search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச திட்டங்கள்"

    • இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என தலைமை நீதிபதி கருத்து
    • இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.

    புதுடெல்லி:

    தேர்தல் காலங்களில் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுப்பதற்கு எதிராகவும், அதனை கட்டுப்படுத்தவும் வேண்டி அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தபோது, இந்த வழக்கை அவர் தாக்கல் செய்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது பொதுமக்களுக்கு பல்வேறு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இது ஓட்டு போடுவதற்காக மக்களுக்கு தரப்படும் லஞ்சமாகவே பார்க்க வேண்டும். இது நம் ஜனநாயக தேர்தல் நடைமுறையை சீர்குலைப்பதாக உள்ளது.

    மேலும், இந்த இலவசங்கள் பொது நிதியில் இருந்தே தரப்படுகின்றன. இதனால், மக்களின் தலையில் அதிக சுமை ஏறுகிறது. இவ்வாறு இலவச அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, கட்சி சின்னத்தை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு,சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹீமா கோஹ்லி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னர் நடந்த விசாரணைகளின்போது, இது மிகப்பெரும் பிரச்சினை என அமர்வு பலமுறை கூறியிருந்தது. கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தேர்தல் கமிஷன் கூறியது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என அமர்வு கேட்டிருந்தது.

    கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவச அறிவிப்புகள், இலவச பொருட்கள் வினியோகம் ஆகியவை, நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    மேலும் தங்களுடைய தேர்வை சுயமாக முடிவு செய்யும் வாக்காளர்களின் உரிமையும் பறிக்கப்படுகிறது என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறுகையில், பல மாநிலங்கள் கடும் கடனில் உள்ள நிலையிலும், ஆட்சியை பிடிக்க அல்லது தக்கவைக்க இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்காகும் செலவு மக்கள் மீதே சுமத்தப்படுகிறது என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.

    கட்சிகள் இலவசப் பொருட்களை அறிவிப்பது, மிகப் பெரிய பொருளாதார பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரச்னை குறித்து, எந்த அரசியல் கட்சியும் பாராளுமன்றத்தில் பேசாது. அனைவருக்கும் இலவசங்கள் தேவை. இந்த விவகாரத்தில் ஒரு சரியான முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகும். இலவசங்களை எப்படி தவிர்ப்பது, தடுப்பது என்பது குறித்து, மத்திய அரசு, நிதி ஆயோக், நிதி கமிஷன் ஆகியவை ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். அவை பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

    இதில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் ஒதுங்கி கொள்ளக்கூடாது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு, நிதி ஆயோக், தேர்தல் கமிஷன், நிதி கமிஷன், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களுடைய கருத்தை, ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க உத்தரவிடப்படும் என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பு வாதங்களை கேட்டார். பின்னர் அவர் கூறுகையில், இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை. தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையா? இலவச திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இலவச அறிவிப்புகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

    பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசும் சில திட்டங்களை வைத்துள்ளது. இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம்.

    ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது அந்த மாநிலத்தின் பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக்கூடாது. இலவச தேர்தல் வாக்குறுதிகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    ×