search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்தம்"

    திருவிடைமருதூர் கோவிலுக்கு உரியனவாக முப்பத்தி ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அந்த தீர்த்தங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    திருவிடைமருதூர் தீர்த்தங்கள் 35

    1. காருண்யாமிர்தம்
    2. பாணதீர்த்தம்
    3. பராசர தீர்த்தம்
    4. சோம தீர்த்தம்
    5. சோம தீர்த்தம்
    6. ருத்ர தீர்த்தம்
    7. பதும தீர்த்தம்
    8. பாண்டவ தீர்த்தங்கள்
    9. இந்திர தீர்த்தம்
    10. அக்கினி தீர்த்தம்
    11. யம தீர்த்தம்
    12. நிருதி தீர்த்தம்
    13. வருண தீர்த்தம்
    14. வாயு தீர்த்தம்
    15. குபேர தீர்த்தம்
    16. ஈசான தீர்த்தம்
    17. கிருஷ்ண கூபம்
    18. கனக தீர்த்தம்
    19. கங்கா கூபம்
    20. கருட தீர்த்தம்
    21. வசு தீர்த்தம்
    22. சூரிய தீர்த்தம்
    23. மருந்துகள் தீர்த்தம்
    24. நரசிங்க தீர்த்தம்
    25. நந்தி தீர்த்தம்
    26. துரோண தீர்த்தம்
    27. ராகவ கூபம்
    28. சுர தீர்த்தம்
    29. முனி தீர்த்தம்
    30. கச்சப தீர்த்தம்
    31. கவுதம தீர்த்தம்
    32. கல்யாண தீர்த்தம்
    33. சேஷ தீர்த்தம்
    34. கந்த தீர்த்தம்
    35. ஐராவத தீர்த்தம்
    திருப்பதி கோவிலின் இடப்புறம் அமைந்துள்ளது சுவாமி புஷ்கரணி தீர்த்தம். இந்த சுவாமி புஷ்கரணியின் வடகரையில்தான் ஆதிவராக சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
    திருப்பதி கோவிலின் இடப்புறம் அமைந்துள்ளது இந்த சுவாமி புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த சுவாமி புஷ்கரணியின் வடகரையில்தான் ஆதிவராக சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

    இந்த திருக்குளத்தில் உள்ள தண்ணீர் மிகவும் தெளிந்த நிலையில் அமுதத்திற்கு நிகரான சுவையுடன் அமைந்திருக்கிறது. வேங்கடமலையின் அடர்ந்த மலையிலிருந்து ஓடிவரும் சுனைநீர் அங்குள்ள அற்புதமான மூலிகைகளின்மேல் பட்டு ஓடிவருவதால் இந்நீர் பல மூலிகைகளின் அற்புதங்களைத் தன்னிடத்தே கொண்ட ஓர் அற்புதத் தீர்த்தமாக திகழ்கிறது.

     நோய் தீர்க்கும் தன்மையுள்ள இத்திருக்குளத்தில் நீராடுவதால், சகல பாவங்களும் நீங்குவதன்றி, உடலின் நோய்களும் நீங்கப்பெறும் தன்மையைப் பெறுகின்றன. இத்தகைய அற்புதமான புஷ்கரணி போன்று கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்திலும் தீர்த்தக்குளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 60 லட்சம் ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளனர். இன்னும் தீர்த்தக்குளம் பணி தொடங்கப்படவில்லை. புஷ்கரணி அமைக்கப்பட்டுவிட்டால் கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்தின் அழகு மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேஸ்வரம் ஆலயத்தின் முன்பாக உள்ள கடலை, ‘அக்னி தீர்த்தம்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதற்கு ஒரு சிறு கதை இருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.
    தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சிவாலயங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் விளங்குகிறது. இங்கு ஆலயத்தின் முன்பாக உள்ள கடலை, ‘அக்னி தீர்த்தம்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். குளிர்ச்சியாக இருக்கும் கடல் நீருக்கு ‘அக்னி தீர்த்தம்’ என்று எதற்கான பெயர் வந்தது என்று சிலருக்கு தோன்றலாம். அதற்கு ஒரு சிறு கதை இருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.

    ராமபிரானின் மனைவி சீதாதேவி, வனத்தில் வசித்த போது சூழ்ச்சி செய்து ராவணனால் கடத்தப்பட்டாள். இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக ராமபிரான், ராமேஸ்வரம் வந்தார். பின்னர் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை மீட்டு வந்தார்.

    தன் மனைவியைப் பற்றி ராமருக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், மக்களிடம் இருந்து வீண் விமர்சனங்கள் எழுந்து விடக்கூடாது என்பதற்காக, தன் மனைவி சீதை களங்கமற்றவள் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக அவளுக்கு அக்னி பரீட்சை வைத்தார் ராமன்.

    சீதை கணவனின் மனதை அறிந்தவள் என்பதால், சற்றும் தயங்காமல் லட்சுமணனை அழைத்து அக்னி குண்டம் தயார் செய்யும்படி கூறினாள்.

    ஆனால் லட்சுமணன் தயங்கினான். அப்போது சீதை, “நாம் வனவாசம் புறப்படும் பொழுது, உன்னுடைய தாயார் சுமித்திரை, என்னையும் உன் தாய் போலவே காக்க வேண்டும் என்று கூறியது உன் நினைவில் இல்லையா? உன்னுடைய தாய் ஸ்தானத்தில் இருந்து உத்தரவிடுகிறேன், சீக்கிரமாக அக்னி குண்டத்தை தயார் செய்” என்றாள்.

    இப்போது லட்சுமணனுக்கு வேறு வழி தென்படவில்லை. மனதை கல்லாக்கிக் கொண்டு, விறகு கட்டைகளை எடுத்து வந்து, தீமுட்டி அக்னி குண்டம் தயார் செய்தான்.

    தீ ஜூவாலை கொழுந்து விட்டு எரிந்தது. அதன் முன்பாக வந்து நின்ற சீதை, “அக்னி தேவனே! நான் உனக்குள் இறங்கு கிறேன். நான் கற்புடையவள் என்பதை அனைவர் முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டு” என்றபடியே அக்னி குண்டத்திற்குள் இறங்கினாள்.

    அக்னிக்கு மகிழ்ச்சி. மகாலட்சுமியின் வடிவான சீதை தேவி, தனக்குள் இறங்கியதும் தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த அக்னி தேவன் தன்னுடைய வெப்பத்தை விடுத்து குளிர்ந்து போனான். மனித உருவெடுத்த அவன், சீதையை அக்னிக்குள் இருந்து தன் கைகளில் ஏந்தி வந்து ராமனிடம் ஒப்படைத்தான். “தர்மத்தின் பத்தினியான இவளை என்னால் ஒரு போதும் எரிக்க முடியாது” என்று கூறி அங்கிருந்து மறைந்தான்.

    இந்த அற்புத நிகழ்வை அக்னி பகவான் நிகழ்த்தியது, ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் என்பதால் ராமாயண இதிகாசமும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தல வரலாறும் சொல்கிறது. எனவே தான் ராமேஸ்வரம் கடல் ‘அக்னி தீர்த்தம்’ ஆனது. அக்னியின் மனம் குளிர்ந்த காரணத்தால், அவன் பெயர் தாங்கிய அந்தக் கடலும் அமைதி தவழ காட்சி தருகிறது. இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடினால், பக்தர்கள் பாவமற்றவர்களாக மாறுவார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
    ராமேசுவரம் பகுதியில் 62 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 30 தீர்த்தங்கள் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
    புனித தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் கோவிலில் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலுக்குள் உள்ள புனித தீர்த்த கிணறுகளில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் இன்னும் பல தீர்த்தங்கள் இருந்ததாக வரலாறுகள் உள்ளன. இதன் அடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் ஆராய்ச்சியில் இறங்கியது.

    இதில் 1964-ம் ஆண்டு 62 தீர்த்தங்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்ததாக தகவல்கள் கிடைத்தன. அதில் 30 தீர்த்தங்கள் ஜடாமகுட தீர்த்தம், தங்கச்சிமடம், மண்டபம், உப்பூர், வடகார் உள்பட பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்த 30 தீர்த்தங்களும் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்பட்டு வந்தன. இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து 30 தீர்த்தங்களும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது. தங்கச்சி மடம் அருகே உள்ள மங்கள தீர்த்தம் பகுதியில் இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் பங்கேற்றார். 30 தீர்த்தங்களும் தனித்தனி குடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. மற்றொரு குடத்தில் 30 தீர்த்தங்களும் சேர்த்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த குடங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து காலை 8.10 மணிக்கு 30 தீர்த்தங்கள் அடங்கிய குடத்தின் நீரை மங்கள தீர்த்த தெப்பத்தில் கவர்னர் ஊற்றினார்.
    புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும், புராணங்களும் வலியுறுத்துகின்றன. பாவம், தோஷம் போக்கும் சில தீர்த்தங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    தீர்த்தம் என்பதே புனிதமானது என்பது அனைவரின் நம்பிக்கை. அதனால் தான் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை மக்கள் பெரிதும் ஆவலுடன் செய்கின்றனர். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும், புராணங்களும் வலியுறுத்துகின்றன. நம் நாட்டில் ஏராளமான புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானதாக கும்பகோணம் மகாமக தீர்த்தம் இருக்கிறது. அதே போல முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்த்தங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சர்வ தீர்த்தம்

    காஞ்சீபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில், காஞ்சீ புரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் இருக்கிறது ‘சர்வ தீர்த்தம்’. அம்பிகை மணலால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அம்பிகையின் மன உறுதியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அனைத்து நதிகளையும் காஞ்சியில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளப் பெருக்கைக் கண்டு அச்சம் கொண்ட அம்பிகை, லிங்கத் திருமேனியைக் காக்கும் பொருட்டு அதனை ஆரத் தழுவிக் கொண்டாள். அதன் மூலம் அன்னைக்கு, ஈசனின் பரிபூரண அருள் கிடைத்தது.

    ஆனால் நதிகள் வருத்தம் அடைந்தன. சிவனின் ஆணைக்கு இணங்கவே, நதிகள் பெருக்கெடுத்து வந்தன. எனினும் அன்னையை சோதித்த தங்களுடைய செயல் உகந்தது அல்ல எனக் கருதி விமோசனம் பெற முற்பட்டன. அதன்படி காஞ்சீபுரம் தலத்திலேயே சர்வ தீர்த்தங்களும் இறைவனைச் சரணடைந்து, இறைவனை ‘தீர்த்தேஸ்வரர்’ ஆக வழிபட்டன. அவற்றின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘‘நீங்கள் எல்லோரும் இங்கேயே சர்வதீர்த்தம் என்ற பெயருடன் திகழ்வீர்கள். உங்களில் நீராடி தர்ப்பணம், தானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி நிறைவில் முக்தியும் பெறுவர்’’ என்று அருள்புரிந்தார்.

    வேத தீர்த்தம்

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்குள்ள தீர்த்தம் ‘வேத தீர்த்தம் ஆகும். இதற்கு ‘மணிகர்ணிகை தீர்த்தம்’ என்ற பெயரும் உண்டு. நான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இந்தத் தலத்தில் தவம் இருந்த காரணத்தினால், இறைவனுக்கு ‘வேதாரண்யேஸ்வரர்’ என்றும், தீர்த்தத்திற்கு ‘வேத தீர்த்தம்’ என்றும் பெயர் வந்தது.

    ராமபிரான் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, வேத தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், பல்லாயிரம் வருடங்கள் தவம், தானம் செய்த பலனைப் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கே நீராடுவது, மகா புண்ணியம் வாய்ந்த சேது சமுத்திரத்தில் நீராடியதற்குச் சமம் என்கிறார்கள்.

    கல்யாண தீர்த்தம்

    திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் கல்யாண தீர்த்தம் இருக்கிறது. கயிலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடைபெற்ற சமயம், முப்பத்து முக்கோடி தேவர்களும், உலக மக்களும் வட பகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்துவிட்டது. சிவபெருமானின் ஆணைப்படி, அகத்திய மாமுனிவர் தென்பகுதிக்கு வந்து பூமியின் பாரத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

    கயிலையில் இருந்து புறப்பட்டபோது அகத்தியர் கேட்டுக்கொண்டபடியே, இந்தத் தலத்தில் இறைவன் அகத்தியருக்கு அம்மையப்பராக கல்யாணக் கோலத்தில் திருக்காட்சி தந்தார். அகத்தியருக்கு ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலமாதலால், இங்குள்ள தீர்த்தம் ‘கல்யாண தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தடைப்பட்டு வரும் திருமணம் நல்லபடியாக நடந்தேறும் என்கிறார்கள். மூலிகைகள் நிறைந்த பொதிகைமலையில் தோன்றும் தாமிரபரணி, முதலில் பூமியைத் தொடும் இடம்தான் பாபநாசம் கல்யாண தீர்த்தம். இங்கு நீராடுவதால் உள்ளத் தூய்மையுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

    நாழிக்கிணறு

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அமைந்திருக்கிறது, ‘நாழிக்கிணறு’ தீர்த்தம். திருச்செந்தூர் திருத்தலத்தில் தான் முருகப்பெருமான், சூரபதுமனோடு போர் புரிந்து, அவனை சம்ஹாரம் செய்தார். போர் நிறைவு பெற்று விட்டது. கடுமையாக போர் புரிந்ததன் காரணமாக, முருகப்பெருமானின் படை வீரர்கள் அனைவரும் மிகவும் களைப்புற்று காணப்பட்டனர். அவர்களின் நீர் தாகத்தை தணிக்க திருவுள்ளம் கொண்ட முருகப்பெருமான், தன்னுடைய வேலினால் ஏற்படுத்திய தீர்த்தமே ‘நாழிக்கிணறு.’ அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போன்றது இந்த தீர்த்தம். இந்த தீர்த்தத்தில் எந்த காலத்திலும் நீர் வற்றியதே இல்லை. இன்னும் ஒரு சிறப்பு இந்த தீர்த்தத்திற்கு இருக்கிறது. அதாவது கடலுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்த தீர்த்தம், உவர்ப்பு தன்மை சிறிதும் இன்றி இனிப்பு சுவையுடன் திகழ்கிறது.



    ஆதி தீர்த்தம்

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அமைந்திருக்கும் பொற்றாமரைக் குளம் தான் ‘ஆதி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், இந்தக் குளத்தில் இருந்து பொன் மலர்களைப் பறித்து சொக்கநாத பெருமானை வழிபாடு செய்தனர். அதன் காரணமாகவே இந்தத் தீர்த்தக் குளம் ‘பொற்றா மரைக் குளம்’ என்று பெயர் பெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தீர்த்தம் என்பதால் ‘ஆதி தீர்த்தம்’ என்று அழைக்கப்பட்டது. முக்தி வேண்டி தவம் இருந்த நாரைக்கு முக்தி அருளியதால், பொற்றாமரைக் குளத்துக்கு ‘ஞான தீர்த்தம்’, ‘முக்தி தீர்த்தம்’ போன்ற பெயர்களும் உண்டு.

    ஞானதீர்த்தம்

    கோயம்புத்தூர் மாவட்டம் சூலூருக்கு அருகில் தென்சேரி என்னும் செஞ்சேரி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மந்திரகிரி முருகன் ஆலயத்தில் உள்ள தீர்த்தம், ‘ஞான தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமிமலையில் முருகன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்தது நமக்குத் தெரியும். ஆனால் செஞ்சேரி திருத்தலம் ஈசனிடம், முருகப்பெருமான் உபதேசம் பெற்ற தலமாகும்.

    மாயாஜாலங்களில் வல்லவனான சூரபதுமனை அழிப்பதற்காக, சத்ருசம்ஹார மந்திரத்தை சிவபெருமானிடம் உபதேசம் பெற விரும்பினார் முருகப்பெருமான். தவம் இயற்ற உரிய இடம் தேடி பூமிக்கு வந்தபோது, நான்கு வேதங்களுக்கு நிகரான கடம்ப வனமும், கங்கைக்கு நிகரான ஞானச் சுனையும் அமைந்த தென்சேரி மலையைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்தார். இங்கு அவருக்கு மந்திர உபதேசத்தை ஈசன் வழங்கினார். இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடினால் வாழ்வில் வரும் இன்னல்கள் நீங்கும்.

    பிரம்ம தீர்த்தம்

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் சட்டநாதர் கோவில் இருக்கிறது. இங்கு பிரதான தீர்த்தமாக விளங்குவது ‘பிரம்ம தீர்த்தம்.’

    முன்னொரு காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்ததும், போட்டியில் தாழம்பூவை பிரம்மதேவன் பொய்சாட்சி கூற வைத்ததும் நாம் அறிந்ததே. பொய் கூறிய பாவம் நீங்க பிரம்மதேவன், இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி அதில் நீராடி இறைவனை வழிபட்டார். பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தமே ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

    சட்டநாதர் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை, பிரம்மதேவரே நடத்துவதாக ஐதீகம். இங்கு சித்திரை மாதம் நடைபெறும் தீர்த்தவாரித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும், தோஷங்களும் நீங்கும்.

    சங்கு தீர்த்தம்


    காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இருக்கிறது, வேதகிரீஸ்வரர் ஆலயம். இங்கு இருக்கும் தீர்த்தம் ‘சங்கு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. என்றும் பதினாறு வயதாக இருக்க ஈசனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் மார்க்கண்டேயன். இவர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருக்கழுக்குன்றம் வந்தபோது, இறைவனுக்கு நீர் கொண்டு அபிஷேகம் செய்ய பாத்திரம் எதுவும் இல்லை. அப்போது இறைவனின் அருளால் தீர்த்த குளத்தில் வலம்புரி சங்கு ஒன்று தோன்றியது. அந்த சங்கில் நீர் எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாகவே இந்தத் தீர்த்தம் ‘சங்கு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

    இன்றைக்கும் இந்த தீர்த்தத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு வலம்புரி சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் சகல பாவங்களும் நீங்கும்.
    கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்தியிருக்கும் ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும்.

    தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பு வரையில் தண்ணீரில் நனையும்படி நிற்க வேண்டும்.

    மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் (சிறிதளவு குடித்தல்) செய்ய வேண்டும். பின்பு புரோட்சணம் (தலையில் சிறிதளவு தெளித்தல்) செய்யவேண்டும்.

    முதல் முறை மூழ்கும்போது கண்கள், காதுகள், மூக்குத் துளைகளை கைகளால் மூடி மூழ்க வேண்டும்.

    இரவில் தீர்த்த நீரில் மூழ்கக் கூடாது; சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும் இரவு நீராடலாம்.
    தாமிரபரணியின் நிறைவாக இருக்கும் சங்கு தீர்த்தம் பகுதியில் பல புதை குழிகள் இருப்பதாலும், முறையான பாதைகள் இல்லாத காரணத்தினாலும் பெரும்பாலும் படகில் தான் தீர்த்தம் எடுக்கச் செல்கிறார்கள்.
    தாமிரபரணியின் நிறைவாக இருக்கும் சங்கு தீர்த்தம் பகுதியில் பல புதை குழிகள் இருப்பதாலும், முறையான பாதைகள் இல்லாத காரணத்தினாலும் பெரும்பாலும் படகில் தான் தீர்த்தம் எடுக்கச் செல்கிறார்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் நூற்றுக்கணக்கான கோவில்களுக்கு இங்கிருந்து தீர்த்தம் எடுக்கிறார்கள்.

    தீர்த்தம் எடுக்க போகும்போது ஆற்று தண்ணீர் வற்றி இருக்கும். தீர்த்தம் எடுத்து விட்டு வரும்போது தண்ணீர் ஆள் மூழ்கும் அளவுக்கு உயர்ந்து விடும். ஆகவே பெரும்பாலான பக்தர்கள் இங்குள்ள படகோட்டிகள் மூலமாகத்தான் சங்கு முகம் செல்கிறார்கள். பழைய காயல் வழியாக செல்ல இதற்காக படகோட்டிகள் பலர் உள்ளனர். புன்னகாயல் வழியாகவும் செல்லலாம். 2 கிலோ மீட்டர் தொலைவில் தான் சங்கு முகம் உள்ளது. ஆனால் யாரும் அதிகமாக செல்வதில்லை.
    சங்கு முகத்தில் இரண்டு இடத்தில் தாமிரபரணி வங்க கடலுடன் சேருகிறது.

    காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும், திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தீர்த்தங்களில் நீராடினால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.
    காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும், திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில், ‘கந்த புஷ்கரணி’ எனப்படும் நாழிக்கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்து விட்டன. புராண காலங்களில் திருச்செந்தூரில் இருந்ததாக சொல்லப்படும் 24 தீர்த்தங்களை இங்கே பார்க்கலாம்.

    முகாரம்ப தீர்த்தம்: இதில் நீராடி இறைவனை வழிபட்டால், கந்தக் கடவுளின் கருணையைப் பெறலாம்.

    தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

    வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் மன அமைதியையும், பிரணவ சொரூபமாய் பிரகாசிக் கின்ற கந்தப்பெரு மானின் திருவடியைத் தியானிக்கும் ஞானத்தையும் கொடுக்கும்.

    லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால், குபேரனைப் போன்ற செல்வங்களைப் பெறுவர்.

    சித்தர் தீர்த்தம்: இந்த தீர்த்த நீராடல் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கக் கூடியது. பகையை விலக்கி, முக்தியை நாடச் செய்யும்.

    திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனை இந்தத் தீர்த்தம் கொடுக்கும்.

    காயத்ரி தீர்த்தம்: அதிகமான வேள்விகளைச் செய்தவருக்கு கிடைக்கின்ற பலன்களைக் கொடுக்கும் தீர்த்தம் இது.

    சாவித்ரி தீர்த்தம்: பிரம்மாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடி களைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

    சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்களையும் அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.

    அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.

    வயிரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் நீராடி அடையும் பலனை அடைவர்.

    துர்க்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கி நன்மை கிட்டும்.

    ஞான தீர்த்தம்: இறைவனை நினைத்தவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றித் தரும் தீர்த்தம் இது.

    சத்திய தீர்த்தம்: களவு, கள் உண்ணுல், குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றை நீக்கி, நன்னெறியில் நிற்கச் செய்யும்.

    தரும தீர்த்தம்: தேவாமிர்தம் போன்ற இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    முனிவர் தீர்த்தம்: இந்த தீர்த்தத்தில் நீராடுவோர், ஜகத்ரட்சகனை நேரில் கண்ட பலனைப் பெறுவார்கள்.

    தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம், மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி, ஞான அமுதத்தை நல்கும்.

    பாவநாச தீர்த்தம்: சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியங்கையும் அளிக்கவல்லது.

    கந்தபுஷ்கரணி தீர்த்தம்: சந்திரசேகர சடாதரனான சிவபெருமானின் திருவடியை அடையும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.

    கங்கா தீர்த்தம்: இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பமாக மாறும்.

    சேது தீர்த்தம்: சகல பாதகத்தில் இருந்தும் விடுவித்து, நன்மையை அளித்தருளும்.

    கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தமானது, பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.

    மாதுரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், அன்னையைப் போன்று ஆசீர்வதித்து, அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

    தென்புலத்தார் தீர்த்தம்: இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்க ளுக்கு, இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்தி லாண்டவன் அருள்புரிவான்.
    ஆடி அமாவாசை அன்று, திருப்பூந்துருத்தி கோவிலில் உள்ள காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும்.
    திருவையாறில் திருக்கயிலைக் காட்சி கண்ட திருநாவுக்கரசர், அங்கிருந்து புறப்பட்டு திருநெய்த்தானம், திருமழப்பாடி முதலிய தலங்களை தரிசித்தார். பின்னர் திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்கே திருமடம் அமைத்து தங்கியிருந்து ஆலயத்தில் உழவாரப்பணிகள் செய்து தேவாரப்பதிகங்கள் பாடி பணிந்து நின்றார்.

    இங்கு வந்த திருஞானசம்பந்தர், ‘திருநாவுக்கரசர் உழவாரப் பணி செய்த திருத்தலமாயிற்றே’ என்று கோவிலுக்குள் கால் பதிக்க அஞ்சி, வெளியில் இருந்தே ஈசனை வழிபட்டாராம். இதனைக்கண்ட ஈசன், சம்பந்தர் தம்மை தரிசிக்கும் பொருட்டு, இத்தல நந்தியை சற்று விலகி இருக்கச் சொன்னாராம். அதனால்தான் இத்தலத்தில் நந்தி விலகி உள்ளது என்கிறது ஆலய தலபுராணம்.

    இத்தலத்தில் திருக்கயிலை நாதனே, ‘பொய்யிலியப்பர்’ என்னும் புஷ்பவனேஸ்வரராய் எழுந்தருளி இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கேற்ப இங்கும் திருவையாறு ஐயாறப்பர் கோவிலைப்போலவே, பிரகாரத்தில் வட கயிலை, தென் கயிலை என தனித்தனி கோவில்கள் உள்ளன. இத்தல அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். அன்னை தெற்கு நோக்கிய திசையில் எழுந்தருளியிருக்கிறார்.

    ஆடி அமாவாசை நன்னாளில், பதிமூன்று கங்கைகள் பொங்கிய கிணறு இத்தலத்தின் தீர்த்தமாக இருப்பது விசேஷமான ஒன்றாகும். ஒரேக் கிணற்றில் ஒரே நாளில் பதிமூன்று கங்கைகள் (தீர்த்தங்கள்) எப்படி சாத்தியம்?.

    ஒரு முறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். ‘ஆடி அமாவாசை தினத்தில் வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில் பரிதவித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கிருந்த காசிப முனிவர், ‘ஏன் முடியாது? நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்' என்றார்.

    பின்னர் அவர், ஈசனை வேண்டி தவம் இயற்றி பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய இறைவன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

    இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது காசிப தீர்த்தம். இத்தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர் ஆகியோர் உள்ளனர். ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம்.

    ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் இத்தல காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும். மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், உமையாளையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    சம்பந்தரின் பல்லக்கை சுமந்த அப்பர்

    அப்பர் இந்த ஆலயத்தில் திருமடம் அமைத்து உழவாரப் பணிகள் செய்து வந்தார். இதையறிந்த சம்பந்தர், அப்பரைக் காண்பதற்காக, பல்லக்கில் அமர்ந்து வந்தார். தன்னைக் காண சம்பந்தர் வருவதை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தியில் இருந்து சம்பந்தர் வரும் வழி நோக்கி வந்தார். திருவாலம்பொழில் என்ற இடத்தில் சம்பந்தரின் பல்லக்கு வந்தபோது, யாரும் அறியாதபடிக்கு அந்த பல்லக்கை சுமந்தார் அப்பர்.

    பல்லக்கு பூந்துருத்தியை நெருங்கிய வேளையில், ‘இப்பொழுது அப்பர் எங்கு இருக்கிறார்’ என்று தன் தொண்டர்களிடம் கேட்டார், சம்பந்தர்.

    பல்லக்கை சுமந்தபடி வந்த திருநாவுக்கரசரோ, ‘அரும் பெரும் தவம் செய்தேன். அந்த தவப் பயன் காரணமாக தங்கள் பல்லக்கை சுமக்கும் பேறு பெற்றேன்’ என்று பணிவுடன் கூறினார்.

    பதறிப்போன திருஞானசம்பந்தர், உடனடியாக பல்லக்கை நிறுத்தச் செய்து கீழே இறங்கினார். ‘அப்பரே! என்ன காரியம் செய்தீர்கள்’ என்று பதறினார். பின்னர் இருவரும் பரஸ்பரம் வணங்கி ஆரத் தழுவிக் கொண்டனர். இதனை ‘பூந்துருத்தி உபசாரம்’ என்று விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.

    தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவையாறில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 7 கிலோமீட்டர் தூரத்திலும் திருப்பூந்துருத்தி அமைந்து உள்ளது. அருகிலேயே திருவாலம்பொழில் சிவாலயமும் உள்ளது.
    திருப்பட்டூரில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    திருப்பட்டூரில் உள்ளது பல நூற்றாண்டுகளைக் கடந்த காசி விஸ்வநாதர் ஆலயம். பழமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென்முகமாகவும் ஆலயத்தின் உள்ளே செல்லலாம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காசிவிஸ்வநாதர். இறைவி காசிவிசாலாட்சி அம்மன்.

    ஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. இந்த புலிபாய்ச்சித் தீர்த்தம் கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதீகம்.

    மனநிலை சரியில்லாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இங்குள்ள வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று தியானம் மற்றும் பிரார்த்தனை செய்தால் உடல் உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பட்டூர் தலம். 
    திருமணம் கைகூடும் திருத்தலம், திருமண பிரார்த்தனை தலம் என்றெல்லாம் புகழ் பெற்றுள்ள திருவிடந்தை கோவிலின் மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
    மூலவர் பெருமாள் - ஆதிவராகம் பெருமாள் (6.5 அடி உயரம்)
    மூலவர் தாயார் - அகிலவல்லி நாச்சியார் (பூமிதேவி அம்சம்)
    கோலம் - நின்றகோலம், கிழக்கே திருமுகமண்டலம், தேவியை இடக்கரத்தில் கொண்டு ஒரு திருவடியை பூமியிலும், மறு திருவடியை ஆதிசேஷன் தம்பதியர் முடியிலும் வைத்துக் கொண்டு தேவியை மூலமாக உலகோர்க்கு சரம சுலோகத்தை உபதேசிக்கின்ற திருக்கோலம்.
    உற்சவர்- நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி
    தனிக்கோவில் தாயார் - கோமளவல்லித் தாயார்
    விமானம் - கல்யாண தீர்த்தம், வராக தீர்த்தம், ரங்கநாத தீர்த்தம்

    தல புஷ்பம் - கஸ்தூரி
    தல விருட்சம் - புன்னை மரம்
    பிரத்தியட்சம் - பலி என்கிற அசுர மன்னன்,
     மார்க்கண்டேயர், காலவ மகரிஷி
    மங்களாசாசனம் - திருமங்கை ஆழ்வார் (10 பாடல்கள்)
    ஆகமம் - வைகானஸம்
    விசேஷ பிரசாதம் - தயிர்சாதம்

    தீர்த்தங்கள் சிறப்பு

    திருவிடந்தை தலத்தில் தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்கநாதர தீர்த்தத் தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். மாசி மாதம் வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு.

    இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இப்பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும். உற்சவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமவளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

    கோவில்களில் திருவிழாக்களும், வழிபாடுகளும் வழி வழியாக நடைபெற்று வருகின்றன. தற்காலம் போல பொழுது போக்கு வசதிகள் இல்லாத நிலையில் கோவில்களில் மாதந்தோறும் ஒவ்வொரு திருநட்சத்திர நாளன்று விழாக்கள் கொண்டாடப்பட்டன. நாள்தோறும் செய்யப்படும் வழிபாட்டிற்கு நித்திய பூஜைகள் என்று பெயர். திருவிழாக்கள் போன்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடு நைமீதிகம் எனப்படும். இக்கோவிலில் வைகானச ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன.

    நித்திய பூஜைகள்

    அலங்காரப் பிரியனான மகாவிஷ்ணுவிற்கு பொதுவாக நித்திய பூஜைகள் மிகவும் விரிவாக நடத்தப்படுகின்றன. திருவிடந்தை இறைவனும் அதற்கு விதிவிலக்கல்ல. திருவிடந்தை திருத்தலத்தில் திருமஞ்சன அபிஷேகம் காலை 7 மணி அளவில் நடைபெறும். பின்னர் பூஜையும், திருஆராதனையும் செய்யப்படும். உச்சிக்கால பூஜை மதியம் 12 மணிக்கு நடைபெற்ற பின்னர் கோவில் மூடப்படும். சாயரட்சை அல்லது மாலை பூஜை 6 மணியளவில் நடைபெறும். அர்த்தஜாமம் பூஜை இரவு 8 மணியளவில் நடத்தப்பட்டு அன்ன நைவேதியம் செய்யப்படும். இவ்வாறு நாள்தோறும் நான்கு கால பூஜை இங்கு நடைபெறுகின்றது.
     
    சிறப்பு வழிபாடுகள்

    திருவிடந்தையில் மாதந்தோறும் சிறப்பான வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதம் தொடங்கி இறுதியான பங்குனி மாதம் முடிய 12 மாதமும் விழாக்கள் நடைபெறுகின்றன.

    சித்திரை மாதம்

    சித்திரை மாதம் நடத்தப்படும் பெரும் விழா பிரம்மோச்சவம் எனப்படும். இது சித்ரா பவுர்ணமி அன்று தொடங்கி 10 நாட்கள் நடத்தப்படும். இத்திருநாள் அன்று சுற்றியுள்ள இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் தொடக்கமாக முதல்நாள் இரவு மண்ணெடுத்து பாலிகை தெளித்து விழா தொடங்கும். திருவிழாவின் முதல் நாள் அன்று இதனை எடுத்து வந்து கொடி மரத்தின் அருகில் வைத்து கொடியேற்றம் செய்யப்படும். கொடியேற்றம் செய்யப்பட்ட உடன் பத்து நாட்களுக்கு காலை, மாலை இருநேரமும் இறைவன் திருவீதி உலாவும் நடைபெறும்.
    கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம்.

    கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம்.

    கங்கையை விட உயர்ந்தது

    இந்த காவிரியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ என்று புகழப்பட்டுள்ளது. புண்ணியம் சேர்க்கும் காவிரியின் புனித நீராடலுக்கு, மாதங்களிலேயே சிறப்பு மிகுந்த ஒன்றாக பார்க்கப்படும் ஐப்பசி மாதம்தான் உகந்தது. இந்த மாதத்தில் மயிலாடுதுறையில் ஓடும் காவிரி படித்துறையில் மூழ்கி எழுந்தால், ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரியின் மகிமையை பற்றி அரிச்சந்திர மன்னனுக்கு, அகத்திய முனிவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதுபற்றி ஸ்ரீதுலா புராணம் தெளிவாக கூறுகிறது. அகத்திய முனிவர் காவிரியின் சிறப்பு குறித்து கூறியபோது, அதனை அங்கிருந்த பல முனிவர்கள் கேட்டுணர்ந்தனர். அவர்கள் அனைவரும் சாதாரண முனிவர்கள் கிடையாது. தவத்தில் சிறந்து விளங்கிய மகா தபஸ்விகள். அந்த மகா தவவான்களின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம்.

    மகா தபஸ்விகள்

    வசிஷ்டர், பிருகு, காச்யபர், வாமதேவர், வீதிஹோத்ரர், துர்வாசர், ஜாபாமலி, வாமதேவர், மங்கணர், காலவர், அத்ரி, விசுவாமித்திரர், கண்வர், யாஜர், மார்க்கண்டேயர், அஸிதா, பரத்வாஜர், கவுதமர், உபயாஜர், பராசரர், பைலவர், சாதாதபர், வியாசர், மவுத்கலர், முக்தர், வால்மீகி, கவஷர், ஜாதுகர்ணர், சுதீஷணர், சதானந்தர், சத்யவிரதர், மதங்கர், ஸத்யதபஸ், நாரதர், காந்தர், மாண்டவ்யர், ஆஸூரி, தவும்யர், கவிமதுஹாச்ரயர், ஹோதா, தூமகேது, ஜலப்லவர், சங்கர், லிகிதர், போதாயனர், யக்ஞகேது, யாக்ஞவல்கியர், மருக்ரது, புலஸ்தியர், புலஹர், கவுரர், ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், மரீசி, யக்ஞராசி, பப்ரு.

    இத்தனை ரிஷி முனிவர்களும் அறியும்படியாக, காவிரியை பற்றி அகத்திய முனிவர் கூறியதை நாமும் தெரிந்து கொள்ளலாம்.

    புண்ணிய நதிகளின் சங்கமம்

    ஐப்பசி மாதத்தில், புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரியில் கலக்கின்றன. எனவே அந்த மாதத்தில் காவிரியில் நீராடினால், புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய யோக பலன் கிடைக்கும். முக்தி பேறும் கிட்டும். அதுமட்டுமின்றி ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுபவரையும் சேர்த்து அவரது தாயார் வழியில் ஏழு தலைமுறையினரும், தந்தை வழியில் ஏழு தலைமுறையினரும் வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    நீராடும் போது இரண்டு கைகளும் நிரம்ப பூக்களை எடுத்து காவிரிக்கு சமர்ப்பணம் செய்து பூலோக வைகுண்டத்தில் வாசம் செய்து வரும் ரங்கநாதரை நினைத்து வழிபட வேண்டும். ஐப்பசி மாதம் அனைத்து நாட்களும் காவிரியில் நீராடுவதாக ஒருவர் நினைத்துக்கொண்டால், சில காரியங்களை நிறைவேற்றவேண்டியது முக்கியம்.


    கடைபிடிக்க வேண்டியவை

    எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது. பகல் நேரங்களில் தூங்கக் கூடாது. முகச்சவரம் மற்றும் முடிவெட்டிக்கொள்ளுதல் கூடாது. தாம்பூலம் போட்டுக்கொள்வது, வீண் பேச்சு, பாய், கட்டில்களில் படுப்பது, சாப்பிட கூடாதவற்றைச் சாப்பிடுவது, வெளியிலோ அல்லது ஓட்டலிலோ சாப்பிடுவது, ஆண்–பெண் சங்கமம், தானம் வழங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    இதே போல் உணவில் பூசணிக்காய், மொச்சைக்கொட்டை, கேழ்வரகு, தினை, உளுந்து, துவரை, கத்தரிக்காய், கொள்ளு, முருங்கைக்காய், சிறுகீரை, சுரைக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளக்கூடாது. இரவு உணவு, காலை சந்தி– மாலை சந்தியில் உணவு உட்கொள்ளக் கூடாது. பழைய சாதம், எருமைப்பால் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது.

    கடைபிடிக்க வேண்டியவைகளை படித்து விட்டு அயர்ந்து போய்விட வேண்டாம். தங்களால் இயன்றவரை கடைபிடித்தால் கூட புண்ணியம் கிடைக்கும்.

    முடவன் முழுக்கு

    ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நீராடினாலும், நீராடாவிட்டாலும், கார்த்திகை முதல் நாள் அன்றும், அதற்கு முந்தைய நாளான ஐப்பசி மாத கடைசி தினத்திலும் ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடுவார்கள். ஐப்பசி மாத கடைசி தினத்தில் நடைபெறும் புனித நீராட்டம் ‘கடை முழுக்கு’ என்றும், கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் புனித நீராட்டம் ‘முடவன் முழுக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது.

    ‘ஐப்பசி மாதம் முடிந்து விட்டதே!, என்னால் புண்ணிய பலன்களை அடைய முடியாமல் போய்விட்டதே!’ என்று கூறி வருத்தப்பட்டான் ஒரு முடவன். அந்த வருத்தத்தை மயூரநாதரிடம் முறையீடாகவும் வைத்தான். அவனது வருத்தமான புலம்பலைக் கேட்ட ஈசன், அசரீரியாக தோன்றி, ‘நீ சென்று காவிரியில் மூழ்கி எழு, உனக்கும் முக்தி பேறு கிடைக்கும்’ என்று கூறினார். அதன்படியே முடவனும் கார்த்திகை முதல்நாள் அன்று காவிரியில் புனித நீராடி, முக்தி பேற்றை அடைந்தான். ‘முடவன் முழுக்கு’ நடைபெறுவதற்கு காரணமாக இந்தக் கதை கூறப்படுகிறது.

    இடப தீர்த்த சிறப்பு

    ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் முன்பு உள்ள காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஏனெனில் இந்தப் பகுதியில் ஓடும் காவிரியே, இந்தத் தலத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்க்கும் தீர்த்தமாக அமையப்பெற்றிருப்பதுதான். இங்குள்ள காவிரி ஆற்று படித்துறை பகுதிக்கு இடப (நந்தி) தீர்த்தம் என்று பெயர்.

    எவர் ஒருவரும் கயிலை மலையானை தரிசனம் செய்ய செல்லும் முன்பு வாயிலில் வீற்றிருக்கும் நந்தி தேவரிடம் அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல முடியும். அத்தகைய சிறப்பு வாய்ந்தவர் நந்தி பகவான். ஒருமுறை நந்திதேவருக்கு கர்வம் ஏற்பட்டு விட்டது. அவரது வாக்கினில் ஆணவம் குடிகொள்ளத் தொடங்கியது.

    இதனால் நந்தி பகவானை, பாதாளத்தில் அழுத்தி தள்ளினார் சிவபெருமான். அப்படி அழுத்தி தள்ளிய இடம்தான் மயிலாடுதுறை காவிரியின் துலாக் கட்டம். இந்த இடத்தின் நடுவில் இன்றும் இறைவனின் திருவுருவை கண்டு பரவசம் அடையலாம். இடப தேவர் அழுந்தப்பட்ட இடம் என்பதால் அந்த தீர்த்தம் இடப தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

    சிவபெருமானால் பாதாளத்தில் அழுந்தப்பட்டதும், நந்தி தேவர் உண்மையை உணர்ந்தார். பின்னர் சிவஞானத்தை உபதேசம் செய்யும்படி சிவபெருமானை விரும்பி கேட்டுக்கொண்டார். சிவனும் அவ்வாறே நந்திதேவருக்கு சிவஞானத்தை உபதேசம் செய்து அருளினார். இது ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று, காவிரியின் வட பகுதியில் உள்ள வள்ளலார் கோவில் என்னும் இடத்தில் நடந்தது. இதனால் தான் காவிரியில் ஐப்பசி அமாவாசையன்று நீராடி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக மாறியது.

    ஐப்பசி அமாவாசையில் நடுப்பகல் வேளையில் இடப தீர்த்த துறையில் இருந்து காவிரி தீர்த்தத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தால், அந்த தீர்த்தம் எத்தனை ஆண்டுகள் ஆயினும், கெட்டுப்போகாது என்பது இன்றும் அனைவராலும் நம்பப்படும் ஐதீகம். இன்றும் பலர் மேலே சொன்ன நேரத்தில் தீர்த்தத்தை பிடிப்பது நடைபெற்று வருகிறது.
    ×