என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயக்குமார்"

    • அ.தி.மு.க.வில் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சிலர் வெளியே போனார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அ.தி.மு.க.வில் அவர்களுக்கு இடமில்லை.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்க சசிகலா யார்? அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் ஒருங்கிணைக்கும் பணியை வேண்டுமானால் சசிகலா செய்யட்டும். ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழக்கூடாது.

    அ.தி.மு.க.வில் இன்று எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இன்று எழுச்சியாக போய்க் கொண்டிருக்கிறது. சசிகலாவின் கருத்தை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சொல்வது தேவையில்லாத கருத்து. அது எள்ளி நகையாடக் கூடிய கருத்தாகத்தான் இருக்க முடியும்.

    அ.தி.மு.க.வில் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சிலர் வெளியே போனார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அ.தி.மு.க.வில் அவர்களுக்கு இடமில்லை. அவர்களை கட்சியிலும், கூட்டணியிலும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கும் இடங்களைத்தான் மற்றவர்கள் பெற முடியும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பூர்வாங்க வேலைகளை தொடங்கி விட்டோம். தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியையும், ஜெயலலிதாவின் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறோம்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கலாம் என்றனர். இப்போது ஏன் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் வருவதால் ரூ.1000 கொடுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சசிகலா பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யின் உருவம்.
    • ஓ.பி.எஸ்.சின் ஊதுகுழலாகவே இருங்கள். தப்பில்லை. ஆனால் உங்களை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. அணிகளை ஒன்று சேர்ப்பதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன். அது நடந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஒன்றிணையும் என்று சசிகலா தெரிவித்து இருந்தார்.

    இதற்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்படுகிறது. கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

    இணைப்பு பேச்சு நடப்பதாக சசிகலா கூறியிருப்பது வடிகட்டிய பொய். அவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யின் உருவம்.

    அ.தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்வதில் இருந்தே அவர்தான் தி.மு.க.வின் பி.அணியாக செயல்படுகிறார். தி.மு.க.வுக்காக வேலை செய்கிறார் என்பது தெளிவாகி விட்டது.

    நீங்கள் ஓ.பி.எஸ்.சின் ஊதுகுழலாகவே இருங்கள். தப்பில்லை. ஆனால் உங்களை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ.2500, கரும்பு உள்ளிட்ட பொருட்களை அனைத்து கார்டுகளுக்கும் வழங்கினோம். ஆனால் இப்போது கொடுப்பது ரூ.1000. கரும்பு கிடையாது. அதுவும் கார்டிலும் பாகுபாடு பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த முடியாது.
    • அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்.

    சென்னை :

    அதிமுக 4ஆக உடைந்திருக்கு. தமிழகத்தில் அடுத்த மிகப்பெரிய கட்சி நாங்க தான் என புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * அதிமுகவால் தான் பாமகவிற்கு சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில் இடம் கிடைத்தது.

    * பாமகவுக்கு அடையாளம் குடுத்ததே நாங்கதான்; நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால?

    * பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த முடியாது.

    * அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்.

    * சிறுமையான கருத்தை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையில் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டாம்.

    * சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. அண்ணா வழியில் வந்த கட்சி. பெயரிலேயே அண்ணாவை கொண்டுள்ளோம்.
    • தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் பெயராகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அண்ணா வழியில் வந்த கட்சி. பெயரிலேயே அண்ணாவை கொண்டுள்ளோம். 1963-ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது, சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு பெயர் மாற்றம் மூலம் என்ன கிடைக்கப்போகிறது என நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டனர்.

    அதற்கு அண்ணா, கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என மாற்றியதன் மூலமாகவும், பாராளுமன்றம் என்பதை லோக் சபா என மாற்றிதன் மூலம் என்ன கிடைத்ததோ, அதே அனுகூலம் தான் எங்களுக்கு கிடைக்க போகிறது என பதில் அளித்தார்.

    தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் பெயராகும். இதன்மூலம் நமது மாநிலத்திற்கு தனித்தன்மை இருக்கிறது. எனவே, தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஜெயலலிதா பற்றி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தக்கூடாது. அது பண்பாடற்ற செயல். ஜெயலலிதா உயிரோடு இல்லாதபோது பண்பாடு இன்றி பேசி இருக்கிறார். அவருக்கு அடையாளம் கொடுத்த இயக்கம் அ.தி.மு.க. தான். அவரது செயல் கண்டனத்துக்குரியது' என்றார்.

    • ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி. சசிகலா சொல்வதையே ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்.
    • முதலில் அவர்கள் 2 பேரும் ஒன்றுபடட்டும். அவர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''நான் சர்வாதிகாரி அல்ல. கட்சி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'' என்று கூறிச்சென்றார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி. சசிகலா சொல்வதையே ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். முதலில் அவர்கள் 2 பேரும் ஒன்றுபடட்டும். அவர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். சொந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கே கிணற்றில் உள்ள தண்ணீரை விடாமல், தனது வயலுக்கு பாய்ச்சியவர் அவர். இந்த விஷயமெல்லாம் தெரியுமா?

    உண்மையிலேயே ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி. எனவே அவரது கருத்தையெல்லாம் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். 'நானும் இருக்கிறேன்' என்று காட்டிக்கொள்வதற்காக எதையாவது செய்தும், பேசியும் கொண்டிருப்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் வேலை. எனவே ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் ஒன்றுபடட்டும். அப்போதுதான் அவர்களுக்கு வாழ்வு. அவர்களால் அ.தி.மு.க.வினருக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்வு ஏற்படப்போவது கிடையாது.

    அதேபோல, 'எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க எனக்கு எந்த தயக்கம் இல்லை' என்ற ரீதியில் சசிகலா பேசியுள்ளார். அவர் ஆயிரம் கருத்து சொல்லலாம். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியுடன் பயணிக்கிறது. சசிகலா யார், இதுபோன்ற கருத்தை சொல்வதற்கு?

    ஒருங்கிணைக்கும் வேலை செய்யப்போவதாக இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரனை ஒருங்கிணைத்து ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும். அது நல்ல விஷயம் தான். நாங்கள் குறுக்கே நிற்கப்போவதில்லை. அதேவேளை எங்கள் கட்சியில் மூக்கை நுழைக்க வேண்டாம் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும்.
    • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் தடை ஏதும் விதிக்கவில்லை.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணி தனியாக செயல்படுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும். சின்னம் தங்களுக்கு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக முறைப்படி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து விட்டோம். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சும் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் அறிவித்துள்ளது.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் தடை ஏதும் விதிக்கவில்லை. எனவே வேட்பாளருக்கு வழங்கப்படும் ஏ மற்றும் பி படிவங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கு கிடைக்கும். இதில் எந்த சிக்கலுக்கும் இடம் இல்லை.

    இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

    அ.தி.மு.க. சட்டத்துறை உறுப்பினர் வக்கீல் இன்பதுரை கூறும்போது, 'கட்சி இரண்டாக பிளவுபடவில்லை. முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கட்சியின் பெரும்பான்மை எங்களிடம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    கட்சி அலுவலகமும் எங்கள் வசமே இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக இணையதள முகவரியையும் நாங்களே பயன்படுத்துகிறோம். வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ததையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே இரட்டை இலையை நாங்கள் பெறுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் 'பி.டீம்' என்பதை நிரூபித்து விட்டார்.
    • ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார். இதற்காக பா.ஜனதாவிடம் ஆதரவு கோரப்போவதாகவும் கூறினார்.

    இதுதொடர்பாக டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஏற்கனவே கூறி வந்தோம். இப்போது அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் 'பி.டீம்' என்பதை நிரூபித்து விட்டார்.

    அ.தி.மு.க.வை வீழ்த்தத்தான் அவர் வேட்பாளரை நிறுத்துகிறார். ஆனால் அவர் கனவில்கூட வீழ்த்த முடியாது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான். தனி மனிதராக ஆதரவு கேட்பதற்கும் கட்சி ஆதரவு கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தனி மனிதருக்கு எந்த கட்சியும் ஆதரவு அளிக்காது.

    நாங்கள் கூட்டணி தர்மப்படி இன்று மாலையில் பா.ஜனதா தலைவரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கள் கட்சி உள் விவகாரங்களில் என்றைக்கும் பா.ஜ.க. தலையிட்டது கிடையாது.
    • நாங்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

    சென்னை :

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 பூத் உள்ளது. இந்த 238 பூத்களிலும் அ.தி.மு.க.வை சேர்ந்த பொறுப்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தபோது 30 ஆயிரம் பேரில் இருந்து 40 ஆயிரம் பேர் வரை ஆளே கிடையாது. அங்கு போலி அட்டைகளைத் தயாரித்து அந்த 40 ஆயிரம் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு விடியா தி.மு.க. அரசு இன்றைக்கு அடியாட்களை வைத்துக்கொண்டு வாக்களிக்க உள்ளது. இந்த நிலையை தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

    இது மட்டுமல்லாமல் பணப்பட்டுவாடா நடக்கிறது. விதிகள் அனைத்தும் காலில் போட்டு மிதித்து ஜனநாயகத்தை நசுக்குகின்ற வேலையை தி.மு.க. அரசு செய்துகொண்டிருப்பதைத் தெரிவித்துள்ளோம். இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்துள்ளார். 'இரட்டை இலை' சின்னம் முடக்கக்கூடிய நிலை உள்ளதாக கூறப்படுகிறதே...

    பதில்:- சொல்பவர்களுக்குத்தான் முடக்குவாதம். நாங்கள்தான் அ.தி.மு.க., சரியான வழிமுறையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் போட்டி என்பது அவரை சார்ந்தவர்களுக்கு அது ஒரு மண் குதிரை என்று தெரியும். இதனை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். மண் குதிரை கரை சேராது.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி பெயர் வேறாக இருந்து, பின்பு திருத்தப்பட்டுள்ளதே...

    பதில்:- 'டைப்' செய்யும்போது சிறிய பிழை வரும். 'பிரிண்ட்' செய்யும்போது முற்போக்கு என்று வந்துவிட்டது. பின்னர் சரியான பேனர் வைக்கப்பட்டது. இது ஒரு பிரச்சினையே இல்லை.

    கேள்வி:- அண்ணாமலை டெல்லி சென்ற பின்னர்தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறதே?

    பதில்:- இது காரணம் இல்லை. எங்கள் கட்சி உள் விவகாரங்களில் என்றைக்கும் பா.ஜ.க. தலையிட்டது கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் பெயரில் சிறிய பிழை இருந்தது. பின்னர் சரி செய்யப்பட்டது.

    கேள்வி:- இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணி கட்சி தலைவர்களுடைய படங்கள் இடம்பெறுவது வழக்கம். தற்போது பா.ஜ.க. தலைவர்கள் படம் இல்லை. அதனால் பா.ஜ.க. உங்கள் கூட்டணியில் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

    பதில்:- தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தற்போது இடைத்தேர்தலில் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இறுதி செய்யப்படும்போது கூட்டணியில் இருக்கும் அனைவரின் படமும் இடம்பெறும்.

    கேள்வி:- தேர்தல் நெருங்கிய நிலையிலும் பா.ஜ.க. எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளதே?

    பதில்:- தேசிய ஜனநாயக கூட்டணி தர்மத்தின்படி தான் இன்றைக்கு சென்று கொண்டுள்ளோம் அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் நாங்கள் ஆதரவைக் கேட்டுள்ளோம். அவர்கள் தேசிய கட்சி. உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள். உடனே சொல்லுங்கள் என்று வற்புறுத்த முடியுமா...

    கேள்வி:- 'ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்தால் வாபஸ் வாங்கிவிடுவோம்' என்று சொல்லி இருக்கிறாரே...

    பதில்:- நாங்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

    கேள்வி:- கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் வைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் சின்னத்தை உடைப்பேன் என்று பேசியுள்ளார். இதில் அ.தி.மு.க.வின் கருத்து என்ன?

    பதில்:- கடலில் பேனா சின்னம் அமைக்கப்படுவதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவது மீனவர்களுக்குத்தான். எங்களைப் பொறுத்தவரையில் கருணாநிதியின் பேனா சின்னத்தை அறிவாலயத்தில் அமைத்தால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை சரி.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலில் ஈடுபடும்போது அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் கடுமையாக எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுகவின் ‘பி’ டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.
    • ஓ.பன்னீர்செல்வம் குறித்த செங்கோட்டையனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என ஓ.பன்னீர்செல்வம் கூறுவதே முரண்பாடு தான்.

    * திமுகவின் 'பி' டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.

    * கட்சி அலுவலகத்தை சூறையாடியவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.

    * ஓ.பன்னீர்செல்வம் குறித்த செங்கோட்டையனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து.

    * அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் இணைப்பு மட்டும் சாத்தியமில்லை.

    * ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. கூட்டங்களுக்கு 2 அல்லது 3 லட்சம் ரூபாய் செலவழிகிறது என்றால், கடை வைத்திருப்பவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வசூலிக்கப்படுகிறது.
    • காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குறிப்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செய்த நல்ல திட்டங்கள், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது, அடிப்படை கட்டமைப்பு வசதியும் இருந்தது. அது மட்டும் அல்லாமல் சமூகநீதிக்கான அரசாகவும் செயல்பட்டது. இவற்றை எல்லாம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம்.

    ஆனால், தற்போது தாலிக்கு தங்கம் திட்டம் இல்லாதபோது, அது என்ன திராவிட மாடல் அரசு?, என்ன சமூகநீதி அரசு?. எனவே தி.மு.க. அரசு சமூகநீதிக்கு புறம்பாகவும், திராவிடத்துக்கு எதிராகவும் இருக்கிறது. இதை மக்கள் முன்பு தெரிவிப்போம். கஞ்சா கடத்தல், அடாவடித்தனம், அராஜகம், அட்டூழியம் என சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் தலைவிரித்தாடுகிறது.

    தி.மு.க. கூட்டங்களுக்கு 2 அல்லது 3 லட்சம் ரூபாய் செலவழிகிறது என்றால், கடை வைத்திருப்பவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வசூலிக்கப்படுகிறது. கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை-கொள்ளைகள் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. இதனை மக்கள் உணர்கிறார்கள்.

    விலைவாசி உயர்வு, தேர்தல் நேரத்தில் மகளிருக்கு ரூ.1,000 கொடுப்பதாக கூறியது இன்னும் வழங்கப்படவில்லை. கியாஸ் மானியம் கொடுப்பதாக கூறி அதையும் வழங்கவில்லை. கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. நகைக்கடன் ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக இருந்த தமிழக போலீசார் இன்று கூனி குறுகி நிற்கிறார்கள். ஒரு துக்ளக் அரசாங்கம் தமிழகத்தை ஆண்டு வருகிறது. இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து கூறுவோம். இதனை மக்கள் உணர்வார்கள். நிச்சயமாக எங்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

    எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எம்.ஜி.ஆரின் ஆசி, ஜெயலலிதாவின் ஆசி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து மகத்தான வெற்றியை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பெறுவோம். பண நாயகத்தைவிட ஜனநாயகம் வலிமையானது. அவர்கள் (தி.மு.க. கூட்டணி) நம்புவது பண நாயகம், நாங்கள் நம்புவது ஜனநாயகம் எனவே கண்டிப்பாக நாங்கள் ஜெயிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால் வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்து உள்ளாரே என்ற கேட்டதற்கு, 'டி.டி.வி.தினகரன் முதலில் வாய்க்காலில் தாண்ட வேண்டும். அப்புறம் கடலில் தாண்ட ஆசைப்பட வேண்டும். வாய்க்காலை தாண்ட வக்கில்லாதவர்கள் எங்களை பற்றி பேசக்கூடாது' என்று பதில் அளித்தார்.

    • திருமங்கலம் பார்முலாவை இந்த இடைத்தேர்தல் மிஞ்சிவிடும்.
    • பண பலம், அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற தி.மு.க. முயல்கிறது.

    சென்னை :

    சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-

    ஈரோட்டில் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டம் 9-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு மக்கள் அதிகமாக சென்றுவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே சட்டவிரோதமாக பந்தல் போட்டு, பிரியாணி மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏழை எளிய மக்களை கூட்டத்துக்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். திருமங்கலம் பார்முலாவை இந்த இடைத்தேர்தல் மிஞ்சிவிடும்.

    ஆனால் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு 50 ஆயிரம் பேர் வந்தார்கள். எனவே தி.மு.க. எடுத்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

    பண பலம், அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற தி.மு.க. முயல்கிறது. அ.தி.முக. கூட்டத்துக்கு மக்களை வர விடாமல் பணம், பிரியாணி கொடுத்து தடுக்கிறது.

    கூட்டணிக் கட்சி தர்மத்தின்படி த.மா.கா.விடம் கேட்டு அ.தி.மு.க. போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க. அங்கு ஏன் காங்கிரஸ் கட்சியை நிற்க வைத்துள்ளது? தோல்வி பயம்தான் காரணம். தைரியம் இருந்தால் தி.மு.க. அங்கு போட்டியிட்டிருக்க வேண்டும்.

    வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ.க. கட்சித் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்றாலும், அந்த கட்சியின் சார்பில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இருந்ததால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

    இரட்டை இலைக்கான மவுசு போய்விட்டது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதை, நன்றி கெட்டவர்களின் வாக்குமூலமாகத்தான் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இல்லை என்றாலும்கூட இரட்டை இலை வெற்றி சின்னம்தான். அதன் மவுசு குறைந்துவிட்டது, இனிமேல் வாய்ப்பு இல்லை என்று அவர் கூறுவதை, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிற நிலையாகத்தான் நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

    தேர்தல் கமிஷனிடம் அளிக்கும் புகார்களுக்கு ஆதாரமாக அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக அமைப்பில் புகார் அளிப்பது, அடிப்படை உரிமை. அதை நாங்கள் தெளிவாகச் செய்து வருகிறோம். நாங்க சொல்ல வேண்டியதைச் சொல்கிறோம். செய்ய வேண்டியதை அவர்கள் செய்யட்டும். தேர்தல் கமிஷனுக்கு பிறகு கோர்ட்டு உள்ளது. இது மன்னர் ஆட்சி கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

    சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும் அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் அந்த நிலத்தை அபகரித்ததாகவும், மேலும் ஜெயக்குமார் தரப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது எனவும் மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதன் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை எதிர்த்தும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயக்குமார் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், இந்த விவகாரத்தில் வழக்கின் விவரங்களை முழுமையாக ஆராயாமல் உயர்நீதிமன்றம் ஜெயக்குமார் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது என குற்றச்சாட்டை முன் வைத்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயக்குமார் தற்போதும் அரசு பதவியில் உள்ளாரா என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு, அவர் முன்னாள் அமைச்சர் என்றும் தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லை என பதிலளித்தார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள், நில அபகரிப்பு புகார் விவகாரத்தில் 4 வாரத்தில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    ×