என் மலர்
நீங்கள் தேடியது "Pudukkottai Tamil Nadu"
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடக்க விழா கலெக்டர் கணேஷ் தலைமையில் நடை பெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலிமலை ஊராட்சி, விராலிமலை முருகன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர்த் தேக்கத்தொட்டி, ஈஸ்வரி நகர் மற்றும் காமராஜர் நகரில் தலா ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறிய குடிநீர்த்தொட்டிகள், பெரியார் நகரில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி உள்ளிட்ட பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவு தானிய கிடங்கு, நந்த வனத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, ஆசாரித்தெருவில் ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறிய குடிநீர்த் தொட்டி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி, வாணதிராயன்பட்டி ஊராட்சி, அத்தி பள்ளத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலககட்டடம் என பல்வேறு பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி புதுக்கோட்டை மாவட்டத்தை தமிழகத்தின் முன்மாதிரி மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் சந்தோஷ் குமார், இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) சந்திரசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் சித்திரவேலு, ஆத்மா குழுத்தலைவர் பழனியாண்டி மற்றும் அரசு அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.