என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rahu Ketu dosham"
- சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் மற்ற கிரகங்கள் அமைவது கால சர்ப்ப தோஷம் ஆகும்.
- கீழ்புறமாக கால சர்ப்ப தோஷம் அமைய பெற்றவர்கள் விதியை மாற்ற முடியாது.
ராகு, கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கிடையில் மற்ற கிரகங்கள் அமைவது காலசர்ப்பதோஷம் ஆகும். இத்தோஷம் இருப்பவர்களுக்கு திருமண தடை, பிள்ளைப்பேரின்மை போன்ற தடைகள் ஏற்படும். அரசியல் தலைவர்களுக்கு இத்தோஷம் இருப்பின் சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
(மொத்தம் உள்ள 12 கட்டங்களில்) மேல்புறமாக கால சர்ப்ப தோஷம் அமையப் பெற்றவர்கள் இறைவனை தொடர்ந்து வழிபட தடைகளை வென்று நல்வாழ்வு பெறுவார்கள். அதனால் இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
கீழ்புறமாக கால சர்ப்ப தோஷம் அமைய பெற்றவர்கள் இயற்கையாய் அமைந்த விதியை மாற்ற முடியாது என்கிறது ஜோதிட விதி. இருப்பினும் இந்தக் கால சர்ப்ப தோஷத்திற்கு சங்கரன்கோவிலில் உள்ள ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் உள்ள புற்றீஸ்வரருக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்து தாத்தா முதல் இப்போது உள்ள பேரன் வரை அவர்களது பெயர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட "கீழ்புற கால சர்ப்ப தோஷம் குறைகிறது'' என்று பெரியோர்கள் கூறி உள்ளனர்.
- 21 நாகங்களின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
- ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள்.
கொஞ்சு தமிழ் பேசும் கொங்குநாட்டின் குறிப்பிடத் தகுந்த தலம், நன்செய் புளியம்பட்டி. இங்கு நடு நாயகமாகத் திகழ்கின்றது, கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில். 110 ஆண்டுகள் தொன்மையானது. 1902-ம் ஆண்டில் முதல் கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் மூலவர், 600 ஆண்டுகள் பழமையானவர்.
இவ்வூரின் வயல் நடுவே ஒரு கருட கம்பம் மட்டும் தனித்து நின்றிருந்த இடத்தில்தான், பெருமாளின் திருக்கோயில் இருந்திருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு பலத்த மழை பெய்து பவானி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஊரும் கோயிலும் அடித்துச் செல்லப்பட்டன. கருட கம்பமும் சுயம்பு மூலவரும் மட்டும் நிலைத்து நின்றன. இந்த வயல்வெளி பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்பட்டது.
கோயில் கட்டுவது சம்பந்தமாக ஊர்மக்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் வேகமாக அங்கே வந்தார். ''ஐயா, இந்த உச்சி வெயில் நேரத்தில் ஒரு வெள்ளை நாகம், நான் வரும் வழியில் மண்டலமிட்டு படுத்திருக்கிறது. நான் பயந்து ஓடிவந்து விட்டேன். வந்து பாருங்கள்'' என்று பதற்றத்துடன் சொன்னார்.
எல்லோரும் சென்று பார்த்தார்கள். அவர் சொன்னபடியே இருந்தது. இவர்களைப் பார்த்த நாகம் படமெடுத்துச் சில விநாடிகள் ஆடியது. பிறகு மூன்று முறை நிலத்தில் முத்தமிட்டு விட்டு, மளமளவென்று ஊர்ந்து சென்று மறைந்தது. தம் குலதெய்வமான 'கருத்திருமராய சுவாமி'யே கோயில் கட்ட இந்த இடத்தை நாக உருவில் வந்து காட்டியிருக்கிறார் என்று நம்பினார்கள்.
அதன்படிதான் அங்கே கரிவரதராஜப் பெருமாளின் கருவறையுடன் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. மூலஸ்தானத்தின் உட்சுவர்களில் 21 நாகங்களின் புடைப்புச் சிற்பங்களும் வெளிச் சுவர்களில் நாக சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஆலய ராஜகோபுரம் பேரழகு வாய்ந்தது.
இங்கு கருவறை வெளிச் சுவரில், ராமாயணத்தின் சுந்தரகாண்ட காட்சி புடைப்பு சிற்பமாக, நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. அசோக மரத்தடியில் அமர்ந்திருக்கும் சீதாதேவிக்கு அனுமன், ராமபிரானின் கணையாழியை கொடுக்கும் காட்சி அது.
ஜாதகத்தில் தசாபுக்தி கோளாறு உள்ள தம் குழந்தையை இந்த பெருமாளுக்கு தத்துக்கொடுத்து, பெருமாளிடம் இருந்து தவிடு வாங்கி, பிறகு தவிட்டை கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த பிரார்த்தனையால் குழந்தை பாதிப்பில்லாமல் வளர்கிறது என்கிறார்கள்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை இந்தப் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடத்துகிறார்கள். பிறகு அலங்காரம், சிறப்பு பூஜை, நைவேத்யம், சமபந்தி போஜனம் என நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. இந்த கரிவரதராஜப் பெருமாளைப் பிரார்த்தித்தால், தாங்கள் எண்ணிய காரியம் நல்ல முறையில் நிறைவேறுகிறது என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவம்.
கர்ப்பிணி பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் அச்ச உணர்வைப் போக்கி, சுகப் பிரசவம் அடையச் செய்பவர் இவர். இவ்வாலயத்தில் ராமருக்குத் தனி சந்நதி உள்ளது.
அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் நவகிரகங்கள், அனுமன், கருடாழ்வார், விஷ்வக்சேனர் ஆகியோரும் தனித்தனி சந்நதி கொண்டுள்ளனர். ராகு-கேது, நாகர் சிறப்பு பீடங்கள் இவ்வாலயத்தின் கூடுதல் சிறப்புகள். செல்வங்களுக்கு அதிபதியான ஸ்ரீதேவியையும் நிலங்களுக்கு அதிபதியான பூமிதேவியையும் தன்னருகே கொண்டு, கரிவரதராஜப் பெருமாள் அருளாசி புரிந்து வருகிறார்.
அபய ஹஸ்தத்தால் ஆசீர்வாதத்தையும் கடிஹஸ்தத்தால் நல்ல வைராக்கியத்தையும் நல்கி, சங்கு-சக்கரங்களால் துன்பத்தையும் தீமையையும் விலக்குகிறார். அர்த்த மண்டபத்தின் முன்னால் தல விருட்சமான வில்வ மரத்தின் அடியில், காளிங்க நர்த்தன நாகச் சிற்பங்கள் காட்சி தருகின்றன. ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள்.
இவ்வாலயத்தில் காணப்படும் கருட கம்பமும் கருடாழ்வார் சிலையும் மிக உன்னதமானவை. தன்னை வணங்குவோர்க்கு, தன் தலைவராகிய ஸ்ரீமந் நாராயணனிடம் எடுத்துச் சொல்லி வரம் தர வைப்பவர் இவர். இவருக்கு மிளகு சாதம் நைவேத்யமாகப் படைத்தால் நினைத்த காரியம் கைகூடுகிறது.
தான் விரும்பும் மணமகனை அல்லது மணமகளைத் திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்கள் இவ்வாலயம் வந்து இங்குள்ள சீதாதேவிக்கு சந்தனக் காப்பும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும் சாற்றி, நெய் தீபம் ஏற்றி, நறுமண தூபங்கள் இட்டு, வேண்டிக் கொண்டால், மனவிருப்பம் நிறைவேறுகிறது. பிரிந்திருக்கும் கணவன்-மனைவி, கருவறை வெளிச் சுவரில் காட்சிதரும் சுந்தர காண்ட சிற்பங்களை வணங்கி, பூஜித்தால் மனமுறிவு நீங்கி ஒன்றாவார்கள்.
இவ்வாலயத்தின் முன்புறம் உள்ள வன்னி மரத்தைச் சுற்றி வந்து வணங்குவோர்க்கு புத்திர தோஷம் நீங்கி, மழலைச் செல்வம் கிடைக்கும். கிரக தோஷம் உள்ளவர்கள், நவகிரக சந்நதிக்கு வந்து, தோஷம் ஏற்படுத்திய கிரகத்துக்குரிய உரிய வஸ்திரம், தானியம், மலர் சமர்ப்பித்தால், தோஷம் நிவர்த்தியாகிறது.
முக்கியமாக, கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, நாகம் இடம் காட்டிக் கொடுத்த இந்த கோயில் மிகச் சரியான பரிகாரத் தலம் என்றே சொல்லலாம். மூலவரை வணங்கி, தோஷ பரிகாரம் செய்துகொண்டால், கால சர்ப்ப தோஷம் நீங்கி விடும்.
கோயில் தினசரி காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் மாலையில் 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக்கிழமை, பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மதியம் 12 மணி வரை கோயில் திறந்திருக்கும். 'கரி' - என்றால் யானை. 'வரதர்'- என்பது முதலையால் துன்பப்பட்ட அந்த யானையை விடுவித்து வைகுண்ட பதவியை அளித்த எம்பெருமான் என்று பொருள்.
வரம் அளிக்கும் தெய்வங்களில் முதன்மையானவர் இந்த கரிவரதர். கோபிச் செட்டிப்பாளையம்-பங்களாப் புதூர் பேருந்துப் பாதையில் உள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்தும் வரலாம். கோபியிலில் இருந்து 18 கி.மீ. தொலைவு.
- மாரியம்மன் கோவிலில் காணப்படும் புற்றுகளுக்கு புற்று மாரியம்மன் என்று பெயர்.
- ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி புற்று வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும்.
மாரியம்மன் வழிபாட்டுடன் நாக வழிபாடு தொடர்பு உடையதாக திகழ்கிறது. பொதுவாக மாரியம்மன் கோவில்களில் புற்று காணப்படும். மாரியம்மனே பாம்பாக வந்து அருள் புரிவதாக மக்கள் நம்புகின்றனர். மாரியம்மன் புற்றில் உறைவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்குக் குடையாக இருப்பது பாம்பு தான். மாரியம்மன் கோவிலில் காணப்படும் புற்றுகளுக்கு புற்று மாரியம்மன் என்று பெயர். இக்கோவில்களில் புற்றுகளுக்கு தனியாக பூஜைகள் செய்யப்பட்டு நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன.
மாரியம்மன் கோவில் மூலஸ்தானத்தையும், புற்றையும் இணைக்கும் ரகசிய வழி ஒன்று இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். சென்னை அடுத்த பெரியபாளையம் கோவிலில் கருவறைக்கும் புற்றுக்கும் இடையே அடிக்கடி நாகம் சென்று வருவதை இன்றும் பக்தர்கள் பார்க்கிறார்கள்.
புற்றின் துவாரத்தின் வழியாகப் படமெடுத்து ஆடும் பாம்பை தரிசிப்பது நல்ல சகுனமாக கருதுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி புற்று வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியாக நாகபஞ்சமி என்றும், ஐப்பசி மாதம் வளர்பிறை சதுர்த்தியான நாக சதுர்த்தி அன்றும், பெண்கள் புற்று வழிபாடு செய்கின்றனர்.
புற்றுக்கு பால் விடுதல், பொங்கல் வைத்தல், மூட்டை முதலியவற்றை புற்றுக்குள் இடுதல் ஆகியவை புற்று வழிபாட்டில் முக்கிய நிகழ்ச்சிகளாக உள்ளன.
மாரியம்மன் வழிபாடு, சக்தி வழிபாட்டின் ஒரு அம்சமாக உள்ளது. நாக வழிபாடும் சக்தி வழிபாட்டின் ஒரு அம்சமாக உள்ளது. சக்தியின் ஒரு வடிவமாகப் பாம்பு கருதப்படுகிறது. மேலும் பெண் தெய்வங்கள் பலவற்றிற்கும் குடையாக வீற்றிருப்பது பாம்பு தான்.
- ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து, தூய ஆடைகளை அணிந்து நாக பூஜை செய்தால் துன்பங்கள் அகலும்.
- சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வரவேண்டும்.
ஆடி வெள்ளிக்கிழமை பெண்களுக்கு முக்கிய தினமாகக் கருதப்படுகிறது. பெண்கள் இக்காலங்களில் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து, கற்பூரதீபம் காட்டி பூஜித்து வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
நாகசதுர்த்தி, நாக பஞ்சமி நாட்களில் நாகபூஜை செய்வதால் நாகதோஷம், நாகபயம் முதலியவை ஏற்படாது.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து, தூய ஆடைகளை அணிந்து நாக பூஜை செய்தால் துன்பங்கள் அகலும்.
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வரவேண்டும். அதேபோல் ராகு, கேது கிரகங்கள் அமைந்துள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படும் நாகதோஷம் நீங்கும்.
ஒருவரது ஜாதகத்தில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கு இடையில் உள்ள வீடுகளில் மற்ற கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷம் உள்ளது என்று பொருள். இவர் வாழும் பாம்பை முற்பிறவியில் அடித்திருப்பவர் எனச் ஜோதிடம் கூறுகிறது.
அதேபோல் ஜாதகத்தில் 1,5,7,9 ஆகிய வீடுகளில் ராகு இருந்தாலும் நாகதோஷம் உள்ளது எனக்கருதலாம்.
- வீட்டில் பூஜை செய்த பிறகுதான், அருகில் உள்ள பாம்புப்புற்றுக்குச் சென்று பால் ஊற்றுவர்.
- வீட்டுக்குள் சென்றதும், புற்றிலிருந்து கொண்டு வந்த புற்று மண்ணுடன் சிறிதளவு அட்சதையைச் சேர்ப்பர்.
பொதுவாக நாக சதுர்த்தியைக் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராட்டிய போன்ற மொழி வழி மாநிலப் பெண்கள் பலரும் கொண்டாடுகின்றனர். இவ்விழாவைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்று வழங்கப்படுகிறது.
ஒரு பெண்ணிற்கு ஐந்து சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் உழவு செய்து கொண்டிருந்த போது, நல்ல பாம்பு கடித்து இறந்து விட்டனர்.
அவர்களை உயிர்ப்பித்துத் தரும் படி, அந்தப் பெண், நாகராஜனாகிய ஆதிசேஷனை வேண்டிப் பூஜை செய்தாள். அதன் நினைவாகக் கொண்டாடப்படுவதுதான் நாக சதுர்த்திப் பண்டிகையாகும்.
பெண்கள் தங்களுடன் பிறந்த சகோதரர்களின் நலனைக் கோரி இந்தப் பண்டிகைக் கொண்டாடுகின்றனர். நாக சதுர்த்தி தினத்தன்று, நாகப் பிரதிஷ்டை செய்வர். நாகப்புற்றுக்குப் பால் வார்த்து, முட்டை உடைத்து வைத்து நாகபூஜை செய்வது வழக்கம்.
நாக சதுர்த்தியன்று வீட்டிலுள்ள சகோதரிகள், ஏதேனும் ஓர் உலோகத்தால் செய்த பாம்புச் சிலையை வைத்துப் பூஜை செய்வர். நோன்புக் கயிற்றை வலக்கையில் கட்டிக் கொள்வர். ஒரு மஞ்சள் நூல் கயிற்றின் நடுவில் மலர் ஒன்றைத் தொடுத்துக் கட்டி, பூஜையில் வைத்து பிறகு கையில் கட்டிக் கொள்வர். இது நோன்பு கயிறு ஆகும்.
பாம்பு புற்று இருக்கும் இடத்திற்குச் சென்று பால் வார்க்க வசதியற்றவர், வீட்டில் பூஜை செய்த நாகத்திற்கே அதை அபிஷேகம் செய்து விடுவர்.
வீட்டில் பூஜை செய்த பிறகுதான், அருகில் உள்ள பாம்புப்புற்றுக்குச் சென்று பால் ஊற்றுவர். பின்பு தாம்பூல நிவேதனம் செய்து, கற்பூரம் ஏற்றிப் பூசிப்பர்.
அடுத்து நாகப்புற்றை வலம் வந்து வணங்கி விட்டு வீட்டுக்குப் புறப்படும் போது, பாம்பு புற்றின் அருகிலிருந்து சிறிதளவு புற்று மண்ணைத் தம் கையில் எடுத்துச் கொண்டு செல்வர். வீட்டிற்குச் சென்றதும் நிலை வாயிற்படியின் இரு பக்கத்திலும் மஞ்சளைப் பூசுவர்.
அதன் மீது குங்குமத்தால், மேலே தலையும் கீழே வாலும் கொண்ட பாம்பின் படத்தை இரு பக்கமும் வரைவர். இறுதியாக, நிலைவாயில் படிக்குக் கற்பூர தீபம் காட்டி, வணங்கி விட்டுத்தான் வீட்டின் உள்ளே செல்வர்.
வீட்டுக்குள் சென்றதும், புற்றிலிருந்து கொண்டு வந்த புற்று மண்ணுடன் சிறிதளவு அட்சதையைச் சேர்ப்பர்.
தம்முடன் பிறந்த சகோதரர்கள் அருகிலிருந்தால், அந்தப் புற்றுமண் அட்சதையை அவர்கள் தலையில் இட்டு, ஆசிர்வதிப்பர். பெரியவர்களாக இருந்தால் அவர்களை வாழ்த்தி ஆசி கூறுவர்.
சகோதரர்கள் வெளியூர்களில் இருந்தால், புற்று மண் அட்சதையை அஞ்சல் உறையில் வைத்து அஞ்சலில் அனுப்பி வைப்பர். இவ்வாறு ஆசீர்வாதம் செய்த சகோதரிகளுக்கு உடன் பிறந்த சகோதரர்கள், தங்கள் சக்திக்குத்தக்க தட்சணையைக் தாம்பூலத்துடன் கொடுப்பது வழக்கம்.
- பாம்புக்கல்லில் இரண்டு பாம்புகள் பின்னி இணைந்திருப்பதையும் நடுவில் சிறிய சிவலிங்கம் இருப்பதையும் காணலாம்.
- அரசமரம், விநாயகர், பாம்புக்கல் இந்த மூன்றையும் ஒருங்கே வலம் வந்து வழிபடவேண்டும்.
சிவாலயங்களில் வழிபாடு செய்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது ஒரு புறம் அரச மரத்தடியை காணலாம். அரச மரத்தடியில் விநாயகர் சிலையும், பாம்பு கல்லும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை பல கோவில்களில் காணலாம். பாம்புக்கல்லில் இரண்டு பாம்புகள் பின்னி இணைந்திருப்பதையும் நடுவில் சிறிய சிவலிங்கம் இருப்பதையும் காணலாம்.
பாம்புக்கல்லில் உள்ள பாம்பு போல தம்பதியர் இணைந்து, விநாயகரின் அருளாலும், வேப்பமரங்களின் மருத்துவ சக்தியாலும் மகப்பேறு பெறலாம் என்பது தத்துவம். அரசமரம், விநாயகர், பாம்புக்கல் இந்த மூன்றையும் ஒருங்கே வலம் வந்து வழிபடவேண்டும். திங்கட்கிழமை அமாவாசை வந்தால் அன்று வழிபாடு செய்வது சிறப்பு உடையது.
வழிபாடு செய்யும் பொழுது ஏழுமுறை வலம் வரவேண்டும். ஒரு சிலர் கடும் விரதம் இருந்து 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். பாம்புக் கல்லைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினால் முதல்நாள் அதை தண்ணீரில் மூழ்கி இருக்கச் செய்ய வேண்டும். மகப்பேறு வேண்டி பிராத்தனை செய்து கொண்ட தம்பதிகள் அந்த குறிப்பிட்ட முதல் நாள் இரவு உணவு உட்கொள்ளக்கூடாது. மறுநாள் அரசமரத்தடியில் மேடை அமைத்து அதன்மேல் பாம்புக்கல்லைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.
ராமேஸ்வரத்தில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை, செய்வது விசேஷம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் ஆலயத்தில் எண்ணற்ற பாம்புக்கற்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
- வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.
- கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும்.
ராகுவின் உடற்பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது. கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும். கேது ஞானம், மோட்சம் தருபவர். ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு, வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.
கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு (கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி, பல வர்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும். வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.
- பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு.
- சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவிலில் வழிபடலாம்.
ராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம். நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி ராகு-கேது அருளைப் பெறலாம்.
* சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாகதோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகு-கேது பெயர்ச்சியின்போது வழிபடலாம்.
* காரைக்குடியில் செஞ்சை பகுதியில் நடராஜ் தியேட்டர் கீழ்புறம் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சந்நிதியும் உண்டு. வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம்.
* பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு வழிபடலாம்.
* திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
* சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவிலில் வழிபடலாம்.
* செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது தலம் ஆகும். இங்கு வழிப்படலாம்.
* தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்- திருச்செந்தூர் பாதையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒரு தலமான தொலைவில்லிமங்கலம் சென்று வணங்கலாம்.
* மன்னார்குடி அருகில் பாமினியில் உள்ள சிவாலயம் ஆதிசேஷன் வழிபட்ட தலம் உள்ளது. இங்கு வழிபட உடனடி பலன் கிடைக்கும்.
* மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.
* கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர் அர்ச்சனைக்கும் பணம் கட்டினால் பிரசாதம் அனுப்பி வைப்பார்கள்.
* கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. ராகு-கேது பரிகார தலம், பிரார்த்தனை தலமாகும்.
* ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி- அதற்காக பயப்படத் தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில்சென்று வழிபட்டால் போதும், ராகு- கேது பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள்.
* சோளிங்கரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில் நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம்.
*கொடு முடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் உள்ள நாகேஸ்வரரை வழிபடலாம்.
* காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும்.
* ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
* கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.
* சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகிரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன், ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
* நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
* விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.
* சென்னை, மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டு வர ராகு- கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.
* திருச்சி மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் ராகு-கேது சிக்கல் விலகி சுபீட்சம் காண்பீர்கள்.
* திருவாலங்காடு சென்று முஞ்சிகேசமுனிவரும், கார்கோடகனும் வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர ராகு, கேது தோஷம் நீங்கி வளம் பெருகும்.
* மயிலாடுதுறை- காரைக்கால் சாலையில் செம்மாங்குடிக்கு அருகில் திருச்சிறுபுலியூர் உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் கிருபாசமுத்திர பெருமாளையும், ஸ்ரீதயாநாயகி தாயரையும் வணங்கினால் வழக்கில் வெற்றி, பூர்வீக சொத்து பிரச்சினை தீருதல், செல்வம் சேருதல் ஆகியன கிட்டும்.
* புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாக நாதரை நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இன்றும் பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள 5 தலை நாகரை வணங்குவதும் நாகதீர்த்தத்தில் குளிப்பதும் விசேஷம்.
* திருவாரூர்- கும்பகோணம் பாதையில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள தலம் மணக்கால். இங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கி ஸ்ரீஆதிசேஷன் விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றான். இங்குள்ள சிவலிங்கத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம். ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கினால் அரசு தொடர்பான வேலைகள் வெற்றி அடையும், நல்ல வேலை கிடைக்கும்.
* நாகர்களுக்கு எதிரான யாகங்கள் நடந்தபோது லட்சக்கணக்கான நாகங்கள் யாக நெருப்பில் விழுந்து மடிந்தன. இதனை காப்பாற்ற நினைத்து நாகராஜனான ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள்பெற்ற திருத்தலமே நாகூர். இங்கு கோவில் பிரகாரத்தில் ஸ்ரீஆதிகேஷன் சிவபெருமானை பூஜை செய்ததற்கான சாட்சிகள் உள்ளன. இங்குள்ள ஈசனை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி பெரிய பதவிகள் கிடைக்கும்.
* தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது.
இத்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி பத்ரம் (இலை) ஆகியவை சார்த்தி, ஸ்தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு கேது தோஷம் யாவும் விலகும்.
* குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இக்கோவில் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. கால சர்ப்ப தோஷம் என்பது ஜாதகத்தில் முக்கிய தோஷம் ஆகும். ராகு கேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழக்கும் பெரிய தோஷம் அது. இத்தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகு கால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோஷ நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.
* ராகு, கேது தோஷமுள்ளவர்கள் ரமேசுவரம் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் அமைந்திருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும் விளக்கில் நெய்விட்டு வழிபட்டால் தோஷம் நீங்கி விடுகிறது.
* மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள இலுப்பட்டு தலம் நாக வழிபாட்டில் சிறப்பு வாய்ந்தது. நளமகராஜன் விஷக்கடியில் நிறமாறியிருந்தான். அந்த நிறம் மாறி தன் இயல்பான வடிவை அங்கே தான் அடைந்தான் என்று அத்தல வரலாறு பேசும். சிவபெருமானே தமது கண்டத்தில் விஷமருந்திய இறையைக் காட்டி அருளியபதியும் அதுவே தான்.
* கும்பகோணம் நாகநாதர், திருநாகேசுவரம் நாகநாதர், திருமருதூரில் குடிகொண்டுள்ள நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நாகை நாகதாதர், திருப்பாரம்பரம், திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோவில் நாகமலை என்னும் திருச்செங்கோடு, திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என்று பாம்பரசர்களோடு தொடர்புடையதான தலங்கள் ஏராளமாக உள்ளன.
* ஐந்தலை நாகம் குடைப்பிடிக்க விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களுள் நாகப்பட்டினமும், தஞ்சை பாபநாசமும் சிறப்புக்குரிய தலங்களாகும்.
* திருபுவனம் திருக்கோவிலில் எல்லா காலமும் சரபமூர்த்தி வழிபாடு அருள் நலம் பொலிய நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் சரப மூர்த்தியை வழிபாடு செய்வதன் வாயிலாக ராகு-கேதுக்களைப் பிரீதி செய்வதுடன் நடுக்கம் தீர்த்த பெருமான், அறம் வளர்த்த நாயகி, சரபர் இவர்களது அருளுக்கும் பாத்திரர் ஆகலாம்.
* தமிழ்நாட்டில் ராகு கால பூஜை முதன் முதலில் தொடங்கிய பெருமை குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில் தான் எனப்படுகிறது. இங்கே நாள் தோறும் ராகு கால பூஜை நடைபெற்று வருவது சிறப்பு.
* காமதேனுவின் கால் பதிந்த தலம் தான் மாடம்பாக்கம். இங்கு தேனுபுரீசுவரர் கோவிலுக்குள் சென்றதும் முன் மண்டபமும் மண்டபத்துக்கு இடப்புறம் காணப்பெறும் தூண் ஒன்றில் சரப மூர்த்தியின் உருவம் ஒன்றும் காணப்படுகிறது. ஆர்த்தெழுந்த சரபத்தைக் கண்டு நரசிம்மன் அஞ்சி ஓடியிருப்பார்.
சரபப் பறவையும் விடாமல் நரசிம்மத்தை தாவி பிடித்திருக்கும் அவ்விதம் தாவும் தகைமையைத்தான் சிற்பி கற்தூணில் இங்கு நிலை பெறச் செய்திருக்கிறான். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் மக்கள் பெருமளவில் வந்து இந்த சரப மூர்த்தியை வழிபட்டு செல்கிறார்கள்.
- ராகு கால ஏகாதசி பூஜை-பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
- சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
1. ராகு கால பவுர்ணமி பூஜை-பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
2. ராகு கால கிருத்திகை பூஜை-புகழ் தரும்.
3. ராகு கால சஷ்டி பூஜை-புத்திரப்பேறு கிடைக்கும்.
4. ராகு கால ஏகாதசி பூஜை-பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
5. ராகு கால சதுர்த்தி பூஜை-துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
- லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும்.
- லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம்.
ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன்,மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்,
லக்னம், அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால், விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம்.
இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும். 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்மாந்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ, அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்சத்திரமாக வரும் ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
- சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
- காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
ராகு காலமே பல பரிகாரங்கள் செய்ய உகந்த காலமாகும். ராகுகாலம் 1மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 - 9.00, செவ்வாய் 3.00 - 4.30, புதன் 12.00 - 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12.00, சனி 9.00 - 10.30 ஆகும்.
ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேட காலமாகும்.
இந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோஷங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.
சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)
மங்களவார (செவ்வாய்க்கிழமை) பூஜை
ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.௦௦ - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
- ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.
- ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.
ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும். சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.
இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்பமரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்