search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram Padam"

    • தன்நிகர் இல்லாதவர் என்ற பெருமையைக் கொண்டவர் ஆஞ்சநேயர்.
    • ராமநாமத்தை யார் உச்சரித்தாலும் ஆஞ்சநேயர் கேட்டு மகிழ்வார்.

    ஆலயத் தோற்றம்

    ராமநாமத்தை பக்தியோடு யார் உச்சரித்தாலும், அவர்களின் அருகில் அமர்ந்து ஆஞ்சநேயர் கேட்டு மகிழ்வார் என்பது ஐதீகம். ஞானம், பக்தி, வீரம் ஆகிய மூன்றிலும் தன்நிகர் இல்லாதவர் என்ற பெருமையைக் கொண்டவர் ஆஞ்சநேயர். தலை சிறந்த ராம பக்தனான இவா், தன்னை மனப்பூர்வமாக வழிபடுபவர்களை உடனிருந்து காப்பார்.

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள கோவில்களில் ஆஞ்சநேயர், பொதுவாக பக்த ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயர் போன்ற திருக்கோலங்களில் காட்சி தருவார்.

    செங்கல்பட்டில் `கணையாழி ஆஞ்சநேயர்' என்ற பெயரிலும், காஞ்சியில் `சதுர்புஜ ஆஞ்சநேயர்' என்ற பெயரிலும் கோவில் கொண்டு அருளாசி வழங்குகிறார். அந்த வகையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கு இடையில் அமைந்திருக்கிறது, மேல்பெருமாள்சேரி என்ற கிராமம். இங்குள்ள ஆஞ்சநேயர் `பக்த ஆஞ்சநேயர்' என்ற திருநாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர்களைக் காத்தருள்கிறார்.

    இவ்வாலய கருவறையில் இருக்கும் பக்த ஆஞ்சநேயர், தனக்கு எதிரே இருக்கும் ராமபிரானின் பாதத்தை தரிசித்த நிலையில் நின்று கிழக்கு திசை நோக்கி அருள்மழை பொழிகிறார். இந்த சிறிய கோவிலுக்கு வெளிப்புறத்தில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் 27 அடி உயரத்தில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம் தந்து காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறார்.

     இந்த ஆலயத்தின் கருவறையின் வெளிப்புறத்தில் விநாயகப் பெருமான் `நீதி வழங்கும் விநாயகர்' என்ற திருநாமம் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்த திருக்கோவிலில் தட்சிணாமூர்த்தி தம்பதி சமேதரராய் தெற்கு திசையில் அமர்ந்து அருள்புரிவது தனிப்பெரும் சிறப்பாகும். யோக ஆஞ்சநேயர் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

    யோகத்தினால் தன்னையும், பிறரையும் தன்வசப்படுத்த முடியும் என்பதை பக்தர்களுக்கு உணர்த்த யோக ஆஞ்சநேயராக இங்கே எழுந்தருளியுள்ளார். வாழ்வில் வெற்றிபெற குருவின் அருளாசி ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை உணர்த்த, குரு பகவானின் பின்புறம் இவர் தியானத்தில் மூழ்கியபடி இருக்கிறார்.

    இவ்வாலயத்தின் தல விருட்சம், அரசமரம் ஆகும். கருவறையின் முன்பாக உள்ள மண்டபத்தின் முகப்பில், சங்கு, சக்கரமும், நடுவில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரின் சுதைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. சனீஸ்வரரால் விநாயகப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயர் இருவரை மட்டும் பிடிக்க இயலவில்லை.

    இதைக் கருத்தில் கொண்டு இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தின் ஒரு பக்கத்தில் ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர் ஆகிய மூவரும் நின்ற திருக் கோலத்தில் இருக்க, அவர்களை வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் இருக்கும் சுதைச்சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கருவறை விமானத்தின் மூன்று புறங்களிலும் ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் சுதைச்சிற்பமாக காட்சி அளிக்கிறார்.

     மிதக்கும் கற்கள்

    இந்த கோவிலில் ராமேசுவரத்தில் உள்ளது போலவே மிதக்கும் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக கல்லானது தண்ணீரில் போட்டால் மூழ்கும் தன்மை உடையவை. ஆனால் இங்கே காணப்படும் மிகுந்த எடையுடைய பெரிய கற்களை, நீரில் போட்டால் மேலே வந்து தண்ணீரில் மிதக்கின்றன. இத்தகைய மிதக்கும் கற்களைக் கொண்டுதான், ஆஞ்சநேயர் தனது வானரப்படையினரோடு ராமர் பாலத்தைக் கட்டி முடித்தார் என்பதை ராமாயணக் காவியம் எடுத்துரைக்கிறது.

    இவ்வாலயத்தில் வருடந்தோறும் மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கும் இடையில் மேல்பெருமாள்சேரி கிராமம் அமைந்துள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து ஷேர்ஆட்டோக்கள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த வழியாகச் செல்லுகின்றன.

    • ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    தென்காசி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

    கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் ஆகியவை நடக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் சிறிய மலை குன்றின் மீது ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாதம் இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் ராமர் சீதையை தேடி செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் அருந்தியாக நம்பப்பட்டு வரும் சுனை ஒன்றும் உள்ளது. சுனையில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருப்பதால் காட்டுப்பாதையில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் தேவையை அந்த சுனை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்த சுனையில் இன்று பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் தலைமையிலான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    பின்னர் சுனைநீரிலும் சிறப்பு பூஜைகள் செய்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுனை நீரை பருகி ராமபிரானை வழிபட்டனர்.

    ×