search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104121"

    இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    இந்திய அணி இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி 2-வது இடத்தை பிடித்தது. 1987, 1996, 2015 ஆகியவற்றில் அரை இறுதியில் தோற்றது.

    12-வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. இந்திய அணிக்கு 3-வது உலகக்கோப்பை கிடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியை வைத்து சிறந்த அணியை (ஆல்டைம் பெஸ்ட் லெவன்) ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

    ஆல்டைம் உலக அணிக்கு கபில்தேவ் கேப்டனாக உள்ளார். டோனி துணை கேப்டனாக இருக்கிறார். 11 பேர் கொண்ட இந்த அணியில் விராட் கோலிக்கு இடமில்லை. அவர் 2 உலகக்கோப்பையில் ஆடியுள்ளார்.

    உலகக்கோப்பையில் இந்தியாவின் சிறந்த லெவன் வருமாறு:-

    1. தெண்டுல்கர்

    சச்சின் இல்லாத ஒரு இந்திய கனவு அணியை கற்பனை செய்ய முடியாது, 6 உலகக்கோப்பையில் (1992- 2011) விளையாடி 2278 ரன் (44 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 56.95 அதிகபட்சமாக 152 ரன் குவித்துள்ளார். 6 சதமும், 15 அரை சதமும் இதில் அடங்கும். உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்த சர்வதேச வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். 1996, 2003, 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்தார்.



    2.கங்குலி

    2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இவரும் சிறந்த தொடக்க வீரர் ஆவார். இலங்கைக்கு எதிராக 183 ரன் குவித்தது (1999) இன்றும் சாதனையாக இந்திய அணியில் உள்ளது. 3 உலகக்கோப்பை தொடரில் விளையாடி 1006 ரன் (21 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 55.88 ஆகும். 4 சதமும், 3 அரை சதமும் அடித்துள்ளார்.

    3. ராகுல் டிராவிட்

    3-வது வரிசையில் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை மேற்கொண்டவர். 1999 உலகக்கோப்பையில் ரன்களை குவித்தார். உலகக்கோப்பை தொடரில் 860 ரன் (21 இன்னிங்ஸ்) பெற்றார். இதில் 2 சதமும், 6 அரை சதமும் அடங்கும். சராசரி 61.42 ஆகும்.

    4. மொகீந்தர் அமர்நாத்

    1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை பெற்றார். திறமை வாய்ந்த ஆல்-ரவுண்டர். 254 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 21.16 ஆகும். 16 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    5. முகமது அசாருதீன்

    3 உலகக்கோப்பைக்கு கேப்டனாக பணியாற்றியவர். இதில் 1996-ல் இந்தியாவில் நடந்த போட்டியில் அணியை அரை இறுதிக்கு கொண்டு சென்றவர். மிடில் ஆர்டர் வரிசையில் அணிக்கு பலம் சேர்த்தவர். 1987-ல் இந்திய அணி அரை இறுதியில் நுழைய காரணமாக திகழ்ந்தார். 8 அரை சதத்துடன் உலகக்கோப்பையில் 826 ரன்கள் எடுத்துள்ளார்.

    6. யுவராஜ் சிங்

    சுழற்பந்து ஆல்-ரவுண்டர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. தொடர் நாயகன் விருதை பெற்றார். 2003 மற்றும் 2011 உலககோப்பையில் சில ஆட்டங்களில் அதிரடியான ஆட்டம் மிகவும் பலன் அளித்தது. 3 உலகக்கோப்பையில் விளையாடி 738 ரன் எடுத்து உள்ளார். சராசசி 52.71 ஆகும். 1 சதமும், 6 அரைசதமும் அடித்துள்ளார்.

    7.டோனி (துணைகேப்டன்)

    இந்திய ஒருநாள் போட்டியின் அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர். உலகின் சிறந்த கேப்டனில் ஒருவர். 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் உலககோப்பையை பெற்றுக்கொடுத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். 2015-ல் அணியை அரைஇறுதி வரை அழைத்து சென்றார். உலககோப்பை தொடரில் 507 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 42.25 ஆகும். 3 அரைசதம் அடங்கும். 27 கேட்ச் பிடித்துள்ளார். 5 ஸ்டம்பிங் செய்துள்ளார்.



    8. கபில்தேவ் (கேப்டன்)

    ஆல்-ரவுண்டர் திறமையில் இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ல் அப்போதைய ஜாம்பவான் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி உலககோப்பையை வென்று பெருமை சேர்த்தார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்து சிறந்த அதிரடியை வெளிப்படுத்தினார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவர் இறுதிப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்சை நீண்ட தூரம் ஓடிச்சென்று பிடித்த கேட்ச் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இன்றும் மறக்க இயலாத ஒன்றாகும். 669 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.16 ஆகும். 28 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    9. ஸ்ரீநாத்

    இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவர் 1992, 1996, 1999 மற்றும் 2003 ஆகிய உலககோப்பையில் ஆடி உள்ளார். 34 ஆட்டத்தில் 44 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 30 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாகும்.

    10. கும்ப்ளே

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீரர் கும்ப்ளே. 1996 உலககோப்பையில் இவரது பந்துவீச்சு மிகவும் அதிரடியான இருந்தது. அதிக விக்கெட்டுகளை சாய்த்தார். 31 விக்கெட்டுகளை உலகக்கோப்பையில் கைப்பற்றினார்.

    11. ஜாகீர்கான்

    இந்திய அணியின் சிறந்த இடதுகை வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் 2003 மற்றும் 2011 உலககோப்பையில் இவரது பங்களிப்பு சிறப்பானது. 23 ஆட்டத்தில் விளையாடி 44 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    12-வது வீரராக தேர்வான விராட் கோலி 2 உலககோப்பையில் விளையாடி 587 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், ஒரு அரைசதமும் அடங்கும்.
    டோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MSDhoni #KapilDev
    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய சேவைகளை செய்தவர் டோனி. அவரை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. அவர் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது. உடல் தகுதியை பொறுத்து அவர் முடிவு செய்ய வேண்டிய வி‌ஷயம்.

    ஆனால் டோனி அளவுக்கு நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை என்றே சொல்வேன். அவரை மதிக்க வேண்டும். அதோடு அவரை வாழ்த்தவும் வேண்டும்.

    டோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று நம்புகிறேன். தற்போது உள்ள இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. ஆனால் உலககோப்பையை வெல்வது எளிதல்ல. அணியாக ஆடவேண்டும். காயம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் நிச்சயம் இந்த அணி உலககோப்பையை வெல்லும்.

    உலககோப்பை போட்டிக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு குழுவினர் செய்து உள்ளனர். நாம் அதனை மதிக்க வேண்டும். ரி‌ஷப் பந்துக்கு பதிலாக அவர்கள் தினேஷ் கார்த்திக்கை எடுத்துள்ளார்கள். அப்படியென்றால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் தேர்வு குழுவினரின் சிறந்த பணியை நம்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய அணிக்கு கபில்தேவ் தான் முதல் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ம் ஆண்டு அவரது தலைமையிலான அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பையை வென்றது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது உலககோப்பையை பெற்றுக் கொடுத்தார். 2011-ம் ஆண்டு அவரது தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது.

    தற்போது விராட்கோலி தலைமையில் இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. டோனி ஆட்டத்தை நிறைவு செய்வதில் தொடர்ந்து வல்லவராக இருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    12-வது உலககோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. #MSDhoni #KapilDev
    கபீர்கான் இயக்கத்தில் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் 83 படத்திற்காக ஜீவாவுக்கு கபில்தேவ் பயிற்சியளித்து வருகிறார். #83TheMovie #Jiiva #Kabildev
    கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.

    இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா, கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிர்மானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    கபீர்கான் இயக்கும் இந்த படம் தோனி படத்தைபோல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட வேலைகள் தொடங்கி உள்ளன. லண்டனில் தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.



    நடிகர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கபில்தேவ் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

    மும்பையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கபில்தேவ் கலந்துகொண்ட கபில்தேவை நடிகர் ஜீவா சந்தித்து பேசினார். அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #83TheMovie #Jiiva #Kabildev

    டர்பன் டெஸ்டில் இலங்கைக்கு எதிரான நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய டேல் ஸ்டெயின் கபில் தேவ்-ஐ பின்னுக்குத் தள்ளியுள்ளார். #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது. 44 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து இருந்தது.



    தென்ஆப்பிரிக்க அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 48 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றி 9-வது இடத்தில் இருந்த கபில்தேவ் (434) சாதனையை முறியடித்தார்.

    92 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றிய அவர் 7-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இங்கிலாந்து வீரர் பிராட்டுடன் இணைந்து அந்த இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட் 126 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
    வீட்டில் கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த ஆம்பூர் சிறுமிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். #AmburGirl #KapilDev
    ஆம்பூர்:

    ஆம்பூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் சமூக நலத்திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார்.

    விழாவில் பேசிய கபில்தேவ் கூறியதாவது:-

    இளைஞர்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். நல்ல பண்புகளை கொண்ட இளைஞர்களால் நம்நாடு பலம் மிக்க நாடாக உயரும்.

    இந்திய நாடு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடு ஆகும். உலகில் இந்தியா போன்று எந்த நாடும் இல்லை. பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதனால் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.


    ஆம்பூரை சேர்ந்த சிறுமி ஹனீபாஷாரா தன்வீட்டில் கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது பெருமைக்குரியதாகும். இதேபோல் நான் எனது மகளை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சாலை விதியை மீறியதால் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். பிறகு நான் கிரிக்கெட் வீரர் என்பதை அறிந்து போலீசார் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். ஆனால் எனது மகள் விதியை மீறியதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்தினாள். நானும் அபராதம் செலுத்தினேன். அந்த அளவுக்கு குழந்தைகள் சிறு வயதிலேயே சட்டத்தை மதிப்பவர்களாக திகழ்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து அறக்கட்டளையின் சார்பில் கழிவறை கட்டக்கோரி தந்தை மீது போலீசில் புகார் அளித்த ஆம்பூர் பள்ளி மாணவி ஹனீபாஷாராவிற்கு ரூ.1 லட்சம் பரிசு, கலாம் செயற்கை கோள் குழுவினர் மற்றும் அதன் இயக்குனர் ஸ்ரீமதி கீசன் குழுவினரை பாராட்டி ரூ.5 லட்சம் பரிசு தொகை, 50 பயனாளிகளுக்கு கழிப்பறை கட்டிய சாவி வழங்கி மற்றும் கிரிக்கெட் அகாடமியை கபில் தேவ் தொடங்கி வைத்தார். #AmburGirl #KapilDev
    சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில்தேவ், கடந்த 50 ஆண்டுகளில் இந்திய வேகப்பந்து வீச்சு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறினார். #kapildev #indiateam #kohli

    இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய அணியும் தற்போதுள்ள வேகப்பந்து குழு போல் செயல்பட வில்லை. தற்போது அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது. இதை நம்ப முடிய வில்லை. இதுபோன்ற செயல்பாட்டையும் தீவிரமான ஆட்டத்தையும் பார்த்ததில்லை. இது கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்புக்கு கிடைத்ததாகும்.


    நம்மிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறையபேர் உள்ளனர். இதன்மூலம் இன்னும் திறமைவாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிய முடியும். கோலியின் ஆக்ரோ‌ஷம் நல்ல பயன்களை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2018-ம் ஆண்டு இந்திய அணி 14 டெஸ்டில் விளையாடியது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 179 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இஷாந்த் சர்மா, முகமது ‌ஷமி, பும்ரா ஆகியோர் சேர்ந்து 136 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். #kapildev #indiateam #kohli

    இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் இப்போது ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்று இருந்தால் ரூ.25 கோடிக்கு ஏலம் போயிருப்பார் என கவாஸ்கர் கூறியுள்ளார். #KapilDev #Gavaskar #IPLAuction2019
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. அவரது தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கைப்பற்றப்பட்டது.

    2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி திடீரென அறிவித்தார். சமீபத்தில் அவர் 20 ஓவர் போட்டி அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் டோனி இந்திய வீரர்களில் சிறந்தவர் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா உற்பத்தி செய்துள்ள கிரிக்கெட் வீரர்களில் டோனி தான் சிறந்த வீரர். அவர் 90 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். அதன்பின் இளம் வீரர்களுக்கு வழிவிடுவதாக கூறி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னை விட நாடுதான் முக்கியம் என்று கருதும் டோனிக்கு தலை வணங்குகிறேன்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும்போது, “சிறந்த ஆல்ரவுண்டரான கபில்தேவ் இப்போது ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்று இருந்தால் ரூ.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருப்பார்” என்று புகழ்ந்துள்ளார். #KapilDev #Gavaskar #IPLAuction2019
    பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. #KapilDev #IndiaWomenCricket
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வருகிற 20-ந்தேதி மும்பையில் நடக்கிறது. சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பயிற்சியாளரை தேர்வும் செய்யும் பணியில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்ததால், முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், இந்திய முன்னாள் வீராங்கனை ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள். தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இங்கிலாந்தின் ஓவைஸ் ஷா, இந்தியாவின் மனோஜ் பிரபாகர் உள்ளிட்டோர் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இடைக்கால பயிற்சியாளராக செயல் பட்டு சர்ச்சையில் சிக்கிய ரமேஷ் பவாரும் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். #KapilDev #IndiaWomenCricket
    இந்திய மண்ணில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கபில்தேவ், ஸ்ரீநாத் உடன் இணைந்தார் உமேஷ் யாதவ். #UmeshYadav #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. மூன்று நாட்களிலேயே முடிந்த இந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 10 பந்துகள் மட்டுமே வீசிய தாகூர் காயத்தால் வெளியேறினார்.

    இந்திய ஆடுகளத்தில் முதல் நாள் சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடாது. அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களாலும் சாதிக்க முடியாது. ரன்களை மட்டுமே கட்டுப்படுத்த முயற்சிக்க முடியும்.

    ஆனால் உமேஷ் யாதவ் தொடர்ந்து தனது வேகப்பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ரிவர்ஸ் ஸ்விங்கில் ‘கிங்’ ஆன உமேஷ் யாதவ் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை 311 ரன்னில் ஆல்அவுட் ஆக்க முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 26.4 ஓவர்கள் வீசினார்.



    2-வது இன்னிங்சிலும் பந்து வீச்சில் அசத்தினார். முதல் ஓவரிலேயே பிராத்வைட்டை டக்அவுட்டில் வெளியேற்றினார். அதன்பின் சேஸ், டவ்ரிச், கேப்ரியல் ஆகியோரை போல்டாக்கி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய மண்ணில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 3-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் கபில்தேவ் (1980 மற்றும் 1983) இரண்டு முறையும், ஜவகல் ஸ்ரீநாத் (1999) ஒரு முறையும் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளனர். தற்போது உமேஷ் யாதவ் அசத்தியுள்ளார்.
    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை மோதியுள்ள டெஸ்ட் ஆட்டங்கள் குறித்து சில விவரங்களை காண்போம். #INDvWI
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இதுவரை 22 டெஸ்ட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 8 டெஸ்ட் தொடரையும், வெஸ்ட்இண்டீஸ் 12 தொடரையும் வென்றுள்ளன. 2 டெஸ்ட் தொடர் சம நிலையில் முடிந்தது.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் தொடரையும் (2002-2016) இந்திய அணியே கைப்பற்றி வலுவானதாக இருக்கிறது. இதில் 3 தொடர் சொந்த மண்ணிலும், 3 தொடர் வெஸ்ட்இண்டீசிலும் நடந்தவையாகும். வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவில் 11 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 4-ல், வெஸ்ட்இண்டீஸ் 5-ல் வெற்றி பெற்றன. 1983-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது.

    இரு அணிகளும் 94 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 18-ல், வெஸ்ட்இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    இந்திய அணி 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் டெல்லியில் 8 விக்கெட் இழப்புக்கு 644 ரன் (1959) குவித்து இருந்தது.

    இந்திய அணி 1987-ம் ஆண்டு டெல்லியில் 75 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். வெஸ்ட்இண்டீஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 103 ரன் ஆகும்.

    கவாஸ்கர் 27 டெஸ்டில் விளையாடி 2749 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 236 ரன் குவித்துள்ளார். கிளைவ் லாயிட் 2344 ரன்னும், சந்தர்பால் 2171 ரன்னும், டிராவிட் 1978 ரன்னும், விவியன் ரிச்சர்ட்ஸ் 1927 ரன்னும் எடுத்துள்ளனர்.

    ரோகன் கசாய் (வெஸ்ட்இண்டீஸ்) 1958-ம் ஆண்டு கொல்கத்தாவில் 256 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் ஆகும். கவாஸ்கர் அதிகபட்சமாக 13 சதம் எடுத்துள்ளார். சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ் தலா 8 செஞ்சூரி அடித்துள்ளனர்.

    கபில்தேவ் 89 விக்கெட் (25 டெஸ்ட்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். மால்கம் மார்‌ஷல் 76 விக்கெட்டும், கும்ப்ளே 74 விக்கெட்டும், வெங்கட்ராகவன் 68 விக்கெட்டும், ஆன்டி ராபர்ட்ஸ் 67 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    கபில்தேவ் 83 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது ஒரு இன்னிங்சின் (அகமதாபாத், 1983) சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்ட்டில் அதிகபட்சமாக நரேந்திர ஹர்வானி 16 விக்கெட் (சென்னை, 1988) கைப்பற்றினார். #INDvWI
    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் சித்து, கபில்தேவ் கலந்து கொள்கிறார்கள். #ImranKhan #pakistanpm

    சண்டிகார்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார்.

    இந்த பதவி ஏற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

    இது தொடர்பாக பஞ்சாப் கேபினட் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து கூறிதாவது:-


    இம்ரான்கானின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவரது கட்சியின் அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பிதழ் வந்துள்ளது. இது தவிர இம்ரான்கான் தனிப்பட்ட முறையில் எனக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர்சிங் அலுவலகத்திடம் தகவல் தெரிவித்து விட்டேன்.

    கபில்தேவிடமும் பேசினேன். அவருக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அவரும் விழாவில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு சித்து கூறியுள்ளார்.

    ஆனால் மற்றொரு முன்னாள் வீரரான கவாஸ்கர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியாததை இம்ரானிடம் போனில் தெரிவித்து விட்டேன். இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்ய ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதனால் இம்ரானின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன்.

    இம்ரான்கான் எனக்கு பல ஆண்டு நண்பர் ஆவார். அவர் ஒரு நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளது மிகப் பெருமையான வி‌ஷயம். பல முறை இந்தியா வந்துள்ள அவர் எளிமையாக அனைவருடனும் பழகக் கூடியவர். இதனால் இந்தியா உடனான அவரது உறவு நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார். #ImranKhan #pakistanpm

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் வடேகர், கபில்தேவ், டிராவிடுடன், விராட் கோலியும் இணைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvENG #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து மண்ணில் இந்தியா 3 முறை மட்டுமே டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 1971-ம் ஆண்டு (1-0) அஜித் வடேகர் தலைமையிலும், 1986-ம் ஆண்டு (2-0) கபில்தேவ் தலைமையிலும், 2007-ம் ஆண்டு (0-1) டிராவிட் தலைமையிலும் கைப்பற்றி இருந்தது. இவர்களோடு விராட் கோலியும் இணைவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.



    இரு அணிகளும் நாளை மோதுவது 118-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 117 போட்டியில் இந்தியா 25 டெஸ்டிலும், இங்கிலாந்து 43 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 49 போட்டி ‘டிரா’ ஆனது. #INDvENG #ENGvIND #ViratKohli
    ×