search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry CM Narayanasamy"

    இன்னும் 4 அல்லது 5 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தஞ்சையில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார். #PuducherryCM #Narayanasamy #BJP #Kiranbedi
    தஞ்சாவூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில் கழிவுநீர் ஓடையில் நான் இறங்கி சுத்தம் செய்த செய்தி வெளியானது. நான் கழிவுநீர் ஓடையில் இறங்கி சுத்தம் செய்தது பிரதமர் பாராட்டை பெறுவதற்காக அல்ல. 2 மாதங்களுக்கு முன்பே அந்த இடத்தை பார்வையிட்டேன். மணல், குப்பை மற்றும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் தான் நாம் களத்தில் இறங்கினால் எனக்கு பின்னால் உள்ள அதிகாரிகள் வேலை செய்வார்கள் என்ற கோணத்தில் சுத்தம் செய்தேன்.

    நான் ½ மணி நேரம் தான் சுத்தம் செய்தேன். ஆனால் பொதுமக்களும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் சுமார் 2 மணி நேரம் சுத்தம் செய்தனர். இது மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை ஆகும். சில பேர் ஏற்கனவே குப்பைகளை கொட்டி விட்டு பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்கிறார்கள்.

    டெல்லியில் நிலம், காவல் துறை, சட்டம் ஒழுங்கு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் நிலம், நிர்வாகம், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆனால் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் அரசுக்கு ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுகிறார்.

    இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    பல்வேறு திட்டங்கள் குறித்து கவர்னருக்கு கோப்புகள் அனுப்பியும் கையெழுத்து இடாமல் திருப்பி அனுப்பி விடுகிறார். இதுகுறித்து பிரதமரிடம் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.

    இன்னும் 4 அல்லது 5 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது புதுச்சேரி மாநிலத்திலும் மாற்றம் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PuducherryCM #Narayanasamy #BJP #Kiranbedi
    அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காவிட்டால் கவர்னரே பொறுப்பு என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜூலை மாதம் வரையிலான அரசு செலவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இந்த மாதம் 2-ந்தேதி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகு அதை சட்டசபையில் தீர்மானமாக ஏற்று நிறைவேற்றுவார்கள்.

    அப்படி நிறைவேற்றினால்தான் அடுத்த மாதத்தில் இருந்து அரசு செலவுக்கு பணம் கிடைக்கும். ஆனால், கவர்னர் கிரண்பேடி இதுவரை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் பட்ஜெட்டை சட்டசபையில் நிறைவேற்ற முடியவில்லை. அது நிறைவு பெறாமலேயே சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இனி கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளித்தால் மீண்டும் சட்டசபை கூட்டத்தை நடத்தி பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாத அரசு செலவுக்கு பணம் செலவழிக்க முடியாது.


    இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்க முடியாத நிலை ஏற்படும். மற்ற திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் அரசு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜூன் மாதத்தில் சட்டசபையை கூட்ட நடவடிக்கை எடுத்த போது, மத்திய அரசு 45 நாட்கள் கோப்பை வைத்திருந்த காரணத்தால் ஜூன் மாதத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை.

    2 முறை உள்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்திய பிறகே ஒப்புதல் தரப்பட்டது. காலதாமதத்துக்கு மத்திய அரசின் மெத்தன போக்கே காரணம் ஆகும்.

    நேற்று முன்தினம் சட்டசபையின் அனைத்து அலுவல்களும் முடிக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்த வெட்டு தீர்மானமும் திரும்ப பெறப்பட்டது. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்த பட்ஜெட் சட்ட வரைவு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் உள்நோக்கம் காரணமாக, அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். கவர்னர் ஒப்புதல் அளித்திருந்தால் சட்டசபையில் பட்ஜெட் சட்ட வரைவு நிறைவேறி இருக்கும்.

    அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கான கோப்புகள் 25-ந் தேதியுடன் தயார் செய்யப்பட்டு அந்த கோப்புகள் வங்கி கணக்குக்கு செல்ல வேண்டும். அது மட்டுமின்றி தற்போது நடந்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது.

    அரசு ஊழியருக்கு சம்பளம் கிடைக்காவிட்டால் கவர்னர்தான் அதற்கு பொறுப்பு.

    இதில், இருந்து கவர்னர் தன்னிச்சையாக செயல்படுகிறாரா? யாருடைய தூண்டுதலில் செயல்படுகிறார்? அல்லது மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுகிறாரா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இது, எங்கள் அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் என்பதை தவிர வேறு இல்லை. விரைவில் இதற்கு விடிவுகாலம் வரும் சூழ்நிலை உள்ளது. மாநில அந்தஸ்து கோரி அனைத்து கட்சியினரும் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளோம்.

    பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி, எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கான நேரம் கேட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது சம்பந்தமாக கவர்னர் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இந்த வி‌ஷயத்தில் என் மீது குற்றம் சுமத்துவது தவறானது. 26-ந்தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என்று முதலில் தெரிவித்து இருந்தார்கள். ஆனால், 19-ந் தேதியே கூட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.

    முன்கூட்டியே கூட்டத்தை முடித்து விட்டதால் உரிய நேரத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறினார். #PuducherryAssembly #Narayanasamy
    தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். எனவே வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறினார். #Governorkiranbedi #cmnarayanasamy #whatsapp
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப், டுவிட்டர் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து வருகிறார்.

    வாட்ஸ்-அப், டுவிட்டர் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. இதனால் வாட்ஸ்-அப், டுவிட்டரை பயன்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

    வாட்ஸ்-அப் உத்தரவுக்கு பணிந்து செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்தார்.



    இந்த நிலையில் வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவது தவறில்லை என்று கவர்னர் கிரண்பேடி கூறினார்.

    தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். இதனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. மேலும், அவசரமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சமூக வலை தளங்கள் வசதியாக உள்ளது. எனவே, வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #Governorkiranbedi #cmnarayanasamy #whatsapp

    ‘எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு’ டெல்லியை போன்று போராட தயாராக உள்ளதாக கவர்னர் கிரண்பேடிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- டெல்லியில் கவர்னருக்கு எதிராக முதல்-மந்திரி கவர்னர் மாளிகையிலேயே போராட்டம் நடத்தி வருகிறார். நீங்கள் கவர்னருக்கு எதிராக எப்போது போராட போகிறீர்கள்?

    பதில்:- நாங்கள் நாகரிகம் கருதி சட்டத்தின்படி செயல்படுகிறோம். அந்த நிலைக்கு செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது பொறுமைக்கும் எல்லை உண்டு.

    கேள்வி:- புதுவை பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்துவிட்டதா?

    பதில்:- புதுவை பட்ஜெட் தொடர்பான கோப்பில் உள்துறை செயலாளர் கையெழுத்திட்டுவிட்டார். இதுதொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்குவார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், சென்னை ஐகோர்ட்டில் ஒரே மாதிரியான வழக்கில் 2 விதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுவைக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா? என்பது போல் உள்ளது. இதனால் நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கை குறைகிறது. நீதிமன்றங்களின் செயல்பாடு கேள்விக்குறியாகி விடக்கூடாது.

    டெல்லியில் கவர்னருக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 5 நாட்களாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டும், மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டதை கண்டித்தும் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களில் மாற்றுக்கட்சி ஆட்சியில் இருந்தால் அந்த அரசை முடக்கும் வேலையை செய்கிறது. புதுவையும் இதற்கு விதிவிலக்கல்ல. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்ற காலதாமதம் செய்வது, கோப்புகளை டெல்லிக்கு அனுப்புவது, ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படுவது ஆகியவற்றை கவர்னர் கிரண்பேடி செய்து வருகிறார்.

    சமூக வலைதளங்கள் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து அதிகாரிகளை கவர்னர் மிரட்டி வருகிறார். தொடர்ந்து அவர் விதிமுறையை மீறி செயல்படுகிறார். இதுதொடர்பாக புகார் தெரிவித்து கடிதம் எழுதியபோதிலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதை சமாளித்துத்தான் நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனால்தான் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கிறோம்.

    இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்திலும் விவாதித்துள்ளோம். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புதுவைக்கு தனி அதிகாரம் பெற்ற மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதை சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவருவோம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    ×