என் மலர்
நீங்கள் தேடியது "slug 233383"
- பொதுக்குழுவிற்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் ஒற்றை தலைமை பிரச்சினைக்கு தீர்வு காண ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள்.
- ஒற்றை தலைமையை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக எதிர்ப்பதால் அதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு வருகிற 23-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் கூடுகிறது.
அதற்கான ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றபோது ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது.
கட்சியை வழி நடத்த ஒற்றை தலைமை இருந்தால்தான் சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். ஒற்றை தலைமை என்றால் ஓ.பன்னீர்செல்வத்தை கொண்டு வர வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்கள்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குரல் ஒலிக்க தொடங்கியதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4 நாட்களாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
ஒற்றை தலைமை வேண்டாம், தற்போது உள்ள நிலையே தொடர்வது நல்லது என்று ஓ.பன்னீர்செல்வம் தனது விருப்பத்தை தெரிவித்தார். ஒற்றை தலைமை பொறுப்பை விட்டுக் கொடுக்கவும் அவர் முன்வரவில்லை.
கட்சி நலன் கருதி பல்வேறு சூழ்நிலைகளில் விட்டு கொடுத்து இருப்பதாகவும் இந்த முறை தனது முடிவில் இருந்து பின் வாங்குவது இல்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக உள்ளார்.
இதனால் ஓ.பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். அந்த திட்டமும் கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், மா.பா.பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை.
சென்னை மாவட்ட செயலாளர்களான பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ், விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பை சமாளிப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நள்ளிரவு 11 மணி வரை இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இன்று சந்திக்க முடிவு செய்தார். சென்னை உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் முன் வராததால் தனது வீட்டிலேயே நடத்த முடிவு செய்தார்.
அதன்படி அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று 5-வது நாளாக ஆலோசனை கூட்டம் நடந்தது. அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் அசோக், தேனி சையதுகான், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்கா ரவி உள்ளிட்ட முக்கியமானவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள 9 மாவட்ட செயலாளர்களில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார். மற்ற 8 பேர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதே போல எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, முக்கூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவிற்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் ஒற்றை தலைமை பிரச்சினைக்கு தீர்வு காண ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள்.
ஒற்றை தலைமையை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக எதிர்ப்பதால் அதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். பொதுக்குழுவில் எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் அதில் இருவரும் கையெழுத்திட்டால்தான் நிறைவேற்ற முடியும். அதனால் இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல் ஏற்படும் என்று கருதுகிறார்கள்.
அ.தி.மு.க. தலைமையில் 5-வது நாளாக மோதல் நீடிக்கிறது. எடப்பாடி பழனிசாமி சென்னையில் முகாமிட்டு இருப்பதால் அவருடன் முக்கிய நிர்வாகிகள் பேசி வருகின்றனர். எந்த முடிவு எடுத்தாலும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக பெரும்பாலான நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வமும் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் மோதல் முற்றி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர்.
சென்னையில் தங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். மூத்த நிர்வாகிகள், தலைமை நிர்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்.
இதற்கிடையில் பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வர வேண்டும் என்று அதற்கான குழு ஆய்வு செய்கிறது. இதில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து தலைமை கழகம் வந்தார். அவர் திடீரென வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. இரு தலைவர்கள் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழுவை சுமூகமாக எவ்வாறு நடத்துவது, அதற்கு தேவையான அணுகுமுறைகளை எவ்வாறு கையாள வேண்டும் என மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. தலைமையில் ஏற்பட்டு உள்ள உச்சகட்ட மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அதற்கான சூழ்நிலை மாறி வருவதாகவும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க. உள்கட்சி மோதல் ஓரிரு தினங்களில் தீர்க்கப்படாவிட்டால் அது அ.தி.மு.க.வை இரண்டாக உடைய செய்து விடும் என்று கருதப்படுகிறது.