search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rural postal workers"

    கரூர் கோட்ட அஞ்சல் அலுவலகம் அருகில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    கரூர்:

    கரூர் கோட்ட அஞ்சல் அலுவலகம் அருகில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் கிராமிய அஞ்சல் அலுவலகங்களில் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை முடங்கியுள்ளது.

    கமலேஷ் சந்திராவின் தலைமையில் அமைக்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தும் அதனை நடைமுறைப்படுத்தாமல் காலதாமதம் செய்து வருவதையடுத்து நாடு முழுவதும் கடந்த மாதம் 22-ந் தேதியில் இருந்து கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, மணப்பாறை துணை கோட்டங்களை சேர்ந்த 700 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் பணி செய்ய ஆட்கள் இன்றி கிராமிய அஞ்சல் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடப்பதால் பதிவு தபாலை பிரித்து உரிய முகவரிக்கு அனுப்பி வைப்பதில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வேலையில் சேருவதற்கான அழைப்பாணை கடிதம், நேர்காணல் தேர்வுக்கு செல்வதற்கான விவர கடிதம் உள்ளிட்ட முக்கியமான தபால்களை பெற முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது உள்ளிட்ட பண பரிவர்த்தனை நடைபெறாததால் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை முடங்கிவிட்டது. மேலும் உதவித்தொகை உள்ளிட்டவையும் பொதுமக்களுக்கு பட்டுவாடாசெய்வதில் தேக்கம் ஏற்பட்டு இருக்கிறது. எனினும் மத்திய அரசானது கிராமிய அஞ்சல் ஊழியர்களின் ஊதிய கோரிக்கையை நிறைவேற்ற முன்வராததால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.

    அதன்படி கரூர் கோட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கரூரில் உள்ள கோட்ட அஞ்சல் அலுவலகம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய மற்றும் தமிழ் மாநில சங்க தலைவர் ராஜாங்கம் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து கோரிக்கையை விளக்கி பேசினார். கரூர் கோட்ட செயலாளரும், மாநில துணை தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் அகில இந்திய துணை பொது செயலாளர் அமிர்தலிங்கம், முன்னாள் மாநில துணை செயலாளர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த போராட்டத்தின் போது மத்திய மந்திரி சபையின் ஒப்புதல் கிடைக்கவில்லை எனக்கூறி கடந்த 6 மாதங்களுக்கு மேல் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துவதால் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

    அஞ்சலக ஜி.டி.எஸ். ஊழியர்கள் மூலம் கிராமப்புற மக்களிடம் சேமிப்பு, இன்சூரன்ஸ் போன்ற வகையில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் வருகிறது. எனவே கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதியக்குழுவின் சாதகமான பரிந்துரையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி, அ.தி.மு.க. தொழிற்சங்க தலைவர் பொரணி கணேசன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் வடிவேலன் உள்பட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ×