search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டயம்"

    • கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
    • மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. இது கனமழையாக மாறி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்து வருகிறது.

    நேற்று காலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக எர்ணாகுளத்தில் சுமார 1½ மணி நேரத்திற்கு விடாமல் மழை பெய்தது. இதன் காரணமாக நகர் முழுவதும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    வெள்ளமாகச் சென்ற வீடுகள், வயல்வெளிகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பயிர்கள் சேதம் அடைந்தன. இதற்கிடையில் கோட்டயம் மாவட்டத்தில் தாழநாடு மூன்நிலவு அருகே உள்ள சோவ்வூர் மற்றும் மேலுகாவு கிழக்க மட்டம் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் மேலுகாவு தாலுகாவில் வீடுகள் சேதம் அடைந்தன. ஈரட்டுப்பேட்டை-வாகமன் சாலையில் கல்லம்பாக்கம் என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பெய்த கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

    கொச்சி துறைமுகம் பகுதியில் கேரள அரசு பஸ் மீது மரம் விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணி காயம் அடைந்தார். இதேபோல், திருவனந்தபுரம் காட்டன் ஹில் பள்ளியில் நின்ற ஒரு பஸ்சின் மீதும் மரம் விழந்தது. மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம் முதலப்பொழி கடலில் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆபிரகாம் ராபர்ட் (வயது 60) மீன் பிடித்தபோது படகு கவிழ்ந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் கிள்ளியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முக்கோலத்தை சேர்ந்த அசோகன் என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழையும் வெள்ளிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    மழையின் தாக்கம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதால், சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மீனச்சிலை ஆறு, திருவனந்தபுரம் கிள்ளியாறு போன்றவற்றில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், கனமழையால் நிலச்சரிவு, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    ×