என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ படிப்பு"

    • ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

    இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது.

    • இளங்கலை மருத்துவ படிப்பில் சேர கடுமையான போட்டி இருக்கும்.
    • 50 இளங்கலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 77 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12,050 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கிடையே தேசிய மருத்துவ ஆணையத்தால் வெளியிடப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடங்களின் திருத்தப்பட்ட பட்டியலில் தமிழ்நாட்டிற்கான மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிக்கப்படவில்லை.

    இதனால் இந்த ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பில் சேர கடுமையான போட்டி இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக அரசு விண்ணப்பிக்காததால் நாமக்கல், திருப்பூர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு செய்யப்படவில்லை.

    இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரி கள் கூறும்போது, மருத்துவ இடங்களை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்வதற்கு முன்பே, மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அல்லது புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கான காலக்கெடு, முடிவடைந்தது. காலக்கெடுவுக்குப் பிறகு விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசம் கேட்டோம். ஆனால் அது நடக்கவில்லை.

    3 மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்களை அதிகரிக்க எங்களிடம் உள்கட்டமைப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இடங்களை அதிகரிக்க வேண்டுமா என்பதை மாநில அரசு முடிவு செய்யும் என்றனர்.

    இதற்கிடையே 2025-26-ம் ஆண்டுக்கான இடங்களை அதிகரிப்பதற்கோ அல்லது புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கோ விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டு மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

    • அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வசதியாக எம்.பி.பி.எஸ். பாடப்புத்தகம் தமிழில் தயாரிக்கப்படுகிறது.
    • எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு 13 முக்கிய பாடப் புத்தகங்கள் உள்ளன.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. 2-வது கட்டம் அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு மொத்தம் 5½ ஆண்டுகள் படிக்க வேண்டும். அதில் 4½ ஆண்டுகள் பாடப்புத்தகங்களுடன் பயிற்சியும், ஒரு ஆண்டு முழுமையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வசதியாக எம்.பி.பி.எஸ். பாடப்புத்தகம் தமிழில் தயாரிக்கப்படுகிறது. 4 பாடப்புத்தங்கள் மொழி பெயர்க்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்கு முன் வழங்கப்பட உள்ளது.

    தமிழ்வழி மாணவர்களுக்கு சிறந்த கருத்தியல் தெளிவு மற்றும் புரிதலை வழங்க தமிழ்நாடு பாட நூல் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகம் ஆகியவை இணைந்து மருத்துவ பாடப் புத்தகங்களை தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

    முதலாவதாக மாணவர்களுக்கான கிரேஸ் அனாடமி கைட்டன் மற்றும் ஹால் டெக்ஸ்ட் புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி, பெய்லி அண்ட் லவ்ஸ் ஹார்ட் பிராக்டிஸ் ஆல் சர்ஜரி (தொகுதி1) மற்றும் முதலியார் மற்றும் மேனனின் மருத்துவ மகப்பேறியியல் ஆகிய 4 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

    மாநிலம் முழுவதும் கடந்த ஒருவருடமாக 30 பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஆங்கில பாடப் புத்தகங்களை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மொழி பெயர்ப்பு செய்யக்கூடிய மருத்துவர் கூறியதாவது:-

    எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு 13 முக்கிய பாடப் புத்தகங்கள் உள்ளன. அவை அனைத்தையும் படிப்படியாக மொழி பெயர்க்க திட்டமிட்டு உள்ளோம். மொழி பெயர்க்கப்பட்ட பாடப் புத்தகங்கள் மருத்துவ மாணவர்களுக்கு கருத்தியல் தெளிவை அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனக்கு சிறு வயது முதலே விருப்பம். 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்ணும், பிளஸ்-2 தேர்வில் 512 மதிப்பெண்ணும் பெற்றேன்.
    • மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு கூட எங்களிடம் பணம் கிடையாது.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம்-இந்திராணி தம்பதியரின் மகள் பட்டீஸ்வரி (வயது 19). சற்று காது கேட்கும் திறனை இழந்த மாற்றுத்திறனாளியான இவர் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிப்பை முடித்து, மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினார். இதில் 720க்கு 117 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வாகி உள்ளார். ஆனால் படிப்பதற்கு போதிய பண வசதி இல்லாததால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். பட்டீஸ்வரியின் தந்தை கூலி வேலையும், தாய் தூய்மை பணியாளராகவும் பணியாற்றி வரும் நிலையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே போதுமானதாக இல்லை. இதனால் அரசு தனக்கு மருத்துவ படிப்பு படிக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து பட்டீஸ்வரி மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனக்கு சிறு வயது முதலே விருப்பம். இதனால் சிறுவயதில் இருந்தே நன்றாக படித்து வந்தேன். 10-ம்வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்ணும், பிளஸ்-2 தேர்வில் 512 மதிப்பெண்ணும் பெற்றேன். மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினேன். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்றேன். இதனால் எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. 2-வது முறையாக 2022ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். இதில் 117 மதிப்பெண்கள் பெற்றேன். இதன் மூலம் எனக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் போதிய பண வசதியில்லாததால் மருத்துவம் படிக்க முடியாத நிலையில் உள்ளேன்.

    எனது தந்தை தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறார். தாய் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். அண்ணன் காளீஸ்வரன் காட்டுவேலைக்கு சென்று வருகிறார். இதன் மூலம் எங்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது. எனது தாய்க்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு மாதந்தோறும் மருந்து மாத்திரைகள் வாங்க செலவு ஆகிறது. இதனால் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தும் என்னால் படிக்க முடியாத நிலை உள்ளது.

    மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு கூட எங்களது குடும்பத்திடம் பணம் கிடையாது. நான் படித்த மடத்துக்குளம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் வசூலித்து தந்தார்கள். மருத்துவம் படிக்க புத்தகம், தங்குவதற்கான விடுதி கட்டணம் என நிறைய செலவாகும். அந்த அளவுக்கு எங்களால் பணத்தை புரட்ட முடியவில்லை. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.

    தாய்க்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதால் நான்தான் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. முதலில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாததால் ஒரு வருடம் வீட்டில் இருந்தவாறே அடுத்த நீட் தேர்வுக்கு தயாரானேன். மாநில பாட புத்தகங்களை வைத்தே படித்தேன். யூ-டியூப் மூலம் ஆசிரியர்கள் கற்றுகொடுத்தவற்றையும் பார்த்து தேர்வுக்கு தயாரானேன். தாய்க்கு உடல் நிலை பாதிப்பால் வீட்டில் உள்ள ஆடு-மாடுகளை நான்தான் மேய்த்து விட்டு வருகிறேன். அதனை பராமரிக்கவும் செய்கிறேன். சமையல் வேலைகளையும் செய்கிறேன். தம்பி யுவபாரதி(10) 5-ம்வகுப்பு படிக்கிறான். அவனையும் கவனிக்க வேண்டியது உள்ளது.

    வீட்டு வேலைகளையும் பார்த்து விட்டு நீட் தேர்வுக்கு தயார் ஆனேன். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். இரவு வீட்டு வேலைகள் முடிந்ததும் 8-30 மணி முதல் 11-30 மணி வரை படிப்பேன்.

    எனக்கு காது லேசாக கேட்காது. இதனால் என்னை சிலர் ஏளனமாக கூட பேசுவார்கள். அதையெல்லாம் மனதில் வைக்காமல் தேர்வுக்கு தயாரானேன். தற்போதைய செலவுக்காக வீட்டில் உள்ள ஆடு, மாடுகள் சிலவற்றை விற்று விட்டோம். மீதி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறேன். தற்போது பலர் உதவி செய்து வருகிறார்கள். மடத்துக்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேடப்பட்டி பள்ளி ஆசிரியர்கள், வேடப்பட்டி ஊராட்சி தலைவர் ஆகியோர் நிதி அளித்துள்ளார்கள். இருப்பினும் அரசு எனது மருத்துவ படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு மாணவர் 2 ஒதுக்கீட்டிலும் இடங்களை பெற்று இருப்பதால் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-து கட்ட கவுன்சிலில் தற்போது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

    5647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்தனர். மருத்துவ இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் 30-ந்தேதியில் இருந்து நாளை (4-ந்தேதி) வரை கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

    எம்.எம்.சி., ஸ்டான்லி, கே.எம்.சி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கோவை பி.எஸ்.சி. தனியார் கல்லூரியிலும் அதிக மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்துள்ளனர்.

    ஒரு மாணவர் 2 ஒதுக்கீட்டிலும் இடங்களை பெற்று இருப்பதால் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்குள் இடங்களை தெரிவு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

    அதையடுத்து 58 மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்கள் மற்றும் சேராத காலி இடங்கள் குறித்த விவரங்களை மருத்துவ கல்வி இயக்ககம் சேகரிக்கிறது.

    அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள் சேகரிக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துச்செல்வன் கூறியதாவது:-

    முதல்கட்ட கலந்தாய்வில் 1 எம்.பி.பி.எஸ், 43 பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. நாளை மாலைக்குள் சேராதவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அடுத்தகட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படும். 7-ந்தேதி 2-வது கட்ட கலந்தாய்வு நடப்பதாக இருந்தது. அது தள்ளிப்போகிறது.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-து கட்ட கவுன்சிலில் தற்போது நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் தமிழகத்தில் 2-வது சுற்று தொடங்கும்.

    அடுத்த வாரம் இறுதியில் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஆயுர்வேதா, கல்லூரி, 2 சித்தா கல்லூரி தலா ஒரு யுனானி, ஹோமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன.
    • 26 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1660 இடங்கள் உள்ளன.

    சென்னை:

    ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி படிப்பிற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

    அரசு ஆயுர்வேதா, கல்லூரி, 2 சித்தா கல்லூரி தலா ஒரு யுனானி, ஹோமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 21 இடங்களும், மற்ற இடங்கள் 259-ம் உள்ளன.

    26 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1660 இடங்கள் உள்ளன. அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது.

    யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்புக்கு கலந்தாய்வு மூலம் டாக்டர்கள் ஜெயின் ராஜ், கதிரேசன், ரமேஷ், வினோத்குமார், அரவிந்த், ரஞ்சித் நடேஷ் ஆகிய 6 மாணவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, இந்த ஆட்சியில் விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல் மற்றும் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நிதி அறிக்கையில் 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் செயல்பாடுகள் அனைத்துமே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

    • சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.
    • காலை 7 மணி முதல் 10 மணி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவுக்கு கலந்தாய்வு நடந்தது.

    சென்னை:

    இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.

    இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும்.

    அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசுக் கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்தப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்) ஆகிய ஆயுஷ் பட்டப்படிப்புகளுக்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்பைடையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,573 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 878 விண்ணப்பங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 707 பேரின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன.

    இந்த இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 424 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.

    காலை 7 மணி முதல் 10 மணி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவுக்கு கலந்தாய்வு நடந்தது. பிறகு காலை 10 மணி முதல் பகல் 1.30 மணிவரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

    பிற்பகலில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜனவரி 4-ந் தேதி வரை (டிசம்பர் 31, ஜனவரி 1,2-ந் தேதிகளில் கலந்தாய்வு இல்லை) கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வு தொடர்பான விவரங்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் மருத்துவ துறையின் தவறான கொள்கையால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் சரண்டர் செய்வதிலும், அதனை நிரப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் இருந்தும் தவறான கொள்கையால் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். இடங்களுக்கு 4 கட்டமாக ஆன்லைன் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் 2 முறை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தியது. அதன்பிறகும் தமிழகத்தில் உள்ள பிரபலமான அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.

    சென்னை மருத்துவ கல்லூரியில் (எம்.எம்.சி.) ஒரு இடம், ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் ஒரு இடம், மதுரை, தஞ்சாவூர், கரூர், அரியலூர் ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா ஒரு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒரு கலந்தாய்வு முடிந்தபிறகும் காலியாக இருக்கின்றன.

    இந்த ஆண்டு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 800 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்கியது. 15 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட அந்த இடங்களுக்கு டெல்லியில் உள்ள பொது சுகாதார பணிகள் இயக்ககம் கலந்தாய்வு நடத்தி முடித்துள்ளது.

    டிசம்பர் 29-ந்தேதியுடன் மருத்துவ கலந்தாய்வு முடிவுக்கு வந்தன. அதன் பிறகும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்ட 6 பேர் அந்த இடங்களில் சேரவில்லை. அவர்கள் அனைவரும் வேறு மாநிலத்தவர்கள்.

    அவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்விலும் மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்விலும் பங்கேற்று இடங்களை தேர்வு செய்து பின்னர் மாநில ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்துள்ளனர். இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தற்போது காலியாக உள்ளன.

    2020 வரை 2 கட்ட அகில இந்திய கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள இடங்கள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கு பிறகு காலி இடங்கள் மாநில அரசிடம் சரண்டர் செய்வது இல்லை.

    கடந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்த பிறகு 24 இடங்கள் காலியாக இருந்தன. அரசு மருத்துவக்கல்லூரிகளில் காலியாக இருந்த அந்த இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியும் கோர்ட்டு மூலம் அணுகியும் வாய்ப்பை பெற்றது.

    மத்திய அரசின் மருத்துவ துறையின் தவறான கொள்கையால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் சரண்டர் செய்வதிலும், அதனை நிரப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் இருந்தும் தவறான கொள்கையால் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த கொள்கையை மாற்ற வேண்டும் என்றும், இதனால் அந்த இடங்கள் கடைசி வரை காலியாகவே போய்விடுவதால் மருத்துவ கனவுகளுடன் வந்த ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது என்று கல்வியாளர்கள் மனம் குமுறுகிறார்கள்.

    இதுபற்றி மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துசெல்வன் கூறுகையில், 'அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், எல்லாம் நிரம்பி விட்டன. இது குறித்து வேறு எதையும் கூற இயலாது' என்றார்.

    • அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சினை இல்லை.
    • மற்ற யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. புதுவையில் மட்டும் தான் நடத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு திடீரென அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டு மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மருத்துவக் கல்லூரிக்கான உரிமம் புதுப்பிக்கத் தவறியமைக்கான காரணங்களை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் அதிகாரிகளை கடிந்து கொண்டார். டாக்டர்கள் சரியாக வருவதில்லை. இதை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ கழகத்திற்கு பல கல்லூரிகளில் டாக்டர்கள் சரியாக வருவதில்லை என்றும் மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லி கொடுப்பதில்லை என்றும் புகார்கள் சென்றுள்ளது. இதனால் வருகை பதிவேடு மற்றும் சி.சி.டி.வி கேமரா பதிவு மருத்துவ கழகத்தின் இணையதளத்துடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனை ஏற்பாடு செய்த புதுவை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் இணைப்பு தராமல் விட்டு விட்டார்கள். பெற்றோர்களும் மாணவர்களும் கவலைப்பட வேண்டாம். மிக விரைவில் இந்த குறைபாடுகள் சரி செய்யப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த குறைபாட்டிற்கு அதிகாரிகள் காரணம். அவர்கள் அதை முறைப்படுத்தி இருக்க வேண்டும். மருத்துவ மாணவர்களின் படிப்பில் யாரும் விளையாட கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் ஒரு பிரச்சினையும் கூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சினை இல்லை. இது தான் அடிப்படையானது. இவை தான் மருத்துவக் கல்லூரிக்கு மிக முக்கியமானது.

    மற்ற யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. புதுவையில் மட்டும் தான் நடத்தப்படுகிறது. அதனால் புதுவையின் பெருமை குலைய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலங்காலமாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்தாய்வினை மாற்றுவது என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதற்கு சமம்.
    • பொதுக்கலந்தாய்வினை மத்திய மருத்துவக்குழு நடத்தும் என்ற அறிவிப்பாணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இளநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவம், பட்டயப் படிப்பு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் தயாரித்தல், கலந்தாய்வு நடத்துதல் மற்றும் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசின் தேர்வுக் குழுவால் ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தது. இதன்மூலம் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கலந்தாய்வு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் 2.6.2023 நாளிட்ட அறிவிக்கை எண் 367-ஐ மத்திய அரசிதழில் அனைத்து இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இருக்கைகளை எந்த முகமையின் மூலம் எந்த முறையில் கலந்தாய்வு நடத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால், தமிழ்நாட்டில் உள்ஒதுக்கீடு பெறும் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மாநிலத்திற்குட்பட்ட மருத்துவ இருக்கைகளை மாநில அரசு நிரப்புவது என்பதுதான் பொருத்தமுடைய ஒன்று. அப்பொழுது தான் மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு ஆகியவை காப்பாற்றப்படும்.

    மேலும், மாநிலத்திற்குட்பட்ட மருத்துவ இருக்கைகள் தமிழ்நாட்டு மாணவ, மாணவியருக்குத்தான் கிடைக்கிறதா என்பதும் உறுதிப்படுத்தப்படும்.

    இது மட்டுமல்லாமல், காலங்காலமாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்தாய்வினை மாற்றுவது என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதற்கு சமம். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    எனவே, பொதுக்கலந்தாய்வினை மத்திய மருத்துவக்குழு நடத்தும் என்ற அறிவிப்பாணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதற்குத் தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கொடுத்து மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
    • நெக்ஸ்ட்டு தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட்டு என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெக்ஸ்ட்டு தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், நெக்ஸ்ட்டு தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    சென்னை :

    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் முத்துச்செல்வன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம், 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் 24 மணி நேர சேவை மூலம் 'நீட்' தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பதற்கு ஆலோசனை வழங்கும் விதமாக தொடங்கி வைக்கப்பட்டது. 40 மன நல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    2022-ம் ஆண்டில் 60 மனநல ஆலோசகர்களை கொண்டு இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆண்டில் (2023) நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 தொடங்கப்பட்டு கூடுதலாக 20 மனநல ஆலோசகர்கள் மற்றும் 2 மனநல மருத்துவர்களை கொண்டு வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் '104' மருத்துவ உதவி தகவல் மையம் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நோக்கத்தின்படி, இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய 1,44,516 பேருக்கு மே 18-ந்தேதி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை 54,374 மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அதில் 177 பேர் அதிக மனநல அழுத்தத்தில் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களிடம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

    நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 68,823 தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளின் விவரங்கள் நீட் தேர்வு நிர்வாகத்திடம் கேட்கப்பட்டு உள்ளது.

    அவர்களின் விவரங்கள் கிடைத்தவுடன் அந்த மாணவர்களை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இதுமட்டுமன்றி நீட் தேர்வு முடிவில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் பிரபஞ்சன் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.

    மத்திய அரசு 15 சதவீதத்துக்கான கலந்தாய்வு நடத்தி முடித்தவுடன்தான் தமிழ்நாடு அரசு மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 15 சதவீதம் மற்றும் 85 சதவீத மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக வழங்கினால், கடந்தாண்டு ஏற்பட்ட காலதாமதத்தையும் தவிர்த்து உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விரைந்து முடிக்கப்படும்.

    மேலும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தேர்வுக் குழு செயலாளர் ஆகியோரிடம் அடுத்த வாரமே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கும் பணியை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் காலதாமதம் இன்றி உடனடியாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்படும்.

    மேலும், இந்த ஆண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 450 இளங்கலை மருத்துவ படிப்பு இடங்களும், அரசு புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியில் 50 பல் மருத்துவ இடங்களும், கே.கே.நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 50 இளங்கலை மருத்துவ இடங்கள் என மொத்தம் 550 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×