search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை"

    • நேற்று மக்களவையில் ராகுல் காந்தி குழந்தை போல் அழுததை பார்க்க முடிந்தது.
    • ராகுலின் குழந்தைத் தனம் தெரிந்துதான் மக்கள் அவரை ஏற்கவில்லை என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    மக்களவையில் ராகுலின் நேற்றைய செயல்பாடுகள் குழந்தைத்தனமாக இருந்தது.

    ஏதோ பாதிக்கப்பட்டவர் போல் மக்களவையில் நாடகத்தை அரங்கேற்றினார் ராகுல்.

    குழந்தை புத்தி உள்ளதால் ராகுலுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை.

    ராகுலின் குழந்தைத் தனம் தெரிந்துதான் மக்கள் அவரை ஏற்கவில்லை.

    குழந்தை புத்தி உள்ள ஒருவரால் தான் மக்களவையில் கண்ணடிக்க முடியும்.

    குழந்தை புத்தி உள்ள ஒருவர் தான் மக்களவையில் ஒருவரை திடீரென கட்டிப்பிடிக்க வைக்கும்.

    நேற்று மக்களவையில் ராகுல் காந்தி குழந்தை போல் அழுததை பார்க்க முடிந்தது.

    ஜாமினில் உள்ள ஒருவர் தன்னை நிரபராதி என நினைத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

    • கூட்டணி கட்சிகளை ஒட்டி வாழும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் இருந்து வருகிறது.
    • தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சுகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுயைாக தாக்கி பேசினார்.

    காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை மூன்று முறை தொடர்ந்து மக்கள் நிராகரித்துள்ளனர். 2029-ம் ஆண்டிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும். 543 தொகுதிகளில் 99-ல் வெற்றிபெற்று 100-க்கு 99 தொகுதிகளை வென்றதுபோல் காங்கிரஸ் மக்களை மக்களை ஏமாற்ற பார்க்கிறது. பாஜக கூட்டணி தோற்றதைபோல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது.

    13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை. பாஜகவுக்கு நேர் எதிராக நின்ற இடங்களில் 26 சதவீத இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. 1984-க்குப் பிறகு 10 மக்களவை தேர்தலில் ஒருமுறை கூட 250 இடங்கைள தாண்டியது கிடையாது.

    தற்போது இருப்பது ஒட்டுண்ணி காங்கிரஸ். கூட்டணி கட்சிகளை ஒட்டி வாழும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சுகிறது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வி, வாக்கு வங்கி குறைவு. கூட்டணி கட்சி பலத்தை தன் பலமாக காட்ட முயலும் ஒட்டுண்ணி காங்கிரஸ்.

    தமிழகம், பீகாரில் ஜூனியர் பார்ட்னராக தேர்தலை எதிர்கொண்டது. 13 மாநிலங்களில் ஜீரோவான காங்கிரஸ் தன்னை ஹீரோவாக காட்டுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளதை மக்களவை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
    • இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது என்றார் பிரதமர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்களின் தாரக மந்திரம்.

    இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது.

    வாக்கு வங்கி அரசியல் நாட்டை பிளவுபடுத்தும். இது நாட்டை நாசப்படுத்தியது

    தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதை மக்களவை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

    தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான இடங்களில் 2வது இடத்துக்கு வந்துள்ளனர்.

    வளர்ச்சி அடைந்த தேசமாக இந்தியா மாறுவதை பார்க்க மக்கள் காத்திருந்தார்கள்.

    2047-ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற நாங்கள் தயார்.

    அதனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி பதிலுரையின் போது தமிழக எம்பிக்கள் மணிப்பூருக்கு நீதி வேண்டும் எனக்கோரி தமிழில் முழக்கமிட்டனர்.

    • மணிப்பூருக்கு நீதி வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
    • எதிர்க்கட்சியினரின் அமளி செயல் தவறு என சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குறுக்கிட்டதுடன், அவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    எங்கள் ஆட்சியில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    தேசத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம்.

    ஊழலை சிறிதுகூட சகித்துக் கொள்ள முடியாத வகையில் நாங்கள் ஆட்சி செய்தோம்.

    வாக்கு வங்கிக்காக அல்ல, அனைவருக்கும் நீதி என்ற வகையில் ஆட்சி செய்து வருகிறோம்.

    வாக்கு வங்கி அரசியலைப் புறக்கணித்து மதச்சார்பின்மையை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

    தோல்வியால் சிலருக்கு ஏற்பட்டுள்ள வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

    வெட்கமே இல்லாமல் ஊழல்களை ஒப்புக் கொண்ட கட்சி காங்கிரஸ்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி இருந்தது.

    வருங்கால தலைமுறைக்காக வலிமையான பாரதத்தை உருவாக்க வேண்டும் என ஆட்சி செய்து வருகிறோம்.

    இதற்கிடையே, மணிப்பூருக்கு நீதி வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் அமளி செயல் தவறு என சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • 10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம்.
    • மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம்.

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    அந்த உரையில், "10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாக்களித்து வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். மதச்சார்பின்மைக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

    இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து வருகிறோம். தேசத்திற்கு அவசியமான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப் படுத்தியுள்ளோம். அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்பது எங்களது முதன்மையான தாரக மந்திரம்" என்று மோடி பேசி வருகிறார்.

    மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்தும் சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    இதற்கிடையே எதிர்க்கட்சியினர் அமைதியாக இருக்குமாறு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
    • துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சட்ட விதிகளின்படி பாராளுமன்ற மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும். சபா நாயகர் இல்லாத நேரத்தில் சபையை நடத்த வேண்டிய முழு பொறுப்பும் துணை சபாநாயகருக்கு உண்டு என்று சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை ஆளும் கட்சியும், துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளும் பெறும் வகையில் ஒருமித்த கருத்து இதுவரை மரபுபோல இருந்து வந்தது.

    ஆனால் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மத்தியில் பா.ஜ.க. தனிப்பெரும் பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளால் கேட்க இயலவில்லை.

    பா.ஜ.க.வும் துணை சபாநாயகர் பதவிக்கு யாரையும் தேர்வு செய்யவில்லை. அதற்கு பதில் சபையை நடத்துவதற்கு எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில் துணை சபாநாயகர் பதவியை எப்படியாவது பெற்று விடவேண்டும் என்று தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியா கூட்டணி சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரசாத் எம்.பி.யை களம் இறக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

    சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பிரசாத் எம்.பி. அயோத்தி ராமர் கோவில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கிறார். தலித் இனத்தை சேர்ந்தவரான இவரை துணை சபாநாயகர் தேர்வுக்கு முன்நிறுத்துவதன் மூலம் பா.ஜ.க.வுக்கு மிக கடுமையான சவாலை ஏற்படுத்த முடியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை பற்றி பா.ஜ.க. மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். துணை சபாநாயகர் பதவியை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பா.ஜ.க. விட்டுக் கொடுக்கும் என்று முதலில் தகவல் வெளியானது.

    பிறகு துணை சபாநாயகர் பதவியையும் பா.ஜ.க.வே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. துணை சபாநாயகர் மூலம் முக்கிய முடிவுகளை எட்ட முடியும் என்பதால் பா.ஜ.க. தலைவர்கள் மிக தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பாமல் விட்டதுபோல இந்த தடவையும் கைவிட்டு விட பா.ஜ.க. தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல சபாநாயகர் ஓம்பிர்லா பாராளுமன்ற மக்களவையை வழிநடத்த 10 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழுவை அமைத்து அறிவித்துள்ளார்.

    அந்த எம்.பி.க்கள் குழுவில் ஜெதாம்பிகை பால், பி.சி.மோகன், சந்தியா ராய், திலிப்சைக்கியா (4 பேரும் பா.ஜ.க.), குமாரி செல்ஜா (காங்கிரஸ்), ஆ.ராசா (தி.மு.க.), ககோலி கோஸ் (திரிணாமுல் காங்கி ரஸ்), கிருஷ்ணபிரசாத் (தெலுங்குதேசம்), அவதேஸ் பிரசாத் (சமாஜ்வாடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    என்றாலும் துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.
    • அதானி குழும முறைகேடு பற்றி கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல மோடிக்கு முதுகெலும்பு இல்லை.

    குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் ஆ. ராசா பேசினார். அப்போது, எமர்ஜென்சி குறித்த பாஜக உறுப்பினர்களின் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை எப்படி என்று கூறமுடியும்.

    அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக பலமுறை இந்திரா காந்தி மன்னிப்பு கேட்டார். அவசரநிலையை தற்போது பாஜக அரசின் செயல்பாட்டுடன் ஒப்பிட முடியாது.

    பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை. குடியரசுத் தலைவர் சபாநாயகர் மூலம் சொல்கிறார்.

    8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.

    பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை உடைய பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை.

    நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.

    திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.

    8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    ஒவ்வொருவரும் அவரவர் செய்து கொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் என்ற கொள்கையை பாஜக வலியுறுத்துகிறது.

    பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து வந்துள்ளேன். எனது முன்னோர் வேலை தேடி இலங்கை சென்றனர். ஆனால் இன்று நான் ராகுலுடன் அவையில் இருக்கிறேன். அதற்கு காரணம் பெரியார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 10 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.

    தமிழ்நாடு சட்டசபையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு மூலம் மெரிட், மேனேஜ்மெண்ட், பேமண்ட் என 3 -பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    நிறுவனங்களின் லாபம் மீதான வரியை 33%-லிருந்து 20%ஆக குறைத்துவிட்டது மோடி அரசு. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது.

    இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை 2 பேர் வாங்குகிறார்கள், 2 பேர் விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை விற்று வேலைவாய்ப்பை பறிப்பதன் மூலம் இடஒதுக்கீட்டையும் மறைமுகமாக ஒழிக்கிறீர்கள்.

    முகலாயர்கள் அந்நியர்கள் என்றால், ஆரியர்களும் அந்தியர்கள்தான். முகலாயர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றால், ஆரியர்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்தான்.

    அதானி குழும முறைகேடு பற்றி 50 நாட்கள் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல மோடிக்கு முதுகெலும்பு இல்லை.

    ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பதில் சொல்ல பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜக அரசுதான்.

    அரசியலமைப்பை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என முழங்கியவர்கள், பிரதமரானவுடன் அதை எடுத்து வணங்கினார்கள்.

    அரசியல் சாசன சபையில் உயர்சாதியினர்தான் அமர்ந்திருக்கின்றனர் என்று சைமன் கூறினார். பாஜக அரசியல் சட்டத்தை பின்பற்றுவதும் இல்லை, மதிப்பதும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் உங்களை கைக்கொடுத்து வரவேற்கும்போது, நீங்கள் என்னிடம் நேருக்கு நேர் பார்த்தபடி கைக்குலுக்கினீர்கள்.
    • மோடி உங்களுடன் கைக்குலுக்கியபோது நீங்கள் தலை வணங்கி அவருடன் கைக்குலுக்கினீர்கள்- ராகுல் காந்தி.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது நீட், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    அப்போது சபாநாயகரையும் விட்டு வைக்கவில்லை. சபாநாயகர் பிரதமர் மோடியின் முன் தலை வணங்கியதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    நீங்கள்தான் (சபாநாயகர்) மக்களவையின் இறுதி நீதிபதி. உங்களுடையதுதான் கடைசி வார்த்தை. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையை வரையறுக்கிறது. சபாநாயகர் இருக்கையில் இரண்டு பேர் அமர்ந்து இருக்கிறார்கள். மக்களவை சபாநாயகர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் அமர்ந்துள்ளனர்.

    நான் சில விசயங்களை கவனித்தேன். நாங்கள் உங்களை கைக்கொடுத்து வரவேற்கும்போது, நீங்கள் என்னிடம் நேருக்கு நேர் பார்த்தபடி கைக்குலுக்கினீர்கள். மோடி உங்களுடன் கைக்குலுக்கியபோது நீங்கள் தலை வணங்கி அவருடன் கைக்குலுக்கினீர்கள்" என்றார்.

    அப்போது பாஜக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    ஆனால் ஓம் பிர்லா நமது பாரம்பரியம்படி மூத்தவர் என்பதால் தலை வணங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஓம் பிர்லா கூறுகையில் "பிரதமர் இந்த அவையின் (மக்களவை) தலைவர். நமது கலாச்சாரம், பாரம்பரியம் தன்னைவிட மூத்தவர்கள்களுக்கு தலைவணங்க வேண்டும் என சொல்கிறது. நான் அவற்றை கற்றுள்ளேன்.

    இந்த இருக்கையில் இருந்து என்னுடைய கலாச்சாரப்படி மூத்தவர்களுக்கு தலைவணங்குவது, தேவைப்பட்டால் காலை தொடுவது கூட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்றார்.

    அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி "மக்களவையில் சபாநாயகரை விட பெரியவர் யாரும் கிடையாது, எல்லோரும் அவருக்கு தலை வணங்க வேண்டும். நான் உங்களுக்கு தலை வணங்குவேன்" என்றார்.

    • தங்களை இந்துக்கள் என சொல்லிக் கொள்பர்கள் வன்முறை, வெறுப்பை ஊக்குவிக்கிறார்கள்.
    • பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி ஒட்டுமொத்த இந்துக்களை பிரநிதித்துவம் படுத்ததுபவர்கள் அல்ல- ராகுல் காந்தி

    இன்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, "தங்களை இந்துக்கள் என சொல்லிக் கொள்பர்கள் வன்முறை, வெறுப்பை ஊக்குவிக்கிறார்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி ஒட்டுமொத்த இந்துக்களை பிரநிதித்துவம் படுத்ததுபவர்கள் அல்ல. கடவுள் பரமசிவன் படத்தை காட்டி அச்சமின்றி தைரியமாக இருப்பது, அகிம்சை குறித்து பேசினார். மற்ற மதங்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றன" என்றார்.

    இவ்வாறு பேசிய ராகுல் காந்திக்கு அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வகளை இந்த கருத்து புண்படுத்துவதாகவும், இதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனறும் வலியுறத்தினார்.

    மேலும் எமர்ஜென்சி, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அமித் ஷா, நாட்டில் பயங்கரவாதத்தை பரப்பியபோது, அகிம்சை பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என்றார். கடவுள் சிவன் படத்தை காட்டியபோது, சபாநாயகர் ஓம் பிர்லா இதுபோன்ற படங்களை காட்டுவதற்கு மக்களவையில் அனுமதி கிடையாது என சுட்டிக்காட்டினார்.

    • நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாதது (அகிம்சை), பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்து பேசியிருக்கிறார்கள்.
    • ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள்.

    நீட் தொடர்பாக ஒருநாள் முழுவதும் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், சபாநாயகர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

    இதற்கிடையே இந்து மதம் குறித்து ராகுல் காந்தி கூறியதும், பிரதமர் மோடி அதற்கு பதில் அளித்ததும், பாஜக எம்பி-க்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தாலும் மக்களவை அதிர்ந்தது.

    ராகுல் காந்தி பேசும்போது "நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாதது (அகிம்சை), பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள். இவர்கள் (பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்) அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இவர்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல" என்றார்.

    இதனால் பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடி எழுந்து "ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு" என தனது கண்டனத்தை தெரிவித்தார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா "ராகுல் காந்தி தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். இதனால் மக்களவை சில நிமிடங்கள் அமளியாக காணப்பட்டது.

    • இருஅவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
    • எதிர்க்கட்சகள் தங்களது பிரச்சினை குறித்து பேசலாம்.

    இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத் தொடர் கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதல் நாளில் இருஅவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இதைத் தொடர்ந்து ஜனாதபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருந்தது. ஆனால் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எனினும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சகள் தங்களது பிரச்சினை குறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.

    இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனாதிபதி உரை மீதான விவாதம் இரு அவைகளிலும் தொடங்க இருந்தது.

    இதனிடையே பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது, "நாடாளுமன்றத்திற்கு நீட் முறைகேடு விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற செய்தியை மாணவர்களுக்கு அனுப்ப விரும்புகிறோம். எனவே இந்த செய்தியை அனுப்ப நாடாளுமன்றம் இதனை விவாதிக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

    இதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து பதில் அளிக்கையில், "மக்களவை கூட்டம் சட்டத்துக்கும் விதி முறைகளுக்கும் உட்பட்டே செயல்படுகிறது" என்றார். எனினும் ராகுல் அந்த பதிலால் திருப்தி அடைய வில்லை. மீண்டும் நீட் விவாதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

    நீட் விவகாரம் தொடர்பாக நாள் முழுக்க இந்த சபையில் நாம் விவாதிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். அதற்கு அரசு தரப்பில் நீட் குறித்து உரிய முறையில் விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாள் முழுக்க விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்க வில்லை.

    இதையடுத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பாராளுமன்ற மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு பாராளுமன்றத்தில் நாளையும் (செவ்வாய்க்கிழமை), மாநிலங்களவையில் நாளை மறுநாளும் (புதன்கிழமை) பிரதமா் மோடி பதில் அளிப்பாா் என எதிர்பாா்க்கப்படுகிறது.

    • நீட் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு.
    • ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றதைவிட முக்கியத்துவம் பெறுகிறது- ரிஜிஜு.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நீட் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் இன்று கையில் எடுத்தன. இது தொடர்பாக மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துளளார்.

    இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறுகையில் "எந்தவொரு விவகாரம் குறித்தும் விசாரணை நடத்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தை முடக்கும் வகையிலான காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை சிறந்தது அல்ல. நாடாளுமன்ற மரபுகளை காங்கிரஸ் மீறும் விதத்தை நான் கண்டிக்கிறேன்.

    ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றதைவிட முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், காங்கிரஸ் மக்களவை கண்ணியத்திற்கு எதிராக இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்புகிறது. நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் வேண்டாம். மற்ற பிரச்சனைகள் முதலில் ஆலோசிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார்.

    நாங்கள் நீட் தொடர்பான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அது விதிப்படை நடைபெற வேண்டும். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்று நாட்கள் நடைபெறும். இந்த தீர்மானத்தின்போது உறுப்பினர்கள் அவர்கள் கருத்துகளை முன்வைக்கலாம்.

    இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    ×