search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scavengers"

    • திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
    • ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது.

    திருப்பூர் :

    உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தொழிற்சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    இது குறித்து தூய்மை பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) செயலாளர் ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணி, குடிநீர் வழங்கல், வாகன ஓட்டுநர் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு ஆகிய பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் ரூ. 330 மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரூ. 300 வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை பணியில் தனியார் நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் போது, தினக்கூலியை நிர்ணயித்து வழங்க வேண்டும் என பட்டியல் வழங்கியுள்ளது. ஆனால் அது வழங்கப்படுவதில்லை. ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது. இதில் இ.எஸ்.ஐ., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 16.21. பணியாளர் பங்களிப்பு ரூ. 3.74 பிடித்தம் செய்ய வேண்டும். அதேபோல் தொழிலாளர் பி.எப்., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 64.87. பணியாளர் பங்களிப்பு ரூ. 59.88 பிடித்தம் செய்ய வேண்டும்.

    சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு ரூ. 12.88 இதில் ஒதுக்கப்படுகிறது. இதற்கு சேவைக்கட்டணம் 10 சதவீதம், ஜி.எஸ்.டி., 18 சதவீதம் பிடித்தம் போக தினமும், ரூ. 435.43 வழங்க வேண்டும். அதன்படி மாதம், 26 நாளுக்கு ஒருவருக்கு ரூ. 11,321.18 வழங்க வேண்டும். பிடித்தங்களுக்கு உரிய ஆவணம் வழங்க வேண்டும்.

    இதிலும் ஒப்பந்த தாரர் பங்களிப்புத் தொகை, பணியாளர்கள் கணக்கில் இருந்தே செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு பணியாளரிடம் இருந்தும் ஏறத்தாழ 3 ஆயிரம் வரை குறைகிறது.ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ளப்படும் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் வழங்கும் கூலியை ஒப்பிடுகையில் திருப்பூரில் மிகவும் மோசமான நிலை உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் ரூ. 707 வழங்கி, பி.எப்., பிடித்தம் போக ரூ. 622 , திருச்சியில் 1,344 பேருக்கு தினக்கூலி ரூ. 575 , பிடித்தம் போக ரூ. 506 வழங்குகின்றனர்.கலெக்டர் நிர்ணயித்த அடிப்படையில் கூலி உயர்த்தி வழங்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்க வேண்டும். ஒப்பந்த முறை கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 5-ந்தேதிக்குள் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் பூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்களை ஒன்று திரட்டி இன்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நடராஜ், புறநகர் மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எதிர்வரும் மாதங்களில் 5-ந்தேதிக்குள் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்.
    • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    உடுமலை :

    தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம், ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மையில், குப்பை தரம் பிரித்தல், 'என் குப்பை என் பொறுப்பு' என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மாணவர்கள் வழியாக விழிப்புணர்வு, கூட்டு துப்புரவுப்பணி மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் நகரங்களிலுள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்தல், மரக்கன்று நடுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதன் அடிப்படையில், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் உடுமலை நகராட்சியுடன் இணைந்து செயல்பட்ட தன்னார்வலர்கள், சங்கங்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நகராட்சி தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன், கமிஷனர் சத்யநாதன், நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம் தலைமையில், மருத்துவ குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டனர்.

    • டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும். தற்காலிக ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத் தொடா்ந்து சங்கத்தின் புதிய தலைவராக பி .சுப்பிரமணியம், செயலாளராக லோகநாதன், பொருளாளராக விஜயராணி, துணைத் தலைவராக ஆனந்தன், துணைச் செயலாளராக வீரன் உள்பட 16 போ் கொண்ட கமிட்டி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

    சிஐடியூ. மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகி பழனிசாமி, விவசாய சங்க மாவட்ட நிா்வாகிகள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் இயங்கி வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் நிறுவனர் நெல்சன், உடுமலை நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

    உடுமலை நகராட்சி தலைவர் மத்தீன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன், நகர்நல அலுவலர் கௌரி சரவணன் ,சுகாதார ஆய்வாளர் செல்வம், வியாபாரிகள் சங்கதுணைசெயலாளர் தங்கமணி, சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.

    ×