என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சேகர்பாபு"

    • பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
    • இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு அவர்கள்.

    கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

    தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். 

    • பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
    • சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தைப்பூசத்திற்கு முருகன் கோவில்களில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் அனுமதி அளிக்கப்பட்டது போல், பங்குனி உத்திரத்திற்கு இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவித்தார்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    இதேபோல் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது பங்குனி உற்சவத்தையொட்டி எங்கள் பகுதியில் இருந்து நிறைய பேர் சாலை மார்க்கமாக செல்கிறார்கள். ஆனால் சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.

    இதை அமைச்சர் கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் இன்றும் நாளையும் 2 நாட்கள் பக்தர்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு அப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தாலும் துறை செயலாளர் மற்றும் கலெக்டர் இடம் கலந்து பேசி இரண்டு நாட்கள் அங்கு சாலை பணிகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

    • எங்கு பார்த்தாலும் தெய்வ கோசத்தோடு ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
    • திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதும் தேவைப்படும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கின. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    அப்போது, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. அசோகன் கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு, புவிசார் குறியீடு பெற வேண்டுமானால் அந்த பொருள் குறிப்பிட்ட பகுதியில் தோன்றியிருப்பதற்கான சான்றுகள் இருக்க வேண்டும். ஆனால், வரலாறு ஆவணங்கள் இல்லாததால் புவிசார் குறியீடு பெற சிரமம் உள்ளது. ஆவணங்கள் கிடைத்ததும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரன் பதில் அளித்தார்.

    அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 கோவில்கள், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 கோவில்கள் என மொத்தம் 22 கோவில்களில் இன்று ஒரே நாளில் குடமுழுக்கு நடைபெறுகிறது. 350-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் மூலம் தமிழிலேயே குடமுழுக்கு நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் தெய்வ கோசத்தோடு ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

    இதனிடையே பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் எழுப்பிய கேள்விக்கு, இந்தியா முழுவதுமிலிருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகை தருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்க, கொடைக்கானல் பகுதியில் மாற்றுப்பாதை பணிகள் ஆய்வு செய்துள்ளேன். திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதும் தேவைப்படும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

    • குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
    • குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    அண்ணாமலை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

    டெல்லி சென்றார். அங்கு பளார்... பளார்ன்னு அறை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

    இங்கே வந்த பிறகு அதை மறைக்க ஏதாவது பேசிதானே ஆகணும்.

    வரச்சொல்லுங்கள். ஏதாவது ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு தரம் இல்லையென்றால் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு செல்லலாம்.

    அப்படி இருந்தால் நிச்சயமாக வருத்தம் தெரிவித்துக்கொண்டு அடுத்தடுத்து அந்த குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.

    குறைகளே சொல்லக்கூடாது என்பது அல்ல. குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

    ஆகவே அவர் கூறிய அந்த கருத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படுகின்ற எங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வோம். அப்படி ஏதாவது இருந்தால் அந்த குறைகள் தீர்க்கப்படும் என்று கூறினார்.

    • கோவிலில் தினசரி பூஜை நடப்பதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
    • கனிந்த மரத்திற்கு அடியில் நின்று பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது என்று சொல்வார்கள்.

    சென்னை:

    சென்னையில் உள்ள பாரம்பரிய விக்டோரியா அரங்கத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆலய போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த கோவிலில் தினசரி பூஜை நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    இன்னும் ஒரு வாரத்தில் திரவுபதி அம்மன் கோவில் திறக்கப்பட உள்ளது. கனிந்த மரத்திற்கு அடியில் நின்று பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது என்று சொல்வார்கள்.

    இந்த ஆட்சி ஒரு செயலை முன்னெடுத்து அதை செய்வதற்கு காலம் கனிந்து வருகின்றபோது அதற்கு ஒரு போராட்டத்தை அறிவித்து அரசியல் நாடகம் செய்கிறார்கள். இதுபோன்ற அறிவிப்புகளை கண்டு மக்கள் மயங்க மாட்டார்கள். வெகு விரைவில் திரவுபதி அம்மன் கோவில் மக்கள் தரிசனத்திற்கு ஒப்படைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.
    • விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மன்னராட்சி முதல்வரே, உங்கள் ஆட்சியை பற்றி கேட்டால், உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க. என்று கூறினார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    ஒரு சினிமா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    "மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே

    மக்களாட்சி காணச்செய்த தெங்கள் நெஞ்சமே

    எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே

    கல்லில் வீடுகட்டித் தந்த தெங்கள் கைகளே

    கருணைத் தீபம் ஏற்றிவைத்த தெங்கள் நெஞ்சமே"

    இதுதான் அவருக்கு பதிலாக சொல்லிக்கொள்கிறேன்.

    * பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026-ம் ஆண்டு தூக்கி பிடிப்பார்கள்.

    * முதலமைச்சர் எங்கு போனாலும் வரவேற்கிற கூட்டத்தில் 80 சதவீத கூட்டம் பெண்கள் கூட்டம்தான்.

    * சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.

    * விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.

    * பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள்.

    * சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள், போராட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆர்ப்பாட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து அதை போட்டோ போட்டுக்கொண்டு, அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருந்தால் தமிழகத்தின் நிலை இப்படி தான் இருக்கும். இப்படி தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 கோவிலில் இருந்த அன்னதானத் திட்டத்தை 11 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஆண்டிற்கு மூன்றரை கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
    • இன்று கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

    தமிழக கோவில்களில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து பேசினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-

    திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 4 கோவில்களிலும் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது விபத்தின் காரணமாக அல்ல. உடல்நலக்குறைவின் காரணமாக நடைபெற்ற சம்பவம் ஆகும்.

    தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகுதான்கோவில்களில் அதிகமாக கூட்டம் கூடுகின்ற கோவில்களுக்கு மருத்துவ வசதி தேவை என்ற நிலையிலே இரண்டே இரண்டு கோவில்களில் இருந்த மருத்துவ வசதியை 17 கோவில்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளோம்.

    கடந்த 2023-ம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று ஒரு நீதிபதி நோய்வாய் பட்டு மயங்கிய சூழ்நிலையில் அன்றைக்கு அந்த நீதிபதி உயிரை காப்பாற்றியது அங்கு மருத்துவ முகாமில் இருந்த மருத்துவர்கள் தான்.

    இந்த 17 மருத்துவமனைகளில் இதுவரையில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.

    வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்று சிந்தித்து, 2 கோவிலில் இருந்த அன்னதானத் திட்டத்தை 11 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஆண்டிற்கு மூன்றரை கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருக்கிறது, இதற்கெல்லாம் முதலமைச்சர் எடுத்த பெரும் முயற்சிகள் தான் காரணம். சுமார் ரூ. 1711 கோடி மதிப்பில் பெருத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • படிக்காதவர்களும் சேவை செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.
    • உப்பு சப்பில்லாத கூட்டத்தை பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்த கூட்டுக்குழு கூட்டத்தை உப்புசப்பில்லாத கூட்டம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    படிக்காதோர் எப்படி பள்ளி பற்றி பேச முடியும் என்ற அண்ணாமலையின் கூற்று காமராஜரை கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது. படிக்காதவர்களும் சேவை செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.

    உப்பு சப்பில்லாத கூட்டத்தை பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? என்றார்.

    • இந்த ஆட்சி அமைந்த பிறகு ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • உசிலம்பட்டி தொகுதியில் எந்தெந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரத்தை கொடுத்தால் மீட்டுத் தருவோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், உசிலம்பட்டி தொகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 230 கோவில்கள் உள்ளன. அவற்றில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில் 1, 700 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கண்டறியப்பட்டு உள்ளன. எஞ்சிய கோவில் நிலங்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    இந்த ஆட்சி அமைந்த பிறகு ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி தொகுதியில் எந்தெந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரத்தை கொடுத்தால் மீட்டுத் தருவோம். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருதமலை கோவிலில் ரூ.37 கோடியில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 547 சிவ திருத்தலங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, "கோவை வடக்கு தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படுமா" என்று அம்மன் கே.அர்ஜுனன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "நேற்று கோபமாக இருந்த அம்மன் அர்ஜுனனுக்கு இன்று குளுமையான பதிலை தருகிறேன். எதிர்காலத்தில் கோவை வடக்கு தொகுதியில் நிச்சயம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மருதமலை கோவிலில் ரூ.37 கோடியில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மருதமலை கோவிலில் உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது.

    திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 547 சிவ திருத்தலங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது" என்றார்.

    மேலும், சூலூர் தொகுதியில் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலுக்கு திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கபடுமா என்று சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சூலூர் தொகுதியில் மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலுக்கு ரூ.1 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டும் பணி 3 மாதத்தில் தொடங்கப்படும் என்றும், உறுதியாக 3 மாதத்தில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    மேலும், வைத்தியநாதர் கோவில் திருப்பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், மீதம் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

    • தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர்.
    • தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மக்கள் முதல்வரின் மனித நேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் செனாய் நகர் வைத்தியநாதன் சாலை மற்றும் சேத்துப்பட்டு, அம்பேத்கர் திடலில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்து இதுவரை 2ஆயிரத்து 700-க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அது 3 ஆயிரத்தை தாண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா, பொறுப்பு அமைச்சர் யார்? என்ற கேள்வி இருந்தது.

    ஆனால் தற்போது சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விஷயத்தை திசை திருப்புவதாகவும், ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கோவில்களில் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்து 17 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது என்றார்.

    எதிர்பாராது நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு, தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.

    பா.ஜ.க.வினர் பலப்பரீட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு கெட பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.
    • ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான அன்பழகன் தனது தொகுதிக்குட்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி கோவிலில் திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா ? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    உறுப்பினர் குறிப்பிட்டு உள்ள கோவிலுக்கு அடுத்த மாதம் 11-ந்தேதி பாலாபிஷேகம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஆண்டு தோறும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி 2022- 2023-ம் ஆண்டில் ரூ.100 கோடியும் 2023-2024-ம் ஆண்டில் 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர உபயதாரர் நிதியாக ரூ.60 கோடியும் திருக்கோவில்கள் சார்பாக ரூ.70 கோடியும் கிடைக்கப் பெற்று மொத்தம் ரூ.430 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.

    ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஏற்கனவே 100 கோவில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 70 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் 100 கோவில்கள் கும்பாபிஷேகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. சுவாமிமலையில் மின் தூக்கி சீரமைக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதில் உறுப்பினர் ஜவாஹிருல்லா உடன் நானும் பங்கேற்க உள்ளேன்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

    ×