search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதண்டபாணி"

    ஈபிஎஸ் - ஓபிஎஸ் பக்கம் போகமாட்டோம் என்று பூந்தமல்லி ஏழுமலை மற்றும் திருப்போரூர் கோதண்டபாணி ஆகியோர் கூறியுள்ளனர். #EdappadiPalaniswami #OPanneerselvam

    திருவள்ளூர்:

    தகுதி நீக்கம் செய்யப்பட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பூந்தமல்லி ஏழுமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    18 எம்,எல். ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட சதி. நாங்கள் ஆட்சியை கலைத்து விடுவோம் என்ற பயத்தில் தான் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

    முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்றும், அம்மாவின் திட்டங்களை மக்களிடம் முதல்வர் கொண்டு சேர்ப்பதில்லை என்றும், முதல்வருக்கு நிர்வாக திறமை இல்லை என்று தான் தெரிவித்தோம்.

    மக்கள் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் முதல் அனைவரும் பணம் சம்பாதிக்கும் மன நிலையில் உள்ளனர்.

    சபாநாயகர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். எனவே தான் நீதிமன்றம் சென்றோம். மீண்டும் சபாநாயகர் சொன்ன தீர்ப்பு சரிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வருந்தத்தக்கதாக உள்ளது.

    எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். மக்களுக்காக நல்ல திட்டங்கள் அனைத்தும் சென்று சேர நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும்.

    உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் தேர்தல் அறிவித்தால் நிச்சயம் அ.ம.மு.க. கட்சி போட்டியிடும். 18 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    தேர்தலின் போது முதல்-அமைச்சர், உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும் தொகுதிக்குள் சென்று பிரச்சாரம் செய்யக் கூடாது. எந்த தலைவரும் தொகுதிக்குள் செல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு தேர்தலை சந்தித்தால் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி-ஓ.பி.எஸ். பக்கம் செல்லமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றொருவரான கோதண்டபாணி (திருப்போரூர் தொகுதி) நிருபரிடம் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் என் மனதளவில் வருத்தம் தான். ஏன் என்றால் ஒன்றரை ஆண்டுகளாக என் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அது மீண்டும் தொடர்கிறதே என்ற வருத்தம் இருக்கிறது.

    எடப்பாடி அரசு பசுமாட்டை அறுத்து பாலை கறக்கிறது. அந்த வலி பசு மாட்டுக்குத்தான் தெரியும். நாங்கள் பசுவாக பலமுறை பாதிக்கப்பட்டு விட்டோம். நானும் உணர்ந்து விட்டேன்.

    இவ்வளவு வலியை வைத்து விட்டு எப்போதும் எடப்பாடி-ஓ.பி.எஸ். பக்கம் போகமாட்டேன். தலைவர் தினகரன் என்ன சொல்கிறாரோ அதன்படி செயல்படுவேன். மறு தேர்தல் வைத்தாலும் மீண்டும் இதே தொகுதியில் நின்று நான் பட்ட கஷ்டங்களை கூறி வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #OPanneerselvam

    ×