என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்"

    • தொலைக்காட்சி பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள்.
    • பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை.

    பெரிய டேபிள் போட்டு அதன் மீது அலங்காரத் துணியை விரித்து, தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருப்போம். குழந்தை அந்த துணியை இழுத்து, இழுத்து விளையாடி ஒரு கட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி நழுவி விழக்கூடும். சென்னையில் இப்படி தொலைக்காட்சி பெட்டி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அதேபோல் தொலைக்காட்சி பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள். எடை குறைந்த, சக்கரங்கள் கொண்ட டீப்பாயில் தொலைக்காட்சி பெட்டியை வைக்க வேண்டாம். வாஷிங்மிஷின் எந்திரத்தை திறந்து வைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்புகொண்டது குழந்தை. எனவே உள்ளே இறங்கி கதவை மூடிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

    டேபிள் பேனின் சுழற்சி குழந்தைகளை வசீகரிக்கும் இன்னொரு ஆபத்து. சுழலும் விசிறிகளுக்கு இடையே கையை நுழைக்க வேண்டும் என நினைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே நெருக்கமான கம்பித்தடுப்புகள் இருக்கும் டேபிள் பேன்களையே வாங்குங்கள். அப்படியே வாங்கினாலும், அதைத்தொட்டு விளையாட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். டேபிள் பேனை போலவே எரியும் சுடர் விளக்கும் குழந்தைகளின் ஆவலைத் தூண்டக்கூடிய ஒன்று. இந்த வசீகரம் குழந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே சுடர் விளக்கு, எரியும் மெழுகுவத்தி ஆகியவற்றை குழந்தையின் கைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள்.

    குழந்தைகளின் பள்ளி உணவு டப்பாக்களில் விக்கிக்கொள்ளும் அளவுக்கோ, தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கோ கடினமான, பெரிய அளவிலான உணவு பொருட்களை கொடுப்பதைத் தவிருங்கள். குறிப்பாக, பெரிய இறைச்சி அல்லது எலும்புத்துண்டுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை. குழந்தைகள் தூங்கும்போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ இஸ்திரி போடுவது, மின்சாதனங்கள் பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையை கழுவுவது, வெள்ளையடிப்பது போன்ற பணிகளை செய்வது நல்லது.

    • கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
    • மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும் என்பார்கள். அந்த அளவுக்கு கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கையெழுத்து மோசமாக இருந்தால் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். தேர்வில் அதன் தாக்கம் வெளிப்படும்.

    மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பேனா கொண்டு எழுதும் நடைமுறை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை பொறுத்தவரை கையெழுத்து முக்கியமானது. அதுதான் அவர்களின் மதிப்பெண்ணையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். கையெழுத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.

    * தினமும் எழுதி பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும். குழந்தைகள், மாணவர்களை பொறுத்தவரை வீட்டு பாடங்கள் எழுதுவதுடன் நிறுத்திவிடக்கூடாது. படிக்கும் பாடங்களை எழுதி பார்க்கலாம். அது நன்றாக நினைவில் பதிவதற்கு வழிவகுக்கும். புத்தகங்கள், பத்திரிகை செய்திகளை எழுதி பார்த்தும் பயிற்சி பெறலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ளாகவே ஆர்வம் எழ வேண்டும். அதற்கேற்ப அவர்களை கவரும் வகையிலான எழுது பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் எண்ணத்தில் உதிக்கும் வார்த்தைகளை எழுதுமாறு ஊக்குவிக்கலாம்.

    * இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு நிர்பந்திப்பது அவசர அவசரமாக எழுதி பார்க்கும் மன நிலைக்கு தயார்படுத்திவிடும். முக்கியமான தேர்வுக்கு தயாராகும்போது வேண்டுமானால் சற்று வேகமாக எழுதி பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த வேகம் எழுத்தின் தரத்தை பாழ்படுத்திவிடக்கூடாது. கையெழுத்து எப்போதும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பதற்கு ஏதுவாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

    * எழுதி பார்க்கும்போது குழந்தைகள் சரியான தோரணையில் அமர்ந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்த நிலையில் அமர்ந்து எழுதுவதுதான் சரியான தோரணையாகும். எழுதும்போது மணிக்கட்டு பகுதியைவிட கைவிரல்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது பேனாவை கைவிரல்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து முழு வடிவம் பெறும். அழகாகவும் மாறும். கைவிரல்களும், பேனா முனையும் நேர் நிலையில் இருக்க வேண்டும். சில குழந்தைகள் எழுதும்போது கைகளை வளைப்பதுண்டு. இது சரியான தோரணை கிடையாது.

    * பேனா தேர்விலும் கவனம் தேவை. சரியான பேனாவை தேர்ந்தெடுத்தால்தான் எழுத்து வடிவம் அழகு பெறும். எழுத்தின் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எழுதும்போது குழந்தைகளின் கைகள் நிதானமாக இருக்க வேண்டும்.

    * காகித தேர்வும் எழுத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட பேப்பரில் குழந்தைகளை எழுத வைப்பது பொருத்தமாக இருக்கும். எழுத்துக்கள் நேர் வரிசையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காலங்கள் கடந்தும் நினைவுகளை அசைபோடவைக்கும் அசாத்திய ஆற்றல் கடிதத்துக்கு உண்டு. குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் படிக்கும், வேலை பார்க்கும் இளம் வயதினர் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

    • ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குழந்தைப் பருவ அனுபவம் இருக்கும்.
    • இன்றைய தலைமுறையைச் சீர்படுத்துவது என்பது சற்று சிரமமானது.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனது பெற்றோர் குறித்த கண்ணோட்டம் வெவ்வேறாக இருக்கும். ஆனால், அவர்களின் வெற்றிக்கும், நிறைவான வாழ்க்கைப் பயணத்துக்கும் பெற்றோரும், அவர்களது வளர்ப்பு முறையும்தான் படிக்கட்டுகளாக அமை கின்றன. அதுதான் ஒரு குழந்தை எவ்வாறு மற்றவர்களுடன் பேச, பழக, நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் மனநலம், ஆரோக்கியம், நம்பகத்தன்மை, குடும்பம் மற்றும் சமூகத்துடனான உறவை மேம்படுத்த உதவுகிறது. இந்த உலகில் அனைத்து வேலையைச் செய்வதற்கும் அதுசார்ந்த தனிப்பட்ட பயிற்சி இருக்கிறது. ஆனால், குழந்தையை வளர்ப்பதற்கான பயிற்சி என்பது, சிறுவயதில் நாம் நமது பெற்றோரைப் பார்த்துத் தெரிந்துகொண்ட அனுபவமாக மட்டுமே உள்ளது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குழந்தைப் பருவ அனுபவம் இருக்கும். இந்த அனுபவத்தைக் கொண்டு இன்றைய தலைமுறையைச் சீர்படுத்துவது என்பது சற்று சிரமமானது. இது சிறந்த பெற்றோராக நடந்துகொள்வதற்கும், அவர்களது கடமைகளைச் சரியாகச் செய்வதற்கும் உதவும்.

    வேலைச்சூழலில், பெற்றோரின் மன நிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிகாட்டுதலை உருவாக்கிக் கொடுப்பதில் அதிகப்படியான சவால்கள் இருக்கும். ஒவ்வொரு பெற்றோரின் மனநிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்காக, அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கு எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்கள்? அவர்களின் உணர்ச்சிகளையும், சூழலையும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை வகைப்படுத்துவதில் அதிக சவால்கள் இருக்கின்றன.

    அப்ப எல்லாம்.. என்று நாங்க குழந்தைகளை எப்படி வளர்த்தோம் என்று பெருமைப்பட்டாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் இருக்கவே செய்தன. பெண் – ஆண் குழந்தை பாகுபாடு தற்காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது. அது பூஜ்ஜியத்தை நோக்கி நகரவேண்டும். குழந்தை வளர்ப்பில் பெரும்பாலும் பெண்களின் பங்கே அதிகமாக உள்ளது. ஆண்களின் பங்கும் இன்னும் பெரும்பாலும் குறைச்சலாகவே உள்ளது.

    நாம் ஆண்டாண்டாக பெற்ற கல்வியும் தொழில்நுட்பமும் எப்படி குழந்தை வளர்ப்பில் வலுசேர்க்கப்போகின்றது என்பதில் கவனம் தேவை. தொழில்நுட்பம் நிறைய கவனச்சிதைவினை நோக்கிச்செல்கின்றது. நாமும் எதனை நோக்கி செல்கின்றோம் என்றே பலசமயம் புரிவதில்லை. குழந்தை என்னவாக வேண்டும் என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தால் அது ஒவ்வொரு முறையும் புதிய புதிய பரிமாணத்தினை எடுக்கும். சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் சிறந்த என்பதற்கான அர்த்தம் கூர்மையாகிக்கொண்டே செல்லும்.

    வாழ்க்கை, வேலை என எதுவாக இருந்தாலும் தோல்வி ஏற்படுவது இயல்பானது. அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அதில் இருந்து வெற்றிக்கான வழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களையும், உங்கள் முயற்சிகளையும் முழுமையாக நம்புகிற நபரைத் தேர்ந்தெடுத்து, அவருடன் சேர்ந்து பயணிப்பதே வளமான எதிர்காலத்துக்கான சரியான பாதைக்கு வழிவகுக்கும்.

    • குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.
    • மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை கேட்டு அடம்பிடிப்பது இயல்பானது. அவர்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கும் அனுமதி கேட்பார்கள். அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும்பட்சத்தில் அழுது அடம்பிடிப்பார்கள்.

    அப்படி அழுது அடம்பிடித்த உடனேயே அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது தவறான செயலாகும். அவர்கள் விரும்பும் பொருட்கள், விஷயங்கள் ஏற்புடையதா? என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். அவை ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறானது.

    எதற்காக மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பிடிவாதம் அதிகரித்துவிடும். அது அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோர் மீதான நம்பிக்கையை இழக்கவும் வைத்துவிடும்.

    'நீ அழுது அடம்பிடிப்பதற்காக உன் விருப்பப்படி எதுவும் செய்ய மாட்டேன்' என்று அவர்களுடன் விவாதம் செய்வதும் கூடாது. அது பலனும் தராது. ஏனெனில் அதனை காதுகொடுத்து கேட்கும் மன நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் அது குறித்து பேசாமல் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.

    அவர்களுக்கு பிடித்தமான மற்றொரு விஷயம் குறித்து பேசி, அதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். அது அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவும். அந்த சமயத்தில் அவர்களின் கோரிக்கையை மறுப்பதற்கான காரணத்தை விளக்கி புரியவைத்துவிடலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வந்துவிடும்.

    • குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள்.
    • குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

    நவீன தொழில்நுட்ப காலத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். வயதிற்கும், மனவளர்ச்சிக்கும் தொடர்பு இல்லாத அளவிற்கு பல நேரங்களில் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உறவு குறித்த புரிதலோ, வாழ்வின் நடைமுறை சிக்கல்களோ அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

    குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள். இதனால் எது சரியானது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. ஏதோ ஒரு கோபத்தில் லேசாக கண்டித்தாலே தாங்கி கொள்ள முடியாத மனநிலைக்கு ஆளாகின்றனர்.

    குழந்தை எது கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறார்கள். குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த இடத்தில் தான் குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. தான் நினைத்ததை அடைய அடம் பிடிக்கும் குழந்தைகளால் யாரோடும் இணங்கி செல்லவோ, விட்டுக் கொடுத்து போகவோ முடிவது இல்லை.

    குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து தான் எதையும் முதலில் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் நம்பிக்கையோடு அணுகும் வகையில் பெற்றோரின் செயல்பாடு இருக்க வேண்டும். அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் எந்த பிரச்சினை என்றாலும் தீர்வு கேட்டு அணுகுவார்கள். மனரீதியாக சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்து தேற்ற முடியும். தோல்வியே கண்டாலும் தொடர்ந்து முயன்று வெற்றி வீரர்களாக வலம் வர குழந்தைகளை தயார்படுத்த முடியும்.

    • குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன.
    • கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

    சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன.

    குறிப்பாக. உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

    தூய்மையின்மை காரணமாகவும், கை சுத்தம் இல்லாமல் இருப்பதும் நோய்த்தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி, வெளியே எங்காவது சென்று வந்த பிறகு, கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுவதுதான்.

    பல குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம். மேலும் கழிவறை, குளியல் அறை, பொது இடங்களைப் பயன்படுத்தும் போதும் குழந்தைகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். எனவே அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது கைசுத்தம் மிக அவசியம்.

    கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும்.

    தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகளை கையாளும்போதும் கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படிச்செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.

    கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலகக் கை கழுவும் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது.

    • சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள்
    • சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன.

    குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாக பார்க்கப்பட்டன.

    இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறை அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிறபோது வெட்கப்பட்டே தீரவேண்டும்.

    கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.

    21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.

    விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.

    புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

    வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.

    முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.

    இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.

    இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூக குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப்பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

    சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

    போதை பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

    மனநல ஆலோசகர் சங்கமித்திரை:- சமுதாயத்தில் ஒரு குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பது முதலில் பெற்றோர் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளரும் போது அறியாமல் செய்யும் தவறுகளை, ஏன் இப்படி செய்தாய்? என்று கண்டிக்க கூடாது. இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி புரிய வைக்க வேண்டும்.

    கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் கல்வி அமலில் இருந்ததால் செல்போன் பற்றிய புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே செல்போனில் நல்ல விஷயங்கள் எது? கெட்ட விஷயங்கள் எது? என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும். பள்ளியில் வகுப்புகள் நடத்தும்போது மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்க பழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.

    மாதவரம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை சூடாமணி:- அந்த கால சினிமா காட்சிகளும், பாடல் வரிகளும் நல்ல சிந்தனைகளையும், கருத்துகளையும் புகட்டின. ஆனால் இந்த கால சினிமா காட்சிகள், மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்து செல்வது போன்று இருக்கிறது.

    சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன. தங்கள் மனம் கவர்ந்த கதாநாயகன் திரையில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது, வில்லன்களை அடித்து உதைப்பது, அரிவாளை தூக்குவது என செய்யும் செயல்களை மாணவர்கள் சிலர் அப்படியே கடைபிடிக்கிறார்கள். இது சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும்.

    எனவே திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவதற்கு நடிகர்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது. தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகள், சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

    வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சுமதி:- நாங்கள் எங்களது ஆசிரியர்கள், ஆசிரியைகளை மதித்தோம். அவர்களது அறிவுரைகளைக் காது கொடுத்துக்கேட்டோம். அவர்கள் சொல்படி நடந்தோம். இதனால் நாங்கள் இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம்.

    ஆனால் தற்போது உள்ள மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் சொற்பேச்சைக் கேட்பது இல்லை. மதிக்காமல் அவமரியாதை செய்கிறார்கள். சீருடையில் மாணவர்கள், மாணவிகள் மது அருந்துவது கலாசார சீரழிவு. இந்த வீடியோ பதிவுகளை பார்க்கிற போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது.

    ஏழை-எளிய பெற்றோர்கள் நம் பிள்ளை நம்மைப்போன்று கஷ்டப்பட கூடாது. நன்கு படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதை மாணவர்கள் உணர்ந்து நல்லொழுக்கங்களைக் கடைபிடித்து வாழ்வில் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும்.

    சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமலிங்கம்:- தமிழகத்தில் போதைப்பழக்கம் மாணவ-மாணவிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதை பொறுத்தமட்டில் தமிழனாக ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். அரசு, ஆசிரியர், பெற்றோர், சமூகம் என அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி சாக்லெட் போன்ற வடிவில் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனை மாணவர்கள் சர்வ சாதாரணமாக பகிர்ந்து கொள்கின்றனர். போதைப்பொருளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சொல்லி வருகின்ற அதே வேளையில் எப்படி போதை பொருட்கள் மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. டாஸ்மாக் கடைகளில் யார் வேண்டுமானாலும் மது வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது, ஆதார் அட்டைக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே மதுபானம் வழங்குவது, டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைப்பது போன்ற கடுமையான விதிகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன்:- இன்றைய காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைக் கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுபிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள். அதேப்போன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    மாணவர்களுக்கு மதுப்பாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.

    • மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
    • குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும்.

    கோவை கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி துறை தலைவர் (இ.இ.இ.) பேராசிரியை மைதிலி கூறியதாவது:-

    பள்ளி படிப்பு முடிந்தது கல்லூரிக்குள் வரும் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது. நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலையும் ஏற்படுகிறது. கல்லூரி படிப்பு தொடர்பாக பெற்றோர் தங்களின் விருப்பம் மற்றும் முடிவுகளை மாணவர்கள் மீது திணிக்க கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் விரும்பும் படிப்பில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். முதல் மதிப்பெண் எடுக்க வற்புறுத்துவதால் மாணவர்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் நிலை உள்ளது.

    மதிப்பெண் அவசியம் என்றாலும் சாதனை படைப்பதற்கு தன்னம்பிக்கை, தனித்திறன்கள் மிகவும் முக்கியம். குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுப்பதோடு பெற்றோர் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். குடும்பத்தின் நிலை தெரியும் வகையில் குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும்.

    மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆனால் தங்களின் மனஉணர்வுகளை நண்பர், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் மனநிலை அறிந்து பெற்றோர் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர்களின் ஆங்கில வாசிப்பு, கணிதம் பாடங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
    • குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் நல்லதுதான்.

    கொரோனா நோய்த் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.

    தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

    கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதிலும் ஆரம்பக் கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

    பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படைகூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.

    இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை.

    எண்ணும் எழுத்தும் திட்டம்

    இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது.

    அதற்காக உருவானதுதான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது.

    அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அரும்பு, மொட்டு, மலர்...

    குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

    அரும்பு என்பது படிக்கத் தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.

    இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.

    ஆடல், பாடல், கதை சொல்லல்...

    தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

    • உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது.
    • எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம்.

    நம் குழந்தைகளின் பிஞ்சு மனதிலேயே நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அவசியம். 

    அனுபவங்களின் வழியாகக் கற்றுக்கொள்பவையே குழந்தைகளின் கேரக்டரை வடிவமைக்கின்றன. பிறந்தது முதல் ஆறு வயது வரை மனதில் விதைக்கப்பட்ட விஷயங்களே வளர்ந்து, அவர்களை வாழ்க்கை முழுக்க வழிநடத்துகின்றன.

    இந்த வயதில் நாம் எதைச் சொன்னாலும், அவர்கள் எதிர்க் கேள்வியின்றி கேட்டுக்கொள்கிறார்கள். நாம் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

    * குழந்தைகளுக்கு முதலில் பழக்கப்பட வேண்டியது பல் துலக்குவதைப் பற்றியே. ஆரம்பத்தில் இதற்கென நேரம் ஒதுக்கி மெனக்கெட வேண்டும். நீங்கள் அவர்கள் முன் பல்லைத் தேய்த்துக் காட்டுங்கள். அதற்கு முன்பு நீங்கள் பல்தேய்க்கும் முறை சரிதானா என்பதை பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நாம் சரியாகச் செய்தால்தான் குழந்தைகளுக்கும் அந்த முறை கைக்கூடும்.

    * எந்த விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும்போதும் அதை எதற்காகச் செய்கிறோம். செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் விளக்கமாகச் சொல்லவும். குறிப்பாக, ஏன் இரண்டு வேளை குளிக்க வேண்டும், அப்படிக் குளிப்பதால் என்ன நன்மை என்பதைச் சொல்லலாம். குளிப்பதையே ரசனையான அனுபவமாக மாற்றலாம். குளித்த பிறகு மனமும் உடலும் அடையும் உற்சாகத்தைப் புரிந்துகொள்ளச் செய்யலாம்.

    * மிகச் சிறு வயதிலேயே தானாகச் சாப்பிடுவது, உடுத்துவது, தூங்குவது என எல்லாவற்றையும் திணிக்காமல் அவர்களிடம் அனுமதி கேட்கலாம். எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம். அந்தக் கேள்விகளின் வழியாகவே, குழந்தைகளின் கற்றல் துவங்குகிறது. எந்த விஷயத்தையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள இதுபோன்ற விஷயங்களைப் பெற்றோர் பழக்கப்படுத்தலாம்.

    * பெரும்பாலான வீடுகளில் காலையில் எழுவதும் பள்ளிக்குக் கிளம்புவதும் போர்க்கோலமாக இருக்கும். இது அவ்வளவு சிக்கலான விஷயமில்லை. தூங்கப்போகும் முன்பு, வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடுத்த நாள் வேலைகள், அதற்கான நேரத் திட்டமிடல் பற்றிப் பேச வேண்டும். பள்ளிக்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் எனில், உங்கள் குழந்தை எந்த நேரத்தில் எழுந்து என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், எல்லோருக்குமே காலை நேரம் இனிமையாக மாறும்.

    * தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலைக்கடன் கழிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல்விடுவதே பல நோய்களுக்குக் காரணம். காலை வேளையில் இதற்கான நேரமும் அவசியம். சிறுநீர் மற்றும் காலைக்கடன் கழிப்பதை அடக்குவதால், உடல் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். தினமும் குழந்தைகள் எழுந்ததும் மிதமான சூட்டில் சுடுநீர் கொடுத்து பத்து நிமிடம் கழித்துக் குளிக்க வைத்தால், காலைக் கடன் பிரச்னை என்பது இருக்கவே இருக்காது.

    * தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்து வாயை மூடிக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தைகளின் இந்தச் செயல்களைப் பார்த்து, அந்தப் பழக்கம் இல்லாத பெரியவர்களும் மாறிக் கொள்வார்கள்.

    * விடுமுறை நாள்களில் வீடு, டாய்லெட் சுத்தம் செய்வது, தேவையற்ற பொருள்களைத் தேடிப்பிடித்துக் கழிப்பது போன்றவற்றையும் அவர்களுடன் இணைந்து செய்வது அவசியம். தனது இடத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர இது வாய்ப்பாக அமையும்.

    * உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது. உணவு தயாரிக்கும்போது சின்னச் சின்ன வேலைகளிலும் குழந்தைகளின் பங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். உணவு டைனிங் டேபிளுக்கு வருவதற்கு முன்பு அதற்காகச் செய்த உழைப்பைக் குழந்தைகள் புரிந்துகொள்ளச் செய்தால், உணவை வீணாக்கும் பழக்கம் மறைந்துவிடும்.

    • நாய் இனங்களும் குழந்தைகளுடன், நட்பாக விளையாடக்கூடியவை.
    • குழந்தைகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது.
    • குழந்தைகளுடன் அதிகம் நட்புறவு காட்டும்.

    நாய்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானோருக்கு பிடித்தது, நன்கு புசு... புசு... என்று இருக்கும் நாய்கள் தான். குறிப்பாக இந்த மாதிரியான நாய்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த வகை நாய்களுக்கு ரோமமானது அதிகமாக இருக்கும். ஆகவே இவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போலவே இருப்பதால், அவற்றுடன் குழந்தைகள் நன்றாக விளையாடுவார்கள். அதேபோல கோல்டன் ரிட்ரைவர், லாப்ரடார், பூடில், சிஸ்டூ, கோமண்டர், கோம்பை... போன்ற நாய் இனங்களும் குழந்தைகளுடன், நட்பாக விளையாடக்கூடியவை. இவற்றால் குழந்தைகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது.

    குழந்தைகளுக்கு ஏற்ற, குழந்தைகளுடன் விளையாடக்கூடிய நாய் இனங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா..!

    1. சிஸ்டூ (shiz tuz)

    இந்த வகை குட்டி நாய்கள்தான், குழந்தைகளின் செல்லப்பிராணி பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. இவை அழகானவை. துறுதுறுவென இருப்பவை. பிடித்து விளையாடும் அளவிற்கு, முடிகள் வளர்வதால் குழந்தைகளின் சிகை அலங்கார விளையாட்டிற்கு ஏற்றவை. வீட்டில் வளர்ப்பது தொடங்கி, வாக்கிங் அழைத்துச் செல்வது, கடற்கரையில் விளை யாடுவது, வெளி இடங் களுக்கு சென்றால் கையோடு தூக்கிச் செல்வது... என எல்லா வகையிலும், இது 'பெஸ்ட் சாய்ஸ்'.

    விலை: ரூ.10 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

    2. பூடில் (poodle)

    இதுவும், குட்டியாக இருக்கும் நாய்தான். சிஸ்டூ அளவிற்கு பிரபலம் இல்லை என்றாலும், தமிழ்நாட்டின் நிறைய வீடுகளில் பூடில் வளர்கிறது. சிஸ்டூவின் செல்ல சேட்டைகள், எல்லாமும் இந்த பூடில் நாய் இனத்திலும் எதிர்பார்க்கலாம். குழந்தை களோடு விளையாடுவது, பாசம் காட்டுவது... என உயிருள்ள விளையாட்டு பொம்மை போல இது செயல்படும்.

    விலை: ரூ.40 ஆயிரத்தில் தொடங்குகிறது

    3. கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever)

    இவை வெளிநாடுகளில், பெரும்பாலான குடும்பங்களில் வளர்க்கப்படும் வகை. குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரிடமும் சிறப்பாக விளையாடக்கூடியது. இந்த நாயின் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், இது மிகவும் அழகாக புசு... புசு.. என்று இருக்கும். இவை ரிட்ரைவர் வகையை சார்ந்தவை. அதாவது ஏதாவது ஒரு பொருளை தூக்கி எறிந்தால், அதை தேடி சென்று கவ்விக் கொண்டு வந்து நம்மிடமே சேர்த்துவிடும்.

    விலை: ரூ.15 ஆயிரத்தில் தொடங்குகிறது

    4. லாப்ரடார் (Labrador retriever)

    இது ரொம்பவும் கிளாசிக் நாய் இனம். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான நாய் என்று சிந்தித்தாலே, இந்த லாப்ரடார் ரிட்ரைவர் வகைகள்தான், முதலில் நினைவில் தோன்றும். வெள்ளை, கருப்பு வண்ணங்களில் இவை பெரும்பாலான வீடுகளில் வளர்ந்து வருகிறது.

    விலை: ரூ. 7 ஆயிரத்தில் தொடங்குகிறது

    5. கோம்பை (kombai)

    இது நம் தமிழ்நாட்டின் அடையாளம். நாட்டு நாய்களில் இதுவும் ஒன்று. மற்ற எல்லா நாட்டு நாய்களை விடவும், இவை குழந்தைகளுடன் அதிகம் நட்புறவு காட்டும். பாசமாக பழகும். குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி, விசுவாசமாக இருக்கும்.

    விலை: ரூ.10 ஆயிரத்தில் தொடங்குகிறது

    • காலம்காலமாக விளையாடி வந்த விளையாட்டுகளை மறந்து வருகிறோம்.
    • விளையாட்டு உலகம் அவர்களுக்கு நிழல் யுத்தமாக மாறிவிட்டது.

    பாரம்பரியம் என்பது தொன்றுதொட்டு வருவது ஆகும். அதனை நாம் காக்க வேண்டும். பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் பாரம்பரியத்தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. அந்த பாரம்பரிய நிகழ்வு நடத்தப்படுவதன் உண்மையான அர்த்தம் என்ன என்று நமக்கு தெரியாத நிலையிலும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். இந்த நிலையில் பாரம்பரிய நிகழ்வின் உண்மையான காரணம் அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

    அப்படி தெரிந்து கொண்டு பாரம்பரிய நிகழ்வை கொண்டாடுவது தான் சரியானதாக இருக்கும். அதோடு எதிர்கால தலைமுறைக்கும் சரியான வழியை காட்டியதாக இருக்கும். இதை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு காலமாற்றம் என்பது எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு வருகிறது. அதில் பல நேரங்களில் நாம் பலியாகி விடுகிறோம். எந்த காரணமும் இல்லாமல் நாகரிகம் என்ற பெயரில் பல நல்லவனவற்றை நாம் தொலைத்துவிட்டோம். அந்த வகையில் நாம் முதலில் தொலைத்தது நம்முடைய பாரம்பரிய உணவுகள் தான்.

    இதுதான் அனைத்து சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணமாகி விட்டது. பாரம்பரிய உணவை விட்டதால் பல்வேறு நோய்களுக்கும், உடல் ஒவ்வாமைக்கும் ஆளாகி விட்டோம். இதனால் அந்த உணவை இழந்ததோடு, தற்போது வாங்க முடியாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்து விட்டது.

    அதோடு பாரம்பரிய தொழில்களில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுவித்து கொண்டோம். இதனால் இன்று சுயதொழில் என்பதே வெகுவாக குறைந்து விட்டது. பெரும்பாலானோர் ஏதாவது ஒரு வேலைக்கு கூலிக்கு செல்பவர்களாகவே இருக்கிறோம். கைத்தொழில்கள் அழிந்து வருகின்றன. இதற்கு காரணம் அந்த கலைகளின் நுட்பங்களை அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தராததும், அதுகுறித்து முறையாக பதிவு செய்யாததும் காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல் பாரம்பரிய ஆடைகளை விட்டு விட்டோம். அதோடு அந்த வகை ஆடை அணிபவர்களை மதிப்பு குறைந்தவர்களாக நாமே கருத தொடங்கிவிட்டோம். ஆனால் அதே ஆடைகளை பிறர் அணிந்தால் அவர்களை உயர்வாக மதிப்பிடும் முரண்பாடான மனநிலையும் நம்மிடையே இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

    காலம்காலமாக விளையாடி வந்த விளையாட்டுகளை மறந்து வருகிறோம். காரணம் அவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர மறுத்துவிட்டோம். இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெற்று வந்த மகிழ்ச்சியை கொடுக்க தவறிவிட்டோம். இதனால் அவர்கள் செல்போனில் தங்கள் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.

    சில சாதாரண பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். விளையாட்டு உலகம் அவர்களுக்கு நிழல் யுத்தமாக மாறிவிட்டது. தற்போது மேலும் ஒருபடி மேலே போய் வன்முறை மனநிலை நிறைந்த விளையாட்டாக மாறிவிட்டது. இளம் வயதிலேயே தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது.

    வீட்டில் பெரியவர்களுக்கு உரிய இடம் தர மறுத்து வருகிறோம். இதனால் வீட்டில் பழங்கால பொருட்களும் குப்பைக்கு போய் விட்டன. பாரம்பரிய சடங்குகளை மறந்து வருகிறோம். பெரியவர்களின் வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டதன் காரணமாக பல்வேறு சுமைகளுக்கு ஆளாகி, அதை சுமக்கவும் தெரியாமல் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறோம். எனவே பழையது, முடிந்துபோனது, வரவேற்பு இல்லாதது என்று ஒதுக்கி விடாமல் குழந்தைகளுக்கு பாரம்பரிய கலாசாரத்தில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நாமும் கற்று கொள்ள வேண்டும்.

    இந்தியா என்பது பாரம்பரிய, பண்பாட்டுக் கூறுகளால் தான் வலுவாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதுவே தனி மனிதர்களை மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தையும் யாரும் வீழ்த்தி விடாமல் காத்து வருகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

    ×