search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகதாது விவகாரம்"

    • மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் செயல்பாடானது நடுநிலையானதாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில மக்களின் தண்ணீர் தேவை மிக மிக முக்கியமான ஒன்று.

    மேகதாதுவில் அணைக் கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சியானது தமிழக டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.

    அப்படி இருக்கும் போது கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் செயல்பாடானது நடுநிலையானதாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

    மேலும் கர்நாடகம்- தமிழ்நாடு ஆகிய இரு மாநில நலனை, உறவை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வரும் நாட்களில் மேகதாது அணை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும்.

    எனவே மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கர்நாடகவை சேர்ந்த சோமண்ணாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும்.
    • நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்தது.

    மேகதாது அணை பற்றி தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மத்திய, மாநில அரசுகள் காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்சனையில் தொடர்ந்து கபட நாடகமாடி வருவதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்வதையே தமிழகத்தை ஆளும் திமுக அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்துவந்த நிலையில், போதாக்குறைக்கு தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல.

    தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணா அவர்களை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும்.

    ஏற்கனவே காவிரி மேகதாது பிரச்சனையில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தை ஆளும் பொம்மை முதலமைச்சர் பேசா மடந்தையாக இருப்பதன் காரணம் புரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

    • மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 29-ம் தேதி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

    காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட 'பணி வரம்புக்கு' அப்பாற்பட்டு, 28-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், கர்நாடகம் 2023-24ம் ஆண்டிற்கு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத தி.மு.க. அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 29-ம் தேதி தஞ்சாவூர், திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • தமிழக மக்கள் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல.. கடுந்தன்மை.

    மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாக அம்மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கு தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்துக்கான நீர்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் விளக்கம் அளித்து இருந்துள்ளார். அதில், வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா நீதிமன்றம் செல்வதை நிறுத்திவிட்டு, மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    டிகே சிவக்குமாரின் இந்த கருத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பதில் அளித்துள்ளார். அதில், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை; டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது!" என்றார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,

    "தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. தமிழக மக்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அவர்களும் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகமும் வீணாக அடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும்" என்று கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கூறியிருக்கிறார். கர்நாடக துணை முதலமைச்சரின் ஒவ்வொரு சொல்லிலும் பெரும் இனிப்பு கலந்திருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதற்கும் பொருந்தும்.

    "பகையாடி கெடுக்க முடியாவிட்டால், உறவாடிக் கெடு என்றொரு பழமொழி உண்டு. அதைத் தான் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதிக்காது. தமிழகத்தை பகைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது எந்த காலத்திலும் நடக்காது. அதனால் தான் தமிழகத்தை புகழ்ந்து, ஏமாற்றி அனுமதி பெற்று அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த வஞ்சக வலையில் தமிழ்நாடு ஒருபோதும் விழுந்து விடக்க்கூடாது."

    "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறார். கடந்த காலங்களில் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் என்றாவது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறதா? என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். 1991-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் சொத்துகளும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு பலநூறு கோடி. பெங்களூருவில் மட்டும் 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்களை அப்போதிருந்த காங்கிரஸ் முதலமைச்சர் பங்காரப்பா ஊக்குவித்தார். இது தமிழர்கள் மீதான பெருந்தன்மையா?"

    "2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாடிய பயிர்களைக் காக்க வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போதும் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான 50 ஆம்னி பேருந்துகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன."

    "பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினார்கள். இப்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தான் அப்போதும் உள்துறை அமைச்சர். இப்போதைய துணை முதலமைச்சர் சிவக்குமார் தான் அப்போதும் செல்வாக்கு மிக்க அமைச்சர். ஆனால், அவர்கள் அப்போது தமிழர்கள் மீது பெருந்தன்மை காட்டவில்லை. ஆனால், இப்போது தமிழர்கள் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?"

    "மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை. கர்நாடக துணை முதலமைச்சரின் நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கி, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையை இழந்து விடக் கூடாது. மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட வல்லுனர்களைக் கொண்டு நடத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும். அதற்கு மாறாக, கர்நாடகத்துடன் எந்தவிதமான பேச்சுக்களிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி செல்கிறது.
    • காவிரியில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்டுவோம் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    மேகதாது விவரகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது.

    நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடகா அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி செல்கிறது.

    காவிரியில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்டுவோம் என முதல்வர் குறிப்பிட்டிருந்த நிலையில் பயணம் செய்கின்றனர்.

    ×