என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saidai Duraisamy"

    • தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார்.
    • தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார்.

    விழுப்புரம்:

    தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க.வில் குழப்பம் நிலவி வருகிறது. சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகளை ராமதாஸ் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார். அவர் ராமதாசை சந்தித்து பேசினார்.

    இதன்பின் வெளியே வந்த சைதை துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்ததற்காக ராமதாஸ் என்னை பாராட்டி இருந்தார். அதனால் ராமதாசை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காகவே வந்தேன்.

    இதனிடையே, ராமதாஸ், அன்புமணி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார். 

    • நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.
    • பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைராக நானே செயல்படுவேன். செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் என பரபரப்பாக பேட்டியளித்தார்.

    இந்த நிலையில் அவரை சமாதானம் படுத்துவதற்காக கடந்த 3 நாட்களாக பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், டாக்டர் ராமதாசின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி, பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மயிலம் எம்.எல்.ஏ.சிவக் குமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்து தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • சுயநலவாதிகளுக்கு என் கருத்து இடையூறாக இருக்கிறது என்றால், இருந்துவிட்டு போகட்டும்.
    • அ.தி.மு.க.வின் தலைவர்களை ஒருங்கிணைத்தால் கட்சி பலம் பெறும்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி சமீபத்தில், 'பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    அந்த அறிக்கை தொடர்பாக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, 'வேலைவெட்டி இல்லாமல், எங்கோ அமர்ந்துகொண்டு, யாரையோ திருப்திப்படுத்த சைதை துரைசாமி கருத்துகளை கூறி வருகிறார்' என்று கடுமையாக பேசி இருந்தார்.

    அவருடைய இந்த பேச்சுக்கு சைதை துரைசாமி பதில் அளிக்கும் வகையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் முதலில் தன்னை பற்றி எம்.ஜி.ஆர். பேசிய வீடியோவை காண்பித்தார்.

    எம்.ஜி.ஆர். அந்த வீடியோவில், "சைதாப்பேட்டை என்றாலே எனக்கு எலுமிச்சை பழம்தான் நினைவுக்கு வரும். எலுமிச்சை பழத்தை மாலையாக போட்ட சைதை துரைசாமியைத்தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகுதான் இந்த நிகழ்ச்சியே ஞாபகம் வரும். நான் ஒரு அரசியல்வாதி. என் அரசியல் கட்சியில் இருந்த சைதை துரைசாமி அப்போதிருந்த முதலமைச்சருக்கு இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம்பழ மாலையை போட்டார். ஆனால் அந்த மேடையிலேயே அடித்து தூளாக ஆக்கி சைதை துரைசாமியை தூக்கி கொண்டுபோய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம்தான் என் கண்முன்னே நிற்கும்'' என பேசியிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா அவரை பற்றி பேசிய வீடியோவை காண்பித்தார். அதில், 'மனிதாபிமானத்தின் மணிமகுடம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.. அந்த மகத்தான தலைவரின் கனவுகளை நனவாக்கி வரும் சிறந்த மக்கள் நலத் தொண்டனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சைதை துரைசாமி உருவாக்கி இருக்கும் அறக்கட்டளையையும், அதன் கீழ் இயங்கும் இந்த இலவச திருமண மண்டபத்தின் சிறப்பையும் பார்க்கும்போது, சாதி, பேதம் பாராமல் எல்லா மக்களுக்கும் பயன்படும் சிறந்த பணிகளை ஆற்ற பிறந்தவர்கள் அ.தி.மு.க. உடன்பிறப்புகள்தான் என்பது உறுதிப்படுகிறது. கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் ஒரு சீரிய பணி இது. கிஞ்சித்தும் லாப நோக்கம் இல்லாமல், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனும் மனப்பாங்கோடு இந்த இலவச திருமண மண்டபத்தை உருவாக்கியிருக்கும் சைதை துரைசாமியை மனம் மாற பாராட்டுகிறேன். ஆகவே இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், நிச்சயமாக எனக்கு சைதை துரைசாமி மீது முழு நம்பிக்கை உண்டு' என்று பேசி இருந்தார்.

    இந்த வீடியோக்களை காண்பித்த பிறகு சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்னுடைய தியாகம், நேர்மை, அறம் சார்ந்த வாழ்வு, சேவை நிறைந்த செயலை பாராட்டியுள்ளனர். ஆனால் ஒருவர் என்னை வேலைவெட்டி இல்லாதவன் என்று சொல்லி இருக்கிறார். சேவை பற்றி உணராத இப்படிப்பட்ட மனிதர்கள் பொதுவாழ்க்கையில் இருக்கிறார்கள் என நினைத்து அவர்களை பொதுமக்கள் மத்தியில் தோலுரிக்கத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

    அ.தி.மு.க. நல்ல முறையில் இருக்க வேண்டும். வெற்றி பாதையில் செல்ல வேண்டும். கருத்துகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். சுயநலவாதிகளுக்கு என் கருத்து இடையூறாக இருக்கிறது என்றால், இருந்துவிட்டு போகட்டும். அ.தி.மு.க.வுக்கு விதை போட்டவன், முதல் தியாகி என்னை பார்த்து வேலைவெட்டி இல்லாதவன் என்று சொல்வதா?.

    2021-ல் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது போல, பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் 26 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். 2 மத்திய மந்திரிகள் கிடைத்திருப்பார்கள். மேலும் மத்தியில் அதிகார மையத்தில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், இங்குள்ள மாநில அதிகார மையத்திடம் இருந்து அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள்.

    அ.தி.மு.க.வின் தலைவர்களை ஒருங்கிணைத்தால் கட்சி பலம் பெறும். பிளவு என்ற சொல் இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அதுபோல் செய்து இருக்கிறார்கள். அவர்களே செய்தபோது, இவர்களால் முடியாதா?. எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவை கூட்டணி விஷயமாக சந்தித்து இருந்தால், அதனை நான் வரவேற்கிறேன்.

    வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாவிட்டால், இனி அ.தி.மு.க.வை யாராலும் காப்பாற்ற முடியாது. எம்.ஜி.ஆரை முதன்மைப்படுத்தினால் கட்சி வளரும். அவர்தான் சொத்து, மூலதனம். அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அமர பா.ஜ.க.வுடன் கூட்டணியை உடனே அறிவிக்க வேண்டும். ஒற்றுமையுடன் இருந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அராஜகம் அரசியல், கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும்.
    • கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    9.ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத் தொண்டன் என்பதிலும், அண்ணா தி.மு.க.-வின் முதல் தியாகி என்பதிலும் பெருமை கொண்டவன்.

    பதவிக்காகவும் ஆதாயத்துக்காகவும் நான் அதிமுக-வில் இல்லை என்பதை என்னுடன் தோளுக்குத்தோள் இணைந்து கட்சிப்பணி செய்த சகாக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு தெரியும்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜா.அணி- ஜெ.அணி இணைப்புக்கும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க. ஒற்றுமைக்குப் பணியாற்றிருக்கிறேன் என்ற தகுதியில்தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுகவுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.

    1. எம்.ஜி.ஆரின் பெரும்புகழை மேடைகளில் பேசுவது, சுவரொட்டி மற்றும் பேனர்களில் பெரிய அளவில் முதன்மைப்படுத்துவது.

    2. பிரிந்து கிடக்கும் அதிமுக-வினரை ஒற்றுமைப்படுத்துவது.

    3. பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவது

    அண்ணா திமுக-வின் குலதெய்வம் புரட்சித்தலைவர். அந்தக் குலதெய்வத்தின் கொள்கை வழி நின்று அவரது புகழை, சிறப்பை இன்னும் அதிகமாக முதன்மைப்படுத்த வேண்டும். திரைப்படத்தில் சொன்ன கருத்துக்களை எல்லாம் ஆட்சியில் செய்துகாட்டியவர். இன்றுவரை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார்.

    அராஜகம் அரசியல், கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

    கட்சிக்கு ஏன் இந்த தொடர் தோல்விகள், தொண்டனுக்கு ஏன் இந்த சோர்வு, இந்த தோல்வியை எப்படி தவிர்க்கலாம் என்று சிந்தித்தால் கட்சியின் ஒற்றுமை, கூட்டணி பலம் ஆகியவற்றின் தேவை புரியும்.

    தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல புரட்சித்தலைவர் மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

    1. மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    2. இந்திரா காந்தி தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான அண்ணா திமுக அனுமதி கொடுக்காததால் உறவு முறிந்தது. பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணா திமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்லி அடைந்தது.

    3. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் சென்று என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார்.

    4. அதன் பிறகு, காங்கிரஸ் உடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து திமுக-வை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

    5. அதன் அடையாளமாக திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலிய சென்று ஆதரவு கொடுத்தார்.

    7. திமுக கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரசாரம் செய்து வெற்றிபெற வைந்தார். இது அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.

    8. 1981-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடல்நலம் பாதித்திருந்தபோது இந்திரா காந்தி நேரடியாக வந்து பார்த்து, அவர் வெளிநாட்டில் உயர்தர சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதிகளை செய்து தந்தார்.

    1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா திமுக காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அண்ணா திமுக-வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது மத்திய அரசின் உதவிகள் பெருமளவு பயன்தந்தது.

    இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்றபோது கட்சி நலன், மக்கள் நலன், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எம்ஜிஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம்.

    இவ்வாறு சைதை துரைசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.
    • மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.

    வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.

    மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை கவர்னர் சதாசிவம் நாளை திறந்து வைக்கிறார். #MGRHouse
    கொழிஞ்சாம்பாறை:

    சினிமா, அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூர் ஆகும்.

    சிறுவயதில் இங்கு எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு வசித்தார். அவர் வசித்த வீடு தற்போது அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்த இந்த வீட்டை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி 2 முறை பராமரித்தார். அதன் பின்னர் அந்த வீட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீடு சிதிலமடைந்து குடியிருக்க முடியாமல் இருந்தது.

    இது குறித்து அறிந்த சென்னை முன்னாள் மேயரும், எம்.ஜி.ஆர். பேரவைத்தலைவருமான சைதை துரைசாமி அந்த வீட்டை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். வசித்த வீட்டை புனரமைக்க முடிவு செய்தார்.

    அதன்படி ரூ.50 லட்சம் செலவில் சிதிலமடைந்த வீட்டை புதுப்பொலிவுடன் மாற்றி எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக அமைக்கப்பட்டது. இந்த இல்லத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தொடர்ந்து செயல்படும்.


    இது தவிர பார்க்கிங், எம்.ஜி.ஆர். அருங்காட்சியகம், பார்வையாளர்கள் கேலரி, சுகாதார வளாகம் ஆகியவைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இல்லத்தின் முன்பு எம்.ஜி.ஆர். உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் ‘சத்திய விலாசம்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆரின் சகோதரரின் பேரன் கூறும்போது, எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த இல்லத்தை கேரள கவர்னர் சதாசிவம் திறந்து வைக்கிறார்.

    கேரள மாநில கலாசார துறை அமைச்சர் பாலன், நீர்பாசன துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

    எம்.ஜி.ஆரின் நினைவுகளை அங்கிருந்தவர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.  #MGRHouse

    சென்னை மேயராக பதவி வகித்தபோது கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்ன? என்பது குறித்து சைதை துரைசாமி பட்டியலிட்டுள்ளார். #ADMK #SaidaiDuraisamy #KolathurConstituency
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொளத்தூர் இரட்டை ஏரி 100 அடி சாலை சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை மூலம், மேம்பாலம் கட்டுவதற்கு இன்றைய முதல்-அமைச்சர், அன்றைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம், பலமுறை விண்ணப்பம் கொடுத்து, நேரிடையாக பார்வையிடச் செய்து, சுமார் ரூ.48 கோடி செலவில் மேம்பாலம் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதேபோல், கொளத்தூர் - வில்லிவாக்கம் எல்.சி.1 சந்திக்கடவின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு தடைகள் பல இருந்து கைவிடப்பட்ட இந்த திட்டம், 2012-2013 நிதிநிலை அறிக்கையில் என்னால் அறிவிக்கப்பட்டு, தற்போது சுமார் ரூ.58.5 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படவுள்ளன. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாட்டிற்காக கடந்த 25-10-2011 முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியால் ரூ.205 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டிலான 1,916 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    அதாவது, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 1,431 உட்புறச்சாலைகளில், 248 கான்கிரீட் சாலைகள் மற்றும் 943 உட்புற தார்சாலைகளை மேம்படுத்தும்பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பூங்கா, மாநகராட்சி கட்டிடம், பொதுக் கழிப்பிடம், மயானம், நடைபாதை, மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற அபிவிருத்திப் பணிகளின் மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ.205 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டிலான 1,916 பணிகள் நடைபெற்றுள்ளது.

    மேயர் நிதியின் கீழ் ரூ.8 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் 34 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை, 2 உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிகள், 15 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள், குளம் அபிவிருத்தி செய்யும் பணிகள், பள்ளிக்கட்டிடம் அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன.

    பேருந்து சாலைகள் துறையின் கீழ் ரூ.21 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 18.3 கிலோ மீட்டர் நீளத்தில், 34 பேருந்து சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 16 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்துறை மூலம் புதிதாக 832 மின்கம்பங்கள் அமைப்பது, 7 உயர்கோபுர மின் விளக்குகள் அமைப்பது, 17.3 கி.மீ. நீளத்தில் புதை மின் வடம் இடுவது மற்றும் 5,655 புதிய எல்.இ.டி. விளக்குகள் மாற்றும் பணி உள்ளிட்ட ரூ.10 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டிலான 60 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    மழைநீர் வடிகால்வாய் துறை மூலம் மழைநீர் வடிகால்வாய்கள் 19.53 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.19 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்துறை மூலம் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில், 3 பள்ளிக் கட்டிடம், ஒரு நகர நல்வாழ்வு நிலையம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணிக்காக இயந்திரப் பொறியியல் துறை மூலம் ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் 9 எண்ணிக்கையிலான கனரக காம்பாக்டர் வாகனங்களும், ரூ.91 லட்சம் செலவில் 6 எண்ணிக்கையிலான இலகு ரக காம்பாக்டர் வாகனங்களும் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

    கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சிப் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 663 மாணவ - மாணவியர்களுக்கு வண்ணச் சீருடைகளும், 5 ஆயிரத்து 254 மாணவ - மாணவியர்களுக்கு சைக்கிள்களும், 5 ஆயிரத்து 274 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.

    மாவட்ட குடும்ப நலத்துறை மூலம் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 786 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 1,418 பேருக்கு, ரூ.5 கோடியே 49 லட்சத்து 25 ஆயிரம் காசோலையாகவும் மற்றும் 5 ஆயிரத்து 672 கிராம் தங்க நாணயமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    விதவை, முதியோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு உதவித்தொகை கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி பெற்றுத்தரப்பட்டது. இது மட்டுமல்லாது குடிசைமாற்று வாரியம், வீட்டுவசதி வாரியம் போன்ற அரசின் பல்வேறு துறைகளின் மூலம் ஏராளமான நலத்திட்டப் பணிகள், அபிவிருத்தி பணிகள் போன்றவைகள் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அனைத்து மனுக்களின் மீதும் நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு சைதை துரைசாமி கூறியுள்ளார். #ADMK #SaidaiDuraisamy #KolathurConstituency
    அ.தி.மு.க. பொது மக்களால் உண்டான பேரியக்கம் என்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் சைதை துரைசாமி பேசினார். #MGR #SaidaiDuraisamy #Karunanidhi #MKStalin
    திருச்சி:

    திருச்சி, திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் எம்.ஜி. ஆரின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

    இதில் உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். குறித்த புத்தகத்தை வெளியிட்டும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். பொதுமக்களுக்காகவே கடைசி வரை உழைத்த மனிதர். சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்காகவே பாடுபட்டவர். திராவிட இயக்கத்தை அடித்தட்டு மக்கள் வரையில் கொண்டு சேர்த்ததுடன் மட்டுமின்றி தேர்தலில் வெற்றிப்பெற்று தி.மு.க. ஆட்சியமைக்க இரவு, பகல் பாராமல் கடந்த 1971-ம் ஆண்டு வரை கடுமையாக உழைத்தவர்.

    கட்சியை வளர்த்த எம்.ஜி.ஆரை சுயநலத்துக்காக சூழ்ச்சியின் மூலம் கட்சியில் இருந்து வெளியேற்றியவர் கருணாநிதி. இவரின் வழி வந்து குறுக்கு வழியில் தற்போது தி.மு.க. தலைவராக இருப்பவர் ஸ்டாலின்.

    இவர் அ.தி.மு.க. துரோகத்தின் தொடக்கம் என்று கட்சி பத்திரிகையில் எழுதியுள்ளார். 1965-ம் ஆண்டுக்கு முன்பு தி.மு.க. தலைவர்களின் கடைசி பட்டியலில் இருந்தவர் கருணாநிதி. இவர் அண்ணாதுரையுடன் நெருக்கமாக இருந்த அறிவு ஜீவிகளை கட்சியில் இருந்து தனது சுய நலத்துக்காக வெளியேற்றியவர்.

    கட்சியை விட்டு எம்.ஜி.ஆரை வெளியேற்றிய கருணாநிதிதான் துரோகத்தின் தொடக்கம். அ.தி.மு.க. பொது மக்களால் உண்டான பேரியக்கம். கட்சியில் இருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பின்னர் தமிழகத்தில் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. மக்களிடம் புரட்சி வெடித்தது. இதன்மூலம் உருவான கட்சி தான் அ.தி.மு.க. ஆகும்.

    கருணாநிதி செய்த துரோகத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டுதான் எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும் வரையில் தி.மு.க.வை தோல்வியடைய செய்தனர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க. தொடங்கிய போது கருணாநிதியின் வாரிசாக மு.க.முத்து மட்டுமே இருந்தார். பின்னர் தனது சூழ்ச்சியால் தலைமை பதவிக்கு வந்திருப்பவர் ஸ்டாலின். இவர் அ.தி.மு.க. குறித்து பேச தகுதியில்லாதவர். தி.மு.க.வை பொறுத்த வரையில் மூத்த தலைவர்களுக்கு தான் தலைவர் பதவி கொடுக்கவேண்டும்.

    அன்பழகன் இருக்கும் போதே, ஸ்டாலின் தான் தலைவர் என்று குடும்ப அரசியலுக்காக சுய நலத்துடன் கடைசி வரையில் இருந்தவர் தான் கருணாநிதி. இவர்கள் மக்களுக்காகவே உழைத்த எம்.ஜி.ஆர்.மீது தற்போது சேற்றை வாரி இறைக்கின்றனர். எம்.ஜி.ஆர்.மீது குறை சொல்லும் யாரையும் பொது மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #MGR #SaidaiDuraisamy #Karunanidhi #MKStalin
    எம்ஜிஆர் பெயரில் மக்கள் சேவை ஆற்றுவதற்கு ரூ.1,000 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப சொத்தை விற்று ரூ.50 கோடி வழங்கப்போவதாக சைதை துரைசாமி அறிவித்துள்ளார். #MGR #SaidaiDuraisamy
    சென்னை:

    உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் சைதை துரைசாமி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    திராவிட இயக்கம் பட்டி, தொட்டி எங்கும் பரவி, நான் முதல்-அமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்று அண்ணா சொன்னார். ‘உன்னால் உயர்வடைந்த என் போன்றோர் உள்ளம் எல்லாம் மகிழ வேண்டும்’ என்று கருணாநிதி, எம்.ஜி.ஆரால் முதல்-அமைச்சர் ஆனதை அவருடைய வாக்குமூலமாகவே கொடுத்தார்.

    எம்.ஜி.ஆரின் பிம்பமாக இருந்த ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். ஜெயலலிதாவுக்கு முன்பாக போற்றுதலுக்குரிய ஜானகி அம்மையார் முதல்-அமைச்சராக இருந்தார். இன்று வரை தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை, புரட்சியை உருவாக்கிய ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆரின் ராசி அவர் யாருக்கு எல்லாம் பதவி கொடுத்தாரோ, அவர்கள் எல்லாம் விசுவாசமாக இல்லை. எம்.ஜி.ஆரை தங்களுடைய இதய தெய்வமாக பொதுமக்களும், தொண்டர்களும் இன்று வரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் கடந்தநிலையிலும், பட்டி-தொட்டி முதல் நகர்ப்புறம் வரையில் வாழ்கின்ற படித்தவர்கள், பாமரர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் இன்றளவும் அவரது நினைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.



    சினிமா, அரசியல் என எல்லா நிலைகளிலும் நிழலாக பின் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பெரும் புகழுக்கு உறுதுணையாக நின்ற ஆர்.எம்.வீரப்பனுக்கு இந்த மாநாடு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. ஆர்.எம்.வீரப்பனின் இப்போதைய அரசியல் நிலைப்பாட்டில் நமக்கு எந்த விதமான உடன்பாடும் இல்லை. அவர் எடுத்த முடிவு தவறு என்று இந்த இடத்தில் நான் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் அவர் எம்.ஜி.ஆருக்காக ஆற்றிய பங்களிப்பை இந்த நேரத்தில் தெரிவிப்பது எங்களுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.

    எம்.ஜி.ஆரால் அடையாளப்படுத்தப்பட்டு, அவரிடம் அரசியல் பயின்ற பலர் இன்றைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளில் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இன்று அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த பெரும் புகழுக்கும், பெயருக்கும் எம்.ஜி.ஆர். தான் காரணம் என்பதை உலகமறியும்.

    எதற்காக இந்த மாநாடு? இந்த அமைப்பு? என்று பல பேர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.

    உலக எம்.ஜி.ஆர். பேரவை என்பது ஒரு தொண்டு நிறுவனம். எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டிருந்த போது ஒரு நாளைக்கு குறைந்தது 10 பேர் முதல் ஆயிரம் பேர் வரை பயன்பெற்றார்கள். இந்த சமூகத்தில் கடைசி மனிதன் இருக்கும் வரையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆகவே அரசியல் சார்பற்ற முறையில் இந்த அமைப்பை வலுப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, எம்.ஜி.ஆரை இன்றளவும் நினைவில் வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இந்த அமைப்பு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். எம்.ஜி.ஆரின் புகழ், பெருமையை காப்பதற்கு, சேவை செய்வதற்கு நிதி வேண்டும். அந்த நிதியில் முதல் தவணையாக நான் ரூ.50 கோடியை இந்த அமைப்புக்கு தர இருக்கிறேன். ரூ.1,000 கோடி இலக்கு.

    எம்.ஜி.ஆரால் பயனடைந்தவர்கள் தமிழகத்தில் 1,000 பேர் இருப்பார்கள். ஒருவர் ஒரு கோடி கொடுத்தாலும் ரூ.1,000 கோடி கிடைக்கும். இந்த ஆயிரம் கோடியை வைப்புநிதியாக வைத்து வாழ்நாள் முழுக்க, உலகம் இருக்கிற வரையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை நாம் நிரூபிக்கவேண்டும். இது ஒன்று தான் மாநாட்டின் நோக்கம் தவிர, வேறு எந்த சிந்தனையும் கிடையாது.

    என்னுடைய குடும்ப நிதி, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள சொத்துகளை விற்று ரூ.50 கோடியை முதல் தவணையாக கொடுக்க இருக்கிறேன். அதற்கு பிறகு என்னுடைய சகாக்களான எம்.ஜி.ஆரால் அடையாளப்படுத்தப்பட்ட, பெரும் புகழ், பெரும் செல்வந்தர்களாக, இந்த சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அத்தனை பேரையும் சந்தித்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, யார் எல்லாம் நன்கொடை தருகிறார்களோ, அவர்களை உறுப்பினர்களாகி அந்த தொகையை சேவையாக நாட்டு மக்களுக்கு நாள்தோறும் வழங்கி எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார். எப்போதும் வாழ்வார் என்பதை நிரூபிக்கின்ற வகையில் இந்த மாநாடு தொடங்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #MGR #SaidaiDuraisamy
    ×