search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 144375"

    181 ஹெல்ப்லைன் தொடங்கிய 24 மணி நேரத்தில் 5500 போன்கள் பெண்களிடம் இருந்து மையத்திற்கு போன் வந்துள்ளன. இதில் 300 மகளிருக்கு தேவையான உதவிகள் உடனடியாக செய்யப்பட்டது. #181Helpline #TNGovernment
    சென்னை:

    பெண்களுக்கு உதவுவதற்காக 181 ஹெல்ப் லைன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    பாலியல் சீண்டல், மன அழுத்தம், குடும்ப பிரச்சினை, போலீஸ் மற்றும் மருத்துவ உதவிகள் செய்வதற்காக பெண்களுக்காக பிரத்யேக உதவி மையமாக இது செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    24 மணி நேரமும் செயல்படும் இந்த உதவி மையத்திற்கு போன் செய்தால் அவர்களது புகார் மற்றும் தேவையின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் மற்றும் மருத்துவ உதவி கிடைக்க வழிவகை காணப்படுகிறது. தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து பெண்கள் உதவி கேட்டாலும் உடனடியாக பாதுகாத்து தேவையான உதவிகள், ஆலோசனைகளை இந்த உதவி மையம் வழங்குகிறது.

    181 ஹெல்ப்லைன் தொடங்கிய 24 மணி நேரத்தில் 5500 போன்கள் பெண்களிடம் இருந்து மையத்திற்கு வந்துள்ளன. இதில் 2 ஆயிரம் பெண்களிடம் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர். 300 மகளிருக்கு தேவையான உதவிகள் உடனடியாக செய்யப்பட்டது.

    இதுகுறித்து சமூக நலத்துறை இயக்குனர் வி.அமுதவல்லி கூறியதாவது:-

    பெண்களின் பாதுகாப்புகாக தொடங்கப்பட்ட இந்த உதவி மையத்திற்கு ஒரே நாளில் 5500 பேர் பேசியுள்ளனர். பல்வேறு பிரச்சினைகளை கூறிய 300 பெண்களுக்கு தேவையான உதவிகளை அந்தந்த மாவட்டத்தின் சமுக நல அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள், போலீஸ், மருத்துவதுறை அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்பட்டன.

    ஒரு பெண் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்ற போது உதவி மையத்திற்கு போன் செய்துள்ளார். அவருக்கு முழுமையான ‘கவுன்சிலிங்’ அளிக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் தற்கொலை முடிவில் இருந்து மனம் மாறினார்.

    இதுபோல பாலியல் தொல்லை, வெளியிடங்களுக்கு செல்லும் போது ஏற்படும் பாதிப்பு குறித்து அதிக அழைப்புகள் வருகின்றன. பெண்கள் எந்த இடத்தில் இருந்து பேசினாலும் அந்த இடத்திற்கே சென்று பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காப்பகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், போலீஸ் உதவியுடன் விரைவாக தீர்வு கிடைக்க உதவு செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #181Helpline #TNGovernment
    திருவண்ணாமலையில் வறுமையில் வாடிய மாணவிக்கு உயர்கல்வி படிக்க கலெக்டர் கந்தசாமி உதவி செய்தார். #Tiruvannamalaicollector
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நீலவேணி என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.

    அதில் தான் அரசுப்பள்ளியில் படித்து மேல்நிலை பொதுத்தேர்வில் 976 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். தன்னுடைய அப்பாவும், அம்மாவும் படிக்காதவர்கள் கூலிவேலை செய்துதான் என்னை படிக்க வைத்தனர். நான் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது அப்பா இறந்து விட்டார்.

    தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். தான் பி.எஸ்சி நர்சிங் படிக்க வேண்டும் எனவும், தான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் எனக்கு உதவி புரிய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

    அப்போது, மருத்துவ கல்லூரி இயக்கக தேர்வு குழுவால் நடத்தப்படும் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து அதன் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

    அதன்படி கடந்த 6-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் நீலவேணிக்கு திருவண்ணாமலை விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் படிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தந்தை இறந்து விட்ட நிலையில் இவரது தாயார் விவசாய கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீலவேணி உள்பட 2 பிள்ளைகளை பராமரித்து வருகிறார்.

    குடும்ப வறுமை காரணமாக நீலவேணி கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருந்தார். இதையடுத்து கலெக்டர் கந்தசாமி உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரியை தொடர்பு கொண்டு மாணவியின் குடும்ப நிலையினை கூறி கட்டணமின்றி படிக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மாணவியின் வறுமை நிலையினை விளக்கி பரிந்துரை கடிதத்தினையும் அளித்தார்.

    இந்த நிலையில் மாணவி நீலவேணி 4 ஆண்டுகள் செலுத்த வேண்டிய கட்டணங்களில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து படிக்க கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது தாயாருடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார். கலெக்டர் நீலவேணிக்கு புத்தகம் அளித்து வாழ்த்து தெரிவித்தார்.  #Tiruvannamalaicollector
    அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட, தாங்கள் விரும்பும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Minister #Sengottaiyan
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தந்து, அதன் மூலமாக அவர்களின் எதிர்காலத்தை, பிரகாசமான எதிர்காலமாக மாற்றுவதற்காக, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கி, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால், மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் நம் மாநிலத்திற்கு நற்சான்று வழங்கிவரும் இவ்வேளையில், மேலும் முத்தாய்ப்பாக, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுத்தும், இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்து, தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திட வாருங்கள் என்று இருகரம்கூப்பி அழைக்கின்றேன்.

    “கல்லாதவர்களே இல்லாத மாநிலமாய் தமிழகத்தை ஆக்க வேண்டும் - பள்ளி வகுப்பறைகள் புனிதமாக இருக்க வேண்டும்” என்பதை தாரக மந்திரமாக கொண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க. அரசு, பள்ளி கல்வித்துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.27,205 கோடியை ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து வருகிறது.

    எவ்வளவுதான், அரசு நிதிகளை ஒதுக்கினாலும், என் பள்ளி இது என்ற எண்ணத்தை தன் இதயத்தில் ஏந்திய உங்களைப் போன்ற நல்லோரின் துணையும், அனைத்துப் பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட வழிவகை செய்திடும்.

    பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை தாங்களாக மனமுவந்து செய்ய விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    கல்வி ஒன்றால்தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

    அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வரும் வழியில், சாலை விபத்தில் காயமடைந்தவரை தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வேன் மூலம் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, திருமணத்தை நடத்திவைத்ததுடன் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சி முடிந்ததும், கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு எடப்பாடி பழனிசாமி காரிலேயே புறப்பட்டார். கார் ஆம்பூர் அருகே வடசேரி என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே சாலையில் மினி லாரியும், மொபட்டும் மோதிய விபத்தில் ஒருவர் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை, எடப்பாடி பழனிசாமி பார்த்தார். உடனே, தனது காரை நிறுத்தச்சொல்லி, இறங்கி சென்று காயமடைந்தவரின் அருகில் சென்று விசாரித்தார்.

    உடனடியாக, தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வேனை கொண்டுவரச் செய்து, காயமடைந்தவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைவாக அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், மாவட்ட கலெக்டரிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடுமாறு கூறினார்.

    காயமடைந்தவர் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றிச்செல்லப்படும் வரை அங்கேயே இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர், அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். 
    விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள். #KamalHaasan
    விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

    இது குறித்த விவரம் வருமாறு:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் கருங்கல் அருகே ஆனக்குழியில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.



    இதில் கீழே விழுந்த ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை, அவருடன் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு பெண் தனது மடியில் தூக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

    அந்த வழியாக சென்ற கமல்ஹாசன் இதனை பார்த்தார். உடனே, அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் தனது காரிலேயே அந்த பெண்ணை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேறொரு காரில் கமல்ஹாசன் ஏறி, தனது பயணத்தை தொடர்ந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனின் உதவியை அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டினர்.  #KamalHaasan
    ×