என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளி கத்திகுத்து"
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் திருநல்லூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் ராமராஜ் (வயது24). இவர் கோயமுத்தூரில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் தற்போது ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று மாலை ராமராஜ் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பாப்பாநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். சங்கரன்குடிகாடு பகுதி தரைப் பாலத்தில் சென்ற போது, வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டான திருநல்லூர் மேலத்தெரு கண்ணப்பன்(40) மற்றும் அவரது கார் டிரைவர் சங்கர் ஆகியோர் அங்கு மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ராமராஜை கைகாட்டி அழைத்துள்ளனர். ஆனால் இதை கவனிக்காமல் அவரும் கைகாட்டி விட்டு சென்று விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கண்ணப்பன், சங்கர் ஆகிய இருவரும் காரை எடுத்து சென்று ராமராஜை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தடுத்த ராம ராஜிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ராமராஜை அவரது நண்பர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து மருத்துவமனைக்கு சென்று ராமராஜிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.