search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shin Yan-6"

    • இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது.
    • சீனக் கப்பலை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் தேதிகளை முதலில் அறிவிக்க வேண்டும் என இலங்கை உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவில் இருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன.

    கடந்த ஆகஸ்டு மாதம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத் தில் 2 நாட்கள் நங்கூரமிட்டு நிறுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், சீனாவின் மற்றொரு கப்பலான ஷின் யான்-6 இலங்கைக்கு வர உள்ளதாகவும், இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இலங்கையில் உள்ள ருஹுனு பல்கலைகழக நீரியியல் துறை கடல் சார்ந்த ஆய்வினை சீன கப்பல் உதவியுடன் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்காகவே சீன உளவு கப்பல் இலங்கை வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

    சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிகஅருகில் உள்ள இந்தியாவின் ஸ்ரீ ஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது.

    இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவி உள்ளது

    இந்த சூழலில் சீன கப்பலின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீன உளவு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    சீனக் கப்பலை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் தேதிகளை முதலில் அறிவிக்க வேண்டும் என இலங்கை உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    இந்நிலையில் சீன ஆராய்ச்சிக் கப்பலுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருந்த ருஹுனு பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் மற்றொரு பேராசிரியர் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் இருந்து ருஹுனு பல்கலைக்கழகம் விலகி உள்ளது.

    இதன் காரணமாக சீன உளவு கப்பல் இலங்கை வர வாய்ப்பு இல்லை எனவும், அரசு அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்றும் இலங்கை அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    ×