என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூட கோரி"

    திருவாலங்காடு கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
    திருத்தணி:

    திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமி விலாசபுரம், கொசஸ்தலை ஆற்றில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 1-ந் தேதி முதல் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

    மணல் குவாரியை தடை செய்யக் கோரி, கடந்த 2-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். எனினும், கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் லட்சுமி விலாசபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 4-ம் தேதி காலை கொசஸ்தலை ஆற்றில் இறங்கி குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மணல் குவாரி தொடர்பாக, கடந்த 5-ம் தேதி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மணல் குவாரியை மூடக்கோரி லட்சுமிவிலாசபுரம் கிராமத்தில் நேற்று முதல் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

    தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்து வருகிறது. இதில் லட்சுமி விலாசபுரம், பொன்னாங்குளம், பாக சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    ×