search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rail fire"

    • தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டியை தடயவியல் நிபுணர்கள் 2 முறை சோதனை நடத்தினர்.
    • சட்டவிரோதமாக சிலிண்டரில் கியாஸ் நிரப்பியுள்ளனர்.

    மதுரை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சிறப்பு சுற்றுலா ரெயில் பெட்டி மூலம் 63 பயணிகள் கடந்த 17-ந்தேதி ஆன்மீக சுற்றுலா புறப்பட்டனர். கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு கடந்த 26-ந்தேதி அதிகாலை மதுரை வந்தனர்.

    அவர்கள் பயணித்த ரெயில் பெட்டி மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் போடி லைனில் நிறுத்தப்பட்டிருந் தது. அதிகாலை 5.15 மணிக்கு அந்த ரெயில் பெட்டியில் டீ போடுவதற்காக கியாஸ் சிலிண்டரை பயன்படுத்திபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 9 பேர் பலியானார்கள். பலத்த காயம் அடைந்த 8 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டியை தடயவியல் நிபுணர்கள் 2 முறை சோதனை நடத்தினர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய 2 சிலிண்டர்கள், விறகு, நிலக்கரி, மண்ணெண்ணை பாட்டில் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    இந்த சம்பவத்தில் முறையான விதிகளை பின்பற்றாமல் ஏற்பாடு செய்த லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் உரிமையாளரை கைது செய்யவும் தெற்கு ரெயில்வே பரிந்துரைத்துள்ளது.

    இந்நிலையில், டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளரும், சுற்றுலா வழிகாட்டியுமான நரேந்திரகுமார், சமையல் பணியாளர் ஹர் தீப் சஹானி, சுற்றுலா உதவியாளர் தீபக், சமையல் உதவியாளர்கள் சத்ய பிரகாஷ் ரஸ்தோகி, கபம் கஸ்யப் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் பெங்களூருவில் இருந்து வந்திருந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி மதுரையில் 2 நாட்கள் விசாரணை நடத்தினார். அப் போது ரெயில்வே பாதுகாப்பு படையினர், தமிழக ரெயில்வே போலீசார், வர்த்தக பிரிவை சேர்ந்தவர் கள், சுற்றுலா ரெயில் பெட்டியை சோதனை நடத்த வேண்டிய கேட்டரிங் ஆய்வாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள், அலுவலர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.

    பின்னர் அவர் கூறுகையில், நாகர்கோவிலுக்கு இந்த சுற்றுலா ரெயில் சென்ற போது, அங்கு சட்டவிரோதமாக சிலிண்டரில் கியாஸ் நிரப்பியுள்ளனர். அப்போது முதலே அதில் கியாஸ் கசிவு இருந்துள்ளது. அதுவே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது என்றார்.

    தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிக்க தவறியதாக அதிகாரிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ×