search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னலாடை தொழில்"

    • புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.
    • ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், 2 நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.

    திருப்பூர் :

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் காந்தி 22 வகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். துணி நூல் துறைக்கு, ஐந்து அறிவிப்புகளும் கைத்தறித்துறைக்கு 17 அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அனைத்து ஜவுளி பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஜவுளி நகரம், பொது - தனியார் பங்களிப்புடன் சென்னையில் அமைக்கப்படும். தலா 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூட்டுறவு நூற்பாலையில், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும். புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.

    சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னையில் நடத்தப்படும். இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பகிர வசதி செய்யப்படும். அதற்காக தமிழக தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படும்.

    கோவையில் 27 லட்சம் ரூபாய் செலவில், ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், இரண்டு நாள் பயிலரங்கம் நடத்தப்படும். தமிழகத்தில், ஜவுளித்தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும். அதற்காக, கைத்தறி துணிநூல் துறையின் கீழ், பிரத்யேக ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:- புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆராய்ச்சி மையங்களுடன் கலந்தாய்வு ஏற்பாடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும். தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவங்குவதையும் வரவேற்கிறோம். பாரம்பரிய கைத்தறி ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் விற்பனை அதிகரிக்கும். பலவகை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழகத்தின் ஜவுளி மற்றும் கைத்தறி தொழில் மேம்படும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், பின்னலாடை தொழில் உட்பட, பல்வேறு பிரிவுகளுடன் ஒருங்கிணைந்த ஜவுளி தொழில் நகரம் அமையும் போது, புதிய வேலை வாய்ப்புகளும், தொழில்களும் உருவாகும். சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசு மானிய உதவியுடன் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிகாட்ட ஜவுளித்துறை ஆணையரகத்தில் ஜவுளி மேம்பாட்டு பிரிவு துவங்குவதை வரவேற்கிறோம். கோவையில் 12 ஆராய்ச்சி மையங்கள் சார்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துவது சிறப்பான ஏற்பாடாக இருக்கும் என்றார்.

    • உள்நாட்டு விற்பனை பனியன் வர்த்தகம் 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது.
    • டப் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் சர்தோஷிடம், சிறு குறு மற்றும் நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை பாதுகாக்கும், கோரிக்கையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வைத்தது.பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு 33 ஆயிரத்து 525 கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. உள்நாட்டு விற்பனை பனியன் வர்த்தகம் 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 55.32 சதவீதமாக இருக்கிறது. சிறு, குறு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புது வரவு எந்திரங்களை பயன்படுத்தவும், டப் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. திருத்தப்பட்ட டப் திட்டம் 2022 மார்ச் 31ந் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. எனவே மீண்டும் டப் திட்டத்தை, 2022 ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து செயல்படுத்த வேண்டும். பல்வேறு காரணங்களால் பனியன் நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொருளாதார சிக்கலை தீர்க்க ஏதுவாக பேக்கிங் கிரெடிட் மீதான வட்டி சலுகை, 3 மற்றும் 2 சதவீதம் என்பதை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ரெப்போ ரேட் உயரும் போது கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் இருந்தது போல் ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தி வட்டி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க ஆவன செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பொருளாதார சரிவை சரிக்கட்டும் வகையில் நிலுவை கடன் மதிப்பில் 20 சதவீதம், பிணையமில்லா கடனாக வழங்கப்பட்டது. நூல் விலை உயர்வு, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் தற்போதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தில் நிலுவை கடன் மதிப்பில் 30 சதவீதம் வரை கடன் வழங்க வேண்டும். அன்னிய செலாவணியை ஈட்டித்தரும், திருப்பூர் நகரின் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டில் மத்திய அரசின் பங்களிப்பு அவசியம். திருப்பூரின் ஓராண்டு ஏற்றுமதி வர்த்தக மதிப்பில் 1 சதவீத தொகையை, திருப்பூர் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் விளக்கினர்.

    • பணம் செலுத்தும்போது கிட்டத்தட்ட 8 சதவீதம் கூடுதல் தொகை செலவாகிறது‌.
    • பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய காலத்துக்கு நன்மை அளிக்கும்.

    திருப்பூர் :

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளதால் பின்னலாடை நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன என புலம்பும் உற்பத்தியாளர்கள், மூலப்பொருட்கள் வாங்க கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் செலவீனங்களை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலியுறுத்தியுள்ளனர்.

    உலக அளவில் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தில் அமெரிக்க டாலரே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து நாடுகளிலும் விலைவாசி உயர்வால் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் இந்திய ரூபாய், ஐரோப்பிய யூனியனின் யூரோ, ஜப்பானின் யென், பிரிட்டன் பவுன்ட் உள்ளிட்ட பல நாடுகளின் பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.

    திருப்பூர் பின்னலாடைத்துறைக்கு தேவையான நிட்டிங், டையிங், காம்பேக்டிங்,லேசர் கட்டிங், பிரின்டிங் எந்திரங்கள் மற்றும் ஜிப், பட்டன் உள்ளிட்ட உப பொருட்கள் பெருமளவு சீனா, தைவான், கொரியா,சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெருமளவு இறக்குமதி செய்யப் படுகிறது. தற்போதைய நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருவதால், இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு இறக்குமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    திருப்பூர், பின்னலாடை ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு நம் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தரும் நகராக விளங்குகிறது. ஆனால் பின்னலாடைத்துறையில் பஞ்சு அரவை முதல் பின்னலாடை உற்பத்தி வரை அதி நவீன எந்திரங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்னலாடை உற்பத்தியில் 90 சதவீதத்துக்கு மேலாக எந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாக உள்ளது. குறிப்பாக சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே எந்திரங்கள் அதிகம் இறக்குமதியாகின்றன. மேலும் பின்னலாடைக்கான ஜிப், பட்டன் உள்ளிட்டவையும் பெருமளவு இறக்குமதி மூலமாகவே பூர்த்தியாகிறது.

    எந்திரங்கள் இறக்குமதியின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்கும் விலை பட்டியலின்படி, எந்திரங்கள் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இங்கிருந்து மெஷின் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு பணம் அனுப்புகையில் அது அமெரிக்க டாலராக அனுப்ப வேண்டும். மேலும் இறக்குமதி செய்யப்படும் எந்திரங்களுக்கு இறக்குமதி வரியும் கட்ட வேண்டும். கடந்த கொரோனா தொற்றுக்கு முன்பாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு நிலையாக இருந்தது. உதாரணத்துக்கு தைவானில் இருந்து இரு ஆண்டுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு எந்திரம் ரூ. 6.40 லட்சமாக இருந்தது. தற்போது அதற்கு நாம் ரூ.8 லட்சம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் நிறுவனங்கள் ஒரு எந்திரத்தை புதிதாக இறக்குமதி செய்ய போடப்பட்ட பட்ஜெட் கிட்டத்தட்ட 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

    உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, யுக்ரேன் - ரஷ்ய போர்,உலகளாவிய பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளதால், அமெரிக்காவில் க்ரேட் டிப்ரசன் வரும் என நினைப்பதால், அந்நாட்டின் மைய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மாதந்தோறும் உயர்த்தி வருகிறது. இதன் காரணமாக கொரோனா கால கட்டத்தில் அந்நாட்டில் வட்டியில்லா கடனாக கொடுக்கப்பட்ட கடனுக்கு தற்போது வட்டி விகிதங்களை அந்நாட்டு மைய வங்கி உயர்த்தி வருவதால் உலகம் முழுவதும் அமெரிக்காவில் இருந்து செய்யப்பட்ட முதலீடுகள் அமெரிக்க டாலராக மீண்டும் அந்நாட்டுக்கே செல்வதால், டாலரின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும், ரூபாயிலும் சரிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒருபக்கம் பின்னலாடை ஏற்றுமதியாளருக்கு லாபம்தான் என்றாலும், பின்னலாடை சார்ந்த நவீன எந்திரங்கள், ஜிப்,பட்டன் உள்ளிட்ட உப பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையால் அதிக தொகை செலவு செய்யும் நிலைக்கு பின்னலாடைத் துறையினர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை காண முடிகிறது.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த பின்னலாடை எந்திரங்களை இறக்குமதி செய்யும் பூபதி கூறுகையில், டாலர் சீரான நிலையில் இல்லாததால் இறக்குமதி செய்யும் எந்திரங்கள் விலை அதிகரித்துள்ளது‌. மேலும் இதற்காக அதிக மூலதனமும் தேவைப் படுவதாகவும், ஒரு எந்திரத்தை இறக்குமதி செய்ய சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தம் எனில் அப்போது டாலர் குறைவாகவும் தற்போது அதிகமாகவும் உள்ளதால், சப்ளையருக்கு பணம் செலுத்தும்போது கிட்டத்தட்ட 8 சதவீதம் கூடுதல் தொகை செலவாகிறது‌.

    கடந்த 5 ஆண்டுக்கு முன்பாக டாலர் 64 ரூபாயாக இருந்தது. தற்போது 25 சதவீதம் அதிகரித்தும், கடந்த ஓராண்டில் 74 ரூபாயில் இருந்து 7.5 சதவீதம் அதிகரித்து 80 ரூபாயை எட்டியுள்ளது. இதன் காரணமாக பின்னலாடை சார்ந்த உப பொருட்களை இறக்குமதி செய்யும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.மேலும் டாலர் மதிப்பு ஏற்ற இறக்கத்தால் இறக்குமதியாகும் பின்னலாடை சார்ந்த உப பொருட்களுக்கு ஒப்பந்தத்தை தாண்டி அதிக தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு டாலர் மதிப்பை சீராக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்‌.

    டாலரின் ஏற்ற இறக்கம் பின்னலாடை துறையினரை எவ்விதத்தில் பாதிக்கும் என்பது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், டாலர் மதிப்பு உயர்வால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழல் உருவாகியிருக்கிறது. அதேநேரம் இந்த நிலை நீண்ட ஆண்டு நீடிக்காது. ஏற்கனவே ஆர்டருக்கான ஆடை தயாரிப்பு பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சற்று கூடுதல் லாபத்தை பெற்றுத் தரும். ஆனால் புதிய ஆர்டர் வழங்கும்போது டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப ஏற்றுமதி ஆடை விலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் குறைத்து விடுவர்.

    மேலும் லேபிள், பட்டன், ஜிப் போன்ற ஏற்றுமதி ஆடைகளில் இணைக்கும் உப பொருட்களை அமெரிக்கா, சீனா, தைவான் போன்ற வெளி நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், பின்னலாடை நிறுவனங்கள், அக்சசரீஸ் இறக்குமதிக்கு அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய காலத்துக்கு நன்மை அளிக்கும், ஆனால் நீண்ட கால நோக்கில் நஷ்டம் அடையவே வாய்ப்பு உள்ளது என்றார்.

    ×