என் மலர்
நீங்கள் தேடியது "கன்னிமாரா நூலகம்"
- சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் மிகப் பழமையான கன்னிமாரா நூலகம் செயல்பட்டு வருகிறது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு கலை பொருட்கள் விற்பனை கண்காட்சி நடை பெற்றது.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலக வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் மிகப் பழமையான கன்னிமாரா நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இங்கு பழமையான நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், தினசரி நாளிதழ்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கன்னிமாரா நூலகத்துக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாசகர்கள், நூல் ஆர்வலர்கள் வந்து பயன்பெற்று வருகிறார்கள். இதனால் கன்னிமாரா நூலகம் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கன்னிமாரா நூலக வளாகத்தில் குப்பை தொட்டிகள் ஏதும் வைக்கப்படாததால் நூலக வளாக பகுதிகள் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கலை பொருட்கள் விற்பனை கண்காட்சி நடை பெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த கண்காட்சியினை பார்வையிடுவதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர்.
தற்போது கண்காட்சி நிறைவடைந்து விட்டது. கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்கள் அங்கு வீசி சென்ற தண்ணீர் பாட்டில்கள், குப்பைகள் மற்றும் பொருட்கள் நூலக வளாக பகுதி முழுவதும் சிதறி கிடக்கின்றன. மேலும் அருகில் உள்ள அருங்காட்சியக வளாகம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
எனவே உடனடியாக கன்னிமாரா நூலக வளாகம், மற்றும் அருங்காட்சியக வளாக பகுதிகள் முழுவதையும் சுத்தம் செய்து புதிதாக குப்பை தொட்டிகள் அமைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நூலக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.