என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரு தரப்பினர் மோதல்-சாலை மறியல்"

    • ஆலங்குடி அருகே 2-வது நாளாக பதட்டம் நீடிப்பு.
    • சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக மீண்டும் மோதல்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த லோகநாயகி அம்பாள் உடனுறை பாலபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்துவது சம்பந்தமாக 2 சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை அம்பாள் திருவீதி உலா நடைபெற இருந்த நிலையில் சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

    இதனை தடுக்க சென்ற ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


    இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதை கண்டித்து குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த இன்ஸ்பெக்டரை பார்த்து நலம் விசாரித்தனர்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கோவிலூரைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மோதல் காரணமாக இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கோவிலில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதைலை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • தகவல் அறிந்து அங்கு வந்த, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் காந்தி நகரை சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து திருமானூர் போலீசார் ஒரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை, காந்தி நகரை சேர்ந்த விநாயகமூர்த்தி, குமரவேல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில், திருமானூர் சன்னிதி கீழவீதியில் சென்றனர்.

    அப்போது, இவர்களுக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், குமரவேல், விநாயகமூர்த்தி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.

    இதனையறிந்த காந்தி நகரை சேர்ந்த மக்கள் திருமானூர் பேருந்து நிறுத்தம் அருகே அரியலூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    தாக்கியவர்களை உடன் கைது செய்ய வேண்டும் என் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    பேச்சுவார்த்தையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்திரவாதம் கொடுத்த பின்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது


    ×