என் மலர்
நீங்கள் தேடியது "Skin Problem"
- ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் சராசரியாக அருந்த வேண்டும்.
- பச்சைக் காய்கறிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
டீன் ஏஜ் என்பது பல்வேறு ஹார்மோன் மாற்றங்களை கடந்து வருகிற பருவம். நம்முடைய உடலில் மட்டுமல்லாது, தோற்றத்திலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பருவம். சிலருக்கு பருக்கள் நிறைய வரும். சிலருக்கு வேறு சில சருமப் பிரச்சனைகள் உண்டாகும். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்த்து, சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள என்ன மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
* ஆழ்ந்த உறக்கம்
நல்ல ஆரோக்கியமான சருமத்திற்கு நீங்கள் இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வது அவசியம். நல்ல தரமான தூக்கம் உங்களுக்கு முகப்பொலிவினைக் கொடுக்கும். அதேசமயம் அதிகாலையில் சீக்கிரமாக எழுவதும் அவசியம். ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியம் என்பது நாம் அறிந்ததே. இரவு நேரத்தில் தேவையில்லாமல் கண் விழித்து சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு நிம்மதியான உறக்கத்தை பெற்றால் உங்கள் சருமத்திற்கு எந்த விதமான கேடும் வராது.
* தண்ணீரும், முகப்பருவும்
ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் சராசரியாக அருந்த வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் உடலிலுள்ள அசுத்தங்களை சுத்திகரித்து வெளியேற்றுகிறது. அதனால் சரும அழுக்குகளும் வெளியேறி முகம் பொலிவாகக் காட்சியளிக்கும். போதுமான அளவு தண்ணீர் அருந்தாதபோது நமது உடலில் உள்ள அசுத்தங்கள் வெளியேறாமல் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
* சன் ஸ்கிரீன்
வெயில் காலம் மட்டுமல்ல, எல்லா காலத்துக்கும் சன் ஸ்கிரீன் மிக அவசியம். வீட்டை விட்டு வெளியே சென்றாலே மறக்காமல் செய்யக்கூடிய ஒரு விஷயம், சன் ஸ்கிரீனை உங்களுடன் எடுத்துச் செல்வதுதான். பருவ நிலைகளுக்கு ஏற்ப நல்ல தரமான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்தத் தொடங்குங்கள். இது சூரிய வெப்பத்தில் இருந்து மட்டுமல்ல, காற்று, மாசுக்கள் போன்றவற்றில் இருந்தும் உங்களுடைய சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
* ஆரோக்கிய டயட்
பச்சைக் காய்கறிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சருமம் வறண்டு போகும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே இதுபோன்ற காலகட்டங்களில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவை நீரேற்றத்துடன் வைத்திருக்கச் செய்வதோடு, சருமத்திற்கு கூடுதல் பொலிவும் சேர்க்கும்.
அதேபோல சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், சோடா ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, இயற்கையாக நமக்குக் கிடைக்கும் பழங்களை அப்படியே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
காரணம்..?
டீன் ஏஜ் காலகட்டங்களில் இளைஞர்களுக்கு வரும் பருக்கள் மற்றும் சருமத் தடிப்புகள், கருந்திட்டுக்கள் போன்றவை நீண்ட நாட்கள் வரை சருமத்தில் அப்படியே நிலைத்திருக்கும். அந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு, சருமப் பிரச்சனைகளை வரும் முன்பே தடுப்பது தான் சிறந்த வழியாக இருக்கும்.
- கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
- புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.
கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.
கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.
அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.
அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.
சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.
கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.
இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.
இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.
கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.
மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.
- முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகள் ஏற்படும்.
- பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள்.
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு சரியான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள் குறித்தும், எப்படி முகம் கழுவ வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.
சூடான நீரை பயன்படுத்துதல்:
சூடான நீரை கொண்டு ஒருபோதும் முகம் கழுவக்கூடாது. வெயில் காலத்தில் குழாயில் இருந்து வரும் சூடான நீரும் முகம் கழுவுவதற்கு ஏற்றதல்ல. அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசை தன்மையை அகற்றி, வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவுவதுதான் சரியானது.
ஈரப்பதமான துடைப்பான் பயன்படுத்துதல்:
`வெட் வைப்ஸ்' எனப்படும் ஈரப்பதமான துடைப்பான்களில் பெரும்பாலும் ரசாயனங்கள் கலந்திருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு அவற்றை பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவை தற்காலிகமாக முகத்தை சுத்தம் செய்தாலும், சருமத்தில் படிந்திருக்கும் கூடுதல் எண்ணெய் பசைத்தன்மை மற்றும் அழுக்கை முழுமையாக அகற்றாது. சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி சருமத்திற்கு அசவுகரியத்தை உண்டாக்கக்கூடும். அதனால் அவற்றை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.
சோப் உபயோகித்தல்:
தோல் வகைக்கு பொருத்தமான பொருட்களை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். கடினத்தன்மை கொண்ட சோப், கிளென்சரை பயன்படுத்துவது சருமத்தில் வறட்சி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். சருமத்தின் தன்மைக்கு ஏற்ற பேஸ்வாஷை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.
அழுக்கு துண்டு பயன்படுத்துதல்:
முகத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்யவேண்டும். அழுக்கான கைகளை கொண்டு முகத்தை கழுவுவது, அழுக்கு துண்டை கொண்டு முகம் துடைப்பது சருமத்தில் பாக்டீரியா, அழுக்கு படிவதற்கும், சரும நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.
சருமத்திற்கு அழுத்தம் கொடுப்பது:
கைகளை கொண்டு சருமத்தை அழுத்தி தேய்ப்பது, துணியை கொண்டு முகத்தை அழுத்தமாக துடைப்பது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகத்தை கழுவும்போது உள்ளங்கைகள் அல்லது விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்வது நல்லது.
இறந்த செல்களை அகற்றுதல்:
குறிப்பிட்ட கால இடைவெளியில் இறந்த சரும செல்களை நீக்குவது முக்கியமானது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். இறந்த செல்களை நீக்குவதற்கு தோல் வகைக்கு ஏற்ற மென்மையான எக்ஸ்போலியண்டை தேர்வு செய்வது நல்லது.
எத்தனை முறை முகம் கழுவலாம்?
காலையில் ஒருமுறை, இரவில் ஒருமுறை முகத்தை சுத்தம் செய்யலாம். வெளியே செல்பவராக இருந்தால் சுற்றுப்புற மாசுபாடால் முகத்தில் படியும் அழுக்கு மற்றும் வியர்வையை அகற்ற கூடுதலாக ஒருமுறை முகம் கழுவலாம். எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவும்போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்கக்கூடும். எனவே சரும நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப செயல்படுவது சிறந்தது.
- மூலிகை குளியல் பொடி உங்களை புத்துணர்வாகவும் வைக்க உதவும்.
- மனதிற்கும் சருமத்திற்கும் குளிர்ச்சி தரும்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும், முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மனமும் உற்சாகமடையும். மனதிற்கும் சருமத்திற்கும் குளிர்ச்சி தரும் வகையில் மூலிகைகளால் செய்யப்பட்ட `மூலிகை குளியல் பொடி' உங்களை புத்துணர்வாகவும் வைக்க உதவும்.
சரும பிரச்சனைகள்:
நாம் வாழும் இந்த அவசர உலகத்தில் யாருக்கும் தன்னுடைய உடல் நலனை பற்றியும் உடல் அழகு பற்றியும் சிறிது கூட கவலை கிடையாது. குறிப்பாக பெண்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய பிரச்சனை சருமப்பிரச்சனை. சரும தொந்தரவுகள், சரும வறட்சி என்று பல பிரச்சனைகள் எழுகிறது. இதற்கு காரணம் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயற்கை சாதனங்கள் தான். அதனை தவிர்த்து நம் முன்னோர்கள் அளித்துள்ள இயற்கையான மூலிகைகளை கொண்டு ஒரு அருமையான `மூலிகை குளியல் பொடி' தயார் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள் -100 கிராம்
விரலி மஞ்சள் – 100 கிராம்
சந்தானம் – 100 கிராம்
கோரைக்கிழங்கு பொடி -100 கிராம்
பாசிப்பயிறு -100 கிராம்
இவை அனைத்தையும் ஒரு நாள் நிழலில் காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை தினம் சோப்பு மற்றும் லோஷன் பயன்படுத்துவதற்கு பதில் இந்த மூலிகை பொடியை பயன்படுத்தலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சியாகவும், நறுமணம் தரக்கூடியதாகவும் இருக்கும்.
பயன்கள்:
இதன் மூலமாக சொறி, சிரங்கு, தேமல் போன்ற பல சருமப் பிரச்சனைகளில் இருந்து மீளலாம். இந்த பொடி எந்த ஒரு அலர்ஜியையும் ஏற்படுத்தாது. பிறந்த குழந்தை முதல் அனைவரும் கூட இதனை பயன்படுத்தலாம்.
மற்றொரு மூலிகை பொடி
மூலிகை குளியல் பொடி தயாரிக்க சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை, மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல், பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு ஆகிய பொருட்களை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.
தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவற்றை நீக்கும். அதுமட்டுமின்றி சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக இருக்கும், சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும்.
தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும், வரிகளும் மறைந்து போகும். வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறுமணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. மேலும் வெயிலினால் உண்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.
- இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம்.
- சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம்.
கொய்யா பழத்தை போலவே அதன் இலைகளும் உடல் நலனை பாதுகாப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அதுபற்றி பார்ப்போம்.
* சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து சரும பாதிப்புக்குள்ளான இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
* இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைகளுக்கு உண்டு. கொய்யா இலைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.
* கோடை காலங்களில் சருமம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். கொய்யா இலைகளை பயன்படுத்தி கருமை நிற முகத்தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
* கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சினையும் எட்டிப்பார்க்காது. சரும சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
* அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவி வரலாம். இவ்வாறு தினமும் செய்துவந்தால் சருமத்தில் அழுக்கு படிவதை தவிர்த்துவிடலாம். சருமத்திற்கு கூடுதல் அழகும் சேர்க்கலாம்.
* பொடுகு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிடலாம்.
* எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.
- மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும்.
- சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள்.
வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள்.
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.
மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.
இரவு நீண்ட நேரம் படிப்பதாலும், வேலை செய்வதாலும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றும். வாழைப்பழத்தோளை, கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தின்மீது பூசிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள். கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். மேலும், சருமத்தில் சுருக்கங்கள் வாராமல் தடுத்து, வயது முதிர்வை கட்டுக்குள் வைக்கும்.
வாழைப்பழத் தோளில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஏவில் உள்ள கரோடினோய்ட் வைட்டமின், தொற்று உள்ள இடத்தை சரி செய்து, பருக்களை குணப்படுத்தும். நன்றாக பழுத்த வாழைப்பழத் தோளை நறுக்கி, முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில், மெதுவாக தேய்க்கவும். பத்து நிமிடம் மசாஜ் செய்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கப்போகிறீர்கள் என்றால், நாள் முழுவதும் கூட கழுவாமல் அப்படியே விட்டுவிடலாம். இரவு தூங்குவதற்கு முன் கூட இப்படி செய்து தூங்கி விடலாம். நீண்ட நேரம் சருமத்தில் (skin) இருந்து கொண்டு நன்றாக வேலை செய்யும்.
- அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
- வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தியே நாம் அக்குள் கருமையை நீக்க முடியும்.
பெண்கள் பெரும்பாலும் வெளிப்புற அழகிற்கு கவனம் செலுத்தும் அளவிற்கு புறஅழகில் கவனம் செல்லுவதில்லை. குறிப்பாக அக்குள்களில் படிந்திருக்கும் கருமையை நீக்குவது அவசியம். அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லை என்றால் மிகவும் கருப்பாக மாறிவிடும். வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தியே நாம் அக்குள் கருமையை நீக்க முடியும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பேக்கிங் சோடா : உங்கள் கைகளின் அக்குள்களில் உள்ள கருமையை நீக்க பேக்கிங் சோடா உதவும். இதற்கு நீங்கள் பேக்கிங் சோடாவுடன், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை அக்குள்களில் தடவி உலர விட்டு, ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு : எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே வாரம் 4 நாட்கள் அரை எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை கடலை மாவில் தொட்டு நன்கு ஸ்க்ரப் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறைந்துவிடும்.
உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. உருளைக்கிழங்கை வெட்டி சாறு எடுத்து அதனை அக்குள் கருமை பகுதியில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் நீங்குவதை கண்கூட காண்பீர்கள்.
கற்றாழை : கற்றாலையின் ஜெல்லை எடுத்து அக்குளில் தடவி மசாஜ் செய்யுங்கள். தினமும் 15 நிமிடங்கள் இதனை செய்து வந்தால் கருமை மறையும்.
தயிர் : தயிர் அக்குள் கருமையை நீக்க உதவும் முதன்மையான பொருளாகும். தயிருடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சிறிது கடலை மாவு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது.
- உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடியதாக சீரம் உள்ளது.
சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் அழகு பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணெய் போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை மிருதுவாக்கும்.
சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பாக உள்ளது.
மாய்ஸ்சரைசருக்கு முன்னதாக பயன்படுத்தப்படும் சீரமானது, பல சிறிய மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதால் எளிதில் தோலின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவி, சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியாக வழங்குகிறது.
இதனால் உங்கள் சருமத்தை பிரகாசமாக்குவதோடு, கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், பருக்கள், கறைகள், திறந்த துளைகள், சுருக்கங்கள், கோடுகள் போன்ற சரும பிரச்சனைகளையும் குறைக்கிறது. இப்படி பல நன்மைகளை உங்கள் சருமத்திற்கு தரக்கூடியதாக சீரம் உள்ளது.
நாம் எந்த வகையான சரும பராமரிப்பு அல்லது அழகு சாதன பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் உங்களுடைய சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.
வறண்ட சருமம், எண்ணெய் சருமம், உணர்திறன் மிக்க சருமம் என ஒவ்வொருவரது சருமம் வெவ்வேறு வகையானது.
எண்ணெய் சருமம் கொண்ட நபர்கள் முகப்பரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், சாலிசிலிக் அமிலம், ரெட்டினோல் அல்லது நியாசினமைடு கொண்ட சீரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ஹைலூரோனிக் அமிலம் அடங்கிய சீரம் சிறப்பானது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. சாதாரண சரும வகையைக் கொண்டவர்களுக்கு வைட்டமின் "சி" அல்லது "ஹைலூரோனிக்" அமிலம் அடங்கிய சீரம் சிறந்ததாகும்.
சருமத்தின் வகை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அதனை பயன்படுத்துபவரின் வயதும் சரும பராமரிப்பு சாதனங்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்குவகிக்கிறது.
சீரம் பொதுவாக வயதான தோற்றத்தை குறைக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் டீனேஜராக இருந்தால், சரும பராமரிப்பிற்கு க்ளென்சர், மாய்ஸ்சரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் போன்றவற்றைப் பயன்படுத்தினாலே போதும்.
இருபது வயதை தொடப்போகும் பெண்கள், "நியாசினமைடு" அல்லது "ஹைலூரோனிக்" அமிலம் கலந்த சீரத்தை பயன்படுத்தலாம். இருபது வயதிற்கு மேல் மற்றும் முப்பது அல்லது நாற்பது வயதானவர்கள் "ரெட்டினோல்" அடங்கிய சீரம் வகைகளை தேர்வு செய்வது உங்கள் வயதான தோற்றத்தை மாற்ற உதவும்.
சருமத்தின் பிரச்சனைகளை பொறுத்து தான் பராமரிப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக சீரற்ற சரும நிறம், கரும்புள்ளி, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் "ஆல்ஃபா-ஹைட்ராக்ஸி" அமிலங்களான கிளைகோலிக் அமிலம் அல்லது லாக்டிக் அமிலம், அசெலாயிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் கோஜிக் அமிலம் ஆகியவை அடங்கிய சீரம் வகைகளை பயன்படுத்தலாம்.
வயதான தோற்றங்களை மறக்க விரும்புவோருக்கு ரெட்டினோல் சீரம் சிறந்த தேர்வாகும். கரும்புள்ளிகள் அல்லது வெண் புள்ளிகளைக் கொண்ட சருமத்திற்கு ரெட்டினோல் அல்லது சாலிசிலிக் அமிலம் நிறைந்த சீரம் சிறப்பான பலனளிக்கக்கூடும்.
மேற்கூறிய சரும பிரச்சனைகள் அனைத்தும் இருந்தால், ஒரே நேரத்தில் அனைத்து விதமான சீரத்தையும் பயன்படுத்த வேண்டாம். அது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக பின்விளைவுகளை பெரிதாக்கக்கூடும்.
எனவே வயது, சரும வகை, சரும பிரச்சனை ஆகியவற்றை பொருத்து சரியான மூலப்பொருட்களைக் கொண்ட சீரத்தை தேர்வு செய்யுங்கள். அதேபோல் சரும பிரச்சனைகள் சம்பந்தமான பராமரிப்பு சாதனம் அல்லது சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு நாம் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
- எல்லா நேரமும் சன்ஸ்கிரீனை குறைவான அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.
- சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.
சூரியனிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கும், உடல் பாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை தவிர்க்க சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது அவசியம். ஏனெனில் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குவது முன்கூட்டியே வயதான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய ஆபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு சன்ஸ்கிரீன் உபயோகமாக இருக்கும். ஆனால் எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளாது.
அது சிலருக்கு சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சன்ஸ்கிரீனில் சேர்க்கப்படும் ரசாயனக்கலவைதான் பக்கவிளைவுகளுக்கு காரணமாக அமையும். புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தோல் பகுதியை சுற்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது மிருதுதன்மை வாய்ந்த சருமம் கொண்டவர்களை பாதிக்கும். ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.
* எல்லா நேரமும் சன்ஸ்கிரீனை குறைவான அளவில்தான் உபயோகிக்க வேண்டும். குறைந்த அளவைக்கொண்டே வெயில் படும் அனைத்து பாகங்களிலும் தடவிவிட வேண்டும்.
* சன்ஸ்கிரீனை பூசிக்கொண்ட உடனே வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும்.
* உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியாகிக்கொண்டிருந்தால் ஐந்து மணி நேரம் கழித்து மீண்டும் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.
* முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். ஏனெனில் அது முகப்பருவின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். அவர்கள் எண்ணெய் பசை இல்லாத அழகு சாதன பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அதுபோல் உடலில் காயம், தடிப்பு உள்ளிட்ட சரும பிரச்சினைகள் இருந்தாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கக்கூடாது.
* சன்ஸ்கிரீனில் இருக்கும் ரசாயனங்கள் சிலருடைய சருமத்தை கடுமையாக பாதிக்கும். சருமம் சிவத்தல், வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வாசனை திரவியங்களை உள்ளடக்கிய சன்ஸ்கிரீன்கள் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்து வரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.
* கண்களுக்கு அருகே சன்ஸ்கிரீனை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்களில் எரிச்சல், அரிப்பு, வெளிச்சத்தை பார்த்தால் கண் கூச்சம் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீனில் ரசாயனத்தன்மை அதிகம் இருந்தால் கண் பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
* சன்ஸ்கிரீனில் உள்ள சில பொருட்கள் மார்பக செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகளின் சருமம் மிருதுவானது என்பதால் சன்ஸ்கிரீன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் குழந்தைகளுக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
* சன்ஸ்கிரீனை பயன்படுத்தியதும் சருமத்தில் கொப்பளங்கள், வலி, தடிப்புகள் போன்ற அறிகுறிகள் சிலருக்கு தோன்றும். அவர்கள் சன்ஸ்கீரினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது.
சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல்வேறு வழிகளில் தோல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இது பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு சில பொருட்களில் ஒன்றாகும். இதை பயன்படுத்துவதால் முகத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
* கிரீன் டீயுடன் சீனி மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவடைந்துக் காணப்படும்.
* கிரின் டீ தயாரித்து அந்த கலவையை எடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, கட்டியானதும் முகத்தில் பூசி வரவேண்டும். இதை தினமும் செய்தால் நல்லது.
* கடலை மாவு, கிரீன் டீ மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசி, காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக் முகப்பருக்கள் வருவதை தடுக்க உதவும்.
* இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கிரீன் டீ பையை தண்ணீரில் ஊற வைத்து எடுத்த பின் கண்களுக்கு மேல் வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.
* சூடான தண்ணீரில் கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.
* கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.
கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.
இறந்த செல்களை நீக்குதல்:
மாதம் ஒருமுறை, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் போன்றவை வராமல் இருக்கும். வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு இறந்த செல்களை நீக்கலாம்.
சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சரும வறட்சியை நீக்கும். சீத்தாப்பழத் தோலை முகத்தில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு நீரைக்கொண்டு முகம் கழுவுங்கள். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் இறந்த செல்கள் நீங்கும். சீத்தாப் பழச்சாற்றை வாரம் 3 நாட்கள் பருகி வந்தால் சரும பிரச்சினைகள் ஏற்படாது.
கூந்தல் அழகிற்கு:
தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தும்போது ‘கண்டிஷனிங்’ செய்வது முக்கியமானது. குறிப்பாக ‘முடி பிளவு’ உடையவர்கள் கண்டிஷனிங் செய்துவந்தால் அந்தப் பிரச்சினை நீங்கும். வறண்ட கூந்தல் உடையவர்கள் ‘கிரீம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும். சுருட்டை முடி கொண்டவர்கள் ‘ஜெல்’ வகை கண்டிஷனரை தேர்வு செய்யலாம்.
நேரான முடி கொண்டவர்கள் ‘கிரீம்’ அல்லது ‘போம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். இயற்கையான முறையில், சாதம் வடித்த கஞ்சி, மருதாணி, செம்பருத்தி போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
நகங்கள் பராமரிப்பு:
நகங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் தொற்று ஏற்படாது. வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு, எலுமிச்சம் பழச்சாறு போன்றவை கலந்து, அதில் கைவிரல் நகங்களை சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.
வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்டக்கொழுப்பு கரையும். சருமம் பொலிவாகும். ரசாயனப்பொருட்கள் நிறைந்த கிரீம்கள், முகப் பூச்சுகளை அதிகம் பயன்படுத்தினால் சருமம் பாதிக்கப்படும். கூந்தல் அழகு பெற இயற்கையான முறையில் தயார் செய்த கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
காற்றாழை, புற ஊதாக்கதிர்களை பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைத்திருப்பதற்கு உதவும். இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் முகத்தில் படர்ந்திருக்கும் கருமையை நீக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சம அளவு தயிர் கலநது முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும். இந்த கலவையை வெயில் பட்டு கருத்த இடங்களில் பூசலாம்.
2 டீஸ்பூன் முட்டைகோஸ் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகததில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவி விடலாம். இதன் மூலம் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கலாம். மென்மையான பளபளக்கான சருமத்தை பெறலாம்.
கால் தேக்கரண்டி கசகசா, 3 கிராம்பு, அரை அரை ஜாதிக்காய் இந்த மூன்றையும் சிறிதளவு பால் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த விழுதை முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களின் மீது பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளக்கும்.
குப்பைமேனி இலை சாறு 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி, ரோஜா பன்னீர் அரை தேக்கரண்டி, கற்றாழை சாறு 1 தேக்கரண்டி தேன் கால் தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊறவைத்த பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கும். முகப்பருக்கள் உண்டாகாது. குப்பைமேனி சருமத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கி முகத்தை இளமையாக்கும். முகப்பருவால் ஏற்பட்ட தழும்புபளை நீக்கும். குப்பை மேனியை பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திப்பொடி செய்தோ பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளிலும் குப்பைமேனி பொடி கிடைக்கும்.