என் மலர்
நீங்கள் தேடியது "ஆறுமுகநேரியில் தொழில் அதிபர் கைது"
வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் காட்டான் என்ற மணிகண்டன் (வயது 27). சென்னையில் வசித்து வந்த இவர் சில மாதங்களாக அடைக்கலாபுரத்தில் தனது மனைவி பேச்சியம்மாளுடன் வசித்து வந்தார். இவர் மீது ஆறுமுகநேரி போலீசில் அடி தடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மணிகண்டன் கடந்த மாதம் 23-ந் தேதி ஆறுமுகநேரி ஜெயின்நகர் அருகே மெயின் ரோட்டில் காரில் வந்த ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஆறுமுகநேரி பேயன் விளையை சேர்ந்த சுப்பையா மகன் ஜெயசங்கர் பேயன்விளை புதூரில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பேயன்விளை புதூரை சேர்ந்த சிவக்குமார், விக்னேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பகையில் ஜெயசங்கருக்கு அடியாளாக செயல்பட்ட மணிகண்டன், சிவக்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் தகராறு செய்து மிரட்டி உள்ளார்.
இதனை தொடர்ந்தே சிவக்குமார், விக்னேஷ் உள்ளிட்ட கும்பல் மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், கார் டிரைவரான புதூர் சந்திரசேகர், ஆழ்வார்தோப்பு பெரியசாமி ஆகிய 3 பேர் கடந்த 25-ந் தேதி மதுரை வாடிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
சிவக்குமாரின் தம்பியான தொழிலதிபர் விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சம்பத், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் விக்னேசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.