என் மலர்
நீங்கள் தேடியது "Raja MP"
- இதுவரை நடந்த அலைக்கற்றை ஏலத்திலேயே இதுதான் அதிக தொகைக்கு ஏலம் போயிருப்பதாக அண்ணாமலை விளக்கம்
- ஆ.ராசா தன் மீது உள்ள குற்றத்தில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போடுவதாக விமர்சனம்
சென்னை:
சமீபத்தில் நடந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆ.ராசா எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார். 5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என மத்திய அரசு சொன்ன நிலையில், ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆ.ராசா வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆ.ராசாவின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, இதுவரை நடந்த அலைக்கற்றை ஏலத்திலேயே இதுதான் அதிக தொகைக்கு ஏலம் போயிருப்பதாக கூறி விரிவாக விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
2008ல் 2ஜி ஊழல் என்பது 2 விஷயங்கள் அடிப்படையாக இருந்தது. 2001ல் இருந்த அடிப்படை விலையை 2008-க்கு ராசா பயன்படுத்தினார். இரண்டாவது விண்ணப்பத்தில் குளறுபடி. அப்போதெல்லாம் ஏலம் நடக்கும்போது லைசென்சும் ஸ்பெக்ட்ரமும் சேர்ந்து கொடுப்பார்கள். நேற்று நடந்த ஏலம் என்பது லைசென்ஸ் கிடையாது, ஸ்பெக்ட்ரம் மட்டுமே. 2008ல் நடந்தது லைசென்சும் ஸ்பெக்ட்ரமும் இணைந்த நடைமுறை. இப்போது லைசென்சை தனியாக வாங்கிவிட்டு, ஸ்பெக்ட்ரமை தனியாக ஏலம் விடுகிறார்கள்.
அதனால் ராசா, 2009ல் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை என்ற முறையை கொண்டு வந்தார். அவரே ஒரு தேதியை முடிவு செய்து, நாளை காலைக்குள் யாரெல்லாம் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பம் தாக்கல் செய்கிறார்களோ, அவர்களின் மனுக்களை பரிசீலனை செய்வோம் என்று கூறி உள்ளனர். குறிப்பாக சில குறிப்பிட்ட கம்பெனிகளுக்கு மட்டும் முன்பே தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் லைசென்சுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதனால்தான் சிபிஐ விசாரணை நடத்தியது. லைசென்ஸ் எடுத்த ஒரு கம்பெனி கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு கம்பெனி மூலமாக பணம் அனுப்பியிருந்தார்கள்.
சிபிஐ விசாரணை ஆரம்பித்ததும் கலைஞர் தொலைக்காட்சி அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு, அந்த கம்பெனியிடம் இருந்து கடனாக வாங்கினோம், எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொய் சொல்லியிருந்தார்கள்.
அதன்பின் சிஏஜி தலைவர் வினோத் ராய் விசாரணை நடத்தி, 2001 மற்றும் 2008 விலை நிலவரத்தை ஒப்பிட்டு பார்த்து, அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் கொடுத்தார்.
அதன்பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் 2012ல் 2ஜி ஏலம் நடந்தது. முறைகேடு செய்து கொடுக்கப்பட்ட லைசென்சை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து இந்த ஏலம் நடந்தது. அப்போது மன்மோகன் சிங் அரசு, மத்திய அரசுக்கு இதன்மூலம் ரூ.28 ஆயிரம் கோடி வருமானம் வரும் என்று தெரிவித்தது. ஆனால் மத்திய அரசுக்கு வந்த வருமானம் ரூ.9400 கோடி.
அலைக்கற்றை ஒதுக்கீட்டை பொருத்தவரை, மதிப்பிடப்படும் விலைக்கும், உண்மையான வருவாய்க்கும் வித்தியாசம் இருக்கும்.
அதன்பின் 2013ம் ஆண்டு 2ஜி, 3ஜி ஏலம் நடந்தது. அப்போது வெறும் 800 மெகா ஹெர்ட்சுக்கு மட்டும்தான் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அடுத்து 2014ல் மீண்டும் 2ஜி ஏலம் நடந்தது. இதில் 61200 கோடி வருமானம் வந்தது. இதிலும் 700 மெகா ஹெர்சை விற்கமுடியவில்லை
பாஜக அரசு வந்தபின்னர் 2015ல் ஏலம் நடத்தப்பட்டது. 2ஜி, 3ஜி, எக்பேண்டட் பேண்ட்வித் கொடுத்தார்கள். இதில் ரூ.1 லட்சத்து 9000 கோடி கிடைத்தது. 2016ல் 2ஜி, 3ஜி, 4ஜி ஏலம் நடந்தது. இதில் ரூ.65789 கோடி வருமானம் கிடைத்தது. 2021ல் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி ஏலம் நடந்தது. அதிலும் 700 மெகா ஹெர்ஸ், 2500 மெகா ஹொசை விற்க முடியவில்லை. அரசுக்கு வந்த வருமானம் ரூ.77814 கோடி. 2015ல் ஒரு லட்சத்து 9000 கோடியும், 2021ல் 4ஜி, 5ஜி வந்தபோது வருமானம் குறைந்திருக்கிறது.
இப்போது 2022ல் நடந்த 5ஜி ஏலம் வித்தியாசமாக நடந்தது. அதாவது லைசென்ஸ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், அல்லது லைசென்சே இல்லாதவர்கள் ஒரு ஏரியாவுக்குள் மட்டும் தொலைதொடர்பு சேவை கொடுப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அடிப்படையில் இந்த ஏலம் நடந்தது. இதன்மூலம் மத்திய அரசுக்கு 1.5 லட்சம் கோடி வருமானம் வந்துள்ளது. இதுதான் அலைக்கற்றை ஏல வரலாற்றில் அதிகபட்ச வருமானம்.
முதன் முதலாக 700 மெகா ஹெர்ஸ் அலைக்கற்றை விற்கப்பட்டுள்ளது. 3 முறை விற்கப்படாத 700 மெகா ஹெர்ஸ் இந்த முறை விற்கப்பட்டுள்ளது.
இப்போது ராசா சொல்லும் குற்றச்சாட்டின்மூலம், 2ஜி ஊழலை மறைக்கப்பார்க்கிறார். 2ஜி ஏலத்தின்போது இருந்த நடைமுறை, முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை பின்பற்றப்பட்டது. அதேபோல் 2001 அடிப்படை விலையை வைத்து ஏலம் நடந்தது. அதற்கு பணப்பரிமாற்றம் கலைஞர் டிவி உள்பட பல இடங்களுக்கு வந்துள்ளது. அதுபற்றி சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரான ராசா, இந்த கேள்வியை பாராளுமன்றத்திற்குள் கேட்டிருக்கலாமே? ஏன் கேட்கவில்லை?
2ஜி ஏலம் வழக்கில் குற்றவாளியாக இருக்கக்கூடியவர், நான் இதுபோன்று ஒரு குற்றச்சாட்டை கூறிவிட்டேன் என்றும், இந்த டெக்னிக்கல் சப்ஜெக்ட் மக்களுக்கு தெரியாது, நான் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிட்டு, இரண்டும் ஒன்றுதான் என மக்களை நம்ப வைக்க பார்ப்பேன், அதன்மூலம் என் மீது உள்ள குற்றத்தில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று நினைத்தால், அவர் தப்புக் கணக்கு போடுகிறார்.
அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணி எம்.பி.க்கள் யாராவது பாராளுமன்றத்தில் இதைப்பற்றி பேச்சை ஆரம்பித்தார்களா? இல்லை.
மொத்த அலைக்கற்றை ஏலத்தின் மூலம் ரூ.4.30 லட்சம் கோடி வருவாய் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அலைக்கற்றை முழுமையாக விற்கவில்லை. கொஞ்சம்தான் ஏலம் விட்டிக்கிறோம். அடுத்த ஏலத்தில் மீதம் ஏலம்விடப்படும். மொத்த எதிர்பார்ப்பு ரூ.4.30 லட்சம் கோடி, அதில் இப்போது ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வந்துள்ளது.
2012ல் காங்கிரஸ் ஆட்சியில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் நடந்த ஏலத்தில் 28000 கோடிக்கு வெறும் 9400 கோடி வந்தது. ஏனென்றால் 5ஜி என்பது வளர்ச்சியடையாத தொழில்நுட்பம். நாட்டில் பயன்பாட்டில் உள்ள செல்போன்களில் வெறும் 7 சதவீத செல்போன்களில் மட்டுமே 5ஜி வசதி உள்ளது. 97 சதவீத செல்போன்களில் அந்த வசதி இல்லை. இப்போது நடந்த ஏலம் என்பது 5ஜி அலைக்கற்றைக்கு மட்டுமல்ல, 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றைக்கும் சேர்த்துதான் நடந்தது.
இதில் 5ஜி மட்டும் கொடுக்கவேண்டும் என்பது 700 மெகா ஹெர்சில் மட்டுமே சாத்தியம். அது நேற்றுதான் முதன் முதலில் விற்கப்பட்டுள்ளது. மூன்று முறை நடந்த ஏலத்தில் யாரும் வாங்கவில்லை. ஏனென்றால் எல்லோரிடமும் அதற்கான தொழில்நுட்பம் இல்லை. இதை வாங்கி என்ன செய்வது? இப்போது வாங்கலாமா? எதிர்காலத்தில் வாங்கிக்கொள்ளலாமா? என நினைத்து வாரும் வாங்காமல் இருந்தனர்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.