என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Education"

    • பொருத்தமற்ற பாடப் பகுதிகளை நீக்கி சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை 2017-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள்தான் தற்போது வரையில் நடைமுறையில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் புத்தகங்களில் பாடப் பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் மாணவ- மாணவிகள் படிப்பதில் சிரமத்தை சந்திப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் கல்வித்துறை வசம் வந்து சேர்ந்தன. இதனையடுத்து அந்த பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியது.

    குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகளை குறைக்கவும், பொருத்தமற்ற பாடப் பகுதிகளை நீக்கி சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதன் அடிப்படையில் அதற்கான வல்லுனர்கள், பாடநூல் உருவாக்க குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு 1, 2-ம் வகுப்பு பாடநூல்களில் உரிய திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு பாடநூல்களில் அதிக பக்கங்கள் கொண்ட பாடப்பகுதிகளை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதேபோல், 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 இயல்களை 8 ஆகவும், 9, 10-ம் வகுப்பு பாடநூல்களில் 9 இயல்களை 7 ஆகவும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 இயல்களை 6 ஆகவும் குறைத்து இருக்கின்றனர்.

    அவ்வாறு சீரமைக்கப்பட்ட 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 2025-26-ம் கல்வியாண்டு முதல் இந்த பாடப் புத்தகங்கள் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள்.
    • தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • அரசுப் பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • என்.எஸ்.எஸ். திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு (என்.எஸ்.எஸ்) மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் என்.எஸ்.எஸ். நிதியை பள்ளிகளின் வங்கிக்கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    இதற்காக அரசு பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, என்.எஸ்.எஸ். திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு ஜன.20-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும், இதுசார்ந்து மறு உத்தரவு வரும் வரை என்.எஸ்.எஸ். வங்கிக் கணக்குகளை எந்தக்காரணம் கொண்டும் முடிக்கக் கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் திரையிட வேண்டும்.
    • ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.

    சென்னை:

    அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த மாதம் '101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) திரையிட வேண்டும்.

    இந்த திரைப்படம் கிராமத்தில் வாழும் 12 வயது சிறுவனை பற்றிய கதை ஆகும். 60-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை கலைஞர் மற்றும் சிறந்த அறிமுக திரைப்படத்துக்கான விருதையும் இந்த படம் வென்றிருக்கிறது.

    ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும். அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறார் திரைப்படத்தை பார்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    • நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 6-ந் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி முடிகிறது.

    அதன்பிறகு 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி ஏப்ரல் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    தற்போது நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் தகுந்த பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பல்வேறு மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்த வைரஸ் காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும், குழந்தைகளையும் அதிகளவில் தாக்கும் என்பதால் தெலுங்கானா மாநிலத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்குகின்றன.

    எனவே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாலும், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்திருப்பதாலும் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வதாலும், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது. 24-ந் தேதி தொடங்க இருந்த தேர்வை ஒருவாரத்துக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 17-ந் தேதியே தொடங்கி 24-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது.
    • ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியை பொறுத்தவரையில் 15 ஆயிரத்து 566 பேரும், தனித் தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

    அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் தேர்வை ஆர்வமுடன் எழுதினார்கள்.

    இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.17 முதல் ஏப்.21ம் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை முடிக்க வேண்டும்.

    4 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 முதல் ஏப். 28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரும் 10ம் தேதி முதல் 79 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
    • விடை குறிப்பு கசிந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் விடை குறிப்பு சமூக வலைதளத்தில் கசிந்ததால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

    வரும் 10ம் தேதி முதல் 79 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட பிளஸ்-2 விடை குறிப்பு சமூக வலைதளங்களில் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் விடை குறிப்பு கசிந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • 2022-23-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன
    • பொதுத் தேர்வில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் மொழித் தாள் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்த பொதுத் தேர்வில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் மொழித் தாள் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதாதது ஏன்? காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் பேசப்பட்டது.

    கல்வித்துறை இதில் தீவிரம் காட்டிய நிலையில், அதில் பெரும்பாலான மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராதவர்கள் என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் கல்வித்துறைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வரும் கல்வியாண்டிலும் இதுபோன்ற பிரச்சினை வரக்கூடாது. அதில் சரியான கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்ட கல்வித்துறை இப்போதே அதற்கான முயற்சியில் களம் இறங்கி இருக்கிறது. அதன்படி, நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளின் விவரங்களை பள்ளிகளிடம் இருந்து பெற்று வருகிற 2-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • ஆசிரியர் பெருமக்களிடம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கல்வி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் விருப்ப மில்லாமல் புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் கல்வித் திட்டத்தை அமல்படுத்த அவசரகதியில் தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பள்ளி கல்வித்துறை செயல் கண்டனத்துக்குரியது.

    புதுவை அரசானது தற்போது தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி வருகிறது திடீரென மத்திய அரசின் பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவெடுத்து அதற்கான பணியினை அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் ஈடுபடுத்தி செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக மத்திய அரசின் பாடத்திட்டத் திற்கு மாறுவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படு த்துவது மிகுந்த கண்டனத்து க்குரியது. மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறுவதற்கு பதிவு செய்திட ஓரிரு தினங்களை கொடுத்து கால அவகாசம் கொடுக்காமல் அவசரகதியாய் ஒரு குழு கூட்டம் மட்டும் நடத்தி தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

    இது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களிடம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.கல்வி அமைச்சரை திருப்தி ப்படுத்து வதற்காக இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

    கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது பள்ளிக் கல்வித் துறையின் வேலை. ஒரு குறுகிய அதிகாரம் கொண்ட தலைமை ஆசிரி யர்களை நெருக்கடி கொடுத்து இயக்குனர் செயல்பாடு அமைந்து ள்ளதாக தெரிகிறது. எந்தவிதமான தரவுகள் இல்லாமல் மத்திய அரசின் பள்ளி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டுக்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
    • அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணி நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் 5.45 மணி வரையில் உள்ளதால், பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாகக் குறைபாடு ஏற்படுகிறது.

    பள்ளிகளின் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்படவேண்டிய அவசியம் மற்றும் தேவை எழுகிறது.

    மேலும், அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டுக்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. எனவே, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைக்கப்படுகிறது.

    கோடை விடுமுறை, பள்ளி விடுமுறை நாள்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது.
    • இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார்.

    சென்னை:

    மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி சார்ந்த தேவைகளை பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவியில் இருப்பவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர் அரசிடம் தெரிவிப்பார். பின்னர் அது நிவர்த்தி செய்யப்பட்டு வந்தது.

    100 ஆண்டுகளுக்கு மேலான வரலாறை கொண்டது இந்த இயக்குனர் பதவி. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவி உருவாக்கப்பட்டது, இயக்குனர் பதவியை அகற்றுவதற்காக தான் என்று அப்போது பேசப்பட்டது.

    அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பில் இருப்பவர், அனைத்து பணிகளையும் கவனிப்பார் என்று கூறப்பட்டது.

    இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார். இந்த பதவியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தகுமார் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் (மே) பள்ளிக்கல்வி ஆணையராக இருந்த நந்தகுமாரை, மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த அறிவிப்பில் பள்ளிக்கல்வி ஆணையராக யாரையும் நியமிக்காமல் விட்டுவிட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பதவி கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக பேசப்பட்டது.

    இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில் சமீபத்தில் நிருபர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்பும்போது, 'இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நாங்கள் கொடுக்கும் பட்டியலில் அவர் யார் ஒருவரை தேர்வு செய்கிறாரோ? அவர்களை அறிவிப்போம்' என்றார்.

    அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனராக அறிவொளியை தேர்வு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அறிவொளி இதற்கு முன்பு தொடக்க கல்வி இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட பள்ளிக் கல்வி இயக்குனர் பதவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைக்கு வந்து உள்ளது.

    அத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கூடுதல் இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் மு.பழனிச்சாமி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராகவும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் பெ.குப்புசாமி, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    • மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது.
    • பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களைய வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர்களை இழிவாகப் பேசுவது, அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது, அதையும் உரிய நேரத்தில் கொடுக்காதது, கூடுதல் பளுவினை அவர்களுக்கு அளிப்பது, காலிப் பணியிடங்களை நிரப்பாதது போன்ற அவல நிலை தான் கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

    அரசுப் பள்ளிகளில் மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார் தற்போது வந்துள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது; இதனை ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று ஓர் உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

    பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களையும் வகையில், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை உடனுக்குடன் வழங்கவும், காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பவும், பதவி உயர்வுகளை உடனுக்குடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×