search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sand Abuse"

    • 8 மணல் குவாரிகளில் சோதனை நடைபெற்றது.
    • ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

    6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்ற தொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மணல் குவாரிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் அளவு மற்றும் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவற்றை பற்றியும் கணக்கிட்டனர்.

    குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் மணலில் போலி பதிவுகள் மூலம் முறைகேடுகள் நடப்பதை சில ஆவணங்கள் மூலம் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சில ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர். அத்துடன் போலி பில்கள் மூலம் மணல் விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி இழப்பை ஏற்படுத்தியதையும் கண்டுபிடித்தனர்.

    விசாரணையின் ஒரு பகுதியாக ஐ.ஐ.டி.கான்பூர் நிபுணத்துவத்தை பயன்படுத்தி அனைத்து மணல் அகழ்வு தளங்களிலும் தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்டனர். அதில் மணல் அள்ளப்பட்ட இடங்களில் அளவுக்கு அதிகமாக மணல்கள் அள்ளப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது.

    மொத்தம் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் விற்பனை நடைபெற்றுள்ள நிலையில் கணக்கு புத்தகத்தில் காட்டப்பட்டுள்ள வருவாய் ரூ.36.45 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.

    இதுகுறித்து அமலாக்கத் துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பலகோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ள காரணத்தால் இதுபற்றி விசாரிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி.விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.

    அதன் அடிப்படையில் விசாரணை இப்போது தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

    மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணிக்கு கோபெல்கோ கன்ஸ்டக்ஷன் என்ற தனியார் நிறுவனம் தமிழகத்தில் உள்ள 16 இடங்களுக்கு மொத்தம் 273 எந்திரங்களை வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.

    இதன் மூலம் சட்ட விரோ தமாக மணல் விற்பனையில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததின் அடிப்படையில் வரி ஏய்ப்பு தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×