search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 198680"

    அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் கழிகளை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. அதன்பிறகு அதனை கட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் கழிகளை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், இளைஞர்களை பாராட்டினர்.

    சிதம்பரம் அருகே ஜெயங்கொண்ட பட்டிணம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் ஜெயங்கொண்ட பட்டிணத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஜெயங்கொண்ட பட்டிணத்திற்கும் அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும் இடையில் பழைய கொள்ளிடம் ஆறு ஓடுகிறது.

    அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணம், கீழக்குண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றின் வழியாகத்தான் ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கு செல்ல முடியும். மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். அதுமட்டுமின்றி அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாது.

    எனவே ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும், அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும் இடையே உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது.

    அந்த தரைப்பாலத்தை கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் 3 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தினர். அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த தரைப்பாலத்தை வெள்ளம் அடித்துச்சென்றது. அதன்பிறகு அங்கு பாலம் கட்டப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக ஆற்றில் இறங்கிதான் கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் சென்று வருகிறார்கள்.

    இது ஒருபுறமிருக்க ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அந்த முதலைகளும் அவ்வப்போது கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையும் மீறி அவர்கள் வேறு வழியின்றி தினமும் ஆபத்தான நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி செல்கிறார்கள்.

    பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று 3 கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள், கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் நாட்கள் உருண்டோடி செல்கிறதே தவிர, அதில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கு ஒரு முடிவு கட்டவும், தற்காலிகமாக 3 கிராம மக்கள் அச்சமின்றி கொள்ளிடம் ஆறு வழியாக செல்லவும் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆலோசித்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மூங்கில் கழிகளை கொண்டு தற்காலிக பாலம் கட்ட முடிவு செய்தனர். அதற்காக இளைஞர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். இதன் மூலம் ரூ.20 ஆயிரம் வசூலானது.

    இந்த பணத்தை வைத்துக்கொண்டு இளைஞர்கள், கொள்ளிடம் ஆற்றில் பழைய தரைப்பாலம் இருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் எழுப்பினர். அதன்மேல் மூங்கில் கழிகளால் பாலம் கட்டும் பணி 2 நாட்களாக நடைபெற்றது. இந்த பணியை தொழிலாளர்கள் செய்தனர். பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. 3 கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மூங்கில் பாலத்தின் வழியாக சென்று வருகிறார்கள். இளைஞர்கள் தாங்களாக முன்வந்து மூங்கில் பாலம் அமைத்ததால் மகிழ்ச்சி அடைந்த 3 கிராம மக்கள், அவர்களை வெகுவாக பாராட்டினர். 
    வேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
    கோயம்பேடு:

    வேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். தரைதளத்தில் இருந்த பாதுகாவலர் அவரை கைகளில் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார்.

    சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் கமலா திரையரங்கம் எதிரில் தனியார் அடுக்குமாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. அதில் நான்காவது மாடியிலிருந்து ஒரு வாலிபர் குதிக்க முயன்றார். இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை வேண்டாம்... என எச்சரித்து சத்தம் போட்டனர்.

    ஆனாலும் அதை கேட்காமல் அந்த வாலிபர் ஏறி குதித்தார். சத்தம் கேட்டு அதை தரைதளத்திலிருந்து கவனித்த பாதுகாவலர் சகாயம் ஓடிச்சென்று அவரை 2 கைகளாலும் தாங்கிப்பிடித்தார். இதனால் அந்த வாலிபரின் தலை தரையில் மோதாமல் தவிர்க்கப்பட்டு உயிர்தப்பினார்.

    ஆனால் இந்த சம்பவத்தில் பாதுகாவலர் சகாயத்தின் கை முறிந்தது. குதித்த வாலிபரும் காயம் அடைந்தார். இரண்டு பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிதம்பரத்தை சேர்ந்த சபரிநாதன் (வயது 27) என்று தெரிந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

    இங்கு தங்கியிருந்து வேலை தேடிவந்த அவருக்கு சரியான வேலை கிடைக்காததால் ஏமாற்றத்துக்கு உள்ளானார். தனக்கு வேலை கிடைக்காததற்கு இடஒதுக்கீடு மற்றும் நிர்வாக குளறுபடிகள் தான் காரணம் என்று அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி தற்கொலை முயற்சிக்கு முன்னதாக முகநூலில் பதிவு செய்துள்ளார்.

    வாலிபரின் தலை தன் மீது விழுந்தால் உயிர் போய்விடும் என்று தெரிந்தும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய பாதுகாவலர் சகாயத்தை வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களும், போலீசாரும் பாராட்டினார்கள். 
    ×