search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலையூர்"

    சேலையூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை:

    சேலையூரை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம்  பொன்னியம்மன் நகர் 2-வது தெருவில் வசித்துவருபவர் ராம்குமார். குரோம்பேட்டையில் உள்ள வங்கியில்  ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுபா, இவரும் தாம்பரத்தில் உள்ள வங்கியில் ஊழியராக உள்ளார்.

    நேற்று காலை கணவன் - மனைவி  இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று விட்டனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலையூர் அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 52 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    தாம்பரம்:

    சேலையூரை அடுத்த கவுரிவாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். சுற்றுலாத் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயந்தி.

    நேற்று மாலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு ஆதம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். இரவில் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 52 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளிப் பொருட் கள் கொள்ளை போயிருப்பது தெரிந்தது.

    சீனிவாசன் குடும்பத்துடன் வெளியில் சென்றிருப்பதை அறிந்த மர்ம கும்பல் நகை, பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். #Tamilnews
    சென்னை சேலையூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பேடில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் 10 நாட்களுக்கு முன் புதிததாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இங்குள்ள மதுபான பாரில் குடிக்க வருபவர்கள் அருகில் உள்ள வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் வம்பு செய்வது, வீடுகளில் உள்ள பொருட்களை திருடிச்செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த மதுக்கடையை மூடவேண்டும் என அப்பகுதியினர் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தங்களிடம் மதுக்கடை அமைக்க அனுமதி எதுவும் வாங்கவில்லை என்றும், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வாரவிடுமுறை நாட்கள் என்பதால் அதிகமானவர்கள் வந்து மது அருந்திவிட்டு குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பகல் 12 மணிக்கு மதுபான கடை திறந்ததும் கடைக்குள் புகுந்தனர்.

    மதுபான கடைக்குள் கற்களையும் வீசி எறிந்தனர். பின்னர் மதுபான பாரில் மது அருந்த வந்தவர்களை விரட்டியடித்து அங்கிருந்த மேஜை, நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்கள். உணவு பொருட்களையும் தூக்கி எறிந்தனர். இதைக் கண்டதும் மதுக்கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டனர். பாரில் இருந்த ஊழியர்களும், மது அருந்த வந்தவர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த மதுக்கடையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

    ×