிநீர் கட்டணம் செலுத்த அளிக்கப்படும் காலக்கெடு முடிந்தாலும் சில நாட்கள் விலக்கு அளிக்கப்படும் . அதன்பின்பு கட்டணம் ெலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

    ஆனால் தற்போது நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவை தாண்டினாலே அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி, வீட்டு வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

    இந்த வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும என்று தமிழக அரசை வலியுறுத்தி நாளை(வெள்ளிக்கிழமை) மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்பேரில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் எனது(கீதாஜீவன் எம்.எல்.ஏ.) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதே போன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

    இந்த ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பேரூர் பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் சொத்துவரியை 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்தது. வீடுகளுக்கு 50 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. #TNGovernment #PropertyTax
    சென்னை:

    தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டில் இருந்து சொத்துவரி உயர்த்தப்படாமல் இருக்கிறது.

    இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 17-ந்தேதி அன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான அறிக்கையை 2 வார காலத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர் ஹர்மிந்தர்சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

    குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.



    தமிழக அரசின் இந்த அரசாணைப்படி சொத்து வரியானது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்கிறது.

    தமிழக அரசின் இந்த உத்தரவு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சொத்துவரி உயர்வு மூலம் வாடகை வீடுகளுக்கு 2 மடங்கு வரி உயர்கிறது.

    வீட்டு வரியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கும் மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தாமதமாக வரி கட்டினால் அபராத தொகை விதிக்கவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment #PropertyTax
    ×