என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவசம் போர்டு"

    • 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு.
    • ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை பாயசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என ஐயப்பா மசாலா நிறுவனம் கடந்தாண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

    இந்த அறிக்கையில், அரவணை பாயசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றது எனவும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால், ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல என தெரிவிக்கப்பட்டது.

    அதனால் ஏலக்காய் சேர்க்காமல் அரவணை பாயாசம் தயாரிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் ஏலக்காய் கலக்காமல் இருந்தது குறித்து பல பக்தர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது எந்த விதமான கெமிக்கலும் கலக்காத ஏலக்காய் கலக்க முடிவு செய்து இருப்பதாகவும் தேவஸ்தான வட்டாரத்தில் கூறப்பட்டது.

    அதன்படி சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது.

    இதற்காக தீங்கு தரும் எந்த ரசாயனமும் இல்லாத 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது.

    • ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும்.
    • வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்க உள்ளது. 

    "ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் அந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது.

    ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.

    மேலும், கோவில் மற்றும் அதன் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டிருக்கிறது.

    • யாத்திரையின்போது தவறாமல் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.
    • யாத்திரையின்போது வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்த வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்(16-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

    மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமத்துக்கு உள்ளாகாமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்திருக்கிறது. அதன்படி அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் சபரிமலை யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:-

    * சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாத்திரையின்போது மயக்கம் அடைந்தால், பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ உதவியை பெற தாமதிக்க வேண்டாம்.

    * யாத்திரையின்போது தவறாமல் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். பக்தர்கள் ஏற்கனவே ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், பயணத்தின்போது உரிய மருந்துகள் மற்றும் மருந்துச் சீட்டுகளை உங்களுடன் வைத்திருக்கவும்.

    * சபரிமலைக்கு ஒரே நேரத்தில் நடந்து செல்வது சிரமமாக இருக்கும். எனவே யாத்திரை செல்லும் முன் நடைபயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகளை பக்தர்கள் மேற்கொள்வது நல்லது.

    * உங்களுக்கு உடல் தகுதி இல்லையென்றால் மெதுவாக மலை ஏறுங்கள். தேவையான இடங்களில் நின்று ஓய்வெடுக்கவும். நீலிமலை பாதைக்கு பதிலாக சுவாமி ஐயப்பன் சாலையை தேர்வு செய்வது நல்லது. சாப்பிட்ட உடன் மலை ஏறக்கூடாது.

    * நீலிமலை, பம்பை, அப்பாச்சிமேடு மற்றும் சன்னிதானத்தில் செயல்படும் மருத்துமனைகள் இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் போன்ற சேவைகளையும் வழங்குகின்றன.

    * யாரையேனும் பாம்பு கடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சபரிமலையில் உள்ள சுகாதார மையங்களிலும் ஆன்டிவென் மற்றும் சிகிச்சைகள் கிடைக்கும்.

    * யாத்திரையின்போது வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்த வேண்டும். உணவை கையாளும் முன் கைகளை நன்றாக கழுவவும். மூடி வைக்காத உணவை உண்ணக்கூடாது.

    * பொது இடங்களில் மலம் கழிக்க வேண்டாம். கழிப்பறைகளை பயன்படுத்துங்கள். பின்னர் சோப்பை பயன்படுத்தி கைகளை நன்கு கழுவவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது. 

    • மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுபோன்ற காணிக்கையை அளித்துள்ளனர்.
    • மாளிகைபுரத்தம்மன் கோவிலில் வழக்கம் போல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கலாம்.

    கூடலூர்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினந்தோறும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேரடி பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    ஆனால் ஆன்லைன் பதிவுதாரர்களில் தினமும் 15 ஆயிரம் பேர் வருவதில்லை. இதனால் நேரடியாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. தற்போது மழை குறைந்துள்ளதால் புல்மேடு, முக்குழி உள்ளிட்ட வனப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு தானியங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    இதற்காக சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகைபுரத்தம்மன் கோவிலில் மரக்கால் போன்ற பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நெல், அரிசி, சர்க்கரை, மஞ்சள், பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இதில் நிரப்பி காணிக்கையாக தருகின்றனர். மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுபோன்ற காணிக்கையை அளித்துள்ளனர்.

    இனிமேல் சபரிமலை சன்னிதானத்தில் நாணயங்களையும் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு

    உள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை வேண்டி பக்தர்கள் பலரும் நெல், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கலனில் நிறைத்து காணிக்கையாக தருகின்றனர்.

    சபரிமலை சன்னிதானத்தை பொறுத்தவரையில் நெல் மட்டுமின்றி நாணயங்களையும் இனிமேல் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம். மாளிகைபுரத்தம்மன் கோவிலில் வழக்கம் போல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கலாம்.

    இதற்காக காலை 3.30 மணி முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் மாளிகைபுரத்தில் காலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இந்த காணிக்கையை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது என்று சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. #SC #Devaswomboard
    புதுடெல்லி:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.

    இதுபோல கேரளாவின் வேறு சில கோவில்கள் கொச்சின் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவில்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் அரசின் வெளிப்படை தன்மை பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

    இது தொடர்பாக சுப்பிரமணிய சாமியும், மோகன்தாஸ் என்பவரும் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    கேரள ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தது. இதில் அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை என கூறியது. இதையடுத்து சுப்பிரமணிய சாமியும், மோகன்தாசும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மனு தொடர்பாக சில அறிவுறுத்தல்களை கேரள அரசுக்கு வழங்கியது. அதில் தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோவில்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பைசா கூட அரசின் கஜானாவுக்கு போகக்கூடாது. அவை அனைத்தும் தேவசம்போர்டின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மேலும் தேவசம் போர்டின் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்றும் கூறி உள்ளது. #SC #Devaswomboard

    சபரிமலை உள்பட 4 இடங்களில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். #sabarimala #sabarimalatemple
    பத்தனம்திட்டை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பல இந்து அமைப்புகள், பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டன.

    இதற்கிடையே ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த அக்டோபர் 17-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலைக்கு வந்த இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நூகு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு 6 நாட்கள் நீடித்தது. இதனிடையே மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் பகுதிகளில் தற்போதும் பதற்றம் நிலவி வருவதால் 22- ந்தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து கலெக்டர் நூகு உத்தரவிட்டார்.

    இந்த தடை உத்தரவு 22-ந் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், மேலும் 4 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். #sabarimala #sabarimalatemple
    வரலாற்று ரீதியாக சபரிமலை ஐயப்பன் கோவில் மதச்சார்ப்பற்றது என்றும், அனைத்து சாதி, மதத்தினரும் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. #SabarimalaForAll #Sabarimala
    திருவனந்தபுரம்:

    பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களையும், சிலையை வழிபடாதவர்களையும் அனுமதிப்பதை தடுக்கவேண்டும் என்று கோரி இருந்தார்.

    மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கும், 1965-ம் ஆண்டின் கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக்கும் எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆதிகாலத்தில் பழங்குடியினர் வழிபடும் இடமாக இருந்தது என்று வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரணம் அய்யப்பா என்று கோஷத்தில் உள்ள சரணம், புத்த மதத்தில் இருந்து வந்தது என்ற சிந்தனையும் உள்ளது.



    வரலாற்று ரீதியாக சபரிமலை கோவில் மதச்சார்ப்பற்றது. எனவே அங்கு சாதி, மதத்தை காரணம் காட்டி யாருக்கும் அனுமதி மறுக்கக்கூடாது. அங்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம். அய்யப்பனின் நண்பராக கூறப்படும் வாவருக்கு, சபரிமலை சன்னிதானத்தில் தனி இடம் உள்ளது. வாவரை வழிபட இங்கு ஏராளமான முஸ்லிம்களும் வருகிறார்கள். அவர்கள் அய்யப்பனையும் வழிபடுகின்றனர்.

    சபரிமலைக்கு வரும் வழியில் உள்ள எருமேலியில் வாவர் பள்ளி என்னும் ஒரு மசூதியும் உள்ளது. இங்கு அனைத்து அய்யப்ப பக்தர்களும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மேலும் பேட்டை துள்ளல் என்னும் நிகழ்ச்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது. பிறப்பால் கிறிஸ்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல்தான் அய்யப்பனின் தாலாட்டு பாடலாகவும் உள்ளது. அய்யப்ப பக்தரான அவரும் சபரிமலைக்கு அவ்வப்போது சென்று வருகிறார்.



    இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே மனுதாரரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #SabarimalaForAll #Sabarimala

    சபரிமலை கோவில் விவகாரத்தில் தேவசம் போர்டின் நிலையற்ற தன்மைக்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #SabarimalaTemple #DevaswomBoard
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முதலில் தாங்களும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்று அறிவித்தது. அதன் பிறகு அது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

    பிறகு தாங்கள் மறு சீராய்வு மனுதாக்கல் செய்யாவிட்டாலும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுக்களுடன் தேவசம் போர்டையும் இணைத்துக் கொள்வோம் என்று அறிவித்தது.

    இந்த நிலையில் தற்போது சபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தேவசம் போர்டு சார்பாக ஆஜராகி வரும் வக்கீல் அபிஷேக் சிங்வியை தேவசம் போர்டு மாற்றி உள்ளது. அவருக்கு பதில் இனி புதிய வக்கீல் இந்த வழக்கில் ஆஜராவார் என்று கூறப்பட்டுள்ளது.

    தேவசம் போர்டின் இந்த நிலையற்ற தன்மைக்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #SabarimalaTemple #DevaswomBoard

    சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுவதையொட்டி, அங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர், மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Sabarimala
    சபரிமலை:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இரண்டாவது முறையாக இன்று கோவில் நடை திறக்கப்படுகிறது.

    சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்கள்கிழமை (இன்று) ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது, பெண்களை அனுமதிக்காமல் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர், இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை. 

    கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தி நிறுத்தி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக 3,731 பேரை கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 545 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    கோவிலில் அமைதியான முறையில் தரிசனத்தை உறுதிசெய்யவும், பக்தர்களை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaTemple 

    நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றதாக 6 பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜை முடிந்து இன்று சபரிமலை நடை அடைக்கப்படுகிறது. #Sabarimalai #IyappanTemple
    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது.

    அதுமுதல் ஐயப்பனை தரிசிப்பதற்காக வந்த பெண்கள், பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணும், ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் கடந்த 19-ந் தேதி சபரிமலைக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை, 18-ம் படி அருகே வைத்து அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் திரும்பி சென்றனர்.



    இதைப்போல நேற்று முன்தினம் சபரிமலைக்கு செல்ல முயன்ற தலித் பெண் ஆர்வலர் ஒருவரும், பக்தர்களின் போராட்டம் மற்றும் கனமழை காரணமாக பம்பையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

    இவ்வாறு சபரிமலை விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆந்திராவை சேர்ந்த புனித யாத்திரை குழு ஒன்று நேற்று சபரிமலைக்கு வந்தது. இந்த குழுவில் இருந்த வாசந்தி (வயது 40), ஆதித்ய சேஷி (42) உள்பட சில பெண்களை பம்பை அருகே தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள், இந்த 2 பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதி மறுத்தனர். அந்த குழுவில் இருந்த 50 வயதுக்கு மேற்பட்ட பிற பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து அந்த 2 பெண்களிடமும் போலீசார் விவரங்களை தெரிவித்தனர். அதற்கு அந்த பெண்கள், சபரிமலையில் நடந்து வரும் போராட்டம் குறித்து தெரியாமல் வந்ததாகவும், கோவிலில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் நடைமுறைகளை தாங்கள் குலைக்க விரும்பவில்லை என்றும் எழுதி கொடுத்துவிட்டு திரும்பி சென்றனர்.

    இதைப்போல ஆந்திராவை சேர்ந்த பாலம்மாள் (47) என்ற பெண்ணும் நேற்று மதியம் சபரிமலைக்கு வந்தார். வலியநடை பந்தல் அருகே பாலம்மாளை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை முற்றுகையிட்டு சரண கோஷம் எழுப்பினர். அப்போது எதிர்பாராத விதமாக பாலம்மாள் மயங்கி விழுந்தார்.



    உடனே போலீசார் மூலம் பம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சபரிமலைக்கு செல்ல முயன்ற புஷ்பலதா என்ற ஆந்திரா பெண்ணும் மரக்கூட்டம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவரும் திரும்பி சென்றார்.

    இதைப்போல மேலும் 2 பெண்களும் நேற்று சபரிமலைக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். சபரிமலையில் நடை திறக்கப்பட்ட 17-ந் தேதியில் இருந்து நேற்று வரை, தடை செய்யப்பட்ட வயதுடைய மொத்தம் 12 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஐப்பசி மாத பூஜைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று நடை அடைக்கப்படுகிறது. அங்கு மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் (நவம்பர்) மீண்டும் நடை திறக்கப்படும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தெரிவித்தார்.

    சபரிமலையில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் மோதல் காரணமாக சபரிமலை வட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இன்று (திங்கட்கிழமை) வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. #Sabarimalai #IyappanTemple

    சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #DevaswomBoard #SabarimalaVerdict #ReviewPetition
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராடிய நிலையில், கேரள அரசுக்கும், தேவசம் போர்டுக்கும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், இன்று தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பத்மகுமார், சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தேவசம் போர்டின் முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தை அணுக முடிவு எடுத்துள்ளதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதன் மூலம், போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, கேரளாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை சற்று குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #Sabarimala #DevaswomBoard #SabarimalaVerdict #ReviewPetition
    திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்படுகிறது. #Sabarimala #KeralaGovt #DevaswomBoard
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை கேரள அரசும் சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்றும் கோர்ட்டின் தீர்ப்பை அரசு அமல்படுத்தும் என்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

    தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரும் தேவசம் போர்டு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் ஐயப்ப பக்தர்கள், பந்தளம் மன்னர் குடும்பத்தினர், சபரிமலை தந்திரிகள் போராட்டத்தில் குதித்ததால் சபரிமலை விவகாரம் தீவிரம் அடைந்தது.

    இதனால் கேரள அரசு சார்பில் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று முடிவு எடுத்து விட்டு சமரச பேச்சு நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்று கூறி பேச்சு வார்த்தையை மன்னர் குடும்பத்தினர் உள்பட அனைவரும் புறக்கணித்து விட்டனர்.

    அடுத்த கட்டமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு அலுவலகத்தில் சமரச பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 16-ந்தேதி நடந்த இந்த கூட்டத்தில் பந்தளம் மன்னர் குடும்பத்தினர், சபரிமலை கோவில் தந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    சுப்ரீம் கோர்ட்டில் உடனே மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீது தீர்ப்பும் வரும் வரை ஏற்கனவே உள்ள நடைமுறையை சபரிமலையில் பின்பற்ற வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் வற்புறுத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் சபரிமலை விவகாரத்தில் நடைபெற்று வரும் போராட்டமும் கேரளாவில் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு எந்த முடிவையும் இந்த பிரச்சினையில் சுயமாக எடுக்கலாம் என்றும் அந்த முடிவை கேரள அரசு ஏற்கும் என்றும் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார்.

    இந்த பிரச்சினையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தயார் என்று தேவசம் போர்டு கூறி உள்ளதை வரவேற்பதாகவும், எந்த பிரச்சினையும் இன்றி ஐயப்பனை பக்தர்கள் வணங்கிச் செல்ல தேவசம் போர்டு எடுக்கும் முடிவை வரவேற்போம் என்றும் அவர் கூறினார்.

    இதுபற்றி தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறும் போது, மாநில அரசு தேவசம் போர்டு முடிவில் தலையிடாது என்று அறிவித்துள்ளது. தேவசம் போர்டு சுயமாக முடிவு எடுக்கலாம் என்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

    இதைத் தொடர்ந்து திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை கோவில் தந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் கேரளாவில் நடைபெற்று வரும் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். #Sabarimala #KeralaGovt #DevaswomBoard

    ×