என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Assembly"

    • தி.மு.க. எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா புதுச்சேரி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
    • ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    சட்டசபையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க. எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா புதுச்சேரி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாக தேக்கத்தை சரி செய்வதற்கு மாநில அந்தஸ்து தேவை என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    • மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
    • 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12-ந் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    தொடர்ந்து, சட்டசபையில் தினமும் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்தது.

    எம்.எல்.ஏ.க்களின் கேள்விக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதிலளித்தனர். பூஜ்ய நேரத்திலும் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் அனல் பறந்தது. நேற்று 9-ம் நாள் கூட்டம் காலை 9.30 மணி தொடங்கியபோது, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பேச வேண்டும் என்பதால் மாலையிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    இதன்படி நேற்று காலையில் தொடங்கிய கூட்டம் மதியம் 2.20 மணி வரை நடந்தது. தொடர்ந்து மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.

    இந்த கூட்டம் நேற்று நள்ளிரவு 10.40 மணி வரை நீடித்தது. அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மானிய கோரிக்கையின் மீது பேசும் வகையில் சட்டசபை இரவு 10.40 மணி வரை நடத்தப்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி இரவு 9 மணிக்கு சட்டசபையிலிருந்து புறப்பட்டு சென்றார். ஒரே நாளில் மதிய உணவு இடைவேளை 2 மணி நேரம் தவிர்த்து 11 மணி நேரம் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) நாளை ஞாயிற்றுக்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் இல்லை.

    இதைத்தொடர்ந்து 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.

    இதில் 27-ந் தேதியை தவிர்த்து மற்ற 3 நாட்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கின்றனர்.

    • 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
    • புதுச்சேரியில் அடுத்தம் மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பேசிய முதல்-மந்திரி ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், புதுச்சேரியில் அடுத்தம் மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

    • காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது.
    • அமைச்சர் பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.

    சபையின் முதல் அலுவலாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களை பேச சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அழைத்தார்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- புதுவையில் எத்தனை மொழிகள் உள்ளது என தெரியுமா?

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா:- இருமொழி கொள்கைதான் வேண்டும். தமிழை எதிர்க்கிறீர்களா?

    அமைச்சர் நமச்சிவாயம்: தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது எப்போது தெரியுமா? காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்தது. இந்தியை திணித்ததும் காங்கிரஸ்தான். அவர்களோடுதான் கூட்டணியில் உள்ளீர்கள்.

    இதையடுத்து அமைச்சர் பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் பேசினர்.

    இதனால் சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. சபாநாயகர் தொடர்ந்து மணி அடித்து சபையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.

    ராமலிங்கம் (பா.ஜ.க.): 3-வது மொழி விருப்ப பாடமாக உள்ளது. விரும்பும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம்.

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார்: கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொண்டால் அறிவு வளரும். தமிழகத்தில் தமிழ்நாடு என பெயர் வர யார் காரணம் என தெரியுமா?

    ராமலிங்கம்: தமிழ்நாடு என பெயர் வர சுந்தரலிங்கனார் உயிர் நீத்தார், அதனால்தான் தமிழ்நாடு என பெயர் வந்தது.

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா:- தமிழக முதலமைச்சராக அண்ணாதுரை பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக தமிழ்நாடு என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இது 4 ஆண்டு பா.ஜ.க.காரருக்கு தெரியாது.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்: புதுவையில் இருமொழி, மும்மொழி கொள்கை இல்லை, 4 மொழி கொள்கை உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 4 மொழி உள்ளது.

    செந்தில்குமார்(தி.மு.க.): இது 22 மொழிகள் கொண்ட தேசம்.

    அனிபால்கென்னடி (தி.மு.க.): எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோம்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்: காங்கிரஸ் ஆட்சியில்தான் மொழி போர் நடந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம்: இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் எப்படி வந்தது? அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு எது? உங்கள் கட்சி தலைமையிடம் கேட்டுவிட்டு பேசுங்கள். புதுவை அரசின் கொள்கை மும்மொழி கொள்கைதான். முதலமைச்சர், கவர்னர் ஏற்றதால்தான் மும்மொழி கொள்கை அமலுக்கு வந்துள்ளது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் புதுவையில் மும்மொழி கொள்கைதான் அமலில் உள்ளது.

    எதிர்கட்சி தலைவர் சிவா: அமைச்சரின் அராஜக பேச்சை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறினார். அவருடன் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர்.

    • நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-2026 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
    • ஏராளமான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கைலாஷ்நாதன் உரை வாசித்தார். நேற்று 2-வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு உறுப்பினர்கள் பேசி கருத்துகளை தெரிவித்தனர்.

    இதற்கிடையே பெஞ்சல் புயல் நிவாரணம் முழுமையாக வழங்காததை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் தி.மு.க. காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதை தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-2026 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றிருந்தது.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்காக கல்லூரியில் படிக்கும் போது மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பன உள்பட ஏராளமான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. 

    • புதுவை சட்டசபையில் 12 ஆண்டுகாளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
    • அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை அக்டோபர் மாதம் கூடியது. கூட்டத்தில் கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்தினார்.

    பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந்தேதி கூடுகிறது. இத்தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

    புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தலைமை செயலாளர் ராஜூவ் வர்மா தடுத்துவருகிறார்.

    தலைமைச்செயலாளருடன் இணைந்து அதிகாரிகளும் மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வருகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் திருப்பி அனுப்புவதற்கு அதிகாரிகளே காரணம் இத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவை சட்டசபையில் 12 ஆண்டுகாளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    • சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.
    • குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை நாளை கூட்டப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

    சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது. குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும். இதனிடையே மத்திய அரசு புதுவைக்கு 2023-24ம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.

    புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

    இதற்காக மாநில திட்டக்குழுவை கூட்ட துறைவாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி விபரங்களை பெற்று ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு வரைவு பட்ஜெட்டை மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    • புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர் அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.
    • புதுவை அரசு கோரியுள்ள நிதிக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

    புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு செலவீனங்களுக்கு மட்டுமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது 2023-24-ம் நிதியாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.

    இதற்காக அனைத்து துறைகளும் முழு வீச்சில் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதையொட்டி கடந்த 26-ந்தேதி மாநில திட்டக்குழு கூடி ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் திட்ட வரையறையாக மத்திய அரசின் உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பட்ஜெட்டில் புதுவைக்கான மத்திய அரசின் நிதியுதவி ரூ.3.117.17 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து புதுவை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர் அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை மாநில வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.

    இதனால் புதுவை அரசு கோரியுள்ள நிதிக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 9-ந் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார்.
    • தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் வழக்கமாக மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 12 ஆண்டாக பல்வேறு இடையூறுகளால் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார்.

    கடந்த மாதம் கவர்னர் தமிழிசை தலைமையில் திட்டக்குழு கூடி 2023-24-ம் ஆண்டுக்கு பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை நிர்ணயம் செய்தது.

    இதற்கான அனுமதிகோரி கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 3-ந் தேதி புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்தது.

    தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 9-ந் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    13-ந் தேதி காலை 9.45 மணிக்கு நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    கவர்னர் உரைக்கு பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சபையை நடத்துவது என முடிவு செய்யும். சட்டசபை நீண்டநாட்கள் நடைபெறும். வித்தியாசமான சட்டமன்றமாக இருக்கும். 10 சதவீத அரசு அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறிவந்தேன்.

    அதேநிலை தற்போதும் நீடிக்கிறது. இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டசபையில் உரிய தண்டனை அளிக்கப்படும். திட்டங்களை கெடுப்பது உள்ளூர் பி.சி.எஸ். அதிகாரிகள்தான். அவர்கள் திட்டங்களுக்கான கோப்புகளில் எதிர்மறையான கருத்துகளை எழுதுகின்றனர். இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டசபையில் தண்டனை அளிக்கப்படும்.

    3 அரசு துறைகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை செலவு செய்துள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மார்ச் மாதம் இறுதிக்குள் நிதியை முழுமையாக செலவு செய்வதாக உறுதியளித்துள்ளனர். சிறப்புக்கூறு நிதியும் முழுமையாக செலவிடவில்லை. இதையும் செலவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனவால் பெற்றோர்களை இழந்த 12 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, சுகாதார அட்டை வழங்கியுள்ளோம்.
    • குழந்தைகள் மெட்ரிக் வகுப்புக்கு முற்பட்ட, பிற்பட்ட திட்டங்களின் கீழ் பதியப்பட்டு கருணைத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக இடைக்கால பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார்.

    மாநில திட்டக்குழு கூட்டத்தில் வரைவு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசு புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.

    இதைத்தொடர்ந்து புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்க கவர்னர் தமிழிசை இன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வந்தார்.

    அவருக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வரவேற்பு அளித்தார். பின்னர் சட்டசபை வளாகத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சட்டசபை மைய மண்டபத்துக்கு கவர்னர் தமிழிசை வந்தார்.

    சபாநாயகர் இருக்கையில் துணை நிலை கவர்னர் தமிழிசை அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து 9.45 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    துணை நிலை கவர்னர் தமிழிசை தமிழில் தனது உரையை பாரதியார் கவிதை வரிகளுடன் தொடங்கினார். அவரது உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு:-

    சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.28 கோடியில் 6.83 லட்சம் கனமீட்டர் மணல் தூர்வரப்பட்டு துறைமுக செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. உள்வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தடுப்புச்சுவர், பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.4.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.4.88 கோடி, மழைகோட் வழங்க ரூ.60 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

    நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் 65 குடும்பத்திற்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்திர நிதியுதவி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது. மாத நிதியுதவியாக ரூ.ஆயிரம் வீதம் 13 ஆயிரத்து 339 பயனாளிகளுக்கு ரூ.1.33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனவால் பெற்றோர்களை இழந்த 12 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, சுகாதார அட்டை வழங்கியுள்ளோம்.

    இந்த குழந்தைகள் மெட்ரிக் வகுப்புக்கு முற்பட்ட, பிற்பட்ட திட்டங்களின் கீழ் பதியப்பட்டு கருணைத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்பு ஆதரவு திட்டத்தின் கீழ் 12 குழந்தைகளுக்கு நிதியுதவியாக ரூ.11 லட்சத்து 42 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆட்சிப்பரப்பை சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய செய்து வறுமையை போக்குவதில் அரசு உறுதியாக உள்ளது.

    அனைத்து பிராந்தியங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை துல்லியமாக விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளித்து பிராந்திய ஏற்ற தாழ்வுகளை போக்கியுள்ளது.

    ஆட்சிப்பரப்பில் செயல்படுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான ஆதரவையும், பரிந்துரைகளையும் உறுப்பினர்கள் நல்குவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். இந்த அரசால் மக்களுக்காக தொடங்கப்படும் அனைத்து பணிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் உரையாற்றினார்.

    • 36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு தான் புதுவை நிர்வாகத்தை நடத்துகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

    அப்போது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தனி நபர் தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு ஆகியோர் கொண்டு வந்தனர்.

    5 பேரின் தனி நபர் தீர்மானங்களையும் இணைத்து விவாதிக்க சபாநாயாகர் ஏம்பலம் செல்வம் அனுமதியளித்தார்.

    எதிர்க்கட்சித்தலைவர் சிவா: மத்திய அரசு நிதி பற்றாக்குறை, அதிகாரிகள் அலட்சியம், கவர்னர் அரசை நிலைக்குலைய செய்தல் ஆகியவை பற்றி சபையில் பேசப்பட்டது.

    36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

    கடந்த 63-ம் ஆண்டில் 39 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். பின்பு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. பின்னர் அதிகாரம் குறைக்கப்பட்டு, மத்திய அரசின் கண்காணிப்பில் வந்தது. சமூகம், நிதி, நிர்வாக ரீதியாக அதிகாரம் குறைந்துள்ளது.

    இதனால் மாநில அந்தஸ்து குரல் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல் தலைமைச்செயலர், கவர்னர் முடிவு எடுக்க வேண்டிய நிலையுள்ளது.

    மத்திய அரசு தான் புதுவை நிர்வாகத்தை நடத்துகிறது. பிற்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு கூட மத்திய அரசை நாட வேண்டியுள்ளது. பெரும்பாலான கோப்புகள் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதால் அதிகாரம் குறைந்துள்ளது. கவர்னரேதான் முடிவு எடுக்கிறார். முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    கவர்னர், தலைமை செயலர், செயலர்கள் புதுவையின் மீது நிரந்தர அக்கறையின்றி செயல்படுகிறார்கள். பட்ஜெட்டுக்கு கூட மத்திய அரசுக்கு காத்திருக்க வேண்டி உள்ளது. இது ஜனநாயக முறைக்கு எதிரானது. நியாய பங்கீடு மறுக்கப்படுகிறது. பட்ஜெட்டில் உதவி என்று தரப்படுவது நியாயமற்றதாக உள்ளது.

    தமிழகத்தில் 69 சத இடஒதுக்கீடு தரப்படுகிறது. புதுவையில் இல்லை. இந்த தடையெல்லாம் நீங்க முழு தகுதியுடைய மாநில அந்தஸ்து தேவை. மத்தியில் பா.ஜனதா-காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவில்லை.

    நாஜிம் (திமுக): புதுவைக்கு தற்போது மாநில அந்தஸ்து கிடைக்க அனைத்து வாய்ப்பும் உண்டு. மாநில அந்தஸ்துக்காக தொடங்கிய கட்சியின் ஆட்சி நடக்கிறது. மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர். கூட்டணி அறுவடை செய்யும் நேரம் இது. மத்திய பாஜக உதவியாக இருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவர் சுஷ்மா சுவராஜ் புதுவை வந்தபோது மாநில அந்தஸ்தை பரிந்துரை செய்தார்.

    நேரு (சுயேட்சை): பலமுறை தீர்மானம் நிறைவேவற்றியும் மாநில அந்தஸ்து கிடைக்காதது வருத்தம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பொதுநல அமைப்புகள், தொழிலாளர், இளைஞர்கள் கோஷம் எழுப்புகின்றனர். அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முழு நேர பணியாக அடுத்தக் கட்டத்துக்கு இதை கொண்டு செல்ல வேண்டும்.

    குட்டி பிரான்சான புதுவைக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. புதிய திட்டங்களுக்கான ஆய்வு கூடங்களாகி விட்டன. ரேஷன் கடை இல்லாத மாநிலமாகி விட்டது. மத்திய அரசு திட்டங்களை திணிக்கின்றன.

    78 நாடுகள் பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ளன. அவை சுதந்திரமாக உள்ளது. நாம் அடிமைப்பட்ட மாநிலமாக உள்ளோம். எனவே மாநில அரசுக்கு அதிகாரம் தேவை. அதற்கு மாநில அந்தஸ்து தேவை.

    அனிபால் கென்னடி (திமுக): சட்டப்பேரவை இல்லாத லடாக்கை நிதி கமிஷனில் சேர்த்துள்ளனர். ஆனால் புதுவையை சேர்க்கவில்லை. சொந்த வருவாயில் 63 சதவீதத்தில் உள்ளோம். வடகிழக்கு மாநிலங்களை விட நம் வருவாய் அதிகம். வருவாய் குறைவான பல மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்றுள்ளன. அதிகாரமில்லாத சுதந்திரம் இருக்கிறது. உடனடியாக அனைத்துக்கட்சித்தலைவர்கள், சட்டப்பேரவை எம்எல்ஏக்களைக் கூட்டி, பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்த வேண்டும். அதற்கு திமுக உறுதுணையாக இருக்கும்.

    செந்தில்குமார் (தி.மு.க.): ஆட்சியாளர்களை தாண்டி மக்களுக்கு உரிமை வேண்டும். இரண்டாம் தர குடிமக்களாக நாம் வாழும் சூழல் உள்ளது. இந்த இழுக்கை போக்கி உரிமையுடன் கூடிய குடிமகனாக வாழவேண்டும். சுதந்திரத்துக்காக பெண்களும் அதிகளவில் பங்கேற்றனர். இது அனைவரும் போராடி பெற்ற சுதந்திரம். இந்தியாவுடன் நாம் இணைந்தோம்.

    நம்மால் சொந்த காலில் நிற்க முடியும். சட்டத்திட்டங்கள் அனைத்தும் கட்டி வைக்கும் விதமாக உருவாக்கியுள்ளனர். இவ்வளவு பிரச்சினைகளை வைத்தும் கட்டுகள் தேவையா? எனவே இந்த கட்டுகளில் இருந்து விடுபட மாநில அந்தஸ்து தேவை.

    இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானத்தை வரவேற்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், வெங்க டேசன், ரிச்சர்டு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், நாக.தியாகராஜன், என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரமேஷ், திருமுருகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் பேசினர்.

    மாகி, ஏனாமை இணைத்து மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

    ஒட்டுமொத்தமாக மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்தி விளக்கமாக பேசியுள்ளனர். பல விஷயங்களை சொல்லியுள்ளனர். நிர்வாக சிரமம் இங்கிருந்தால் தான் தெரியும். ஆளும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும். உரிமையும் நிலையாக கிடைக்க வேண்டும் என்றால், மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே வழி. பலமுறை இதை சட்டசபையில் வலியுறுத்தி உள்ளோம்.

    நாம் வலியுறுத்தி செல்லும்போது மத்திய அரசு பார்ப்போம் என்கின்றனர். இந்த சட்டசபையில் ஒரு மனதாக இவ்வளவு தெளிவாக பேசி பார்த்ததில்லை. அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினர். அவ்வளவு வலி உள்ளது.

    எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு கொண்டு சென்று மாநில அந்தஸ்து பெறுவோம். நல்ல நேரம் கூடி வந்துள்ளது.

    அனைத்தும் நல்லபடியாக நடக்கும், அதற்கான நேரம் வந்துள்ளது. மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. நமது கோரிக்கையை ஏற்று மாநில அந்தஸ்து கொடுக்கும் நிலையிலும் இருக்கிறது. எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக கொண்டு சென்று மத்திய அரசை வலியுறுத்தி வெற்றியை பெறுவோம். எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்தை பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அரசே தீர்மானமாக ஏற்றதால், உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து 5 உறுப்பினர்களும் தங்களின் தனி நபர் தீர்மானத்தை திரும்பப்பெறுவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது வெளிநடப்பு செய்த சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு சபைக்கு திரும்பியிருந்தார். ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எழுந்து நின்று மேஜையை தட்டி ஆரவாரம் செய்து தீர்மானத்தை வரவேற்றனர்.

    • பரந்த நில பரப்பில் தலைமை செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க கடந்த 2000-ம் ஆண்டு முதலே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஏற்கனவே 4 முறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், நில தேர்வில் சிக்கல் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற வளாகம் கடற்கரை சாலை அருகில் பாரதி பூங்கா எதிரே சுமார் 87 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.

    கடந்த 1820-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மருத்துவமனையாக இருந்தது. 1959-ம் ஆண்டில் இருந்தே சட்டசபை வளாகமாக செயல்படுகிறது. 200 ஆண்டுகள் பழமையான சட்டமன்ற கட்டிடம் புதுவையின் 19 பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாகும்.

    பழமையான கட்டிடம் என்பதால் மைய கட்டிடம் வலுவிழந்துள்ளது.

    இந்த நிலையில் பரந்த நில பரப்பில் தலைமை செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க கடந்த 2000-ம் ஆண்டு முதலே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே 4 முறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், நில தேர்வில் சிக்கல் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் 2021-ல் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

    அதன்படி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை சதுக்க பகுதியில் 15 ஏக்கரில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் இணைந்த புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது. மொத்தம் 15 ஏக்கரில் 5 ஏக்கர் பரப்பளவுக்கு பேரவைக் கட்டிடங்கள் அமையவுள்ளன. ரூ.400 கோடியில் புதிய சட்டமன்ற வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதில் பொதுமக்கள் சபை நடவடிக்கையை நேரில் பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் பேரவை கூட்ட அரங்குடன் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கான நவீன அறைகள், காபினட், கமிட்டி அறைகள் அமையவுள்ளது. பேரவை வளாகம் தரைத்தளத்துடன் 5 மாடிகள் கொண்டதாக அமையவுள்ளது.

    பேரவை வளாகத்தையொட்டி தலைமை செயலகமும், சட்டமன்ற செயலகம், நூலகம் உள்ளிட்டவையும் அமைய உள்ளது.

    தலைமை செயலகம் தரை தளத்துடன் 4 மாடிகளுடன் அமைய உள்ளது. அதோடு உட்புற சாலைகள் 7 மீட்டர் அகலத்திலும், நடைபாதை 2 மீட்டர் அகலத்திலும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதோடு ஹெலிகாப்டர் இறங்கு தளமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பேரவைக் கட்டிடமானது பல மாநிலங்களின் சட்டப்பேரவைகளை ஆராய்ந்து அதில் இருந்து தனித்து சட்டப்பேரவை கட்டிட மாதிரியாக அமையும் வகையில் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய பிரதேசம் நொய்டாவை சேர்ந்த எனார்க் கன்சல்டன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த நிறுவன அதிகாரிகள் கட்டிடத்துக்கான மாதிரி வரைப்படத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் காண்பித்தனர். புதுவை பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் சத்தியமூர்த்தி விளக்கினார்.

    இந்த வரைபடத்துக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு டெண்டர் விடப்படும்.

    இதன் பிறகு புதிய சட்டமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.

    ×