search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவக்குமார்"

    • கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
    • காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதற்கு, தமிழ் நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

    "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துனை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

    "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177,25 டிஎம்.சி. நீரை மாதாந்திர அட்டவணை படி கர்நாடகம் அளிக்காத நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மான்புமிகு கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."

    "தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர்ப் பங்கீடு என்பது 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகானாத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 262-ன்கீழ் 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டத்தின்படி, பன்மாநில நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது."

    "காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம்."

    "ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும். மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும்."

    "கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிங்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். இதன்மூலம் காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீர் நின்று விடும் சூழ்நிலை ஏற்படுவதோடு, வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

    • சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம்.
    • அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-மந்திரியான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை.
    • கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது மேகதாது அணை திட்டம்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பேன்."

    "விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.

    • பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை, 11:45 மணிக்கு பதவி ஏற்பு விழா.
    • காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் நேற்று காலை சந்தித்து, அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு

    கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது.

    முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

    இதுவரை அமைச்சர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் அமைச்சர் ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.

    இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் நேற்று காலை சந்தித்து, அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

    அதன் பின், அவர்கள் பெங்களூரு திரும்பினர். இதனிடையே டெல்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை, 11:45 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

    • ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி.
    • கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

    இதுவரை மந்திரிகளுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் மந்திரிசபையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களான தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்டோரும் மந்திரி பதவி கேட்டு அடம் பிடித்து வருகின்றனர்.

    இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரியான டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியே டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    மாநிலத்தில் அரசியல் ரீதியாக மிக முக்கியமான சமூகமான லிங்காயத்துகள், காங்கிரஸ் வெற்றிக்கு தங்கள் பெரும் பங்களிப்பைக் காரணம் காட்டி, முதல்-மந்திரி பதவிக்கு உரிமை கோரினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்-மந்திரி ஆக்கியதை தொடர்ந்து லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கே அதிக மந்திரி பதவிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.

    முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மந்திரிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், டெல்லியில் 2 நாட்களாக முகாமிட்டுள்ளனர். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து, தங்கள் ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி தரும்படி கேட்டனர்.

    அவரோ, தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்து, ஆலோசிக்கும்படி தெரிவித்து விட்டார். இதையடுத்து, வேணுகோபால் வீட்டில் நேற்று 3 கட்டமாக கூடி ஆலோசனை நடத்தினர். இருவருமே, தங்கள் ஆதரவாளர்கள் பட்டியலை தனித்தனியாக தயாரித்து எடுத்து வந்திருந்தனர். இதை வழங்கி, இவர்களால் கட்சி வளர்ச்சிக்கு லாபம் என விளக்கினர்.

    மற்றொரு பக்கம் டெல்லியில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களுடன், நேற்று 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.,க்களும் இணைந்தனர். மொத்தம் இருப்பதே, 24 பதவிகள். ஆனால், 50-க்கும் அதிகமானோர் மந்திரி பதவி கேட்டு, தங்கள் ஆதரவு தலைவர்களை சந்தித்து பேசினர். யாரை மந்திரி ஆக்குவது, எதன் அடிப்படையில் வழங்குவது, அவர்களால் கட்சிக்கு என்ன லாபம், எந்தெந்த சமுதாயத்துக்கு முக்கியத்துவம் தருவது என, பல்வேறு கோணங்களில் ஆலோசிக்கப்பட்டது.

    அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மேலிட தலைவர்கள், கார்கேவுக்கு பட்டியல் தயாரித்து அனுப்பினர். அவர் சிலரை மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளார். பின், பட்டியலை திருத்தி மீண்டும் அனுப்பி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் இன்று காலை சந்தித்து, மந்திரிகள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதன் பின், அவர்கள் பெங்களூரு திரும்பினர்.

    இதனிடையே டெல்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், நாளை காலை, 11:45 மணிக்கு புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா நடக்கும் என தெரிகிறது.

    இதில் தேஷ்பாண்டே, லட்சுமண் சவதி, ஹெச்.கே.பாட்டீல், லட்சுமி ஹெப்பால்கர், தினேஷ் குண்டுராவ், விஜயானந்த் காஷப்பனவர், அசோக் பட்டண், பசவராஜ் ராயரெட்டி, சிவராஜ் தங்கடகி, கிருஷ்ண பைரேகவுடா.'ஹரிபிரசாத், சரண பிரகாஷ் பாட்டீல், மஹாதேவப்பா, ஈஸ்வர் கன்ரே, புட்டரங்கஷெட்டி, நரேந்திர ஸ்வாமி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன, சுதாகர், செலுவராயஸ்வாமி, வெங்கடேஷ் உட்பட மூத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும், 24 மந்திரி பதவிகளும் நிரப்பப்படும்' எனவும், காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் சரத்பாபு இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.


    கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    இந்நிலையில், சரத்பாபுவிற்கு இரங்கல் தெரிவித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அமிர்தவர்ஷினி படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர்.
    • சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    பதவியேற்பு விழாவில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டு அன்பு வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் 5 உத்தரவாதங்களை கொடுத்திருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். சொல்வதைச் செய்கிறோம். நாங்கள் அறிவித்த 5 உத்தரவாதங்கள் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப்போகிறது. சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.

    ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின்கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும். இந்த உத்தரவாதம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் குறித்த அறிவிப்பு, இன்று நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
    • புதிய மந்திரிகளுக்கு இன்று இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலாமக நடைபெற்றது.

    முதலில் முதல்-மந்திரியாக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றார்கள்.

    அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற சித்தராமையா கர்நாடகாவின் 24-வது முதல்-மந்திரி ஆவார்.

    விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,

     தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க.ஸ்டாலின்(தமிழ்நாடு), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல்(சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு(இமாச்சல பிரதேசம்), ஹேமந்த் சோரன்(ஜார்கண்ட்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     பதவி ஏற்பு விழா மேடையில் 30 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் மேடை முன் நிற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    மைதானத்தின் நடுவில் சுமார் 40 ஆயிரம் இருக்கைகளும், மைதானத்தின் கேலரியில் பொதுமக்களுக்கான இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் மைதானத்திற்குள்ளும், வெளியேயும் பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. 

    மந்திரி சபை பதவி ஏற்றதை தொடர்ந்து இன்று புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி, உளவுத்துறை, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட ஒதுக்கப்படாத அனைத்து துறைகளையும் முதல்-மந்திரி சித்தராமையா வைத்துக் கொள்வார். டிசிஎம் டி.கே. சிவக்குமார், நீர்வளத்துறையுடன் மற்றொரு முக்கிய துறையையும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித்தராமையா, பெங்களூரு விதானசவுதாவில் (சட்டசபை) உள்ள முதல்-மந்திரி அறைக்கு செல்கிறார்.

    பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. விழா மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம்.
    • நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க நான், சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் டெல்லி செல்கிறோம். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து முதல்கட்ட மந்திரிசபை அமைப்பது குறித்து முடிவு எடுக்க உள்ளோம். முதலில் நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்போம். புதிய மந்திரிகள் யார் என்பதை நாங்கள் விரைவில் அறிவிப்போம். எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம். யூகங்களுக்கு இடம் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

    எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். எங்களின் முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    எங்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். விழாவில் பங்கேற்க வருகிறவர்கள் விழாவுக்கு சற்று முன்னதாகவே வந்துவிட வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்காமல் இருக்கலாம். அதே போல் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

    உத்தரவார திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதாவது விதிக்கப்படுமா?, என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் முடிவு எடுத்ததும் அதுகுறித்து உங்களுக்கு தெரிவிக்கிறோம். ஆனால் நாங்கள் சொன்னபடி நடந்து கொள்வோம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    அவர் டெல்லி புறப்படும் முன்பு கன்டீரவா அரங்கத்திற்கு நேரில் வந்து விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
    • பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.

    இந்நிலையில், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியுடன் சேர்த்து 8 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, புதிதாக பதவியேற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளர். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.

    ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமத்கான் ஆகியோரும் கர்நாடகா அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    • 2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார்.
    • கர்நாடகாவில் 2013-2018 முதல் டி.கே. சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார்.

    கர்நாடக காங்கிரசில் வலிமை மிக்க தலைவராக திகழ்பவர் டி.கே.சிவக்குமார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இவர் 1962-ம் ஆண்டு மே 15-ந்தேதி கனகபுராவில் தொட்டலஹல்லி கெம்பே கவுடா, கவுரம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

    கர்நாடகாவில் 2-வது பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகா கவுடாவை சேர்ந்த இவர் 1980-களில் மாணவர் பருவத்தில் காங்கிரசில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். தமது 27 வயதில் 1989-ல் மைசூரு மாவட்டத்தின் சாத்தனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

    பின்னர் 1994, 1999, 2004 தேர்தல்களிலும் சாத்தனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக வாகை சூடினார். 2008, 2013, 2018 மற்றும் தற்போதைய தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்து இருக்கிறார். கனகபுராவில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றவர் டி.கே.சிவகுக்மார். காங்கிரஸ் மேலிடத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவர் மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்குவது வழக்கம்.

    2002-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுக்கு சிக்கல் ஏற்பட்ட போது எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து அரசாங்கத்தை காப்பாற்றிய பணியில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டி.கே. சிவக்குமார்.

    கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்ட போது எம்.எல்.ஏக்களுக்காக மும்பையில் வீதியில் இறங்கி மல்லுக்கட்டியவர் இவர். அடுத்தடுத்த வழக்குகள், விசாரணைகள் என பாஜக அரசு அலைக்கழித்த போது ஒட்டுமொத்த ஒக்கலிகா கவுடா ஜாதியினரும் பெங்களூரு நகரை முற்றுகையிட்டு பிரம்மாண்டமாக நடத்திய பேரணி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 2020-ம் ஆண்டு முதல் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்த முறை முதல்-மந்திரி பதவிக்காக முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு முட்டுக்கட்டையாக நிற்காமல் விலகிக் கொண்டு துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 5 நாட்களாக இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த இவருக்கு துணை முதல்வர் பதவியோடு 2 முக்கிய துறைகள் வழங்கப்பட உள்ளது. இதில் ஒன்று மின்சாரத்துறை. 2-வது துறை நீர்ப்பாசனத்துறையாகும்.

    கர்நாடகாவில் 2013-2018 முதல் டி.கே. சிவக்குமார் மின்சாரத்துறையை நிர்வகித்தார். அதன்பிறகு 2018 ல் அமைந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி கூட்டணியில் டி.கே. சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். இந்த முறையும் இந்த 2 துறையை அவர் நிர்வகிக்க வாய்ப்புள்ளது.

    • இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்துப் பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்வர் பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுத்ததால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

    தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என நேற்று இரவு காங்கிரஸ் மேலிடம் தெரிவித்தது.

    இன்று காலையில் அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சித்தராமையா அடுத்த முதல்வர் என்றும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. டி.கே.சிவக்குமார் மாநில தலைவராகவும் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 5 நாட்களாக நிலவி வந்த மூட்டுக்கட்டை நீங்கியது.

    அடுத்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவியை பெற சில மூத்த தலைவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அமைச்சர் பதவியை பெறுவதற்கு எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. 

    ×