search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பிகே சேகர்பாபு"

    • இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது.
    • இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கோவில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக, 260 கோவில்களுக்கு 315 கையடக்க கருவிகளை மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்.


    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்து உள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவினை எடுக்கும். ஆகவே தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.
    • மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஒரு மினி விளையாட்டு மைதானத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றோம்.

    சென்னை:

    சென்னை, கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும், சென்னை, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், சென்னை, மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோயம்பேடு பாலத்திற்கு கீழே இருக்கின்ற நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். அதே போல, சென்னை, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று தனி மைதானம், டென்னிஸ் கோர்ட் மற்றும் பூங்கா வசதி, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்து வதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அதன் தொடர்ச்சியாக சென்னை, மயிலாப்பூர் முண்டகக் கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஒரு மினி விளையாட்டு மைதானத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்தல், கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அமைத்தல், கடற்கரை பார்வதி நகர் முதல் எண்ணூர் கடற்கரை பகுதியில் 5 கி.மீ. நீளத்திற்கு அழகுபடுத்துதல் மற்றும் மகாபலிபுரத்தில் பஸ் நிலையம் அமைத்தல் போன்ற பணிகளும் இதில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, எம்.எல்.ஏ.க்கள் எம்.வி.பிர பாகர ராஜா, ஜெ.கருணாநிதி, த.வேலு, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
    • ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு கோவில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெருவிருப்பமாகக் கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து வருகிற புரட்டாசி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

    2022-2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, வருகிற புரட்டாசி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு வைணவ கோவில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சமய பெருமாள் கோவில், சிங்கப்பெமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

    சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புத்தூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு 2-வது பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    திருச்சியிலிருந்து உறையூர் அழகிய மணவாள பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், உத்தமர்கோவில், புருஷோத்தம பெருமாள் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் கோவில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடராம பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூரிலிருந்து திரு கண்டியூர் சாபவிமோச்சன பெருமாள் கோவில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோவில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில், திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

    மதுரையிலிருந்து அழகர் கோவில் கள்ளழகர் கோவில், ஒத்தகடை ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், திருகோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள் கோவில், மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும்.

    இந்த ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

    மேலும், இது தொடர்பாக விவரங்களுக்கு www. ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணைய தளத்திலும், 044 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, ஆன்மிக அன்பர்கள், சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2.11.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
    • கபாலீசுவரர் கல்லூரியில் பி.காம் (பொது), பிபிஏ, பிசிஏ, பி.எஸ்.சி (கணினி அறிவியல்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுடன் முதலாமாண்டில் 220 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

    சென்னை:

    கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 200 மாணவ-மாணவியர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

    கடந்த 2021-2022 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2.11.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

    இக்கல்லூரியில் பி.காம் (பொது), பிபிஏ, பிசிஏ, பி.எஸ்.சி (கணினி அறிவியல்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுடன் முதலாமாண்டில் 220 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். முதல் பருவத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 2022 -2023 கல்வி ஆண்டில் மேற்கூறிய நான்கு பாடப்பிரிவுகளுடன் புதியதாக பி.ஏ. (சைவ சித்தாந்தம்) பாடப்பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. இக்கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை முடிக்கப்பட்டவுடன் வரும் ஜூலை மாதம் வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. விண்ணப்பங்கள் 5-ந்தேதி வரை அளிக்கப்படுகின்றன.

    நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் காவேரி, கல்லூரி தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×