search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நந்தூரி"

    மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால் ஸ்டெர்லைட்டை ஆலையை திறக்க அரசு துணை போகிறதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #Ramadoss #Sterlite

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் திறம்பட பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அந்த ஆலையின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென செய்யப்பட்டுள்ள இந்த இடமாற்றம் கண்டிக்கத்தக்கது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு உள்ளிட்ட யாராலும், எதுவும் செய்ய முடியாது என்ற அதிகாரத்திமிரில் அதன் நிர்வாகம் இருந்தபோது, அது செய்துள்ள விதிமீறல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அந்த ஆலையை மூடும்படி கடந்த மே 23-ந் தேதி ஆணையிட்டவர் நசிமுதீன் ஆவார்.

    அந்த ஆணையின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக ஆணையை மே 29ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. கடந்த 15 மாதங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள அவருக்குத் தான் ஆலையின் அத்துமீறல்கள் குறித்த விவரங்கள் அத்துபடியாகும்.


    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.

    அடுத்த 10 நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிப்பதில் தமிழக அரசுக்கு தொடக்கத்தில் இருந்தே விருப்பம் இல்லை. மக்கள் எழுச்சிக்கும், அரசியல் அழுத்தத்துக்கும் பணிந்து தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இப்போது ஸ்டெர்லைட் தடை விலக வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகத் தெரிகிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடைதான் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியை யும் அளித்துள்ளது. தமிழக அரசு இப்போது இழைத்து வரும் துரோகங்கள் மற்றும் தவறுகளால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டால் அதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் அங்குள்ள மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    எனவே, சுற்றுச் சூழல் துறை செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீனை இடம் மாற்றும் முடிவை கைவிட்டு, ஸ்டெர்லைட் சிக்கல் ஓயும் வரை அப்பதவியில் அவர் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தந்தை-2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். #Thoothukudifiring #sterliteprotest

    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் தாக்கப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்த முக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த கலில்ரகுமான் (வயது47), அவரது மகன்கள் முகமது அனாஸ் (22), முகமது இர்ஷாத் (20), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டயன், கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், நெல்லை ஆலங்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய 6 பேரை கைது செய்த நெல்லை போலீசார் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


    கைதான முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஓமியோபதி மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவரது சகோதரர் முகமது இர்ஷாத் நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    கலில்ரகுமான், அவரது மகன்கள் முகமது அனாஸ், முகமது இர்ஷாத் ஆகிய 3 பேரும் மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மீதான தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் கலில் ரகுமானின் மனைவி நசீபா பானு, கைதான 3 பேரின் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், எனது கணவருக்கும், மகன்களுக்கும் இந்த சம்பவங்களில் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் போலீசார் திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளனர். இதனால் எனது மகன்கள் 2 பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நசீபா பானு சார்பில் மதுரையை சேர்ந்த வக்கீல் கணேஷ்பிரபு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.

    மேலும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகியுமான காளியப்பன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனுவில் தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்ற போராட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    6 பேர் கைது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்வது கலெக்டர் அலுவலகம். அப்படிப்பட்ட இடத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட சில இயக்கங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் கைது செய்யவில்லை என்றனர்.

    மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மருது கூறுகையில், கலில்ரகுமான் மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் போலீசார் 2 மகன்களுடன் அவரை கைது செய்து இருப்பது தவறான நடவடிக்கை ஆகும் என்றார். #Thoothukudifiring #SterliteProtest

    ×