என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvaperunthakai"

    • பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை.
    • தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற தமிழக ஆளுநர் முன்வர வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்களில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.

    இந்நிலையில் சென்னை பல்கலைக் கழகத்திற்கு கடந்த ஓராண்டு காலமாக துணை வேந்தர் பதவி நியமிக்க முடியாமல் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

    இதனால், 55,000 கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கடந்த ஏப்ரல் 2023 இல் தேர்வான பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் காத்துக் கொண்டிருக்கிற அவல நிலை உள்ளது.

    சென்னை பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க மூன்று உறுப்பினர் தேடுதல் குழுவை மாநில அரசு நியமித்தது. அதற்கு போட்டியாக தமிழக ஆளுநர் நான்கு உறுப்பினர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்திருக்கிறார்.

    இந்நிலையில் தமிழக ஆளுநரின் சட்டவிரோத போக்கு காரணமாக சென்னை பல்கலைக் கழக நிர்வாகம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள், பொருளாதார பிரச்சினைகள், ஆராய்ச்சி குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை.

    இந்நிலையில் பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு அறிவிப்பாணைகளை வெளியிட்டது.

    இதற்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என். ரவி இதற்காக தனி தேடுதல் குழுவை அமைத்து அறிவிப்பாணைகளை வெளியிட்டுள்ளார்.

    இத்தகைய மோதல் போக்கு காரணமாக துணை வேந்தர் நியமனம், பல்கலைக் கழக நிர்வாகம் ஆகிய விவகாரங்களில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    எனவே, சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்குலைக்கிற ஆளுநர், மேற்கு வங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி துணை வேந்தர்கள் நியமனத்தில் தலையிடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டு பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனத்திற்கு தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற தமிழக ஆளுநர் முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில் அதற்கான விளைவுகளை மேற்கு வங்க ஆளுநர் சந்தித்ததைப் போல தமிழக கவர்னரும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
    • டிடி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் கண்டனம் எழுந்தது.

    சென்னை தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களை ஒட்டி ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கெனவே பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிடி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் கண்டனம் எழுந்தது.

    தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் டிடி தமிழ் நிகழ்ச்சியில் இந்தி மாதம் கொண்டாட்டங்கள் நடந்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின் வாயிலாக நடத்த திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, இது போன்று மக்கள் விரோத போக்கை ஒரு நாளும் தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    ஒன்றிய பாஜக அரசின் இந்தி மாத கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வருகிறார்கள்.
    • உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி மாதந் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை வானொலி மூலம் மன்-கி-பாத்-மனதில் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசும் போது, 'உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்தில் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமை என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்".

    இதைப்போல கடந்த காலங்களில் திருவள்ளுவர், மகாகவி பாரதியார் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இதன்மூலம் அனைத்து மொழிகளையும் சமமாக கருதுவதாக ஒரு நாடகத்தை நீண்டகாலமாக அரங்கேற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாகத் தான் நேற்றைய பேச்சும் அமைந்திருக்கிறது.

    மோடியையும், பா.ஜ.க. வையும் தமிழக மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நிராகரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வருகிறார்கள். எனவே, பிரதமர் மோடியின் கபட நாடகத்தை தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×