search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "role models"

    • ரோல் மாடலாக வேண்டும் என்றால் பெற்றோர்கள் சிலவற்றைக் கட்டாயம் குழந்தைகள் எதிரே தவிர்க்க வேண்டும்.
    • உணவு, நொறுக்குத் தீனிகளை சாப்பிடும்போது அவை தரையில் சிந்தாமல் சாப்பிட வேண்டும். பேசிக்கொண்டே சாப்பிடக் கூடாது.

    எந்தக் குழந்தையும் பிறக்கும்போது அதன் மனம் ஒரு வெள்ளை காகிதமாகவே உள்ளது. அது வளர வளர பெற்றோர் செய்யும் செயல்களே அந்த வெள்ளைக் காகிதத்தில் எழுத்துக்களாக மாறி பதிந்து அந்த குழந்தையின் நடத்தைகளாக உருவாகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் அவரவரின் பெற்றோர்களே ரோல் மாடலாக வேண்டும். அப்படி ரோல் மாடலாக வேண்டும் என்றால் பெற்றோர்கள் சிலவற்றைக் கட்டாயம் குழந்தைகள் எதிரே தவிர்க்க வேண்டும். அவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    சிலர் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்க மாட்டார்கள். உடுத்திய ஆடையை அறைக்குள் ஏதாவது ஒரு இடத்தில் கண்டபடி வீசுவார்கள். படுக்கையை விட்டு எழும்போது போர்வையை ஒழுங்காக மடித்து வைக்கமாட்டார்கள். வீட்டுக்குள் நுழையும்போது காலணிகளை ஒரே இடத்தில் கழட்டி வைக்க மாட்டார்கள். இதுபோன்ற பழக்க வழக்கங்களை பார்த்து வளரும் பிள்ளைகளும் அதனைப் பின்பற்ற தொடங்குவார்கள் என்பதை கவனத்தில் வைத்து இவை போன்ற ஒழுங்கற்ற செயல்களை செய்யக்கூடாது.



    உணவு, நொறுக்குத் தீனிகளை சாப்பிடும்போது அவை தரையில் சிந்தாமல் சாப்பிட வேண்டும். பேசிக்கொண்டே சாப்பிடக் கூடாது. வீட்டில் செய்யும் ஊட்டச்சத்தான உணவுப் பொருட்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் முதலில் பெற்றோர் தவிர்த்தால்தான் குழந்தைகளும் ஆரோக்கியமான வகையில் வளருவார்கள்.

    மன அழுத்தத்தில் இருக்கும் போது சில பெற்றோர்கள் நகம் கடிப்பது, அறையைக் தாழிட்டுக் கொள்வது போன்றவற்றை செய்வார்கள். இவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். நகம் கடிப்பது என்பது ஆரோக்கியமற்ற செயல் மற்றும் மற்றவர்கள் பார்வையில் அருவெறுப்பான செயலாகும். இதேபோல் அறைக்கதவை தாழிட்டுக் கொள்வது பின்னாளில் விபரீதத்தைத் தரும்.

    குழந்தைகள் முன்பு பெற்றோர் உச்சரிக்கும் வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை. குழந்தைகள் கற்றுக்கொள்வது பெற்றோர் பேசுவதைப் பார்த்துத்தான். ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றுக் கொள்வதற்கு குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை குழந்தைகள் கவனிப்பார்கள். அந்த வார்த்தைகளே அவர்களின் மனதில் பதியும். ஆகவே, குழந்தைகள் முன்பு பேசும்போது கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்து கத்திப் பேசாமல் அமைதியான முறையில் பேச பெற்றோர் பழக வேண்டும்.


    மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்யக்கூடாது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களையும் அதே போன்ற திறன்களுடன் வளர்க்க நினைக்கிறார்கள். இப்படிச் செய்யும்போது குழந்தைகள் தங்களுடைய தனித்தன்மையை கண்டறிய முடியாமல் போய்விடும். நம் குழந்தைகளின் அறிவுத்திறனை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் அவர்களிடம் என்ன திறன் இருக்கிறதோ அதை அப்படியே ஏற்று அதை ஊக்குவிக்கப் பழக வேண்டும். இந்தப் போட்டி மனப்பான்மையால் ஏற்படும் மன அழுத்தத்தால் வெற்றி பெற முடியாமல் போகும் குழந்தைகளுக்கு விரக்தி மற்றும் மனச்சோர்வு உண்டாகும். அதனால் தயவு செய்து ஒப்பீடு செய்ய வேண்டாம்.

    இவை போன்று காலை எழுந்தவுடன் பல் துலக்காமல் காபி குடிப்பது, மின் சாதனங்களை தேவையின்றி ஓடவிடுவது, புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள், தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிப்பது போன்ற பல செயல்களை செய்யாமல் இருக்கும் பெற்றோர்களே பிள்ளைகளுக்கு நல்ல ரோல் மாடலாக முடியும்.

    ×