என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்சுக் மாண்டவியா"

    • பேறுகால இறப்பை குறைக்கும் இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
    • இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் கருத்து.

    இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014-16-ஆம் ஆண்டில் பேறுகால இறப்பு 130-ஆக இருந்ததாகவும், 2018-20-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அது 97-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில் பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இந்தியா எட்டியுள்ளதாகவும், தற்போது 2030-ஆம் ஆண்டுக்குள் பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சராசரியை விட குறைவான அளவே பேறுகால இறப்பு விகிதம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு தரமான சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் அவரது டுவிட்டர் பதிவை சுட்டி காட்டியுள்ள பிரதமர் மோடி, பேறு கால தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது செயல்பாடுகள் வலுவாக உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

    • கொரோனா காலத்தில் கூட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.
    • 2014-ம் ஆண்டில் இருந்து பள்ளி செல்லும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்ற வாளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் உள்ள மருத்துவர்களின் தேவையை நிறைவேற்றவும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலே படிப்பதற்கு மோடி அரசு முயற்சி எடுத்து வருகிறது.

    நாட்டில் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 87 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு 53 ஆயிரம் இடங்களாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 96 ஆயிரமாக உயர்ந்துள்ளன. அதே வேளையில், முதுகலை மருத்துவ இடங்கள் 31 ஆயிரத்தில் இருந்து 63 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது 105 சதவீதம் அதிகமாகும். 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் 2022-ல் 648 ஆக உயர்ந்துள்ளன.

    புதிய கல்விக் கொள்கை மாநிலங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடையேயும் பாராட்டை பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் கூட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

    2014-ம் ஆண்டில் இருந்து பள்ளி செல்லும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. பள்ளிகளில் இருந்து மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதில் கழிவறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. 2.5 லட்சம் பள்ளிகளில் சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக இடைநிற்றல் விகிதம் 17 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாகக் குறைந்துள்ளது என தெரிவித்தார்.

    • கடந்த ஓராண்டில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • அடுத்த 6 மாதங்களில் 50 கோடி சுகாதார கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:

    ஏழை ஏழை மக்கள்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். 2018 ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ், 50 கோடி மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது. ஆயுஷ்மான் திட்ட பயனாளிகளுக்காக தினசரி ஏழு முதல் எட்டு லட்சம் சுகாதார அட்டைகள் அச்சிடப்படுகின்றன.

    அடுத்த 6 மாதங்களில் 50 கோடி அட்டைகள் பயனாளிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். கடந்த ஓராண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 22,000 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் இது குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தடுப்பூசி பற்றாக்குறையால் உலகம் தவித்தபோது, இந்தியா சவாலை ஏற்றுக் கொண்டது.
    • மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும்.

    ஐதராபாத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கு, தேசிய விலங்கு வள மையத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அவர் கூறியுள்ளதாவது: 

    இந்த மையம் 21 ஆம் நூற்றாண்டில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு ஆதரவாக தரமான சேவைகளை வழங்குவதன் மூலம், நாட்டின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்க முடியும்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் உலகம் தவித்தபோது, இந்தியா இந்த சவாலை ஏற்றுக்கொண்டது. நமது விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர். வெளிநாட்டு தடுப்பூசிகளின் இறக்குமதிக்கு 5-10 ஆண்டுகள் வரை ஆகும் போது, இந்தியா தடுப்பூசிகளை ஒரு வருட காலத்திற்குள் தயாரித்தது.

    தற்போது உலகில் தயாரிக்கப்படும் நான்கு மாத்திரைகளில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. எனவே, இப்போது இந்தியாவை மருந்து உற்பத்திக்கு மட்டுமல்ல மருந்து ஆராய்ச்சிக்கும் மையமாக மாற்ற விரும்புகிறோம். இதற்கு தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • பல்வேறு உலக நாடுகள் சைக்கிளை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.
    • இந்தியாவில் ஏழையின் வாகனமாக சைக்கிள் கருதப்படுகிறது.

    பூமியை காப்போம், வாழ்வை காப்போம் என்ற தலைப்பில் சைக்லத்தான் போட்டிக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் இந்த போட்டியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். 


    அப்போது பேசிய மத்திய மந்திரி கூறியுள்ளதாவது: மக்கள் தங்கள் உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். காற்று மாசுப்பாட்டை ஏற்படுத்தாத வாகனம் சைக்கிள். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் அது முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு உலக நாடுகள் சைக்கிளை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் ஏழையின் வாகனமாக சைக்கிள் கருதப்படுகிறது.

    வசதி படைத்தவர்களும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். நமது வாழக்கையில் சைக்கிள் ஓட்டுவதை ஒரு அங்கமாக மாற்றி பசுமை பூமியை உருவாக்க வேண்டும். உடற்பயிற்சிகள் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், மன வலிமையும் பெற முடியும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளில் மாநிலங்கள் கவனம் செலுத்த அறிவுரை
    • முக கவசம் அணிவது மற்றும் கைகளை கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்.

    சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும். உலகம் முழுவதும் தினமும் சராசரியாக 5.87 லட்சம் வரை கொரோனா பதிவாகி உள்ள நிலையில், இந்தியாவில் சராசரியாக தினசரி 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அடுத்து வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவச பயன்பாடு, கைகளை கழுவுவது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    கொரோனா தொற்று குறித்து தீவிர கண்காணிப்பது, தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அனைத்து பரிசோதனைகளையும் அதிகரிக்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

    புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளிடம் இரண்டு சதவீதம் வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தியது.
    • கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறினார்.

    புதுடெல்லி:

    சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.

    இந்தியாவிலும், அரசு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கொரோனா பரவலை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. முடிவில், முக கவசம் அணிவது அவசியம் என அரசு வலியுறுத்தியது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால் தேசிய நலன் கருதி ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராகுல் காந்திக்கு மட்டும் அரசு கடிதம் எழுதுவது ஏன்? ராகுல் காந்திக்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து மத்திய அரசு பயந்துபோய் விட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது என குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மேலவையில் மன்சுக் மாண்டவியா பேசுகையில், நாங்கள் கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நாடு முழுவதும் பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கலன்களை நிறுவி உள்ளோம். அவை செயல்பாட்டில் உள்ளன. நாட்டில் போதிய அளவுக்கு உள்ள மருந்துகளை மறுஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • இந்த சூழலில் வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்க வேண்டும்.
    • கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

    இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காணொலி வாயிலாக இதில் பங்கேற்றனர். சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் மற்றும் வல்லுநர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய மந்திரி மாண்டவியா கூறியதாவது:

    கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழலில் வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்கும் வகையில் சரியான தகவல்கள் பகிரப்படுவது அவசியம்.

    கொரோனா தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பகிர வேண்டும். கொரோனா சிகிச்சையில் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும், பங்களிப்பையும் தலைவணங்கி பாராட்டுகிறேன்.,

    நாளை நடைபெறவுள்ள கொரோனா சிகிச்சை தொடர்பான நாடு தழுவிய அளவிலான ஒத்திகை முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் ஒரு பகுதியாகவே நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஐந்து மாநில விவசாயிகளுடன் மத்திய மந்திரி கலந்துரையாடல்.
    • உழவர் பாதுகாப்பு மையங்கள், விவசாயிகளுக்கு உதவி வருகின்றன.

    பிரதமரின் உழவர் பாதுகாப்பு மையங்களைச் சேர்ந்த 9000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மந்திரி மாண்டவியா பேசியதாவது: 


    விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உழவர் பாதுகாப்பு மையங்கள் வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகள் தங்களது வருமானத்தை இருமடங்காக பெருக்கிக் கொள்ளும் வகையில் அவை உதவுகின்றன. 



    உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. உலகளவில் பல்வேறு சிக்கல்கள் நிலவிய போதிலும், மத்திய அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் 51 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தன.
    • இன்றைக்கு நாம் 1 லட்சத்து 226 மருத்துவ படிப்பு இடங்களைப் பெற்றிருக்கிறோம்.

    காந்திநகர் :

    குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில், உலகளாவிய இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தின் 13-வது வருடாந்திர மாநாடு நடந்தது. இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் ஒரு புதிய ஆஸ்பத்திரியை திறக்கிறபோது அதற்கு டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள்.

    8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் 51 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தன. இன்றைக்கு நாம் 1 லட்சத்து 226 மருத்துவ படிப்பு இடங்களைப் பெற்றிருக்கிறோம்.

    மருத்துவ மேற்படிப்பில் 34 ஆயிரம் இடங்கள் இருந்தன. இப்போது அவை 64 ஆயிரமாக உயர்ந்துள்ளன.

    நாங்கள் மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிப்பு இரண்டின் இடங்களும் சம அளவில் இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம். 4 வருடங்களில் இதைச் செய்து முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதைச் செய்து முடித்து விட்டால், மருத்துவ படிப்பு முடிக்கிற அனைவரும், மேற்படிப்பும் படிக்க வாய்ப்பு ஏற்படும்.

    நமது 'இந்தியாவில் குணமாகுங்கள்' திட்டம், உலக நாடுகளில் வாழ்கிறவர்களையெல்லாம் இந்தியாவுக்கு அழைப்பது, மலிவான, தரமான மருத்துவம், ஆரோக்கியம், பாரம்பரிய மருந்துகளை வழங்குவதற்கானது.

    இதற்கான செயல்முறை தொடங்கி இருக்கிறது.

    நீங்கள் சுகாதாரத்துறையில் பணியாற்ற விரும்பினால், சங்கிலித்தொடர்போல ஆஸ்பத்திரிகளை கட்ட விரும்பினால், உங்களுக்கான தொழில் வாய்ப்பை நான் உறுதி செய்ய விரும்புகிறேன்.

    உங்களிடம் 50-100 படுக்கை ஆஸ்பத்திரி இருக்குமானால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அங்கீகாரத்தை பெறுங்கள். நீங்கள் தொழில் வாய்ப்பை அடைய முடியும். மக்களுக்கு சேவை செய்வதற்கு அது ஒரு வாய்ப்பு. நீங்கள் வணிக ரீதியில் நடத்த விரும்பினால், ஆயுஷ்மான்பாரத் திட்டத்தின்கீழ் செயல்படலாம்.

    இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள 'ஹீல் இன் இந்தியா, ஹீல் பை இந்தியா' (இந்தியாவில் குணமாகுங்கள், இந்தியாவால் குணமாகுங்கள்) கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள்- ஆஸ்பத்திரிகள் ஆஸ்பத்திரிகளுக்கு இடையேயும், நாட்டுக்கு நாடு இடையேயும், நாட்டுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் இடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரகுப்த மவுரியரின் பொற்கால ஆட்சி குறித்து நாம் படித்து இருக்கிறோம்.
    • நமது வருங்கால சந்ததியினர், தங்கள் தந்தையரும், முன்னோர்களும் மோடியின் ஆதரவாளர்கள்.

    ஆமதாபாத் :

    குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'நமது வரலாறு பாடத்தில் சந்திரகுப்த மவுரியரின் பொற்கால ஆட்சி குறித்து நாம் படித்து இருக்கிறோம். இன்றும் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் உள்ளது. இதைப்போல அடுத்த தலைமுறைகள், 3-வது, 4-வது தலைமுறைகள் பிரதமர் மோடியின் பொற்காலம் குறித்து படிப்பார்கள். அவர்கள் இந்திய வரலாறு படிக்கும்போது இது கற்பிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் எத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது எதிர்கால தலைமுறைகளுக்கு கற்பிக்கப்படும் என தெரிவித்த மாண்டவியா, நமது வருங்கால சந்ததியினர், தங்கள் தந்தையரும், முன்னோர்களும் மோடியின் ஆதரவாளர்கள் என்றும், மோடி அரசில் அங்கம் வகித்தவர்கள் என்றும் பெருமிதம் கொள்வார்கள் எனவும் கூறினார்.

    மேலும் கொரோனா தொற்று நிர்வாகம், நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம், சர்ஜிக்கல் மற்றும் வான்வழி தாக்குதல்கள், இந்தியாவின் வெளியுறவு கொள்கை போன்றவற்றால் உலகமெங்கும் இந்தியா புகழப்படும் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தது.
    • 2014-ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த முதுநிலை படிப்புகள், 65 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ படிப்புக்கான இடங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட எண்ணிக்கையில் மிகவும் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்ததாகவும், தற்போது அது 660 ஆக உயர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ளார். இது 71 சதவீத உயர்வு ஆகும்.

    இதைப்போல 2014-க்கு முன்பு 51 ஆயிரத்து 348 ஆக இருந்த எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான இடங்கள் தற்போது 97 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து ஆயிரத்து 43 இடங்களாக உயர்ந்துள்ளது.

    இதில் 52 ஆயிரத்து 778 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 48 ஆயிரத்து 265 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களும் 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து உள்ளது. 2014-ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த முதுநிலை படிப்புகள், 65 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, "காலம் மாறியதால் நாடு மாறியது" என குறிப்பிட்டு பெருமைப்பட்டுள்ளார்.

    ×