என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "slug 126659"
கேந்த்ரபடா:
காஷ்மீரில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களின் கதறல் நாடு முழுக்க எதிரொலித்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் தீவிரமாக எழுந்து வருகின்றன.
இந்த தாக்குதலில் ஒடிசாவை சேர்ந்த பிரசன்னா சாஹூ என்பவரும் மனோஜ் பெஹரா என்பவரும் வீரமரணம் அடைந்தனர்.
பிரசன்ன குமார் சாஹூ ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் பரிஸ்கிஹரா கிராமத்தை சேர்ந்தவர். 1995-ம் ஆண்டு சிஆர்பிஎப்பில் சேர்ந்த இவருக்கு மீனா என்ற மனைவியும் ரோனி என்ற 18 வயது மகளும் ஜெகன் என்ற 16 வயது மகனும் உள்ளனர். ரோனி கல்லூரியில் முதல் ஆண்டும், ஜெகன் பிளஸ்-2 வும் படித்து வருகின்றனர்.
ரோனி கூறும் போது ‘அப்பாவின் இழப்பு பெரும் வருத்தத்தை தருகிறது. ஆனால் அவர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார் என்னும்போது பெருமையாக இருக்கிறது’ என்றார். கணவர் இழந்த சோகத்தில் இருக்கும் மீனாவுக்கு அந்த கிராமத்து பெண்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஆனால் மீனாவோ தன் மகன் கைகளை பற்றி ‘என் மகன் ஜெகனை ராணுவத்துக்கு அனுப்பி வைப்பேன். கணவர் விட்டு சென்ற நாடு காக்கும் பணியை அவன் தொடர்வான்’ என்று ஆவேசமாக கூறினார்.
மகன் ஜெகன் கூறும் போது ‘என் தந்தையின் உயிர் தியாகம் வீணாகிவிடக்கூடாது. நமது ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும். கருணை காட்டக்கூடாது. 44 ராணுவ வீரர்களுக்கு 440 பயங்கரவாதிகளாவது கொல்லப்பட வேண்டும்’ என்று கூறி இருக்கிறார். #CRPFsoldier #PulwamaAttack