என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் நமச்சிவாயம்"
- விபத்தில் தூக்கி வீசப்பட்ட தமிழ்மணியும் அவருடன் வந்தவரும் காயமடைந்தனர்.
- அந்த வழியாக காரில் சென்ற அமைச்சர் நமச்சிவாயம், விபத்தில் காயமடைந்தவர்களை பார்த்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே உத்திரவாகிணிபேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 40). புதுவை காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் ஒதியம்பட்டு சாலையில் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்மணியும் அவருடன் வந்தவரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற அமைச்சர் நமச்சிவாயம், விபத்தில் காயமடைந்தவர்களை பார்த்தார்.
உடனே தனது காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
மேலும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனடியாக வரவழைத்தார். அந்த வாகனத்தில் காயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி.
- அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரகசியங்களை வெளியிடும் வகையில் தோலை உரிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து புதுவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் தோலை உரிப்பேன் என பேசியது நாகரீகமற்ற செயல். அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அவர் என்ன செய்தார்? என்பதை வெளியிட ரொம்பகாலம் ஆகாது. மாநில அந்தஸ்து தொடர்பாக ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதி கொடுத்துள்ளார். என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் தோல்தான் உரிந்துபோயுள்ளது. முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி. அவர் தோலை மக்கள்தான் உரித்து காட்டியுள்ளனர். நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.
எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தமிழ் பாடம் நிச்சயம் இருக்கும். தேவைப்படுவோர் தமிழை தேர்வு செய்து படிக்கலாம்.
புதுவை, காரைக்காலில் உள்ளவர்கள் தமிழை தேர்வு செய்வார்கள். மாகியில் உள்ளவர்கள் மலையாளம், ஏனாமை சேர்ந்தவர்கள் தெலுங்கு பாடத்தை தேர்வு செய்யலாம். பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அதிகம் விரும்புகின்றனர். நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பாடத் திட்டத்தை அதிகளவு தேர்வு செய்கின்றனர். எனவே புதுவை மாநில மக்களின் தேவைகளை அறிந்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
- கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார்.
புதுச்சேரி:
ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீ நிவாஸ் அசோக் தனது தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராாட்டம் நடத்தி வந்தார்.
அவரது உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேசுவதற்காக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் ஏனாம் புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் சந்தித்தனர். அப்போது கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் நள்ளிரவில் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
- புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்
- வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (16-ந்தேதி) முதல் 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுவை சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை)முதல் 26-ந் தேதி வரை 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
- ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடர்ந்து, 2018-19 வரையில் 5-ம் வகுப்புக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தற்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது.
இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதன்படி வருகிற கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் புதுவை கல்வித்துறை இறங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 127 அரசு பள்ளிளுக்கும் தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது.
தற்போது, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், விருப்பப் பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன.
ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர். 4 முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாகியில் மலையாளமும் படித்தனர்.
தற்போது சி.பி.எஸ்.இ. முறையின்படி 11-ம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தமிழ் கட்டாய பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்தித்டத்தை அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதுபற்றி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அனுமதி கோரினோம். மத்திய அரசும் விதிமுறைகளை தளர்த்திதான் 127 பள்ளிகளுக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாய பாடமாக உள்ளதுபோல தமிழையும் கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழக பாடத்திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம்.
நீட், ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் சங்கடம் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரையும் மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் தபால் வேன் மூலமாக அனுப்பும் பணி தொடங்கியது.
இப்பணியை புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் பெங்களுருவில் இருந்தும், தமிழ் பாடப் புத்தகம் தமிழக பாடநூல் கழகத்தில் இருந்து வந்துள்ளது. பள்ளி சீருடைகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது.
தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து கட்டணங்களை இறுதி செய்து வெளியிடுவார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் என்னை வந்து சந்தித்தனர். இது சம்பந்தமாக முதல்-அமைச்சர், துறைச் செயலரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
தமிழை கட்டாயப்பாடமாக்க என்னென்ன சாத்திய கூறுகள் இருக்கிறதோ, எந்தெந்த மாநிலங்களில் அதுபோன்று உள்ளதோ என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுப்போம்.
இதில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை. அவரவர் விரும்பும் பாட மொழியை எடுத்து படிக்கலாம். இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது தான் திணிப்பாகும்.
இது தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை போக்க அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.
- மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.
- பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 300 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவை அரசு வழங்கியது.
இதற்காக 11 இடங்களில் மத்திய சமையல் கூடங்கள் நிறுவப்பட்டது. இந்த நிலையில் 2018 முதல் அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து நவீன சமையல் கூடத்தில் மதிய உணவு தயாரிக்கப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர காலையில் பால், வாரம் 3 முட்டை வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
கவர்னர் ஒப்புதலை தொடர்ந்து டெண்டர் கோரியுள்ளோம். டெண்டர் பணிகள் முடிய 2 மாதங்களாகும். அதன்பிறகு ஜனவரி மாதம் இறுதியில் குடியரசு தினத்தில் சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். நாளுக்கு ஒரு தானிய பிஸ்கட் வழங்க திட்டமிட்டுள்ளோம். மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் முன்பு அவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கப்படும் என்றார்.
- வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
- அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரம் வருமாறு:-
பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் அசையும் சொத்து ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.6 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ.3 கோடியே 7 லட்சத்து 460. மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 22 லட்சம். கடன் ரூ.6.94 கோடி.
மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ.1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். கடன் ரூ.8.99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ.1.58 கோடி.
நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.
அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை. கடன் ரூ.1.24 கோடி. மனைவி நிவேதித்யா பெயரில் அசையும் சொத்து ரூ.67 லட்சத்து 37 ஆயிரத்து 230. அசையா சொத்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம். வீட்டு கடன் ரூ.28 லட்சம்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு அசையும் சொத்தாக ரூ.2.86 லட்சம், தனி நபர் கடன் ரூ.40 ஆயிரம் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
- முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவரும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும்.
புதுச்சேரி:
த.வெ.க. தலைவர் விஜய்க்கும், புதுவை மாநில முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமிக்கும் இடையே வயதை தாண்டிய புரிதலும், நட்பும் உள்ளது.
விஜய் கட்சி தொடங்கும் முன்பும், மாநாட்டுக்கு முன்பும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம் சில ஆலோசனைகளை பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் த.வெ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக புதுவை பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கூட்டணி அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அல்லது த.வெ.க. தலைவர் விஜய் ஏதாவது கூறியுள்ளார்களா? பொதுவாக தேர்தல் குறித்து மக்களிடம் பல்வேறு கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் நிலவுவது வழக்கம். அது பொய்யாகவும் இருக்கலாம், உண்மையாகவும் இருக்கலாம்.
அந்த கருத்து யார் வாயால் கூறப்படுகிறது என்பதுதான் முக்கியம். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவர் விஜயும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும். வதந்திகளுக்கு பதில் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் வாயே திறக்காமல் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல.
- தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்காததும் வருத்தம் அளிக்கிறது.
புதுச்சேரி:
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நடந்த திருப்பாவை முற்றோதல் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு, அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததுடன் அறவழியில் தன்னுடையபோராட்டத்தை தொடங்கி தனக்குத் தானே அடித்துக் கொண்ட சாட்டையடி, தி.மு.க. ஆட்சிக்கான சவுக்கடி.
சென்னையின் பிரதான பகுதியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவத்தில், பொறுப்பாக பதில் அளித்து இருக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் வாயே திறக்காமல் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல.
ஆனால், சம்பந்தமே இல்லாமல் தி.மு.க. பிரமுகர்களெல்லாம், இது குறித்து கருத்தும் விளக்கமும் சொல்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்காததும் வருத்தம் அளிக்கிறது.
அண்ணாமலை நடத்திய போராட்டத்தை தான் விமர்சிக்கின்றனர். இதன் வாயிலாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சி களும் மக்கள் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணா பல்கலை மாணவி பிரச்சினையில், தி.மு.க. அரசு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க உதவியாக இருக்கக்கூடாது.
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைவு தான். நிர்வாக செலவுகள், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தல், வரி வருவாயை அதிகரித்தல் உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.
பா.ம.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி சரி செய்து கொள்வர். இதில் தலையிடுவது அர்த்தமற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளி சிறுமி பாலியல் தொடர்பான வழக்கில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சுயலாபத்துக்காக, உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறார்கள்.
- அரசு, தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் பா.ஜ.க.வை சேர்ந்த நமச்சிவாயம் உள்துறை அமைச்சராகவும், ஏம்பலம் செல்வம் சபாநாயகராகவும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பள்ளி சிறுமி பாலியல் தொடர்பான வழக்கில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சுயலாபத்துக்காக, உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறார்கள்.
இதில் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டுள்ளனர். காவல் துறை மெத்தனமாகவோ, அலட்சியமாகவோ இல்லை.
பாலியல் பாதிப்பு தொடர்பாக குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் மூலம்தான் தீர்வு காணமுடியும். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டால் நீதி மன்றமே முடிவு எடுக்கும்.
அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மாற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். அருகில் உள்ள பள்ளியில் செய்முறை தேர்வு செய்ய அனுமதி தந்துள்ளது.
சி.பி.ஐ. விசாரணை தேவையா? என்ற சூழலை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அரசு, தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படும். குழந்தைகள் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சியிலும் பல குற்றங்கள் நடந்துள்ளன. என்னையும், சபாநாயகர், முதலமைச்சரையும் சம்பந்தப்படுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் சொல்கிறார்.
முதலமைச்சராக நாராயணசாமி இருந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான 413 குற்றங்களும், போக்சோ வழக்குகள் 366-ம், பாலியல் பலாத் காரம் 47, கொலை 174, செயின் பறிப்பு 222-ம் நடந்தது.
அவர் ஆட்சியில் எதுவும் நடக்காதது போல் கூறுகி றார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லி வருகிறார். காவல் துறையில் குடும்ப தலையீடு இருப்பதாக நாராயணசாமி பேசுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் குடும்பத்தில் உள்ளோர், பெண்கள் அரசியலிலும், நிர்வாகத்திலும் எந்த காலத்திலும் தலையிட்டதில்லை, தலையிடபோவதுமில்லை.
குடும்பத்தினரை அரசியலுக்காக களங்கப்படுத்துவது வருத்தமளிக்கிறது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவதை நாராயணசாமி நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த குற்றவாளியையும் விடுவிக்க அவரிடம் சிபாரிசு செய்ததில்லை. அவர் உண்மைக்கு மாறாக குற்றஞ்சாட்டுவது நல்லதல்ல. நேர்மையுடன் அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு.
இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 13-ந் தேதி திறக்கப்படுகிறது. பிளஸ்-2 வகுப்புகள் ஜூன் 20-ந்தேதி தொடங்கும் என தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
தமிழக பாடத்திட்டத்தையே புதுவையிலும் பின்பற்றுவதால் புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று புதுவையில் பள்ளிகள் திறப்பு தேதியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். புதுவையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 23-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பிளஸ்-2 வகுப்புகளும் அன்று திறக்கப்படவுள்ளது. பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.