என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் தலைவர்"

    • நிதியாண்டில் ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவிகிதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
    • வழக்கம் போல் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும், பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை, மத்திய பாஜக அரசு வழங்க மறுத்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதாவது:-

    நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளால் பெறப்படும் நிதியை ஒன்றிய அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒரு நிதியாண்டில் ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவிகிதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 28 மாநிலங்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 73 ஆயிரம் கோடியை வரி பகிர்வாக ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

    இதில் 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 31,000 கோடியும், 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,057 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, 10 கோடி மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 17,000 கோடியும், 9 கோடி மக்கள் தொகை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 13,000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    இதன்மூலம், மாநிலங்களுக்கிடையேயான வரி பகிர்வில் ஒன்றிய பா.ஜ.க. அரசு அப்பட்டமான பாரபட்ச போக்கை கடைபிடித்து வருகிறது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு முரணாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பின்பற்றுவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    புயல், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூபாய் 36,000 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் 226 கோடி. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 2028 கோடி செலவு செய்திருக்கிறது.

    மேலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய ரூபாய் 2159 கோடி கடந்த பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

    இதனால், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூன் மாதத்திலிருந்து சம்பளம் வழங்க முடியாத நிதி நெருக்கடியில் கல்வித்துறை சிக்கியிருக்கிறது. இத்தகைய போக்கின் காரணமாக தமிழ்நாடு கல்வித்துறை கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மும்மொழி திட்டத்தை நீண்டகாலமாக ஏற்க மறுக்கிற மாநிலம் தமிழ்நாடு.

    ஆனால், அதை திணிக்கிற வகையில் அமைந்துள்ளதால் இப்புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. அந்த அடிப்படையில் கல்வித்துறையை பொறுத்தவரை எந்த முடிவெடுத்தாலும் மாநிலங்களை கலந்து தான் எடுக்க வேண்டும். ஆனால், மாநிலங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தின் மீது திணிக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் முயற்சியை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.

    இதனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க மறுத்து வருகிறது. இத்தகைய போக்குகளின் காரணமாக கூட்டாட்சி முறை மிகப்பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியும், பிரதமர் மோடியும் அனைத்து மாநிலங்களையும் சமமாக கருத வேண்டும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்று பாரபட்சம் காட்டுமேயானால், தேசிய ஒருமைப்பாடு என்பது கேலிப் பொருளாகிவிடும் என ஒன்றிய அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார்.
    • சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.

    திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது, அவருக்கு காவி உடை அணிந்து சித்தரிப்பது ஏற்க முடியாது என தமிழ்நாடு காங்கிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தினம், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று (15.01.2025) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

    ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார்.

    அய்யன் திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பது ஏற்க முடியாது. ஆளுநர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.

    தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உள்துறை அமைச்சகத்தின் அனைத்து கோப்புகளும் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.
    • மொழி திணிப்பு நடந்தால் அதை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று ஒன்றிய அரசு உணர்ந்து கொள்ளவேண்டும்.

    மும்மொழிக் கொள்கை திணிப்பு குறித்து தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இதையெல்லாம் இந்தி திணிப்பு அல்ல என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்வாரா?

    ஒன்றிய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்குவது உட்பட 112 பரிந்துரைகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றத்தின் அலுவல் மொழிக்குழு குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.

    இந்தியாவிலேயே முதன்முறையாக மத்தியபிரதேச மாநிலத்தில் எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த புத்தகங்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டது. மேலும் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்ப பாடங்களையும் இந்தி மொழியாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் அனைத்து கோப்புகளும் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.

    அதாவது ஆங்கிலம் இருக்கும் இடத்தில் இனிமேல் இந்தி இருக்க வேண்டும். அதுதான் பாஜகவினரின் விருப்பம். உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல ஒன்றிய அரசுக்கான போட்டித்தேர்வுகள் அத்தனையிலும் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியே பிரதானமாக இருக்க வேண்டும் என்பது மறைமுகமாக ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள பிறமொழி பேசும் மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியின் உச்சகட்டம்.

    மேலும், ஒன்றிய அரசு அதிகாரிகள் இந்தியை பயன்படுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது இந்தி மொழி ஆதிக்கத்தின் பேராவல் தானே தவிர வேறு என்ன சொல்வது?.

    யார் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பதை ஒன்றிய அமைச்சர் உணர்ந்து பேச வேண்டும். எந்த மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் மொழி திணிப்பு நடந்தால் அதை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று ஒன்றிய அரசு உணர்ந்து கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 17-ந் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.
    • இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே அபார வெற்றி பெற்றார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

    இந்நிலையில் காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மல்லிகார்ஜுன் கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் கடந்த 19-ந் தேதி எண்ணப்பட்டன.

    இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூருக்கு 1000 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைய அலுவலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே இன்று பதவி ஏற்கிறார்.இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவியை வகிக்க உள்ளது குறிப்பிடத்ததக்கது.

    • ராகுல் காந்தியிடம் மொத்தம் 5 நாட்கள் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
    • கடந்த 21ந் தேதி சோனியா காந்தியிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம் வாங்கியது. இதில் முறைக்கேடு நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது. இதில் ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 21ந் தேதி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சோனியாகாந்தியுடன் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் நாளை (26-ந்தேதி) விசாரணை ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    நாளை மத்திய அமலாக்க இயக்குநரக அலுவலத்தில் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகும்போது அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் அமைதியான முறையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் சத்தியாகிரக போராட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் அகில இந்திய உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ×