search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Putheri Lake"

    • குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது.
    • ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை அருகே புத்தேரி ஏரி உள்ளது. ஆரம்பத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஏரி தண்ணீர் தற்போது சுற்றி உள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்திற்காக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பெய்துவரும் மழை காரணமாக புத்தேரி ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இந்த ஏரியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்லாவரம், நாகல்கேனி பகுதியை சுற்றி உள்ள லெதர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து புத்தேரி ஏரியில் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக கடந்த சில நாட்களாக புத்தேரி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் இடம் நுரையாக காணப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கிறார்கள்.

    தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனகழிவு நீரும், சுற்றி உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரும் ஏரியில் கலப்பதால் இந்த பிரச்சினை உருவாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    எனவே தாம்பரம் மாநாகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    புத்தேரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சுமார் ரூ.40 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொது மக்கள் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்கள் ஏரி கரையில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இந்த ஏரியை சுற்றி வசிப்பவர்களுக்கு பல சுகாதார பிரச்சினைகள் உள்ளது.

    புத்தேரி ஏரியில் இருந்த வெளியேறும் உபரி நீர் கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரிக்கும் செல்கிறது. எனவே புத்தேரி ஏரி தண்ணீரை மாசுபடாமல் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, புத்தேரி ஏரியை சுற்றி உள்ள பகுதியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர் ஏரியில் கழிவுநீர் கலப்பது முழுவதும் தடுக்கப்படும். தற்போது ஏரியில் கலந்து வரும் தண்ணீர் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×