என் மலர்
நீங்கள் தேடியது "தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி"
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்த குட்டார் என்பவரின் மகன் முருகேசன் (வயது45) கூடைப்பின்னும் தொழிலாளி.
இவர் நேற்று மாலை முருகேசன் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற முருகேசன் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டு அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கிய முருகேசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் இரவு நேரமானதால் முருகேசனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக முருகேசன் உடலை தீயணைப்பு படையினர் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் தேடினர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் முருகேசன் உடல் கிடப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆற்றில் மூழ்கி பலியான முருகேசனுக்கு அரசாயி (40) என்ற மனைவியும், கலைச்செல்வி (24) என்ற மகளும், சதீஷ்(22) என்ற மகனும் உள்ளனர்.